நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

0
576

 

 

 

 

உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது.

“சோ இன்ஸ்பெக்டர் மில்டன்.. இந்த டாக்டர் காணாம போன வழக்குக்கும் வக்கீல் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்குக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்கிறீங்களா?”

“ஆமா ஸார். அதைவிட இந்த கேஸ் இதோட முடியப்போறதில்ல”

“என்ன மில்டன் சொல்றீங்க?”

“வக்கீல் சங்கர் வீட்டில கிடைச்ச காகிதத்திலேயும் சரி, டாக்டர் தவமணிதாசனோட கார்ல கிடைச்ச காகிதத்திலேயும் சரி, கொலைகள் தொடரும் இதோட முடியப்போறதில்லனு இரத்தத்தாலேயே எழுதியிருந்தீச்சு. சோ இரண்டையும் பண்ணது ஒரே ஆளு”

“இரண்டையும் பண்ணது ஒரே ஆள்னா, டாக்டர் தவமணிதாசன் உயிருக்கு ஆபத்துங்கிறீங்களா?”

“ஆமா ஸார். கொலையாளி ஒரு சைக்கோவா இருக்க சான்ஸஸ் இருக்கு. சாகிறதுக்கு முன்னாடி வக்கீல் சங்கரை கடுமையா சித்திரவதை பண்ணியிருக்கான்.”

“இஸ் இட்.. அந்த காகிதத்தில இருந்த பிளட் சாம்பிள்”

“டெஸ்ட் பண்ணோம் ஸார். சங்கரோடது கிடையாது. மே பி அந்த கொலையாளியோடதா இருக்கலாம். இன்னைக்கு கிடைச்சதையும் ஃபாரன்ஸிக் இற்கு அனுப்பியிருக்கோம். ரிசல்ட் வந்தா தான் தெரியும் ஸார்.”

“ஏதோ ஒண்ணு. இது வழியா நம்ம டிப்பார்ட்மென்ட்க்கு மிகப்பெரிய தலைவலி வந்து சேரப்போகுதுங்குறீங்க”

“ஆமா ஸார் அப்படி தான் தோணுது.”

“ஹூம் இன்ஸ்பெக்டர் இப்போ காணாம போன தவமணிதாசனை எப்படியாவது உயிரோட கண்டுபிடிச்சாகணும். இல்லனா பப்ளிக் முன்னாடியும் மீடியா முன்னாடியும் நம்ம தலை தான் உருளும்.”

“எஸ் ஸார் ஸ்பெஷல் டீம் ரெடி பண்ணியிருக்கோம், எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம் ஸார்”

“சொல்லாதீங்க மிஸ்டர் மில்டன் முதல்ல அதை செய்யுங்க”

“ஓகே ஸார்”

“கிளம்புங்க, முதல்ல எப்படியாவது அந்தாளை கண்டுபிடிக்கிற வழியை பாருங்க. பிரஷ் மீடியாலாம் சேர்ந்து நம்மளை உருட்டுறது போதாதுனு இந்த பேஸ்புக் போராளிங்க வேற”

“கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுறோம் ஸார்” நாற்காலியில் இருந்து எழுந்து வெளியில் சிந்தனையுடன் நடந்தார் மில்டன்.

ஜீப் சாலையை ஊடுருவிக்கொண்டிருந்தது. பலமான சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். யார் அந்த கொலையாளி? கொலைகள் தொடரும்னா அவன் இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்க காத்துக்கிட்டு இருக்கான்? வக்கீல் சங்கருக்கும் டாக்டர் தவமணிதாசனுக்கும் என்ன சம்பந்தம்? நிறைய சம்பந்தம் இருக்க வாய்ப்பிருக்கு கோர்ட்டுக்கு வர்ர அதிகமான கேஸ்ல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சப்மிட் பண்றதே இந்த தவமணிதாசன் தானே. அப்படினா வக்கீல் சங்கரோட மனைவி பேமிலிக்கும் தவமணிதாசனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை சங்கரோட மாமா சொன்ன மாதிரி இந்த கொலைகளுக்கெல்லாம் சூத்திரதாரி சங்கரோட மனைவியோட அண்ணனா இருந்தா அவருக்கும் தவமணிதாசனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இடம் ரொம்ப குழப்பமாவே இருக்கு. கொலையாளி அவர் இல்லாம வேற யாராவதா கூட இருக்க வாய்ப்பிருக்கா? ஏன் இருக்க கூடாது ஒரு வேளை சங்கரோட மாமா, அவருக்கும் தவமணி தாசனுக்கும் என்ன சம்பந்தம்? மில்டன் தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை வெளியில் எடுத்தார் மெமோவில் சேவ் பண்ணியிருந்த அட்ரெஸைப் படித்தார்.

