ஹலோ டாக்டர்….?!

0
1235

………………… ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).
போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது.

“ஹலோ”
“ஹலோ, சஜீதன் டொக்டரா”
“ஓம், சொல்லுங்க, நீங்க?”
” நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப”

சத்தியமாக ஞாபகம் இல்லை.

” ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்”
” இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்..”

எதிர்பார்த்தது தான்..!

” என்ன பிரச்சனை”
” கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்காம், இரவுல நித்திரையும் வரல்லியாம், டொட் டொட் டொட்ட்ட்ட்….”
அவர் முடிக்கும் வரை கேட்டு விட்டு, 
” எவ்வளவு காலமா? எந்தப் பக்கம்”.. என்று வழமையாக கேட்கும் ஓரிரு கேள்விகளை கேட்டேன்.
” அக்கா இப்ப நித்திர கொள்ளுவா, எழும்புன உடனே கேட்டு சொல்லட்டா”?

நேரம் அப்போது காலை 10 மணி.

” என்ன இந்த நேரத்துல நித்திரை கொள்ளுறா” என்று கேட்டேன்.
” என்ன இப்பிடி கேக்கீங்க, இந்த நேரத்துல தானே நித்திரை கொள்ளணும்” என்றார்.
ஒருவேளை நைட் டியூட்டி செய்பவராக இருக்குமோ என்று நினைத்து,
“ஒருவேளை இரவு கண்முழிச்சி வேலை செய்றதாலயும் தலையிடி வரலாம் ” என்றேன்.
” என்ன டொக்டர் சொல்றீங்க? என்ன இரவு கண்முழிக்கிறது?அவ இரவுலதானே நித்திரை கொள்றா..”

எனது கடிகாரம் இப்போது காலை 10.06 என்றது.

” இப்ப இரவா காலையா” என்றேன்.
” நமக்குத்தான் காலை, அவக்கு இரவு தானே” என்றவர், ” என்ன டொக்டர், எங்கட அக்காவ தெரியாதா உங்களுக்கு.. நீங்க சின்னப்புள்ளையா இருக்கக்குள எத்தின தரம் தூக்கியிருக்கா.. ஒருக்கா அவட சட்டையில சூ போய்.. ஞாபகம் இல்லியா..
அவ யூ.எஸ் போனது கூட தெரியாதா உங்களுக்கு ” என்றார்.

இப்போது எனக்கு தலையிடித்தது.
***********************

தலைப்புள் நுழையுமுன் சிறு சம்பவத்துடன் வருவோமென்று தொடங்கினால், அது அனுமார் வால் போல நீண்டு விட்டது.

தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள்.. இதுதான் தலையங்கம்!

மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் இதை எதிர்கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் தங்கள் மருத்துவ நண்பர்களுக்கோ, உறவினருக்கோ, தெரிந்தோருக்கோ இல்லை தெரிந்தவரின் தெரிந்தவருக்கோ இது தொடர்பாக போன் போட்டிருப்பீர்கள்.

முதலில் ஒரு நோய் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம் ( மருத்துவ துறைசார்ந்தோர் இப்பகுதியை ஸ்கிப் செய்து உங்கள் வாழ்நாளின் இரண்டு நிமிடங்களை சேமித்துக்கொள்ளுங்கள்)

😊 நோயாளி நோய்க்கான அறிகுறிகளுடன் வைத்தியரை சந்திப்பார். இங்கு அவரின் நோய்க்குணங்குறிகள் கேட்டறியப்படும். 
இதை history என்போம்.

இதிலிருந்து நமக்கு ஒரு “வடிவம்” கிடைக்கும். ஆனால் உள்ளடக்கம் இன்னும் தெரியாது.

😊😊 அதன் பின் நோயாளி வைத்தியரால் பரிசோதிக்கப்படுவார். Examination எனப்படும்
இது மிகவும் முக்கியமான கட்டம். நோய் தொடர்பான பல முடிவுகள் இங்கு எடுக்கப்படும். ஒரு வைத்தியரின் அனுபவம் வெளிப்படுத்தப்படும் படிமுறை இது. 
இங்கு நோயாளியின் பொதுவான உடல்நிலை, நாடித்துடிப்பு, குருதியமுக்கம், இதயத்துடிப்பு, நுரையீரல்கள் என்று நிறைய விடயங்கள் பரிசோதிக்கப்படும்.

😊😊😊 அதன்பின் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும். 
குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், ஈசீஜீ, எக்ஸ்ரே எல்லாம் இதில் அடங்கும்.

இவை அனைத்தையும் வைத்தே நோய் நிர்ணயிக்கப்பட்டு, மருந்து முடிவு செய்யப்படும்.

