ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30

0
488

 

 

 

 

 

 

விடை கொடுத்த சதாமின் அரண்மனை

திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப் பாக்தாத்திற்கு ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சி செய்கிறேன் என்றார். அதற்கான கட்டணம் அறுநூறு டாலரை தானே செலுத்துவதாக உறுதியளித்தார்.

ராணுவத்திற்காகப் பணிபுரியும் சில நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் பாக்தாத்திற்கும் மற்ற இடங்களுக்கும் இயக்கப்பட்டது. அதில் அவர் முயற்சித்தபோது, முடியாது என பதில் வந்தது. அதற்கான காரணம் எங்கள் முகாம்களில் பணிபுரிந்த அமெரிக்கர்களுக்கும் , வேறு வெளிநாட்டவருக்கும் அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை வைத்திருந்தனர். அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என ஆலன் குக் என்னிடம் சொன்னார். நாங்கள் துணை ஒப்பந்த நிறுவனத்துக்கு (third nation country ) கீழ் வேலை செய்வதால் எங்களுக்கு அந்த அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இருந்தாலும் அமெரிக்க நிறுவன அதிகாரி வில்லியம் என்னிடம் “நான் ராணுவ தலைமை அதிகாரியுடன் பேசிப்பார்க்கிறேன். உனது திருமண தேதி நெருங்கிவிட்டதால் , நீ கண்டிப்பாக செல்லவேண்டுமென சொல்கிறேன்” என சொல்லி சென்றார். “ராணுவ ஹெலிகாப்டரிலும் பயணம் செய்ய அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என கமொண்டோவை சந்தித்துவிட்டு வருத்தத்துடன் வில்லியம் என்னிடம் சொன்னார். “என்னால் உனக்கு உதவ முடியவில்லை. ஐயாம் சாரி” என்றார் . ஹெலிகாப்டரில் சென்றுவிட்டால் குறிப்பட்ட தியதியில் இந்தியா சென்றுவிடலாம் என்ற எனது இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. ரமலான் முடிந்து இரண்டாம் ஆண்டாக பெருநாளையும் முகாமிலேயே கொண்டாடினோம். ரமலான் இரவுகளில் தொழும் தராவீஹ் தொழுகையை, ரோஷனும் , கலீல் பாயும் இணைந்து சிறப்பாக நடத்தினர். அமெரிக்கர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நன்றி செலுத்தும் நாளும் (thanksgiving day) அவர்கள் வெகு சிறப்பாக, விதவிதமான சிறப்பு உணவுகளுடன் கொண்டாடினர். ஆவியில் வேகவைத்த முழு வான்கோழி இறைச்சி இந்தப் பண்டிகையின் முக்கிய உணவாக இருந்தது .

மூத்த நண்பர் கலீல் பாய் தினமும் என்னிடம் “குறிப்பிட்ட தியதியில் உனது திருமணம் நடக்கும், நான் எனது பிரார்த்தனைகளில் உனக்காவும் வேண்டிகொள்கிறேன்” என்றார். இப்படி அவர் சொல்வது என்னைச் சமாதானப்படுத்தவே என நினைத்துக் கொள்வேன். டிசம்பர் ஒன்றாம் தியதி அன்று காலை என்னைச் சந்தித்த கலீல் பாய் “.நீ கண்டிப்பாக ஊர் செல்வாய். நான் இன்று உனக்காக அதிகமாக பிரார்த்தனை செய்தேன். உன் குடும்பத்தினர் நிச்சயித்த நாளன்று உன் திருமணம் நடக்கும்” என்றார். நான் சிரித்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன்.

