கல் விளக்கு

0
176

கல் விளக்கு…..ஓர் சாசுவாதமான ஒளி

கதை சொல்லியைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் இலங்கை வாழ் முஸ்லிம்களில் மனோநிலையில் பிரதிபலிக்கும் சாதாரண கதாப்பாத்திரம்.இறுகிய சூழலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதரவு, அவர்களுடனான நட்பின் தேவை என்பதை ஆங்காங்கே கதை சொல்லியின் மனம் வாசகனுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

“இறுகிப் போயிருக்கும் இப்படியான ஒரு பெளத்த சூழலில் அவன் நட்பை நான் ஓர் அரசியல் நோக்கமும், சுய பாதுகாப்பு நோக்கமும் கருதி விரும்ப வேண்டி இருந்தது”

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன்,அவன் காதலி மற்றும் ஒரு முஸ்லிம் இளைஞன் என மூன்று பிரதானமானவர்களின் உணர்வுகள்,எண்ணங்கள்,மன எழுச்சிகள்,குரோதங்கள் ஊடாக கதை நகர்ந்து செல்கிறது.

கதை முழுவதும் ஒளி பரவியிருக்கிறது.புத்தரை அமைதியின் பெரு வெளிச்சமாக காட்டுவதன் ஊடாக பௌத்த மதத்தின் உண்மையான போதனைகளை கதை சொல்லி அழுத்தமாக கூறினாலும் புத்தரை சாட்சியமாக வைத்தே இனப்படுகொலைகளை நிகழ்த்திய இந்நாட்டில் இப்போது மீண்டுமொரு யுத்த அச்சம் புத்தரின் சாட்சியத்தில் நிலவுவதாகவும் கதை பிரதிபலிக்கிறது.

“பிரிவேனாவில் பிரித் ஓதி முடிந்து எல்லோரும் அமைதிக்குத் திரும்பி இருந்தனர். வெளியில் கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிரிவேனாவின் வளாகத்தில் இப்படி எட்டு வெவ்வேறு இடங்களில் அவர் எந்தக் கவலையுமற்று ஜொலித்துக்கொண்டிருந்தார்”

சிறுபான்மை சமூகமாக வாழ நேரிடும் போது எதிர்கொள்ள வேண்டிய சுயமிழப்பு இன்னும் வலிந்து திணிக்கப்படுகின்ற நடுநிலைப் போக்கு என்பதையெல்லாம் கதை சொல்லி ஆங்காங்கே சுட்டிக் கொண்டே செல்கிறார்.

குறிப்பாக இலங்கையில் இருந்து கொண்டு கிரிக்கட் விளையாட்டிக்களில் வேறு நாடுகளுக்கு தங்கள் ஆதரவினை தெரிவிக்கவும் முடியாத ஒரு சூழல் இருந்தது.இதற்காக வேண்டி பொது இடங்களில் நான் ஒரு இலங்கை அபிமானி என்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது போலவே கதை சொல்லி தன்னை நிர்ப்பந்த நடுநிலைவாதியாக,மாற்றுக் கருத்தாளனாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதும் கதையின் முக்கியமான அம்சம் ஒன்றாகும்.

“சந்துபொந்துகளிலெல்லாம் பள்ளிவாசல்கள கட்டுறதாலதான் பள்ளிகள உடைக்காங்க”
எனச் சொல்லி நான் என்னை ஒரு மாற்றுக் கருத்தாளன் எனவும் இனவாதி இல்லை எனவும் நிரூபிக்க முற்பட்டபோது சரத் ஆனந்த அதை மறுத்துரைத்தான்”

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சிங்கள பேரினவாத நடவடிக்கைகளின் போது அங்கிருந்தவர்கள் கூறிய சில விடயங்களை மீட்டிப்பார்க்கலாம்.

“எங்கள் கடைக்கு வரும் நண்பரும் அதிலிருந்தார்”

“என்னோடு நல்ல உறவைப் பேணிய ஒருவரும் பள்ளிவாயலுக்கு கல்லெறிந்து கொண்டிருந்தார்”

என திகன முஸ்லிம்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.கதையின் பின்வரும் வரியைப் பார்க்கலாம்.

“பள்ளிக்குத் தீமூட்டும் பொதுபலசேனக் கும்பலில் மிக முக்கியமானவனாகவும் மும்முரமாகவும் ஆவேசமாக இயங்கிக் கொண்டிருந்தான் சரத் ஆனந்த”

எங்களுடன் ஒன்றாக பழகிய,எங்களின் நண்பர்களாக இருந்தவர்களும்,வெறுமனே தங்களது சொந்தப் பிரச்சனைகளின் போதான பழிவாங்கல்களை மேற்கொள்வோருமே
அதிகளவான சுயலாபத்திற்காக இன்,மதங்களை வைத்து சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் என்றும்,அவர்கள் எங்களுக்கு மிகவும் அருகாமையில்,மிக அறிமுகமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை கதை சொல்லுவது மிகச் சிறந்த விடயம்.

எனக்கு மோயுக் இன் கட்டுரை நினைவுக்கு வருகிறது.யார் இந்து வெறியன் என்ற கட்டுரையில்

“2010 ஆண்டு பிப்ரவரி மாதத்தின் குளிர்ச்சியானதொரு மாலைப் பொழுதில் வெகுதூரம் காலார நடந்து கொண்டிருந்தோம். இடையே ஒரு மசூதியின் முன்னால் நின்றோம்….

‘இப்ப இதைக் கொஞ்சம் பாருங்க. 2002- இல் நானும் பசங்களும் சேர்ந்து இதைக் கொளுத்தினத நீங்க பார்த்திருக்கணும்’ என்றான் குனால். இவன் ஒரு பஜ்ரங் தள் உறுப்பினர்….

வெளிறிய பச்சை நிறத்தில் சுற்றிலும் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பெரிய மசூதியை நான் ஏறிட்டுப் பார்த்தேன். எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அழிவின் அடையாளம் எதுவும் தெரியவில்லை…..”

என ஆரம்பித்திருப்பார்.இதனூடாக வெறுமனே சிறுபான்மை அல்லது மதங்களை வைத்து இன அடக்குமுறை நிகழ்த்தப்படும் போது முன்னின்று செயற்படுவோர்கள் குறுகிய மனநிலை உள்ளோரும்,சொந்த பழிவாங்கல்களை தீர்ப்போருமாகவே இருக்கின்றனர்.இவர்கள் இந்த மாதிரியான இனக் கலவரங்கள் நடக்கும் வரை எங்களுக்கு அண்மையில் மிக சாதாரணமானவர்களாக நடமாடுகிறார்கள்.இதையே ஜிப்ரி ஹசனின் கதையும் எங்களுக்கு கூற விழைகிறது.

நஸீஹா முகைதீன்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க