ஓவியங்களோடு ஓர் முகம்

1
2144
6381305aa388ea90007c14cdfd3ddae9

வித்யானந்தா பல்கலைக்கழகம்
வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்…
பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்..
ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு  பெண் ஓவியரின் கதை மட்டுமேயுண்டு..
அது ” கனா ” வின் கதை.
” கனா “அவள் பெயரின் நிழலாவாள். பெயருக்கு தகுந்தாற்போல் நீண்ட கனவுகளைக்கொண்டிருந்தவள்..
பார்ப்பவர் கண்களை திருடிக்கொள்ளும் ஓவியங்களை வரைவதில் சிறந்தவள்.
கற்பனையில் தோன்றும் உருவங்களை வரைவதில் சிறந்தவள்.
அவள் கைபட்டால் சிறு கிறுக்கலும் சித்திரமாகும்..
காரணம் அவள் அறியாப்பருவமதில் இருந்தே கிறுக்கத்தொடங்கியவள்.
பள்ளிக்காலங்களில் அவள் பங்குபெறாத சித்திரப்போட்டிகளும் கிடையாது தட்டிச்செல்லாத பரிசில்களும் கிடையாது
அவள் கீதம்பாடா மனிதர்களும் கிடையாது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்
உயர் கல்வியை முடித்து விட்டு  இலட்சியங்களை நனவாக்கிக்கொள்வதற்காக கல்லூரிப்பள்ளிக்குள் நுழைந்தாள்…
அங்கும் தன்திறமையால் ஏனைய சக கலைப்பிரிவு மாணவர்களுடன் மோதிக்கொண்டாள்.

மே 26, இது மாபெரும் ஓவியப்போட்டியின் அறிமுகநாள்.. இது வெறும் பொழுதுபோக்கிற்கான போட்டியல்ல பல ஏழைகளின் திறமைக்கு கிடைக்கும் ஓர் வாய்ப்பு..
இவ் வாய்ப்பிற்காகவே கனாவும் பல வருடங்கள் காத்திருந்தாள்.. அன்று அவள் அடைந்த சந்தோஷம் எல்லையற்றது..

இப்போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை தட்டிக்கொண்டால் “ஆட்ஒவ்ராம் ” எனும் நிறுவனத்தின் மூலம் மலேஷியாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து  விடும். அது மட்டுமல்ல ஏழைகள் கால் பதிக்கவே முடியாத ஓவியக்கல்லூரிக்குள் கால்பதித்து மூன்று வருட இலவசக்கல்வியைத்தொடர முடியும். இதுவே பல வளர்ந்து வரும் இளம் ஓவியர்களின் கனவாக உலாவருகின்றது..
இப்போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை “ஆட்ஒவ்ராம் ”  எனும் இலங்கையின் முதற்தர நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றது. அதன் நிர்வாகி ராம்சரன் ஓவியங்களின் மேல் அலாதிப்பிரியம் கொண்டவர். அவரின் பணத்திற்கும் பதவிக்கும்  எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவரின் ஒரே மகள் “ஓவியா”. அவள் ஓவியங்களை தீட்டுவதில் சிறந்தவளில்லை ஆனால் உருகி உருகி ரசிப்பதில் சிறந்தவள்..


நான்கு வருடங்களுக்கு முன் அவள் தந்தையுடன் மலேஷியக்கல்லூரியில் நடந்த ஓவியக்கண்காட்சியை காண்பதற்காக  சென்றிருந்தாள். அவளின் வருகைக்காய்
அங்கு ஓர் அழகிய அறிமுகம் காத்திருந்தது…
அக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஓவியங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் ஆனால் ஒரே ஒரு ஓவியம் மட்டும் பார்ப்பவர் பார்வைகளை ஈர்த்துக்கொண்டது.. அது சிசுவை பிரசவித்த தாயின் தோற்றம்… அத்தோற்றத்தில் எத்தனையோ உணர்ச்சி.. அவ் உணர்வுகளில் தன்னை மறந்து லயித்துக்கொண்டிருந்தாள் ஓவியா..  திடீரென ஆணுக்குரிய தோரணையும்  இனிமையும் கலந்த ஒர் குரல் அவளைக்குறுக்கிட்டது.. அது “துருவ்”வின் குரல். துருவ் வேறுயாருமல்ல மலேஷியாவில் புகழ்பெற்று வளர்ந்து வரும் ஓவியன்.