 

 

 

 

 

 

சிறிது நேரத்தில் மூன்று கார்கள் முகாமுக்குள் வந்தன. கவச உடையும், துப்பாக்கியும் ஏந்திய காவலர்கள் படைசூழ இருந்தனர். யாரோ முக்கிய அதிகாரி ஒருவர் வந்திருப்பது தெரிந்தது. அன்று காலை பத்துமணிக்கு பணியில் இருக்கும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் பிலால் என்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தான். என்னுடன் பணியிலிருந்த முருகன் “பாய், பிலால் உன்னை அழைக்கிறான்” என்றான். அவசரமாக வந்த பிலால். “திக்ரித்தை சுற்றியுள்ள முகாம்களில் ஆய்வு செய்யும் பொருட்டு உயரதிகாரி வந்துள்ளார். அவர் அடுத்து செல்வது பாக்தாத். ஆகவே நமது மேலாளர் ஆலன் குக் உனது விஷயத்தைச் சொல்லி உன்னை பாக்தாத்வரை அழைத்துச் செல்ல வேண்டுகிறார். பாதுகாப்பு கருதியும், வண்டியில் இடம் இல்லை எனவும் அவர் மறுக்கிறார். நீ உடனே வா! நீ நேரில் அவரிடம் பேசினால், அவர்களுடன் நீ செல்ல வாய்ப்பு கிடைக்கலாம்” என்றான். பிலாலுடன் அவசரமாக அலுவலக அறைக்குச் சென்றேன். ஆலன் குக் என்னைப்பற்றியே அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சென்று அலுவலக வாயிலில் நின்றேன். பிலால் கொஞ்சம் தள்ளி நின்று, உள்ளே போ என சைகை செய்தான். அதே நேரம் என்னைக் கண்ட ஆலன்குக் ” ஷாகுல், கம் இன்” என என்னை அழைத்து அந்த அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தினார் .

அவர் என்னிடம் “இந்தியாவில் எங்கே வசிக்கிறாய்? திருமண தியதி எப்போது?” எனக் கேட்டு அறிந்துகொண்டார். பின் சில நிமிடங்கள் நாங்கள் மூவரும் இருந்த அந்த அறை மௌனமாக கடந்தது. “உனது பயணப் பைகள் எத்தனை? எவ்வளவு பெரியது?” என கேட்டார். என்னிடம் ஒரு அட்டைப்பெட்டியும் , ஒரு சிறிய பையும் இருப்பதாக சொன்னேன். “பதினைந்து நிமிடத்திற்கு மேல் நான் காத்திருக்க முடியாது. சீக்கிரமாக புறப்பட்டு வா” என்றார். அக்டோபர் இருபத்தியைந்தாம் தியதி புறப்படத் தாயாரான என்னுடைய பயணப் பை. எதையும் நான் திறக்கவே இல்லை.

அறையை விட்டு வெளியே வந்ததும் முருகன் “என்ன?” எனக் கேட்டான். என்னை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டதை சொன்னதும் என்னைவிட முருகன் தான் அதிக மகிழ்ச்சியடைந்தான். “புறப்படு பாய், சீக்கிரம்! ஆடை மாற்றிகொள்! தேவையானதை, மறக்காமல் எடுத்துகொள்!” என என்னுடன் வந்தான். கடவுச்சீட்டு மட்டும்தான் முக்கியம். அது எனது கழுத்தில் இருந்த பையில் தொங்கிக்கொண்டிருந்தது. முன்பு தீ விபத்தில் கூடாரம் எரிந்து பலரும் அனைத்தையும் இழந்திருந்ததால், பெரும்பாலானோரின் கடவுச்சீட்டு உடலின் ஒரு உறுப்பு போல கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்.

என்னுடைய பைகளை முருகன் வண்டியின் அருகில் கொண்டு வைத்தான். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன். ஊர் செல்கிறேன் என்ற செய்தி அறிந்து நண்பர்கள் கலீல் பாய் , விஜயகுமார் , கிருஷ்ணமூர்த்தி அவசரமாக வந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர். நான் கிருஷ்ணமூர்த்தியிடம், “திரும்பி வரமாட்டேன். உன் பணத்தை நான் எடுத்துக் கொண்டால் என்ன செய்வாய்” எனக் கேட்டேன். “உன் திருமனத்திற்கு செலவு செய்ததாக நினைத்துகொள்வேன்” என்று சொல்லி சிரித்தான் .