“டிரைவர் வண்டியை இந்த அட்ரெஸ்க்கு விடுங்க”

“ஓகே ஸார்”

மில்டனின் மூளை பல்வேறு கோணங்களில் கேஸை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“வக்கீல் சங்கர் வீட்டில இருந்து கடத்தப்பட்டிருந்தார். இரண்டு நாட்களா ரொம்பக் கொடூரமா சித்திரவதை பண்ணியிருக்கான். செத்ததுக்கப்புறம் கூடக் கத்தியால பயங்கரமாக் குத்தியிருக்கான். மனசில ஏதோ ஒரு வெறி பழிவாங்குற நோக்கம் இல்லனா ஹி மே பி எ சைக்கோ. அப்புறம் தூக்கிட்டு வந்து குப்பை கிடங்கு பக்கத்தில குழிதோண்டி உள்ள போட்டிருக்கான். ஆனா புதைக்கல. சம்பவம் நடந்த அன்னைக்கு மழை. ஆனா பக்கத்தில சந்தேகப்படுற மாதிரி டயர் பிரிண்ட்ஸ் எதுவும் கிடைக்கல. சோ அவன் எந்த வெகிக்கிளும் யூஸ் பண்ணல. பூட்ஸ் போட்டிருந்திருக்கான். ஒருத்தரை கொடுமைப்படுத்தி சித்திரவதை பண்ற அளவுக்கு அப்படி என்ன வெறி? ஒரு வேளை கொடுமைப்படுத்தி கொலை பண்ணி அதை இரசிக்கிற சைக்கோவா? அடுத்தவன் கதறலை இன்பமா பார்க்கிறவனா? அப்படினா ஏன் சமூகத்தில மேல் மட்டத்தில இருக்கிற வக்கீல் டாக்டர் இவங்களை தெரிவு பண்ணான்? இந்த சமூகத்தால பாதிக்கப்பட்டவனா? சமூத்தால ஒதுக்கி வைக்கப்பட்டதால மனநிலை குழம்பியவனா? இந்த சமூகத்து மேல தன்னோட கோபத்தை தீர்த்துக்கிறானா? இல்லனா ஏதும் தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கமா? அப்படினா வக்கீல் சங்கருக்கும் டாக்டர் தவமணிதாசனுக்கும் என்ன தொடர்பு? இவங்க ரெண்டு பேருக்கும் கொலையாளிக்கும் என்ன தொடர்பு? யார் அந்த கொலையாளி?”

ஜீப் மில்டன் கூறிய அந்த அட்ரெஸில் வந்து நின்றது. கதவுக்கு அருகில் இருந்த காலிங் பெல்லை அமுக்கினார் மில்டன். கதவு திறந்தது. ரோஜா வாசனை குப்பென்று அடித்தது. தலையில் வெள்ளை துணி சுற்றியிருந்தாள். அப்பொழுது தான் குளித்து விட்டு வந்திருந்தாள்.

 

 

 

 

 

 

 

“நீங்க தான் வக்கீல் சங்கரோட மனைவியா?”

“இல்ல அவர் என்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட்”

“நீங்க தான் சங்கரோட எக்ஸ் மனைவியா?”

“ஆமா எதுக்கு வந்திருக்கீங்க?”

“ஒரு சின்ன விசாரணை”

“எதை பத்தி?”

“உள்ள கூப்பிட மாட்டிங்களா?”

“ஸாரி உள்ள வாங்க”

பூ போட்ட ஷோபா செட் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மில்டன் மீனாக்ஷிக்கு எதிரில் அமர்ந்தார்.

“ஸார் என்ன சாப்பிடுறீங்க காப்பி டீ எதாவது” ரொம்ப போல்ட்டான பெண் என தோன்றியது மில்டனுக்கு.

“இல்லை வேணாம்மா”

“சொல்லுங்க ஸார் என்ன விசயம்?”

“நியூஸ் கேள்விப்பட்டிங்களா? உங்க ஹஸ்பெண்ட்”

“யாரோ கொண்ணிட்டாங்களாமே” டீயுடன் பிஸ்கட் வேணுமா என்று கேட்பது போல் சர்வசாதாரணமாக சொன்னாள்.

“ஆமா அது விசயமா தான் பேச வந்தேன்.”

“கேளுங்க ஸார் என்ன என் மேல சந்தேகப்படுறீங்களா? அந்த கிழவன் சொல்லி அனுப்பினானா?”

“நோ மேடம் சும்மா பார்மாலிட்டி தான் வேற எதுவும் இல்ல”

“சரி கேளுங்க இன்ஸ்பெக்டர்.. உங்களுக்கு என்ன தெரியணும்?”

“நீங்க எதுக்காக அவர்கிட்ட டைவர்ஸ் வாங்கிக்கிட்டீங்க?”

