ட்யூலிப் மலர்கள்

0
1920

 

 

 

 

உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும்  மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே  அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும்  மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன.  உலககெங்கிலும் மலர்வர்த்தகம் பலநூற்றாண்டுகளாக வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது,அப்படியான ஒரு சிறப்பான அழகு மலரே ட்யூலிப்

ட்யூலிப் (tulip) கிழங்குகளிருந்து வளரும், வாடாமல் பலநாட்களுக்கு நீடித்துநிற்கும் மணிவடிவ பூக்களைக்கொண்ட, கிட்டத்தட்ட 150 இனங்களையும் 3000’திற்கும் மேற்பட்ட வகைகளையும்  கொண்ட தாவரம்.  வருடா வருடம் பல புதிய வண்ணங்களில் ட்யூலிப் மலர்கள் மரபணு  மாற்றம் மூலம் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இது லில்லியேசியே என்றழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது.   இவ்வினம் ,வடஆப்பிரிக்கா, கிரேக்கம், துருக்கி, சிரியா, இஸ்ரேல், லெபனான், ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு,தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை  தாயகமாகக் கொண்டது. தற்போது உலகெங்கிலும் ஏராளமாக வளர்க்கப்படுகின்றது.

 உலகின் மிக அழகிய மலர்களில் ஒன்றான, 6 செமீ அளவிலுள்ள இந்த ட்யூலிப் மலர்களில் அகன்ற அடிப்பகுதியும் கூர்நுனியுமுள்ள 6 இதழ்கள் இரட்டை அடுக்கில் மூன்று மூன்றாக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒருசெடியிலிருந்து உருவாகும் 2 அடிநீளமுள்ள ஒற்றைமலர்க்காம்பில் பெரும்பாலும் ஒரே ஒரு மலர் மலர்ந்திருக்கும். இச்செடியின் தண்டுகளில் 2 லிருந்து 6 வரை அகலம் குறைவாக அதிக நீளத்துடன் சதைப்பற்றுள்ள ரிப்பனைப்போன்ற இலைகள் காம்புகளின்றி நேரடியாக தண்டிலிருந்து உருவாகி மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மண்ணிற்கடியில் உருண்டையான பளபளப்பான கிழங்குகள் இருக்கும். ட்யூலிப் செடி 2 லிருந்து 4 அடி வரை வளரும்.. ஒவ்வொரு வகை மலரும் பிரத்யேக மணமுள்ளவையும் கூட.

ட்யூலிப் செடிகள் (tuliposides and tulipalins) ட்யூலிபோஸாயிட்ஸ் மற்றும் ட்யூலிபாலின்ஸ் ஆகிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பதால் பலருக்கு ஒவ்வாமையை (Alergy) ஏற்படுத்தும். இவை பூனைகள் குதிரைகள் மற்றும் நாய்களுக்கு நஞ்சாகும். மலரிதழ்கள் நஞ்சற்றவை. ட்யூலிப் மலர்களின் இதழ்கள் உண்ணத்தகுந்தவையும் கூட. பல நாடுகலில் மலரிதழ்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

 

 

 

ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற தால்ஏரி அருகே ஜபர்வான் மலையடிவாரத்தில்உள்ளது. 75ஏக்கர்பரப்பளவில் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்திராகாந்தி நினைவுத்தோட்டத்தில் 46 வகையை சேர்ந்த 20 லட்சம் ட்யூலிப் மலர்ச்செடிகள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு ட்யூலிப் கண்காட்சி காஷ்மீரில் நடைபெறும். பலவண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்ப்பதற்காக உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள். 15நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தோட்டத்திற்கு வெளியே உணவுஅரங்கம், கைவினைப்பொருட்கள் அரங்கம் ஆகியவை காஷ்மீர் பாரம்பரியத்துடன் அமைக்கப்படும். அத்துடன் உலகின் தலைசிறந்த உருதுகவிஞர்களும் இந்தவிழாவில் பங்கு பெறுவார்கள்.

ரோஜாக்களுக்கும் சாமந்திகளுக்கும் அடுத்து ட்யூலிப் மலர்கள் உலகின் பிரபலமான மலர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. (நீலத்தை தவிர்த்து) பலநிறத்திலான பூக்கள் கொண்ட செடிகளை அடுத்தடுத்த படுகைகளில் வளர்க்கப்பட்டுள்ளதை. தொலைவிலிருந்து பார்க்கும் போது வானவில் பூமியில் விழுந்திருப்பதைப் போலதோன்றும்,

16 ஆம் நூற்றாண்டின் துவகக்த்தில் ட்யூலிப் மலர்கள் மிக அதிக விலையுள்லவையாக நெதர்லாந்தில் இருந்தன. 1634 லிருந்து 1637 வரை இம்மலர்கலின் அதிக விலைக்காலத்தை ட்யூலிப் மானியா  “Tulip Mania” என்று தற்போது அழைக்கிறார்கள்.

நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் (Parkinson’s disease) நோய்க்கான அமைப்புக்கள் 1980’லிருந்து ட்யூலிப் மலர்களை அவற்றின் அடையாளமாக கொண்டிருக்கின்றன.

ரோஜாவைப்போலவே அன்பின் அடையாளமாக உலகெங்கிலும் கருதப்படும் ட்யூலிப் மலர்களுக்கான திருவிழாக்கள் உலகெங்கிலும் நெதர்லாந்து ,ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல  இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. அடர் சிவப்பு ட்யூலிப் மலர்கள் தூய அன்பையும், ஊதா மலர்கள் நேர்மையையும் எடுத்துக்காட்டுவதாக நம்பப்படுகின்றது. வெள்ளை மலர்கள் மன்னிப்புக்கேட்கையில் கொடுக்கப்படுகின்றது, துருக்கி மற்றூம் ஆஃப்கானிஸ்தானில் ட்யூலிப்  தேசிய மலர்.

வருடத்திற்கு 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்திசெய்தும் அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் உலகின் ட்யூலிப் வளர்ப்பில் நெதர்லாந்து முதலிடம் வகிக்கிறது.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க