குரலின் குறுக்கீட்டால் திருப்பியவள் அவன் விழிகளின் கூர்மையிலும் கம்பீரத்தோற்றத்திலும் ஒரு கணம் சிலையானாள். பெண்களைக்கவரும் பேரழகு…
எந்த அசைவுமின்றி நின்றவளை “இது சிற்பக்கண்காட்சியல்ல ஓவியக்கண்காட்சி கை கால்களை அசைக்க முடியும் வாயை திறக்க முடியும் ” என மீண்டும் அவன் குரல் குறுக்கீடு செய்தது. அதை கேட்டவள் உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டு  ” Sorry நான் இன்னும் இந்த ஓவியத்தில இருந்து வெளில வரல அதான்… அது சரி நீங்க யாரு? ” எனக்கேட்க அவனோ
“நான் துருவ் இவ் ஓவியத்தின் சொந்தக்காரன்” என்றான்.  அதைக்கேட்டதும் அவள் விழிகளை பெரிதாய் விழித்தாள்.
அச்சமயம் ராம்சரன் வந்து விட்டார்.
அவர் வந்ததும் துருவ்வும் அவரும் உரையாடினர். அவளோ  துருவைப் பார்த்து” இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன் ஆறடி  உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே ” எனும் பாடல்வரிகளை மீட்டுக்கொண்டிருந்தாள்..  மீட்டுக்கொண்டிருந்தளிடம் “இவர் யார் தெரியுமா? ” எனக்கேட்க உடனே அவள் “அப்பிள் “என்றாள். “என்ன அப்பிளா…”என்று  இருவரும் பார்க்க அவளோ “இல்லப்பா அந்த  ஓவியம் நன்றாக இருக்கின்றது ” என்றாள். அவரோ “ஓ நீ இன்னும் ஓவியங்களிற்குள்ளேயே கிடக்கின்றாயா ” எனக்கூறி சிரித்தார்.. பிறகு  இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அன்றைய அறிமுகத்தில் வீழ்ந்தவள் தான் இன்னும் எழவில்லை.. எழ விரும்பவுமில்லை.
நான்கு வருடங்களாக அவனை ஆத்மார்த்தமாக காதலிக்கிறாள். அவர்கள் திருமணம் கூட பெரியோர்களால்  நிச்சயமாகி விட்டது.. ராம்சரன் மனம் கவர்ந்த ஓவியனே அவர் மருமகனாகவும் மாறவிருந்தான்..
“துருவ்” ராம்சரனின் மலேஷியக்கல்லூரி மாணவனே! ராம்சரன் மீது அன்பும் மரியாதையும் கொண்டவன். ஆரம்பத்தில் அவர் மீது துருவ் கொண்ட அன்பும் மரியாதையுமே அவன் ஓவியாவை  ஏற்றுக்கொள்ளக் காரணமாய் அமைந்தது..
ஓவியா காண்பவரை கொள்ளை கொள்ளும் பேரழகியல்ல.. ஆனால் அழகி. நாட்களின் ஓட்டத்தில் அவள் மீது அன்பும் அக்கறையும் அதிகமானது என்னவோ உண்மைதான்.. ஆனால் அதற்கு காதல் என்று பெயர் சூட்ட மட்டும் அவன் இதயம் இடம் தரவில்லை. என்றோ ஓர் நாள் தந்துவிடும் எனும் நம்பிக்கையில் நாட்களை நகர்த்தினான்…

ஓவியப்போட்டியின் அறிவிப்புத்திகதியில் (மே26) இருந்து ஏழு நாட்கள் கடந்தது. ஊரெங்கும் ஓவியர்கள் காற்றில் மிதப்பதைப்போலவே திரிந்தனர். அன்று கனாவும் பேராசிரியர் வித்தியாசாகரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கல்லூரிச்சாலை வழியே எதிர்பார்ப்பும் ஆவலும் ஒன்றாய் கலந்தவளாய் நடைபோட்டாள். அவளைக்கண்டதும் சக மாணவர்கள் எல்லோரும் தம் வாழ்த்துக்களைக்கூறி அன்பால் அணைத்துக்கொண்டனர்.
கிடைத்த அன்பையெல்லாம் அவளும் அணைத்துக்கொண்டு போட்டி நடக்கவிருந்த இடத்தைச்சென்றடைந்தாள்.

“ஆட்ஒவ்ராம்” வெள்ளைச்சாயம் பூசப்பட்ட ஒன்பது மாடிக்கட்டிடம். அக்கட்டிட வாசலில் ஒரே கூட்டம்… எங்கும் ஒரே வெளிச்சம்…
ஆனால் அது சூரிய ஒளி வெளிச்சமோ மின்குமிழ் வெளிச்சமோ அல்ல.. பல இளம் ஓவியக்கலைஞர்களின் முகவொளி வெளிச்சமே.. கைகளில் பேப்பர்களும் வர்ணச்சாயங்களும் ஓவிய உபகரணங்களும் பார்க்கவே நன்றாக இருந்தது…
அதில் தானும் சென்று கலந்துகொண்டாள்.
ஒரு வழியாக ஒருமணி நேரம் கடந்து நான்காம் மாடியில் போட்டி ஆரம்பமாகியது. போட்டிக்காக இரண்டு மணித்தியாலய நேர அவகாசமே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஓவியனின் ஆழ் மனதிலும் என்றும் நீங்கா ஓர் உருவம் ஆழப்பதிந்திருக்கும்.. ஆனால் அவ்வுருவம் ஒவ்வொரு கலைஞனின் கற்பனையைப்பொறுத்தும் மாறுபடும். சிலர் வெறும் உயிரோட்டத்தைக்கொடுத்து காவிச்செல்வார்கள். சிலர் உயிரோட்டத்தோடு தம் காதலையும் கலந்து காவிச்செல்வார்கள்.
அக்காதலை தம்முதற்காதலாக எண்ணி தம்மை மறந்து கற்பனை வட்டத்திற்குள் காதலிக்கத்தொடங்கி விடுவார்கள். தம் உயிரோடு கலந்து விட்ட அம்முகத்தை தாம் காணும் ஒவ்வொரு முகங்களிலும் தேடத்தொடங்கி விடுவார்கள்.
இது கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும்.. உண்மைதான்.
அன்றும் ” கனா”வின் முதற்காதலே ஓவியமாக மாறவிருந்தது.. அவள் ஆழ் மனதில் இருந்த ஓர் அழகிய உருவம்.. அவள் இதயம் தேடும் கற்பனை உருவம். அவ் உருவத்தை அவள் கற்பனை தோட்டத்தை தவிர்த்து வேறு எங்கும்  இதுவரை கண்டதில்லை..
ஆனால் “என்றோ ஓர் நாள் கண்டு விடுவாய்.. உன் காதலை அவனிடம் சொல்லி விடுவாய் ” என்று அவள் இதயம் அவளிடம் கூறிக்கொண்டே இருக்கும்.
சிறு புள்ளியில் தொடங்கிய அவள் கோலம் இன்று ஒரு மனித உருவாய் மாறிப்போனது..