***************

இப்போது நமது ” தொலைபேசி மருத்துவத்துக்கு” வந்தால், இங்கு மேற்கூறிய இரண்டாவது படியான examination ( நேரடியான உடல் பரிசோதனை) நடைபெற சாத்தியமேயில்லை.

உதாரணமாக, ” நான்கு நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, பசியில்லை, தலைசுற்றுகிறது” என்ற முறைப்பாட்டின் காரணம் – சாதாரண சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றாகவும் இருக்கலாம், அல்லது டெங்கு குருதிப்பெருக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை நேரில் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் சிலர் நாலைந்து இரத்த மற்றும் சிறுநீர் ரிப்போர்ட்டுகளை வட்சப்பில் அனுப்பி, மருந்து கேட்பார்கள்.
ஒருவேளை மருத்துவ பாடத்திட்டத்தில் சாத்திரம், மந்திர தந்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்திருப்பார்களோ தெரியாது.

இதில் மிக அபாயமான விடயம் சிறுவர்களின் நோய் தொடர்பானது.
” டொக்டர், பிள்ளைக்கு ஆறுமாசம் இப்ப. ரெண்டு நாளாக தொடர்ந்து அழுது கொண்டே இருக்கு. பால் குடிக்கிறதும் குறைய..”
” மகன் நாலைஞ்சி நாளா ஒரே சோர்வா இருக்கான். எப்ப பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கான்…”

இப்படி சில முறைப்பாடுகள் வரும். இவை சில பாரதூரமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவர்களுக்கு நான் சொல்லும் பதில், ” உடனே அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பிள்ளையை கொண்டு செல்லுங்கள்” என்பதே!

***************
யோசித்துப் பாருங்கள்..!
அமரிக்காவில் இருக்கும் அக்காவின் தலையிடியை மட்டக்களப்பில் இருந்து கொண்டு சுகமாக்க வேண்டுமானால் , நான் வைத்தியராக இருக்க வேண்டுமா இல்லை மந்திரவாதியாக இருக்கவேண்டுமா?

மருத்துவம் என்பது ஒரு கலை. அனுபவித்துச் செய்ய வேண்டியது. 
ஒரு ஓவியனிடம் ஒரு காட்சியை விவரித்து அதை படமாக வரையச் சொல்வதற்கும், காட்சியை நேரில் பார்த்து , அனுபவித்து வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரண்டாவதில் தான் உயிரோட்டமான ஓவியம் உருவாகும்.

மருத்துவமும் அதே போலதான்.

நோயாளி நம்மை நோக்கி வருகையில், அவரின் நடையை அவதானிப்பதிலிருந்து மருத்துவம் தொடங்குகிறது. அவரது பேச்சு, தொனி, உடல்மொழி எல்லாவற்றிலும் மருத்துவம் கலந்திருக்கிறது.
ஒருவரின் நாடித்துடிப்பு நிறைய விடயங்களை நமக்கு சொல்லும்.

இவையொன்றுமில்லாமல் வெறுமனே ரிப்போர்ட்டுகளை மட்டும் வைத்து மருத்துவம் பார்க்கவேண்டுமானால் அதை ஒரு கம்பியூட்டர் செய்துவிடுமே..!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியிருந்தும் ஏன் ஒரு ” ரோபோ மருத்துவரை” உருவாக்க முடியவில்லை? 
ஏனெனில் ஒரு குறித்த நோய் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தப்படும் விதம் ஆளுக்காள் வேறுபடும். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய அல்கோரிதம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

************

சாதாரண மருத்துவ ஆலோசனைகளை தொலைபேசியில் கேட்பது பிரச்சனையில்லை.

உதாரணமாக ” எனக்கு சீனிவருத்தம் இருக்கிறது, மெட்போர்மின் குளிசை பத்துவருடங்களாக பாவிக்கிறேன், மெட்போர்மின் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்கள், அதனால் குளிசை போடப் பயமாக இருக்கு.. என்ன செய்யலாம்” என்று ஒருவர் கேட்டார்.
அவருக்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள் மெட்போர்மினும், கிட்னியும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன் – தொலைபேசியூடாகத் தான்..!😆

இவ்வாறான ஆலோசனை கேட்கும் அழைப்புகள் ஆபத்தற்றவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

*****************

எனவே, இயலுமான வரை தொலைபேசியூடான நோய்நிர்ணய முயற்சிகளை தவிர்க்கப்பாருங்கள்.
நோயாளியை வைத்தியரிடம் நேரடியாக காட்டுங்கள்.
முக்கியமாக நெஞ்சுவலி, மூச்சு கஷ்டம், திடீர் மயக்கம், காய்ச்சல் போன்ற ஆபத்தான அறிகுறிகளுக்கு ஒருநாளும் தொலைபேசி ஆலோசனைகளை நாட முயற்சிக்காதீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க