முரண்பாடு

0
752

மாசுமருவற்ற சுத்த காற்றை
சுதந்திரமாய் சுவாசிக்க
சுற்றி கட்டின முகமூடி தடை

சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்
மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரி
நினைத்தபடி பயணிக்கத் தடை

கழுவித் துடைத்த சுத்தமான
கரங்கள் என்றாலும் கை குலுக்க
கட்டி முத்தம் கொடுக்கத் தடை

அன்றிலிருந்து நேற்று வரை
நின்று கதைக்க நேரமில்லை
இன்று நேரமிருந்தும் கூடிநிற்க தடை

காலை முதல் மாலை வரை
கமகமக்க உணவு சமைத்தாலும்
களி கூர்ந்து சேர்ந்து சாப்பிட தடை

அலாரம் அடிக்கையில் பதறி எழுந்து
அலங்காரம் பண்ண அவகாசமின்றி
அலுவலகம் ஓடின நாட்கள் அன்று
ஆமை போல் நேரம் ஊர்ந்தாலும்
ஆளுயரக் கண்ணாடி இருந்தாலும்
அலங்காரம் அவசியமில்லை இன்று

கண்ணுக்குத் தெரியாத கள்ளன்
கண்ணுக்குள் விரல் விட்டு
இந்தப்பாடு படுத்துகிறான்
முரண்பாடு தடை நீங்கிடுமா
எந்நாளும் மனம் ஏங்கிடுதா??

காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்
கிடைத்த நேரத்தை
கெட்டியாய் பிடித்துக் கொள்!!

தொலைந்து போன உறவுகளை
தொடர்பு கொள்
தேடித் தேடி
தொல்லைகளை தள்ளி விட்டு
தொலைபேசியில் இணைத்திடு!!

பாணும் சம்பலும் சாப்பிட்ட
பள்ளித் தோழருடன்
பழைய கதைகள் பேசிப் பேசி
பசுமை நினைவுகளை மீட்டிடு!!

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே
முரண்பாட்டை இனிய பாட்டாய்
மாற்றிவிட முடியும் உன்னால்!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க