“இன்னும் ஒரு மணித்தியாலம்
மட்டுமே மீதம் இருக்கின்றது” என ஓர் அதிகாரியின் கனத்த குரல் மண்டபத்தினுள் ஒலித்தது.
உடனே ஓவியர்களின் கைகள் பரபரப்பாக மாறிவிட்டது.. ஆனால் கனாவின் கைகள் மட்டும் எந்த பரபரப்புமின்றி ரசித்து ரசித்து அவ் உருவத்தை தீட்டிக்கொண்டிருந்தது.. இடை இடையே கற்பனைக்காதலனை செல்லமாக திட்டியும் கொண்டாள் இன்னும் ஏன் என்னைத்தேடி வரவில்லையென்று..
ஆனால் அவளைச்சுற்றி இருக்கும் இயற்கையோ அவளை நினைத்து கண்ணீர் சிந்துவது போலிருந்தது…
*காதல் கனவுகளை அள்ளிக்கொடுப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் சிலரின் கனவுகளை தன்னை மறந்து கெடுப்பதும் உண்மைதான்*  இக்காதலும் தன்னை மறந்து அவள் கனவுகளை கெடுக்கப்போகின்றது… இது விதியின் செயலா? அல்லது கற்பனைகளின் மீது அவள் கொண்ட கண்மூடித்தனமான அதீத நம்பிக்கையின் விளைவா?  என விடை தெரியாமல் இயற்கையும் , அவளை பார்த்துக்கொண்டு மெல்ல அவள் மென் காதுகளில் கூறியது “காகிதத்தில் காணும் விழிகளை காண்பதற்கு இன்னும் இரு நாட்களே இருக்கின்றது ” என்று..
ஆனால் அவை கூறியது அவள் மென்காதுகளிற்கு கேட்கவேயில்லை…

இன்னும் அரைமணி நேரம் மட்டுமே இருக்கிறது”  என மீண்டும் அக்கரடான குரல் ஒலித்தது. ஓவியர்களும் மெல்ல மெல்ல பரபரப்பிலிருந்து விடுபட்டனர்.. தாம் வரைந்த ஓவியங்களை தாமே ரசித்துக்கொண்டிருந்தனர்.. ஒவ்வொரு மனதும் தாமே வென்று விட வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்தது..
1/2மணி நேர முடிவில் ஓவியங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டது. பின் அங்கு வேலை செய்யும் அதிகாரி ஒருவர்  மண்டபத்திற்குள் நுழைந்தார். நுழைந்தவர் “உங்கள் அனைவரையும் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் வரைந்த ஓவியங்களை இப்போதே ஓடிச்சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது” என புன்முறுவல் செய்தார். மேலும் ” இன்னும் இரு நாட்களில் முதல் இடத்தை தட்டிச்செல்லும் ஓவியம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியிடப்படும். அத்தோடு அன்று மதியம்  ஓவியக்கண்காட்சியும் எம்மால் ஒழுங்குபடுத்தப்படும்” என்று கூறி விடைபெற்றார். அன்றைய நாள் வர்ணங்களின் வாசனையோடு முடிந்தது….