 

 

 

 

 

 

 

வண்டியில் இருந்த துப்பாக்கி ஏந்திய காவலர்கள் “பையில் என்ன இருக்கிறது?” என வினவினர். எனது துணிகள் மட்டுமே என்றேன். “துப்பாக்கி, குண்டுகள் எதுவும் இல்லையா?” என்றனர். சிரிப்பையே பதிலாக சொன்னேன். நான் வண்டியில் அமர்ந்ததும், துப்பாக்கியும் கவச உடையும் அணிந்த ஒருவர் என்னருகே வந்து என்னை வண்டியிலிருந்து கீழிறங்க சொன்னார். எனக்கும் ஒரு குண்டு துளைக்காத தலை கவசமும் , ஒரு கவச உடையும் தந்தார். அவர் தன்னை அந்த பாதுகாப்பு குழுவின் தலைவர் என அறிமுகபடுத்திக்கொண்டு , நாங்கள் செல்லவிருக்கும் திக்ரித் –பாக்தாத் பயணம் பற்றி ஒரு விளக்கம் தந்தார்.

“நாம் செல்லவிருக்கும் மொத்த பயணதூரம் 228 கிலோமீட்டர். இடையில் ஒரு முகாமுக்கு சென்று ஒருவரை இறக்கிவிட்டு, அங்கிருந்து இருவரை அழைத்துக் கொண்டு பாக்தாத் சென்று சேருவோம். அதிக பட்சம் நான்கு மணிநேரமாகலாம். நாம் பாதுகாப்பாக பாக்தாத் போய் சேருவோம். உனது வண்டியின் ஓட்டுனர் ராணுவத்துக்கு நிகரான ஒரு அதிகாரி. நமது மூன்று வண்டிகளிலும் செயற்கைக்கோள் தொலைபேசியும், ரேடியோவும் உள்ளது. நீ நடுவில் உள்ள வண்டியில் இருப்பாய். முன்பும், பின்பும் ஒரு வண்டி தொடர்ந்து வரும். ஏதாவது காரணத்தால் வண்டி நின்றால் கண்டிப்பாக உனது வண்டியிலுள்ள அதிகாரியின் உத்தரவு இல்லாமல் நீ கீழே இறங்கக் கூடாது. அப்படியே இறங்கினாலும் கண்டிப்பாக ஓடக்கூடாது. நான் சொல்வதை புரிந்துகொண்டாயா?” எனக் கேட்டார். “ஆம்” என்றேன். ஆலன் குக்கும் நண்பர்களும் “ஹாவ் அ ஸேப் ஜார்னி”என கையசைக்க வண்டி புறப்பட்டது. அது மிஷிபிஷி நிறுவனத்தின் பஜெரோ கார். பின் இருக்கையில் இரு துப்பாக்கி ஏந்திய வீரர்கள், நடு இருக்கையில் நானும் அந்த அதிகாரியும். என் அருகிலும் ஒரு காவலர் துப்பாக்கியுடன் அமர்ந்துகொண்டார் .

முகாமின் வாயிலில் மூன்றாம் முறையாக வந்தேன். வாயிலில் நின்ற அமெரிக்க ராணுவம் எங்களை கீழே இறங்கி சோதனைக்குப் பின் ஏறும்படி சொன்னார்கள். இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள், எனக்கு ஒரு பய உணர்வையே தந்தது. ஊருக்குப் போனால் கல்யாணம். போய்ச் சேருவோமா என உறுதியில்லாத அந்தக் கடைசித் திகில்பயணம் துவங்கியது. இனி ஒருமுறை சதாமின் அரண்மனைக்கு வரப்போவதில்லை என கண்ணில் இருந்து மறைவதுவரை அந்த அரண்மனை வாயிலை நோக்கியிருந்தேன். முழு வேகத்துடன் வண்டி முன் நோக்கி செல்லத் துவங்கியது.

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க