நினைவுகளின் மீட்சி

0
953

மிகப்பெரும் துயரத்திலிருந்து
நீங்கி விடுதலைப்பற்றி
பேசுகிறார்கள்
உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?
ஒரு பிடித்த உறவு
நீங்கி விடுதல் என்கிறார்கள்
அல்லது
ஒரு சக உயிர்
பிரிந்து விடுதல் என்கிறார்கள்
இல்லை,
இவை எல்லாம்
ஒரு மரத்திலிருந்து
பூ உதிர்தலுக்கு நிகரான நிலைகள் என்கிறேன்

யாரேனும் நினைவுகளிலிருந்து
தப்பித்து விடலாம் என்கிறார்கள்
உண்மையில் நினைவுகளிலிருந்து
ஏன் தப்பிக்க வேண்டும் என்கிறேன்
நேற்றைய இனிமைதான்
சிலருக்கு சுமையாக
சிலருக்கு பசுமையாக
முகங்களை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில்
நினைவுகளிலிருந்து
எப்படி தப்பித்து விட முடியும்?

ஒரு விலங்கிடப்பட்ட நாற்காலிக்குள்
நம்மை திணித்துக் கொள்வதைப்போல
அளவில்லாத காலணிகளுக்கு
பொருந்தாத கால்களை
புகுத்திக் கொள்வது போல
பிடிக்காத ஆடைகளை
புன்னகைத்துக்கொண்டே தேர்ந்தெடுப்பது போல
வாழ்க்கையில்
விருப்பம் தாண்டிய தேவைகளுக்கு
மனதை
மாற்ற – ஏமாற்ற பழக்கி விட்டோம்

பிறிதொரு சமாளிப்புகளை
பிறிதொரு நிபந்தனைகளை
பிறிதொரு தேவைகளை
நிறைவேற்றுதல் போல
நினைவுகள் தரும் நெடிகளுக்கு
நாம் நாசிகளை பழக்கி விட்டோம்

எதுவும் நிரந்தரமில்லை என்ற பட்சத்தில்
நினைவுகளுக்கு
சாளரங்களை சாத்திவிட்டு
கதவுகளை திறந்து விட்டோம்

சில இடங்களில்
சில நேரங்களில்
சில நினைவுகளை
வெள்ளத்தைப்போல
வடிந்தோடச் செய்திடவேண்டும்
இல்லை என்றால்
யாரோ ஒருவருக்கு
நாமும்
ஒரு பாரமான நினைவாகவே
தங்கி விடுவோம்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க