நாங்கள் அறிந்த அவர்கள்….

0
1331

அவர்கள் ஒருபோதும் 
காலியான தட்டுகளை 
பார்ப்பதில்லை 
வெறுமையான 
குவளைகளை நிரப்ப 
முயற்சிப்பதில்லை
பாத்திரங்கள் நிறைந்திருக்கும் 
சமயத்தில் படையல் செய்கிறார்கள்
இல்லை 
எப்போதேனும்
விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்
அவர்கள் எந்த வகையில் சேர்த்தி 
எனத் தெரியவில்லை
எப்போதேனும் 
உபயம் தேவைப்படும் 
நேரங்களில் 
அவர்கள் மறைந்து விடுகிறார்கள்
பிறிதொரு நாளில்
நினைவு கூர்ந்து 
தேவைகள் தீர்ந்த பின் 
வாசல் கதவுகளை 
தட்டுகிறார்கள்
கைகொடுக்க மறந்தவர்கள்
கைமாறு கேட்கிறார்கள்
நீ என்ன நினைக்கிறாய்
இவர்களை 
உன்னை விட்டும் தூரமாய் 
தள்ளி வைக்கணும் என்றா?
இல்லை 
அவர்களை உன் அருகிலே 
அமர்த்திக் கொள்
உன் நிழலில் கொஞ்சம் 
இளைப்பாற விடு
கருணை என்பது 
எத்தனை சிறந்தது என 
கற்றுக் கொடு
வலிகளுக்கு 
சுமையேறும் ரணங்களுக்கு
வெற்று வார்த்தைகளும் 
முயற்சிகளற்ற ப்ரார்த்தனைகளும் போதுமை இல்லை என புரிய வை
ஒரு புன்னகையை
ஆறுதலை
அன்பான வார்த்தையை
எப்படி எவ்வித
எதிர்பார்புமேயன்றி அளிப்பது என உன்னிடமிருந்து 
அவர்களை கற்றுக் கொள்ளச் செய்
ஒரு குவளையளவு பிரியத்தை 
நிரப்பக் கூடத் தெரியாதவர்களுக்கு 
நீ
செய்யக் கூடிய பதில் இதுதான்
அலட்சியமாய் 
பார்வையால் 
வார்த்தையால் 
செயலால் 
உன்னை கடந்து செல்பவர்கள்
நிச்சயமாய் பிறிதொரு நாளில் 
உன் கதவுகளை தட்டும் போதெல்லாம் 
கட்டியணைத்து சொல்
தேவைகள் தேவைப்படும் போதே 
தீர்க்கப்பட வேண்டுமென்று……

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க