ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

0
527

 

 

 

 

குண்டு வெடிப்பில் தப்பிய முருகன்

வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள், வெறிகொண்டு எழுந்தபோது, ஆட்களே மாறியிருந்தனர். என் கண்கள் அதை நம்ப மறுத்தது. மனிதன் என்பவன் மிருகமாகலாம் என்பது உண்மைதான். இதை சற்றும்எதிர்பாராத வைன் ஓட ஆரம்பித்தான் .

அவன் மேல் விழுந்த, முதல் இரண்டு,மூன்று அடிகளை, தடுத்து பார்த்தான். முதலில் ஐந்துபேர், பின்னர் ஒன்றிரண்டு என வந்துகொண்டே இருந்தார்கள். சுமாராக நாற்பது பேர் கூடி விட்டனர் . “மாறோ சாலேக்கோ, மாறோ” என கூச்சலுடன் அவனை அடித்தனர். அவன் எதிரில் நின்று பேச திராணியற்ற, சில சோப்பளாங்கிகள்கூட, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்று போட்டனர். அதில் அவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி வேறு, அடுத்த சில நாட்கள்அதை சொல்லியே அலைந்தனர்.

கூட்டத்திலிருந்து பலத்த அடி விழ ஆரம்பித்ததும் ஓடிய வைன், அதிகாரிகள் குடியிருப்புக்குள் நுழைந்தான. தொடர்ந்து விரட்டியகூட்டம் அந்த குடியிருப்புக்குள் நுழைந்ததும், எங்கள் மேலாளர் ஒருவர் வேகமாக ஓடி வந்து தடுத்து காப்பாற்ற முயற்சித்தார்.அவரது கனத்த உடலும், நல்ல உயரமும் காரணமாக குடியிருப்பின் நுழைவு வாயிலின் கதவருகே நின்றுகொண்டு முழுவதுமாகமறைத்தபடி இருபக்கமும் கைகளாலும், உடலாலும் யாரும் வர முடியாதபடி தடுத்து நின்றார். இருந்தாலும் அவரதுகைகளுக்கிடையில் உள்ள இடைவெளி வழியாக ஒருவன் ஓங்கி அறைந்தான் வைனின் முதுகில் .

அந்த மேலாளர் பார்வையால் “அடிக்காதீர்கள்” எனக் கெஞ்சுவதை தவிர வேறு எதுவும் அவரால் செய்ய இயலவில்லை. ஜோக்கிம்வாயிலிருந்து இரத்தம் வருகிறது என கேட்ட நானும், முருகனும் விரைந்து செல்லும் போது , கூட்டமாக வைனை அடிக்கதொடங்கினர். முதலில் அடிக்கட்டும் என்றிருந்த நாங்கள் .பின்னர் “போதும் நிறுத்துங்கள் ,நிறுத்துங்கள்” என சப்தமிட்டோம்.யாருக்கும் அது கேட்கவே இல்லை. அடிப்பதை பார்த்துக்கொண்டிருந்ததை தவிர எதுவும் செய்ய இயலவில்லை .

வைன் பொதுவாக சட்டை அணிவது இல்லை. உணவுக்கூடத்துக்கு வரும் நேரம் தவிர பணியில் இருக்கும்போது பெரும்பாலும்வெற்றுடலாகவே அலைவார். சட்டையில்லா உடல் ஆங்காங்கே சிவந்து இருந்தது தெரிந்தது. முகம் கொஞ்சம் வீங்கிப்போய்விட்டது. பின்னர் அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட கூட்டம் வைனை விட்டு விலகியது. அவனை அதிகாரிகள்பாதுகாப்பாக வைத்திருந்து விட்டு.அமெரிக்க ராணுவ போலிசிடம் ஒப்படைத்துவிட்டனர் .
ராணுவ போலிஸ்,வைனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றது. வைன் உடல் குறுகி திறந்த ஜீப்பில் அமர்ந்திருந்தான். அடுத்தபதினைந்து நிமிடத்தில் ராணுவ அதிகாரிகள்,எங்களது நிறுவன மற்றும் அமெரிக்க நிறுவன அதிகாரிகள் எங்களுடன் கூட்டம் ஒன்றைநடத்தி விசாரணை செய்தது. முடிவில் இங்கு யாரும் , நிறத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டவர்கள் கிடையாது. அப்படியாராவது நடந்து கொண்டால் தண்டிக்கபடுவர் என்றனர் .