மறுநாள் “ஆட்ஒவ்ராம்” நிறுவனமெங்கும் ஒரே பரபரப்பு. சிறந்த ஓவியத்தை தெரிவு செய்வதற்காக பல ஓவியக்கலைஞர்கள் அங்கு வருகைதந்திருந்தனர்.
அதற்காக மலேஷியாவிலிருந்து துருவ்வும் வரவழைக்கப்பட்டிருந்தான். ஒரு மாதம் கழித்து துருவைக்கண்ட ராம்சரனோ அவனைக்கட்டியணைத்து வரவேற்றார்…
பின் ஓவியங்களை தெரிவு செய்யும் வேலை ஆரம்பமாகியது. மொத்த ஓவியமும் ஒன்றாக அடுக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஓவியமாக எடுக்கப்பட்டு அணு அணுவாக ரசிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டது.
துருவ்வும் ஓவியங்களின் அழகில் முழுதாக மூழ்கிப்போனான்… ஓர் அழகிய உலகில் பயணம் செய்துகொண்டிருந்தான்… அவன் பயணத்தை குழப்புவதைப்போல் அவன் அலைபேசி ஒலிக்க அதை எடுத்துக்கொண்டு ஜன்னல் ஓரமாகச்சென்றான்.
5நிமிடம் கழிந்திருக்கும்.. திடீரென அங்கிருந்த ஓவிய நிபுணர் மனோகர் முன்பிருந்த மேசையை தள்ளிவிட்டு ” துருவ்!! துருவ்
தானே! ” என ஆச்சரியக்கூச்சலிட அங்கிருந்த எல்லோரும் திகைத்துக்கொண்டு எழுந்து விட்டனர். மனோகரின் கையிலிருந்த ஓவியத்தைப்பார்த்தவர்கள் “ஆம். இது துருவ் தான்! துருவின் உருவத்தை யார் ஓவியமாக்கியது ? ” என்று குழம்பிப்போனார்கள். ஒரு புறம் ராம்சரன் விரைய.. ஒன்றும் புரியாதவனாய் துருவ்வும் அவர்களை நோக்கி விரைந்தான் . அவர்கள் கையிலிருந்த ஓவியத்தை வாங்கியவன் ஒரு கணம் ஆச்சரியத்தில் வியந்துபோனான்!! தன்கண்னை தானே  நம்பாதவனாய் ஓவியத்தையே உற்றுப்பார்த்தான். அவ்ஓவியத்திற்கும் நின்றிருந்த தனக்கும் ஒரு புள்ளி வித்தியாசம் கூட இல்லை என்பதை உணர்ந்தவன் மீண்டும் மீண்டும் ஆச்சரியத்தில் வியந்தான்.. அதையும் மீறிக்கொண்டு அவன் இதயம் இதை யார் வரைந்தது என்று துடிக்க.. உடனே ஆர்வமாக ஓவியத்தை திருப்பினான். ஓவியத்தின் கீழ் மூலையில் கனா என்று ஓர் பெண் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட அவன் விழிகளோ ஏதேதோ கூற முதல்முறை அவன் உதடுகள் அவள் பெயரை உச்சரித்தது. அவ் உச்சரிப்பு அவன் இதயத்தை துளைத்துக்கொண்டு ஆழமாய்ச்சென்றது.. அவ் ஆழத்தில் ஏதே ஓர் சுகத்தையடைந்தான்.. ஒருபுறம் இவன் இவ்வாறு நிற்க மறுபுறம் ஓரே பரபரப்பு…
அங்கிருந்த ஒருவர்  “யார் இந்தப்பெண்? இந்தப்பெண்ணால் எப்படி இவ்வளவு தத்துரூபமாக வரைய முடிந்தது?” எனக்கேட்க இன்னொருவர் ராம்சரனின் சினத்தை தூண்டுவதைப்போல் ” அது சரி எதற்காக போட்டியில் துருவின் படத்தைக்கீற வேண்டும்” “ஆட்ஒவ்ராம் நிறுவனத்தின் மருமகனை ஓவியத்தில் வரைந்துவிட்டால் முதலிடம் கிடைத்துவிடும் என்றா? ” எனக் கேட்டார்.. இதைக்கேட்ட ராம்சரனோ கதிரையை படாரென இழுத்துவிட்டு எழுந்தார். அவர் எழுந்த விதம் அனைவரையும் அமைதியடையச்செய்ய.. துருவ்வை நோக்கி நடந்தவர் அவன் கையிலிருந்த ஓவியத்தை இழுத்தெடுத்தார். அப்போது தான் துருவ் சுயநினைவிற்கே வந்தான்.


ராம்சரன் அவ்ஓவியத்தை எடுத்து மேசையின்  அருகில் வைத்துவிட்டு மற்ற ஓவியங்களை எடுத்து வைக்கும் படி உதவியாள் மணியிடம் கூற , அவனும் மொத்தமாக எடுத்து வைத்தான். ” இதுவரை பார்த்த ஓவியங்கள் இருக்கட்டும். நேரத்தை வீணடிக்காது மற்ற ஓவியங்களையும் பாருங்கள். நாளை பத்திரிகையில் சிறந்த ஓவியம் வெளிவந்தேயாக வேண்டும். முதல் சிறந்த மூன்று ஓவியங்களை  தெரிவு செய்து விட்டு என்னை அழையுங்கள். ” என்று கூறி அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதும் துருவ்வும் மண்டபத்தை விட்டு வெளியே சென்றான். இவர்கள் இருவரும் சென்றதும் அனைவரும் அமைதியாகி மீண்டும் ஓவியங்களை புரட்டத்தொடங்கினர்.. வெளியே சென்றவன் “போட்டி விதிமுறைப்படி , போட்டியாளர்கள் பற்றிய தகவல்களை தெரிவு செய்யும்  குழுவிலிருக்கும் யாரும் அறியமுடியாது” எனத்தெரிந்திருந்தும் உதவியாள் மணியை அழைத்து கனாவைப்பற்றி கேட்டான். ஆனால் அவனோ சொல்லாமல் தடுமாற “சரி நீங்க போங்க” எனக் கூறித்திரும்பினான். திரும்பியவனைப்பார்த்து ” தம்பி நாளை மதியம் கண்காட்சியில் போட்டியாளர்கள் அனைவரையும் காணலாம்” என்றான். அதற்கு “ஆம்” என்றவாறு தலையசைத்தவன் படிகளை நோக்கி நடந்தான்.. ராம்சரனிடம் கூட சொல்லவில்லை காரில் ஏறி ஓவியாவின் வீட்டிற்குச்சென்றான்.. அங்கு துருவ்வின் வருகைக்காய் காத்துக்கொண்டிருந்த அவளின் சொந்தக்காரர்கள் அவனைச்சுற்றிக்கொண்டனர்.

