எருக்கு

0
1116

 

 

 

எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின்  கொழுக்கட்டை போன்ற   மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன் அவை வெடிக்கும். கிராமங்களில்  சிறுவர்களிடையே இது ஒரு விளையாட்டாகவே நடக்கும் . 

 கிராமப்புறங்களில் கைவைத்தியமாக புழங்கும் பல மூலிகைச்செடிகளில் எருக்குதான் மிக அதிகம் பயன்பாட்டிலிருக்கிறது.

எடுக்கமுடியாமல் ஆழமாக காலில் முள் குத்தினால் எருக்கம்பாலை அந்த இடத்தில் வைத்து, அதை எருக்கின் இலைகளின் மீதிருக்கும் மெழுகுபூச்சை சுரண்டி மூடிவைப்பது வழக்கம். அந்த பாலின் வெம்மையில் மேல் தோல் வெந்து., லேசாக அழுத்தினாலே முள் வெளியே வந்துவிடும். . பாம்பு தேள். குளவி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கும் கடிவாயில் எருக்கிலைவிழுதை  வைத்து கட்டுவார்கள்.

 குதிகால் வலிக்கு, சூடான செங்கல்லின் மீது பழுத்த எருக்கிலைகளை வைத்து அவற்றின் மீது காலை வைத்து எடுப்பதை  மிகச்சாதாரணமாக காணலாம்.  

 Crown flower plant  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்  Calotropis procera என்னும் தாவர அறிவியல்  பெயர் கொண்ட  இந்த எருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிக முக்கியமான தாவரம். வடக்கு ஆப்பிரிக்காவை  தாயகமாக கொண்ட இச்செடி உலகெங்கிலும் தற்போது பரவியுள்ளது.

பொதுவாக எருக்கில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனினும் மிக அதிகமாக காணப்படுவது வெள்ளெருக்கான  Calotropis procera, (Calotrope) மற்றும் இளம் ஊதா நிறமலர்களுடனான நீல எருக்கு எனப்படும் Calotropis  gigantea (Giant calotrope) ஆகிய இரண்டு வகைகள் தான்.  இவை    இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக நுண்ணியதாக,  தாவரவியலாளர்களாலேயே எளிதில் கண்டுபிடித்து விட முடியாதாக இருக்கும். இதழ்களின் ஓரங்களில் மட்டும் அடர் ஊதா நிறம் தொட்டு வைத்தது போலிருக்கும் ராம எருக்கு எனப்படும் ஒரு வகையும் இந்த இரண்டில் ஒன்றுதான் என்று கருதப்படுகின்றது. இவை இரண்டிலிருந்தும் சிறிது வேறுபடும் Calotropis acia என்னும் ஒரு வகையும் சமீபகாலங்களில் பரவலாக காணக்கிடைப்பதாக தாவரவியலாளர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

 

இரண்டிலிருந்து ஆறு மீட்டர் உயரம் வரை வளரும் இத்தாவரத்தின் வேர்கள் மூன்று மீட்டர் ஆழம் வரை மண்ணில் இறங்கி இருக்கும்.வெளிறிய நிறத்தில் இருக்கும் தண்டு உறுதியாகவும், அதன் மரப்பட்டை சொரசொரப்பாக வெடிப்புகளுடன் காணப்படும். அகன்ற சிறு காம்புடன் கூடிய இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். மெழுகால் செய்தது போல் இருக்கும் எருக்கு மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய  கிரீடம் போன்ற அமைப்பினால்தான் ஆங்கிலத்தில் இது Crown flower என்று அழைக்கப்படுகிறது.

மலர்களின் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஐங்கோண வடிவில் ஒரு சிறு மேடைபோல் இணைந்து அதனடியிலிருந்து ஐந்து அழகான வளைவுகளுடன்  பீடம் போன்ற அமைப்பினால் தாங்கப்பட்டிருக்கும். இதன் தாவரவியல் பெயரில் Calo -tropis  என்பது  கிரேக்க மொழியில் ’’அழகிய- படகு போன்ற’’ என்னும் பொருளில் இதன் மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய பீடம் போன்ற அமைப்பை குறிக்கும். (kalos – beautiful and tropos – boat )  procera  என்றால் உயரமான, gigantea என்றால் மிகப் பெரிதான என்று பொருள்

பிற மலர்களைப் போல் மகரந்தம் இதில் துகள்களாக  இருக்காது. ஐங்கோண மேடை இணைந்திருக்கும் ஐந்து புள்ளிகளிலும் மகரந்தம் நிறைந்த தராசைப் போன்ற இரு பைகள் ஒட்டிக்கொண்டிருக்கும் (pollinia). வெடித்துச் சிதறும் இயல்புடைய பச்சை நிற கடினமான ஓட்டுடன் கூடிய  கனிகள் சிறிய பலூனை போல இருக்கும். ஏராளமான எடை குறைவான விதைகள் பட்டுபோன்ற இழைகளுடன்  உள்ளிருக்கும். இவை வருடம் முழுவதும் பூத்துக்காய்க்கும்.