வைன், இனிமேல் எங்கள் நிறுவனத்திலோ, அமெரிக்க நிறுவனத்திலோ பணி செய்ய முடியாது.மருத்துவ முதலுதவிசிகிழ்ச்சைக்குப் பின் அவனை சொந்த நாட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றனர்.நான் எழுந்து பேசினேன். நடந்த சம்பவத்திற்கு அனைவர் சார்பாகவும் மன்னிப்புக் கேட்டேன். இனிமேல் இப்படி ஒருமுறை நடக்காதுஎன நான் உறுதியளிக்கிறேன் என சொல்லி என்னுடன் பணிபுரியும் அனைவரையும் பார்த்தேன். அனைவரும் தலைகுனிந்துஅமைதியாக இருந்தனர் .

மேலும் நடந்த நிகழ்வுக்கு காரணங்களை விளக்கினேன். முதலில் விஜயனுடன் பிரச்சனை செய்தான். அதை புகார் செய்தபோது எந்தநடவடிக்கையும் எடுக்காததால் ,இரண்டாவது ,மூன்றாவது என கடைசியில் இப்படியாகிவிட்டது என்றேன். ஆரம்பத்திலேயே இதைதடுக்கும் வாய்ப்பு இருந்தும், நிர்வாகம் இதை தவறவிட்டது என்றேன்.”ஏன் என்னிடம் நீ சொல்லவில்லை? ஷாகுல், இனிமேல் எந்த சிறு பிரச்னை என்றாலும் உடனே என்னிடம் சொல்” என ஜெசிக்காசொன்னாள். ஆனால் அது ஒரு மோசமான நிகழ்வு. சில நாட்கள் குற்றவுணர்வுக்குப்பின் அனைவரும் மிக சீக்கிரத்தில் அதை மறந்து, எளிதில் கடந்து சென்றனர். வைனை பற்றிய பேச்சே இல்லாமல் பணியிலும் ,மேஜை பந்து விளையாட்டிலும் ஒன்றிவிட்டனர்.

 

 

 

 


தொடர்ந்து வந்த நாட்களில் திக்ரித்லும் குண்டுகள் வெடிக்க தொடங்கிவிட்டது . பகலிலும், இரவிலும் அவ்வப்போது குண்டுகள்வெடிக்கும் சப்தம் கேட்கும்போது பங்கர் பாதுகாப்பு சுவருக்குள் பதுங்க வேண்டியிருந்தது. பங்கருக்குள் அனைவரும் பயத்துடன்உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் போது ஒருநாள் நானும், கார்த்தியும் தமாஷாக பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது உள்ளே பயத்தில் இருந்த கல்கத்தாவின் சமையற்காரன் ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டது. எங்களை பார்த்து கத்தினான்.கார்த்திக் அவனிடம் , “உனக்கு தெரியாதா இங்கு வரும்போது குண்டுவெடிக்கும்” என. “போர்முனையில் பூக்களையா உன் தலையில்போடுவாங்க. மும்பையில உன்கிட்ட சொல்லி தானே அனுப்பிருப்பாங்க” என ஆங்கிலத்தில் சொன்னான் . அதை ஹிந்தியில் திருப்பிசொன்னேன்.குண்டு வெடிப்பு அதிகமாகிவிட்டபின், ராணுவம் எங்கள் உணவு கூடத்திற்கு அருகில் டைகிரிஸ் நதியை நோக்கி ஒரு பீரங்கியைகொண்டு வந்து நிறுத்தியது. டைகிரிஸ் நதியின் அக்கரையில் இருந்துதான் தாக்குதல் நடத்துகிறார்கள். எனவே, இங்கிருந்துஅவர்களை நோக்கித் தாக்குவோம் என்றனர். ராணுவம் பீரங்கியை இயக்கும் கால அட்டவணையை உணவுக்கூடத்தின் அறிவிப்புபலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர். பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும். எனவே அந்நேரத்தில்அனைவரும் தங்கள் காதுகளை பொத்தி பாதுகாத்துகொள்ளும் பொருட்டு அனைவரும் அட்டவணையில் உள்ள குண்டு வெடிக்கும்நேரத்தை நினைவில் வைத்துகொள்ளும்படி அறிவுறுத்தபட்டோம்.

காலையில் பணிக்கு சென்றவுடன் உரையாடல் இப்படி தான் இருக்கும் .

“இன்னக்கி எப்ப வெடிக்கும்?”
“பத்தே முக்காலுக்கு”
“இயர் பிளக் இருக்கா உன்ட்ட”
“அது, நேற்று நம்ம மிலிட்டரிகாரி பிரண்டு தந்தா”
“நீ அவ காப்டன் வெஸ்ட்-ஐ காக்கா புடிசிட்டியா, உனக்கு நேரம்” .
“உனக்கு பொறுக்காதே ………………”

வெஸ்ட், மே ,ஜூன் போன்ற பெயர்களில் நிறைய பேர் இருந்தனர் .