நிறுவனத்தில்..
என்னதான் புரட்டினாலும் கனாவின் ஓவியத்தை மிஞ்சிய ஓவியத்தைக்காணவில்லை..
பின் ஒரு வழியாக மூன்று ஓவியங்களை தெரிவு செய்தனர். அதில் ஒன்று கனாவின் ஓவியம் மற்றையது தத்தளிக்கும் படகின் இரவுக்காட்சியை பிரதிபலிக்கும் ஓவியமும் மங்கிச்செல்லும் பழமையை உணர்த்தும் ஓவியமுமாகும்.
மூன்று ஓவியங்களும் தெரிவு செய்த பின் ராம்சரன் வரவழைக்கப்பட்டார். வந்தவர் தெரிவு செய்யப்பட்டிருந்த மூன்று ஓவியங்களையும் பார்த்தார். மூன்றையும் ஒப்பிட்டுவிட்டு கனாவின் ஓவியத்தை கையில் எடுத்தவர் ” மூன்றிலும் சிறந்தது இவ் ஓவியமே ஆனால் இதை தெரிவு செய்ய முடியாது . இவ் ஓவியம் நாளை பத்திரிகையில் வந்தால் பார்க்கும் அனைவருக்கும் துருவ்வைப்பற்றி தெரிய வரும். இத்தனை நாட்களாக நான் காப்பாற்றி வந்த என் நிறுவனத்தின் பெயர் தலைகீழாக மாறிவிடும். யாரும் சிறந்த ஓவியத்தை தெரிவு செய்துள்ளார்கள் என்று கூற மாட்டார்கள். நிறுவனத்தின் எதிர்கால மருமகனை வரைந்ததாலயே தெரிவு செய்துள்ளார்கள் என்று கூறுவார்கள். ஆகவே என்னால் இவ் ஓவியத்தை தெரிவு செய்ய முடியாது” என்று கூறி தூக்கிப்போட்டார். அங்கிருந்தவர்களுக்கு இது வருத்தத்தையே கொடுத்தது காரணம் அம்மூன்றிலும் அதுவே சிறந்த ஓவியம்.. உள்ளூர சில பேர் ” இந்தப்பெண் வேறேதும் ஓவியத்தைக்கீறி இருக்கக்கூடாத? ” என்று பேசியும் கொண்டார்கள்.
ராம்சரனோ இரண்டிலும் இருந்து படகுக்காட்சி ஓவியத்தை தெரிவு செய்தார்.. ” இவ் ஓவியமே நாளை பத்திரிகையில் வெளிவரும்” என்று கூறி ஒன்றுகூடலையும் முடித்துக்கொண்டார். அங்கிருந்து யாரும் மகிழ்ச்சியாக எழுந்து செல்லவில்லை. ராம்சரனும் தான். தன் அறைக்குள் சென்றவர் ” வாழ்வில் முதல்முறை ஒரு சிறந்த ஓவியத்தை  தூக்கிப்போட்டு விட்டோமே ” எனும் குழப்பத்துடன் அங்கும் இங்கும் நடந்தார். சற்று நேரத்தில் மணியை அழைத்தவர் ” மணி அந்த கனா என்ற பெண்ணை பார்த்தாக வேண்டும். பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு என்னிடம் தெரிவி ” என்று கூற அவனும் “சரி ஐயா” எனக்கூறி அங்கிருந்து அகன்றான் .
அப்போது கல்லூரியில் மதிய வகுப்பில் இருந்தாள் கனா.. பேராசியர் வித்தியாசாகரும் அழைத்து விடயத்தைக்கூற வகுப்பிற்கு விடை கொடுத்துவிட்டு வெளியேறினாள்.. அவள் பாதம் படும் கடைசி நாள் என்றுணர்ந்த கல்லூரிச்சாலை மரங்களும்.. அம்மரப்பூக்களும்.. அவள் பாதங்கள் படும் பாதையையே பார்த்துக் கொண்டு இருந்தன… “என்னவாக இருக்கும் ஒருவேளை என்னைத்தான் தெரிவு செய்து  விட்டார்களோ! ” என எண்ணியவளிற்கு  செல்லும் வழியெங்கும் ஒரே சந்தோஷம். அவள் முகம் காட்டிய சந்தோஷத்தில் தன் இதயத்தோடு தானே பேசிக்கொண்டாள்.  “நாளை என் ஓவியம் மட்டும் பத்திரிகையில் வந்தால் போதும். நான் என்னவனை கண்டுவிடுவேன்.. என் எல்லா கனாக்களையும் அவன் விழிவழியே  கண்டுவிடுவேன்” என்று மீண்டும் மீண்டும் கூறி புன்னகைத்தாள்.. புன்னகையோடு புன்னகையாக “ஆட்ஒவ்ராம்” வாயிலைச்சென்றடைந்தாள்.
பின் வரவேற்பு மண்டபத்தில் சிலகணங்கள் காத்திருந்தாள்..
அன்று அவளைப்பார்த்து கண்ணீர் சிந்திய இயற்கை இன்றும் கண்ணீர் சிந்தியது… அவளின் மென்காதுகள் அருகே சென்று “எழுந்து சென்றுவிடு அன்பே உன்னவன் உன்னைத்தேடி வரும்வரை இங்கே வராதே”  என்றது.. அன்று போல் அவை கூறியது அவள் காதுகளில் கேட்கவேயில்லை..
ஓர் இருக்கையில் அசையும் பெண்சிலை போல் அமர்ந்திருந்தாள். வரவேற்பறையில் வேலை செய்யும் பெண் தகவல் தெரிவிக்க விரைந்து வந்தான் மணி. வந்தவன் அவளிடம் “ஓவியங்களைப்போலவே இருக்கிறாய்” என்றான். புரியாதவளாய் கனாவும் சிரிக்க” ஓவியங்களைப்போல் அழகாக இருக்கிறாய்” என்றான். பின் அவளை அழைத்துக்கொண்டு ராம்சரன் அறையை நோக்கிச்சென்றான். தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தவர் அவளைக்கண்டதும் உள்ளே வரும்படி கையசைத்தார். உள்ளே சென்றவளிற்கு உடலெங்கும் சிறுநடுக்கம். இருக்கையை கைகாட்டியும் இருக்கவில்லை. பின் மணி “கதிரையில் இருமா ” எனவே இருந்தாள்.

