மீள்

0
26698

மரங்களை விட்டு தூரப்படும்
மரங்கொத்தி என
நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே
நினைக்கிறது மனது
மனம் என்பதே
ஓர் ரெண்டுங்கெட்டான்
சில நேரம் கொஞ்சும்
அதட்டும்
அழும்
அடம்பிடிக்கும்
பிடிக்காததையும் செய்யும்
அப்படியே கரைந்து மறைந்திடவும்
மண்டியிடும்


அன்பின் வேர்களிலிருந்து
பிளவுபடும் நிலங்களுக்கு
கயிற்றில் முடிச்சிட்டு
நழுவிப்போகும் ஞாபகங்களை
பொறுக்கி எடுக்க முடியாததாய்
தூசு படிந்த குப்பையெனவே
என் மனம் ஆகிவிட்டது

ஒரு புல் தடுக்கி
பதுங் குழியில் வீழும் துர்
அதிர்ஷ்டத்தைப் போலவே
நம் பிரிவின் விதி
வந்து விட்டதாய் நினைக்கிறேன்
யாரேனும் முகத்தை கட்டிக்கொண்டு
முத்தமிடத் துணியும் போதெல்லாம்
உன் நினைவுகள் அப்படியே
காற்றிற்கு சலனமிடுகின்றன

ஒரு பாதை முழுக்க முட்களை வளர்த்து விடுகிறது
பொருந்தாத நேசம்
கூடை நிறைய கண்ணீரையுந்தான்
குவளைகளில் பெருங்குருதியென
நிரப்பப்படும்
கண்ணீர்த் திவலைகளின்
உஷ்ணத்தில்
நின் நினைவுகளைக் கொன்று விடவே நினைக்கிறேன்
பகட்டுக்கு பட்டாடை பிரியங்கள் போலவே
நீ இல்லா இப்பெரு வாழ்வின்
அன்பின் சுவர்களை என்
இரு கரம் கொண்டேனும் மீளச்செய்வேன்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க