“ஹூம் நானும் எவ்வளவு தான் ஸார் தாங்குவேன். அந்த வீட்டிலேயே இருக்கானே கிழவன் என் அப்பா வயசு பெறும். அந்தாளு என்னை ச்சே சொல்லவே நாக்கூசுது. இதை அவன்கிட்ட சொன்னா.. அந்த சங்கர் என் மாமாவை பத்தி தப்பா பேசாத அவரு வயசானவருனு சொல்றான். அந்தாளு ஒரு காமபேய் ஸார். என்னால அந்தாள்கிட்ட இருந்து தனி ஒருத்தியா எத்தனை நாள் என்னைக் காப்பாத்திக்க முடியும். சங்கரும் சாதாரண ஆள் இல்ல ஸார். கல்யாணமாகி முதன்முதலா உண்டாகி இருந்தேன். ரொம்ப சந்தோசமா பீல் பண்ணேன். தாய்மை எப்படி பட்ட உணர்வு. ஆனா அந்த நாய் இப்போ எதுக்கு குழந்தைனு அபாஷன் பண்ண சொல்லீட்டான் ஸார். நான் முடியாதுனு துடிச்சேன். ஆனா அவன் செக்கப்க்கு கூட்டிட்டு போற மாதிரிக் கூட்டிட்டு போய் எனக்கே தெரியாம” கண்ணீர் வழிந்தது அத்தனை நேரம் பேசிய தைரியமான மீனாக்ஷி மறைந்திருந்தாள்.

“ஸாரி மேடம் உங்களை கஷ்டப்படுத்தணும்னு இதை கேக்கல”

“இட்ஸ் ஓகே ஸார். அது உங்க வேலை. சொல்ல வேண்டியது என் கடமை” கண்களைத் துடைத்தாள்.

“வக்கீல் சங்கருக்கு சொல்லிக்கிற மாதிரி யாரும் எதிரிங்க இருக்காங்களா?”

“ஊர் முழுக்க எதிரிங்க தான். செயின் பறிக்கிறவன் கொள்ளையடிக்கிறவன் கொலை பண்றவன்னு யாருக்கும் தண்டனை கிடைக்க விடாம கேஸ் நடத்துவாரு. கிரிமினல் லாயர். நல்லவங்க எல்லாருமே ஸாருக்கு எதிரிங்க தான்.”

“ஹூம் ஓகே மேடம். உங்களுக்கு டாக்டர் தவமணிதாசனை தெரியுமா?”

“தெரியல ஸார்”

“நல்லா பார்த்து சொல்லுங்க” தன் மொபைலில் இருந்த போட்டோவைக் காட்டினார்.

“ஸார் இவன் தான் இவனே தான். இவனோட ஹாஸ்பிட்டல்ல தான் அபாஷன் பண்ணான். இந்தாளு ரெகுலர் செக்கப் தான்னு சொல்லி என்னை நம்ப வைச்சு.. இவனும் நல்லாவே நடிச்சான் ஸார்.” மீண்டும் அழுகை.

“மேடம் அழாதீங்க கூல்”

“உம்”

“வீட்டில வேற யார் யார் இருக்காங்க?”

“அம்மா நான் அண்ணன்”

“உங்க அண்ணன் பெயர் என்ன?”

“அருண்”

“அவர் எங்க?”

“வேலைக்குப் போயிட்டாரு”

“எங்க வேலை பார்க்கிறாரு?”

“டி.எம் கம்பியூட்டர் சேல்ஸ் அண்ட் ரிப்பேர்”

“உங்க அண்ணன் நேத்து நைட் எங்கே இருந்தாரு.?”

“பிரண்ட் வீட்டில பார்ட்டில இருந்தாரு?”

“ஓகே”

“ஏன் ஸார் எங்க அண்ணனை சந்தேகப்படுறீங்களா?”

“நோ சும்மா தான் மேடம் கேட்டேன்”

“ஓகே”

“ஓகே மேடம் நான் கிளம்புறேன். தேங்க்யூ பார் யூர் கார்ப்பரேஷன்”

“ஓகே ஸார்”

ஜீப் ‘டி.எம் கம்பியூட்டர் சேல்ஸ் அண்ட் ரிப்பேர்’ ஐ நோக்கி விரைந்தது. மில்டனின் மனதில் மீண்டும் கேள்விகள்.

“சங்கரோட மாமனார் பொய் சொல்றாரா இல்ல இந்தப் பொண்ணு.. ச்சே ச்சே இந்தப் பொண்ணு பேச்சில ஒரு தெளிவு உறுதி இருந்தீச்சு. அப்படினா சங்கரோட மாமா எதுக்காகப் பொய் சொல்லணும்? தன்னோட வண்டவாளம் வெளிய தெரியாம இருக்கவா? இல்ல அவர்க்கிட்ட ஏதும் மர்மம் இருக்குமா? மீனாக்ஷியோட அண்ணன் தான் கொலை பண்ணி இருப்பானா? அவனை பார்த்து பேசினா ஏதும் லீட் கிடைக்குமா? இல்லனா வேஸ்ட் தானா? தங்கையோட குழந்தையை அவ அனுமதி இல்லாம அபார்ஷன் பண்ணதுக்காக டாக்டரை கடத்தியிருப்பானா? இதை விட வேற யார் யாரைல்லாம் கொல்ல திட்டம் போட்டிருக்கான்? அப்புறம் அந்த லெட்டர் இரத்தம் கொலைகள்தொடரும் அதுக்கப்புறம் என்ன இதோட முடியப்போறதில்ல”

மூளையை வாஷிங்மெஷினில் போட்டுத் துவைப்பது போல் இருந்தது மில்டனுக்கு. ஒரு முறை சொல்லிப்பார்த்தார்.

“இதோட முடியப்போறதில்ல!!”

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க