எருக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்திய, அரபு, யுனானி மற்றும் சூடான் உள்ளிட்ட பல பாரம்பரிய  மற்றும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.  

கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய எருக்கு, பனிரெண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட எந்த பாதிப்பும் இன்றி வளர்ந்து, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காய்க்கும் தன்மை கொண்டது

வெள்ளெருக்கம் பூவானது,சித்த மருத்துவத்தின் முக்கிய மருந்து தயாரிப்பான ‘சங்கு பஸ்பம்’ செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றும் வழக்கம் இந்தியாவில் பல கிராம பகுதிகளில் இருக்கிறது.. நவக்கிரக வனங்களில் ஒன்பது கோள்களுக்குமான தாவரங்களில் சூரியனுக்குரியதாக இருக்கும் தாவரம் எருக்குதான்.

பழங்குடியினரில் பல இனங்களில் நோயுற்றவர்களின்  தலைமுடியை சிறிது எருக்கஞ்செடியில் கட்டிவிட்டால் நோயை செடி எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையும்  நிலவுகின்றது.

உயர் இரத்த சர்க்கரை  சிகிச்சைக்கு  phytotherapy எனப்படும் தாவர மருத்துவத்தில்,  இரண்டு பாதங்களிலும் உள்ளங்கால்களில் எருக்கிலையின் மேற்புறம் படுமாறு வைத்து அதன்மேல் சாக்ஸ் அணிந்து ஒரு வாரம் நடந்து கொண்டிருந்தால் சர்க்கரை அளவு சீராகிவிடும் என்று சொல்லப்படுகின்றது.. 

இன்னும் சில பழங்குடியினர் இதன் பாதி பழுத்திருக்கும் காயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி  காயின் கடினமான ஓட்டினுள் ஆட்டுப்பாலை நிரப்பி அருந்துவதை பல நோய்களுக்கு சிகிச்சையாக செய்கின்றனர்.எருக்கின் இளம் தளிர்களை ஒற்றை தலைவலிக்கு பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் உபயோகிக்கின்றனர்.

 எருக்கின்  தாவர பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்களில் உஷரின், கேலோடாக்சின், கேலோட்ரோபின் மற்றும் ஜிஜாண்டின் (uscharin, calotoxin, calotropin, and gigantin) போன்றவை மிகுந்த நச்சுத்தனமை உடையவை.  நச்சுத்தன்மை கொண்ட எருக்கின் பாலை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடும் வழக்கமும் பழங்குடியினரிடம் இருக்கிறது ’வூடூ’ கலை தோன்றிய மேற்கு ஆப்பிரிக்காவின் ’பெனின்’ நாட்டில் மட்டும் எருக்கின் பால் கலந்து மிக அதிக விலையுடைய உடைய ஆட்டுப்பால் சீஸ் செய்கிறார்கள்.         

காமம் பெருக்கும் (Aphrodisiac) குணத்திற்காகவும் இச்செடி பாரம்பரிய மருத்துவ முறையில் உபயோகிக்கபடுகிறது. 

எருக்கன் இலையை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு எருக்கிலையின் அடியில் முட்டையிடும் மோனார்க் வகை பட்டுப்பூச்சிகள் தனது வாழ்க்கை சுழற்சிக்கு எருக்கையே நம்பியுள்ளன. புறநகர் பகுதிகளில் எல்லாம் நகரம் விரிந்து கொண்டே வருவதால் வெகுவிரைவாக அழிந்து வருகின்றன எருக்கும், மொனார்க் பட்டுப்பூச்சிகளும்.

எல்லா பாகங்களுமே சிறந்த மருத்துவப் பயன்களை உடைய இச்செடி, கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் உடல்நலனுக்கான கடவுளான அஸ்கிலிப்பியஸின் பெயரிலான ASCLEPIADACEAE என்னும் குடும்பத்தை சேர்ந்தது இந்த தாவர குடும்பமே Milkweed family எனப்படும்.

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க