தொட்டாற்சிணுங்கி (Touch me not)

0
1279

 

 

 

 

தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலப்பெயர்கள்; sensitive plant, sleepy plant, touch-me-not, or shy plant)

மைமோசேசியே குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இவை கொடி போல தொற்றியும், நிலத்தில் படர்ந்தும் வளரும். நடு மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட தொட்டாற்சிணுங்கி உலகெங்கிலும் பரவியுள்ளது. இதற்கு பல மருத்துவ குணங்களும் உண்டு

இது 5 அடி வரை படர்ந்து சுமார் 60 செமீ உயரம் வரை வளரும். கூட்டிலைகளில் 10-20 ஜோடி சிற்றிலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். மென்மையான இளஞ்சிவப்பில் உருண்டையான கொத்தாக மலர்கள் காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்..
பரந்து விரிந்து வளரும் இந்த மூலிகையில், சிறு முட்கள் இருக்கும். தாவரவியல் அதிசயமாக, தொட்டால் இதன் இலைகள் சுருங்கிவிடும் என்பதாலேயே இதைத் தொட்டாற்சுருங்கி என்று அழைக்கின்றனர். வெளியிலிருந்து தரப்படும் தொடுதலுக்கும் அதிர்வுகளுக்கும் உடன் எதிர்வினையாற்றும் தாவரங்களின் இத்தன்மை திக்மோனாஸ்டி அல்லது செய்ஸ்மோனாஸ்டி (Seismonasty/Thigmonasty) எனப்படும்.

இலைகளைத்தொடும்போது இலைகளின் விறைப்பு அழுத்தம், (Turor pressure ) மாறுபடுவதால் இலைகள் சுருங்குகின்றன. பின் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகின்றன. தொடுதலென்னும் புறத்தூண்டல் நிகழ்கையில் இலைக்காம்பின் அடிப்பகுதியிலிருக்கும் செல்களில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அயனிகளின் அடர்த்தி மாறுபட்டு உள்ளிருக்கும் நீர் வெளியேறுகின்றது.. எனவே இலைகள் விறைப்புத்தன்மையை உடனடியாக இழந்து நெகிழ்ந்து சுருங்கி மூடிக்கொள்ளும். தொடுதல் நிகழ்ந்ததும் 5 வினாடிகளுக்குள் சுருங்குதல் நிகழும். இலைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 நிமிடங்கள் ஆகின்றது. இச்செடி, தாவரங்களை உண்ணும் பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே இம்முறையை கையாளுகின்றது என தாவரவியலாளர்கள் கருதுகிறார்கள்.

இதன் வேர்கள் தொழுநோய், வெண்படை, வீக்கம், ஆஸ்த்மா மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்தாகும்.. இலைகளும் முழுத்தாவரமும் குடிநோயாளிகளுக்கு குடியை மறக்க மருந்தாக கொடுக்கபப்டுகின்றது

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க