பீரங்கி வெடிக்கும்போது,காதுகளை பொத்திக்கொண்டு , அதிலிருந்து குண்டு செல்வதை பார்ப்பதற்கு அருகிலேயே காத்து நிற்போம்.ஆனால் பீரங்கியை இயக்கும்போது குண்டு வெளியேறுவதை பார்க்க இயலவில்லை. பின்னர் அதை வீடியோ படமெடுத்து காட்டிதந்தனர். அட்டவணையிட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும், எங்கள் முகாமை நோக்கிய தாக்குதல் குறையவே இல்லை.

ஒருநாள் மாலை, நான் போர்க் லிப்ட் வாகனத்தில் பொருட்களை தூக்கிக் கொண்டு கன்டெய்னர்களில் வைத்துக்கொண்டிருந்தேன்.முருகன் கன்டெய்னரின் அருகில் நின்று கொண்டு சைகை காண்பித்து கொண்டிருந்தான்.அப்போது எங்களின் மிக அருகில் ஒருகுண்டு விழுந்தது. நான் போர்க் லிப்ட் வாகனத்திலிருந்து குதித்து ஓடி விட்டேன். அப்போது தெறித்த கற்கள் சில மீட்டர் தள்ளி நின்றுகொண்டிருந்த முருகனின் தொடை பகுதியில் புகுந்தது. முருகனின் அலறல் கேட்டு நான் திரும்பினேன்.

ஜெசிக்கா ஓடி வந்தாள். அவனுக்கு அடிபட்டுவிட்டது என பதறியவளாய் “முர்கா,ஷோ மீ” என்றாள். உன் கால் சட்டையை கழற்று,உன் காயத்தை நான் பார்க்க வேண்டும் என்றபோது, முருகன் வெட்கப்பட்டு “நோ ,நோ” என்றான்.
ஜெசிக்கா சிரித்துக்கொண்டே என்னிடம் “ஷாகுல், டெல் ஹிம், நான் அவனுடையதை பார்க்க மாட்டேன், அவனுடைய காயத்தைபொறுத்து முதலுதவியும், அறிக்கையும் நான் அனுப்பவேண்டும். அவனது பாண்டை கழட்ட சொல். ஐ வான்ட் டு சி” என்றாள். “தம்பிமுருகா ரெண்டு புள்ளக்க தாய் அவ, நம்ம அக்கா, சும்ம களத்தி காட்டுடே” என்றேன் முருகனிடம்.முருகன் வெட்கத்துடன் கால் சட்டையை கழற்றியபோது தோல் பிய்ந்து ரத்த கசிவுடன் இருந்தது. லேசான காயம் தான். உடனேஅவனை அழைத்து சென்று முதலுதவி செய்து கொடுத்தாள். அடுத்து தொடர்ந்து வந்த நாட்களில் அனைவருக்கும் குண்டுதுளைக்காத தலை கவசமும், இடுப்புவரை அணிய ஒரு கவச உடையும் (ஜாக்கெட் ) கொடுத்தனர். கொரிய தயாரிப்பான அதன்எடை கிட்டத்தட்ட பதினான்கு கிலோ, விலை ஆயிரத்தி முன்னூறு அமெரிக்க டாலர்கள் . ஈராக் முழுவதும் எங்கள் நிறுவனத்திற்குமுப்பத்திரண்டு முகாம்கள் இருந்தன. மூவாயிரம் பேருக்கு மேல் பணியாளர்கள். அனைவருக்கும் அந்த குண்டு துளைக்காத கவசம்வழங்கபட்டிருந்தது.
அவ்வளவு எடையுள்ள அந்த கவசத்தை அணிந்து வேலை செய்வது மிக கடினம். ஸ்டோர்ஸில் பணிபுரியும் நாங்கள் பெரும்பாலும்உணவுக்கூடத்திற்கு வெளியே வேலை செய்வதால், கவச உடையை அணிந்தே ஆக வேண்டிய காட்டாயதிலிருந்தோம்.

அந்தக் கவச உடையை பார்த்து ராணுவ வீரர் ஒருவர் கேட்டார். இடுப்புக்கு கீழே யாரவது சுட்டால் அல்லது காயம் பட்டால் என்னசெய்வது என. அவரும் அதையே அணிந்திருந்தார்.

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க