கூண்டுக்குள் குருவி

0
2150

 

 

 

 

எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும்.

எளிமையான நாவல். அலட்டலில்லாத கதை. ஒரு அருவியைப்போல சலசலத்தபடி போய்க்கொண்டிருக்கும் கதையோட்டமாய் மேலுக்குத் தோன்றினாலும் உண்மையில் உணர்வுபூர்வமான மெல்லிய உணர்வுகளையும் மிக நுணுக்கமாய் சொல்லும் கதை கூண்டுக்குள் குருவி.


அதில் அத்தனை பிடித்துப்போன காபாத்திரம் என்றால் ரேகா. ஒரு எளிமையான ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்த சாதாரணமான பெண். வெளிப்படையாய் பேசுவதால் வாயாடிப்பட்டம். உண்மையில் தரித்திரியம் என்ற ஒன்று ஏழைவாசிகளுடன் பிண்ணிக்கிடக்கும். அத்தகைய சூழலில் பிறக்கும் பெண்களை குடும்ப உறவினர்கள் முதற்கொண்டு சுற்றியிருக்கும் சமூகம் வரை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும். அப்படித்தான் ரேகா கதாபாத்திரமும் பிண்ணப்பட்டிருக்கும். ரேகா ஒரு சாதாரண மனுஷியாக கதை முழுக்க வலம் வருவாள். பேசுவாள். கோபப்படுவாள், அழுவாள், நட்புபாராட்டுவாள், அதிகம் அன்பு செய்வாள், அதைவிட அதிகமாய் சண்டையும் போடுவாள், திருமணம் பற்றிய கனவுகளையும் வளர்த்துக்கொண்டிருப்பாள். அவளின் குணாதிசயங்களின் உயர்வு தாழ்வுகளை பிற கதாபாத்திரங்களின் வாயிலாக நகர்த்திச் செல்வதுதான் இங்கே எண்டமூரி எனும் எழுத்தாளரின் தனித்துவத்தன்மை.

ஆம் இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒவ்வொரு நியாயங்கள் இருக்கும். அது மற்றவர்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறு ஏற்படுத்தினாலும் தனித்தனி நியாயங்களில் பயணப்படும் மனிதர்களுக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்ததா இல்லையா என்பதை கூண்டுக்குள் குருவியின் இரண்டாம் பாகம் படிக்கும் வாசகர்களால் உணர்ந்து கொள்ள முடியும். அதில் ஹீரோ கதாபாத்திரமாக விமலன் எனும் வக்கீலின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதில் ரேகா அவன் தம்பிக்கு தன்னால் நண்பனாக நினைக்கும் உன்னை திருமணம் செய்ய முடியாது என அழகாக ஒரு கடிதம் மூலம் விவரித்திருப்பள். வாழ்க்கையில் எல்லா வேதனைகளிலும் துயரங்களிலும் பயணப்படும் தனக்கு திருமணம் என்பது ஒரு அழகான கனவு என்றும் அந்தக் கனவு கனவாகவே இருப்பதுதான் ஒரு இனிமையான அனுபவமாக இருக்குமென்றும் மையப்படுத்தி அந்தக்கடிதம் போய்க்கொண்டிருக்கும்.இதிலிருந்து விமலன் மிகவும் சீப்பாக எண்ணத்தொடங்கியிருக்கும் ரேகாவின் மேல் மரியாதை மற்றும் காதலை வளர்க்க முயற்சிப்பான். கதை முழுக்க பல்வேறுகதாபாத்திரங்களின் நகர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்க ரேகா- விமலனின் நட்பினையும் அன்பு மிளிர்வதையும் அழகாக கொண்டு போயிருப்பார் நாவலாசிரியர்.

 

 

 

 

 

இந்த நாவலை படிக்கும் போது பெரிய எதிர்பார்ப்புகளையோ சுவாரஷ்யத்தையோ எல்லோருக்கும் ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் முழுமையாக பார்த்தால் இந்த நாவல் முழுக்க தன் பக்க நியாயங்களை சொல்லும் லலிதா, ரேகாவின் அம்மா,அத்தை என அத்தனை பெண் பாத்திரங்களும் கச்சிதம். என்னைப் பொறுத்தவரை ஒரு மாலை நேரத்து காபியோடு மனதை ரிலாக்ஸாக்கியபடி கடந்து போகலாம் கூண்டுக்குள் குருவியையும். இன்னும் இந்த நாவலை அதிகமாக நுணுக்கமாக சொல்வதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் பயணப்பட முடியாதிருப்பதே உண்மை. இந்த நாவல் 2011ம் வருடம் இறுதியாக படித்தது. இந்த நாவலை படித்தவர்கள் இருந்தாலும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க