வாழாவெட்டி

0
3196

இரவும் பகலும் பாடுபட்டு
வாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டு
என் அப்பன் சொத்து சேர்த்து
எனக்கு கல்யாணம் செய்கயில

என் அப்பனுக்கு அறுபதும்
இந்தக் குமருக்கு முப்பதும்
எப்படியோ ஓடிப்போச்சு…

ஆசைக் கணவன் வருவான்
அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்
வாக்குப்பட்டதென்னவோ
வக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம்

ஆசையா கட்டிக்கவொரு சேலை
அழகா போட்டுக்கவொரு மாலை
விரும்பிக் கேட்டேன்…
விழுந்தது முதலறை

காதுக்கு தோடும்
கைக்கு வளையலும் கேட்டால்
வெளுத்துவிடுவான் என்று
எனக்குள்ளயே முனங்கிக்கிட்டன்

பவுசா உடுத்துக்க நான் துவச்சி வக்கணும்,
வயிறார தின்டுக்க நான் ருசியா சமைக்கணும்,
வாரத்துலவொரு நாள் எண்ணெ தேச்சி குளிப்பாட்டணும்,
வாசம் பூசி மாப்பிளயா பாத்துக்கணும்;

இத்தனையும் என் வேல
ஏதாச்சும் குறைஞ்சா
உடச்சு போட்ருவான் கால..

அத்தனையும் பொறுத்துகிட்டு
எனக்கு நானே ஆறுதலும் சொல்லிகிட்டு
என் புள்ள முகத்துக்காக
வாழாவெட்டி போல எல்லாத்தையும் தாங்கிக்கிட்டன்

அடிக்கடி ஏழையா இருக்கேனு
குத்திகாட்டி பேசுவாக
என்பக்க நியாயத்த சொன்னா
ஏறிவந்துதான் மிதிப்பாக

என் இடுப்பு மிதிபட்டு
எட்டாக வளஞ்சு போச்சு
என் புள்ளய இடுக்கி வைக்க
எனக்கிடுப்பு இல்லாம போச்சு…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க