தொலைபேசியை வைத்த பின்
ராம்சரன்: ” நான் யார் என்று தெரியுமா?? ”

கனா: “ஓம் சேர் நல்லாவே தெரியும்”

ராம்சரன்:  ” ம்ம்.. அப்ப என்ன தெரிஞ்ச மாதிரி என் மருமகனையும் தெரியும் இல்லையா??”

கனா: சிறு குழப்பத்தோடு ” இல்ல சேர் எனக்கு  உங்கள மட்டும் தான் தெரியும்”

ராம்சரன்: ” ஓ!! அப்ப உன் ஓவியத்தில் இருப்பது யார்?”

கனா: “சேர்… அது வந்து .. என் கற்பனை உருவம் சேர்”

செய்வதையும் செய்து விட்டு பொய்  பேசுகிறாள் என்று கடுப்பாகிப்போனவர்
” கனா நீயொரு பெண்பிள்ள எண்டதால தான் இவ்வளவு பொறுமையா கதைக்கிறன் ஒகே. அந்த ஓவியத்தில நீ வரைந்தது யார? ”

கனா:  ஒன்றும் புரியாமல் ” சேர் எனக்கு உண்மையாவே விளங்கல . எதுக்கு நான் சொன்னத நம்பாம திரும்ப திரும்ப கேக்கிறீங்க.  அது என்னோட கற்பன உருவம் தான்.”

ராம்சரன்: மேலும் கடுப்பாகிப்போனவர் பொறுமையிழந்து ” அப்ப அந்த போட்டோல இருக்கிறது யாரு உன் கற்பன உருவமா?? ஏதோ வாய்ப்புக்காக தெரியாம வரைந்தேன் எண்று உண்மைய சொல்லி இருந்தா கூட பரவால்ல ஆனா சீ.. “என்று வார்த்தைகளை  அள்ளிக்கொட்டத்தொடங்கினார்.

ஆனால் அவர் சொன்னது எதுகும் அவள் காதுகளில் விழவில்லை. அந்த போட்டோவை பார்த்த மறு கணமே தூக்கிவாரிப்போட்டது. கதிரையிலிருந்து எழுந்தவளின் உடலில் இருந்த அணுக்கள் எல்லாம் உறைந்து நொருங்கிப்போனது.. கண்களில் இருந்து நீர் கொட்டத்தொடங்கியது. இதயத்தை கிழித்ததைப்போல் வலிக்க , வலி தாங்க முடியாமல் கைகளை கதிரையில் ஊன்றினாள். யாரைக்காண இத்தனை நாட்களாக துடித்தாளோ அவனை இப்படிக்காணுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஒரு கணத்தில் அவள் வாழ்க்கை முடிந்து விட்டதை உணர்ந்தவள் மீண்டும் போட்டோவில் சேர்த்திருந்த துருவையும்  ஓவியாவையும் பார்த்தாள். பார்க்க பார்க்க அவளினுள்ளே  வலி கூடிக்கொண்டே போனது..

ஒருபுறம் ஏசிக்கொண்டிருந்தவர் அவள் அருகே வந்து ” அது துருவ். என் மருமகன். மலேஷியாவில் சிறந்த ஓவியன். எப்படியோ அவனைப்பற்றி தெரிந்துகொண்ட நீ அவனை வரைந்தால் உன்னை தெரிவு செய்வோம் என்று நினைத்தது உன் மடத்தனம். உன் ஓவியம் தெரிவுசெய்யப்படவில்லை. உன் தவறினால் தான் நீ வாய்ப்பை இழந்து விட்டாய். இதில் எங்கள் தவறு ஏதுமில்லை. இனி நீ இங்கிருந்து செல்லலாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டார்.

அவர் எண்ணியது தவறு என்று கூறும் அளவிற்கு அவள் உடலில் சக்தி இருக்கவில்லை. அழுது கொண்டு அசையாது  நின்றாள். மேலும் அவள் அழுவதைப்பார்க்க முடியாமல் அருகில் வந்தான் மணி. ” இதுக்கு மேல இங்க நிக்காதம்மா வெளில போகலாம் வா ” என்றான். அவளும் மெல்ல நகர்ந்தாள். அவள் கால்களுக்கு மட்டும் இறைவன் இரக்கம் காட்டினான் போல கால்களில் அசைவிருந்தது. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் நிற்கவேயில்லை. அவள் மட்டுமா? அங்கிருந்த இயற்கையும் தான் கண்ணீர் வடித்தது…

வெளியே வந்தவள் கஷ்டப்பட்டு உதடுகளை விரித்து ” இவர் கூறியது உண்மைதானா? ” என மணியும் ” ம்ம் உண்மைதான்மா துருவ் தம்பியும் ஓவியாமாவும் நாலுவருஷமா காதலிக்கிறாங்க. கல்யாணம் கூட முடிவு பன்னியாச்சு. “என்றான்.
அதைக்கேட்டதும் மேலும் கண்ணீர் வர கட்டுப்படுத்திக்கொண்டு “அவர் இப்ப எங்க? ” என்று கேட்டாள்.
“தம்பி இப்ப ஓவியாம்மா வீட்டுல, நேற்றுதான் மலேஷியாவிலிருந்து வந்தாங்க.. ஆ மதியம் தம்பி உங்க ஓவியத்த பாத்திட்டு உங்கள பத்தி தகவல் கேட்டாங்க” என்றான்.
“உங்க ஓவியத்த பாத்திட்டு உங்கள பத்தி தகவல் கேட்டாங்க” என்ற அவனது வார்த்தை அவளிற்கு வலியை ஏற்படுத்தியது.. வலியோடு அமைதியாய் நின்றவள் மணியைப்பார்த்து ”  நீங்களாச்சும் என்ன நம்புங்க. அவங்கள இதுக்கு முதல் நான் போட்டோல கூட பாத்தது கிடையாது ஆனா என் கற்பனையில பார்த்திருக்கன். என் கற்பனை ஓவியம் தான் அது.. அந்த சேர் சொன்ன மாதிரி ஏதும் கிடையாது.” எனக்கூறி கண்களை துடைத்துத்துடைத்து மெல்ல நடந்தாள்..
அதைக்கேட்ட மணிக்கு ஆச்சரியமாக இருந்ததே தவிர அவள் கூறியது பொய்யென்று தோணவில்லை.
அன்று கனாவின் மொத்தவாழ்வும் கேள்விக்குறியாய் மாறி நின்றது. முதல்முறை வீதியால் அழுதுகொண்டே நடந்தாள்.. ஒருமாதிரி தான் தங்கியிருந்த பெண்கள் விடுதியைச்சென்றடைந்தவள் யாருடனும் கதைக்காமல் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். வெளியில் சத்தம் கேட்காமல் தலையணைக்குள் முகத்தைப்புதைத்துக்கொண்டு கதறினாள்.  ஒருகட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல் போனவளாய் அறையிலிருந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறியத்தொடங்கினாள். ஓவிய உபரணங்கள் எல்லாம் அங்கும் இங்கும் சிதறியது.. சற்று நேரத்தில் கோபம் கொஞ்சம் தணிந்துபோக காகிதக்குப்பைகளாய் மாறிக்கிடந்த ஓவியப்பேப்பர்களின் மீது விழுந்து கத்தினாள்.. காகிதங்களும் கண்ணீரால் ஈரமாகிப்போனது.. ஒரு புறம் அவள் கண்ணீரில் கரைய…

துருவ்வோ ஓவியாவின் வீட்டிலிருந்து வெளியே வரவழி தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி ஆட்டமும் பாட்டமுமாக ஓரே கூட்டம். ஆனால் அவன் எண்ணமெல்லாம் முகம் தெரியா கனாவைச்சுற்றியே இருந்தது.. நாளை கண்காட்சியில் எப்படியாவது அவளைப்பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் தோன்ற  கற்பனையில் அவள் முகத்தை இடை இடையே கிறுக்கிப்பார்த்தான்… அன்று அவனுள்ளும் காரணம் தெரியா ஓர் வலி இருக்கவே செய்தது..

மறு நாள் அவள் தோழி கதவைத்தட்ட கதவைத்திறக்காமலே ” நீ போ ராஜி கொஞ்சத்தால நானே வாரன்” என்றாள். கையில் தினக்குரல் பத்திரிகையுடன் நின்றவள் ஒன்றும் சொல்லவில்லை திரும்பிச்சென்று விட்டாள். கிழிந்து ஈரம் ஒற்றிக்கிடந்த ஓவியப்பேப்பர்களையெல்லாம் குப்பைக் கூடைக்குள் திணித்தாள். சிதறிக்கிடந்த உபகரணங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். சில மணித்தியாலயங்களில் அறையை துப்பரவாக்கிவிட்டு குளித்து வெளிக்கிட்டாள். சாமான்கள் அடிக்கிவைத்திருந்த இரு பைகளையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். வெளியே வந்தவள் வெளியில் இருந்த ராஜியிடம்  ” ஊருக்குப்போறன் ஊர்ல வேல ஒண்டு கிடச்சிட்டு.” என்று கூறிக்கொண்டு சாவியை நீட்டினாள். சாவியை வாங்கிக்கொண்ட ராஜியோ எதுவும் கூறவில்லை காரணம் அவள் கையிலிருந்த பத்திரிகையே… அவள் கையிலிருந்து பத்திரிகையை எடுத்து விரித்தாள் கனா. அதில் முதற்பக்கத்தில் ஓர் அழகிய ஓவியம் அதன் கீழ் “முகேஷ்”என்று அச்சிடப்பட்டு, பத்திரிகையெங்கும் அவனைப்பற்றியே எழுதப்பட்டிருந்தது. கண்களில் வந்த நீரை மெல்ல துடைத்துவிட்டு அவளிடம் பத்திரிகையை நீட்டியவள் பைகளைத்தூக்கிக்கொண்டு திரும்பிநடந்தாள்.. ராஜி அவள் நெருக்கிய தோழியல்ல ஆனால் அன்று திரும்பி நடந்த கனாவைப்பார்த்து கலங்கிப்போனாள்..

அன்று 11 மணியிருக்கும் திருவிழாவைப்போல் கோலாகலமாகக் கண்காட்சி ஆரம்பமாகியது. கண்காட்சிக்காக நான்கு மாடிக்கட்டிடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. சுற்றி ஓரே பூந்தோட்டம்.. பூந்தோட்டத்தின் நடுவே அக்கட்டிடம்.. அக்கட்டிடமெங்கும் ஓவியம்.. பார்பதற்கு அழகாயிருந்தது. மதிய நேரம் தான் ஆனால் திடீரென மாலை நேரம் போல் மாறத்தொடங்கியது.  இடியும் மின்னலும் மாறி மாறி வந்து போக வெளியில் அலைந்து திரிந்தவர்கள் எல்லாம் கட்டிடத்தினுள்ளே ஓடிச்சென்றனர். சற்று நேரத்தில் மழை “சோ”வெனக் கொட்டத்தொடங்கியது… கொட்டும் மழை மேலும் அங்கு அழகை அள்ளிவழங்க அங்கிருந்தவர்கள் எல்லாம் அசந்து போனார்கள். ஆனால் இது எதையுமே உணராதவன் போல கனாவின் ஓவியத்தைத்தேடிக்கொண்டிருந்தான் துருவ். இதை அவதானித்த மணியும் துருவ்வின் அருகில் செல்ல நினைத்தான். ஆனால் மாறிமாறி அவனிற்கு வேலை வந்தது. அங்கிருந்த ஓவியங்களின் கீழ் வரைந்தவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. “ஓவியம் எம்மாடியில் இருக்கும்? அதன் கீழ் இருக்கும் புகைப்படம் எப்படியிருக்கும்? கனா எங்கிருப்பாள்? ” என்ற கேள்விகளோடு தேடித்தேடி களைத்துப்போனான். எதேர்ச்சையாக மாடியில் மணியைக்கண்டவன் கையைக்காட்டி அழைத்தான். அவன் அழைப்பைக்கண்ட மணியும் படிகளால் அவசர அவசரமாக இறங்கி வந்தான். வந்தவன்” கட கட” வென்று நடந்தவையெல்லாவற்றையும் கூற உடைந்து போனான் துருவ். மணியிடம் கனா கூறியது ஆச்சரியத்தையோ சந்தேகத்தையோ கொடுக்கவில்லை. கனாவை அவன் மனம் முழுதாய் நம்பியது. மணியைப்பார்த்து  “அவளை நான் நம்புகிறேன்.
பார்த்து வரைபவனால் அவள் ஓவியத்தின் புள்ளியைக்கூட வரைய முடியாது. அவளோவியத்திற்குள் ஏதோ ஒன்று  இருக்கின்றது அதை ஓவியனால் மட்டுமே  பார்த்து உணரமுடியும்” என்றான். அவன் விழியோரத்தை மெல்ல கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்ப்பதைப்போல் இருந்தது ஆனால் அதை மணிக்கு முன்னால் வெளிக்காட்டாமல் நின்றான். ” என்னால் ஒரு பெண்ணின் கனவுகள் கலைந்து விட்டது என்று கலங்குவதா?  இல்ல நான் எனக்கான ஒரு பெண்ணை இழந்து விட்டேன் என்று கலங்குவதா? ” என தனக்குள் தானே கேட்டுக் கொண்டான். அசையாமல் நின்றவனை ஒரு சின்னஞ்சிறு கை பிடித்திழுத்தது. அவ் இழுவையில் திரும்பிய துருவ் அச்சின்னஞ்சிறு கைகள் காட்டிய திசையில் திரும்பினான். அங்கு துருவ் தேடித்திரிந்த அவன் உருவம் வரையப்பட்ட ஓவியமிருந்தது. அதைக்கண்டதும் வேகமாக விரைந்தவன் அங்கு ஒட்டப்பட்டிருந்த கனாவின் புகைப்படத்தை கையில் எடுத்தான். எடுத்த அக்கணமே அவன் மனதில் காலியாக இருந்த ஒர் இடம் நிரம்பியதைப்போலே இருந்தது. ” நீ எங்கிருக்கிறாய்?? ” என்று கேட்ட மறுகணமே வீசிய காற்றில் அவளின் புகைப்படம் கையிலிருந்து தவறி ஜன்னல் வழியே வெளியில் விழுந்தது… பதறியவன் கொட்டும் மழையைக்கூட பாராமல்  வெளியில் ஓடினான்.. அங்கு அவள் புகைப்படம் மழைத்துளிகளில் ஊறிக்கொண்டிருந்தது.. அதைப்பார்த்தவன் உடனே எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்ள , கொட்டும் மழையும் அவனை முழுதாய் அணைத்துக்கொண்டது. மழைநீரோடு தேக்கி வைத்திருந்த விழி நீரும் மெல்லக்கலந்து அவனைவிட்டு விடைபெற்றது…

அவன் விழிநீரைக்கண்டு கலங்கிய  மழைத்துளிகள் பஸ்சில் பயணமாகிக்கொண்டிருந்த கனாவின் மென்காதுகள் அருகே சென்று “உன்னவன் விழிகள் நீ காதலிப்பது தெரியாமலே உனக்காக அழுகிறது.. போய் அணைத்துக்கொள்” என்றது. ஆனால் அது  வழமைபோல அவள் காதுகளில் கேட்கவேயில்லை… ஜன்னல் வழியே காதருகே பட்ட மழைத்துளிகளை அவள் பூங்கரங்கள் துடைத்துக்கொள்ள… பஸ்சும் மிக வேகமாக மழைத்துளிகளுக்கு விடைகொடுத்துக்கொண்டு பல்கலைக்கழக வீதியைக்கடந்து பயணித்தது……

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Puvan jayanth
Puvan jayanth
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb story