அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி.

இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று.

நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின் மகன் என்ற அந்தஸ்தை எனக்குத் தந்த அந்த மனுஷன்; அடுத்த பத்துவருடங்கள் முடிந்து மூன்றுமாதங்கள் முடியுமுன்னரே அன்று என்னை அப்பனற்ற அனாதையாக்கிவிட்டு மோட்சலோகம் போய்விட்டார்.

சிலவேளை அவருடைய இயல்பின்படியே மோட்சம் போகும் வழியில் சொர்க்கம் வைகுந்தம் கைலாசம் இவைகளுக்கும் ஒரு எட்டுப்போட்டு பார்த்திருப்பாராக்கும்.

முடியுமானால் ‘பார்ஷாக்கிலும்’ கொஞ்சம் லேண்ட் பண்ணி முஹம்மது நபியவர்களுக்கும் ஹலோ சொல்லியிருக்கலாம். அப்படிப்பட்ட சமரச சன்மார்க்கவாதி என் அப்பா .

எல்லாருக்கும் என் அப்பாவின் பெயர் சாமுவேல். இங்கிலிஷ் தெரிந்தவர்களுக்கும் சிங்களம் பேசுபவர்களுக்கும் சாமுவேல் மாஸ்டர் . மற்றவர்களுக்கு வாத்தியாரையா . அல்லது சாமுவேல் வாத்தியார்.

சாமுவேல் என்பது பைபிளில் வரும் ஒரு தீர்க்கதரிசியின் பெயர். இஸ்ரேலிய யூத இனத்தார் பேசும் எபிரேய மொழியில் சாமுவேல் என்ற சொல்லின் அர்த்தம் தமிழில் ‘இறைவன் செவிமடுத்தார்’ என்பதாகும்.

இந்தப் பெயர் உச்சாடணம் உள்ள மனிதர்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும் அவர்களுடைய உடைமை பணம் அனுபவம் மற்றும் கலைத்திறன்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு ஆழ்ந்த உள் விருப்பம் கொண்டவர்களாம் என்று நான் கேள்விப்பட்ட செய்தி என் அப்பாவைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு உண்மையானது.

அப்பா தென்னிந்தியாவில் மதுரைக்கு அடுத்த சேவல்பட்டி கிராமத்தில் ஏழு அக்காமாரின் கடைசித் தம்பியாக பிறந்தவர். நஞ்சை புஞ்சை என்று நாற்பது ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரனாக இருந்தவர்.

மதுரை கல்லூரியொன்றில்; படித்து இலண்டன் மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணியவர். அப்பா ஆங்கில மீடியத்தில் படித்து அந்த மொழியைப் பயன்படுத்தியவர் என்றாலும் தமிழைப் பெருமையுடன் நேசித்தவர்.

பகலில் அவரை சந்திக்க வரும் பாஸ்டர் பாதர்மார்களுடன் பைபிள் ஸ்டடி செய்த அன்றைய மாலையே இராமகிருஷ்ண மிஷன் பகவான்ஸ் ஜர்னலுக்கும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவார்.

அதையெல்லாம்விட அப்பா ஒரு பக்கா வாசகர். வாசிப்பதற்கென்றே பிறந்தவர். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் அடுத்தவீட்டுக்காரனிடம் ஓசி பேப்பர் கேட்டுப்படிக்கும் ரகமல்ல அவர்.

நாளாந்தம் வீரகேசரி பத்திரிகையும் ஞாயிறு வார இதழ்களுடன் வாராவாரம் குமுதம் ஆனந்தவிகடன் என்றும் ஆடர் செய்வார்.

மாதாமாதம் பேசும்படம் வாசித்தாலும் ரீடர்ஸ் டைஜஸ்டும் ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் இரண்டும் வீட்டுக்கு வந்துவிடும்.

இரட்சண்ய யாத்திரையையும் சாது சுந்தர்சிங்கின் பிரயாணங்களையும் எனக்கு கதையாக சொல்லும் அதேவேளையில் அவரிடமிருந்து இராமகிருஷ்ணரையும் அன்னை சாரதாவையும் விவேகானந்தரையும் தெரிந்துக் கொண்டிருக்கின்றேன்.

என்னை ஏழுவயதுக்கு முன்னரே மகாபாரதத்தையும் கம்பராமாயணத்தையும் வாசித்து முடிக்கவைத்திருந்தார். அப்பா விலைகொடுத்து வாங்கி எங்கள் வீட்டில் எங்கும் பரவிக்கிடந்த புத்தகங்களை கவனமாக வைத்திருந்தால் இன்று ஒரு பப்ளிக் லைப்ரரியே நடத்தலாம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குவகித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அப்பாவின் ஸ்கூல்மேட் என்று சொல்வார்கள். அப்பா இலங்கையில் குடியேறியபிறகும் அந்தத் தொடர்பு கடிதங்கள் மூலம் தொடர்ந்திருக்கின்றது.

கூடவே இலங்கையின் தென்னிந்திய தமிழ் சமூகத்தினரின் தொழிற்சங்கம் மற்றும் சமூக வரலாற்றின் முன்னோடி ஸ்தாபனமான இலங்கை இந்தியன் காங்கிரசின் ஆரம்பகால செயற்குழு உறுப்பினர்.

அப்பா இறப்பதற்கு 20 வருடங்களுக்குமுன் அவர் மறைந்த தினமான ஜுலை 26ஆம் திகதியன்றே இலங்கை இந்திய காங்கிரஸ் ஹப்புத்தலை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவினால் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டதும் ஒரு வியப்பான கோ-இன்சிடன்ஸ்.

ஆனாலும் அப்பா எந்தவொரு பதவிக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டதில்லை. ஹி இஸ் ஜஸ்ட் எ போர்ன் கிங் மேக்கர்.

பிறப்பில் இந்துவான அப்பாவின் இயற்பெயர் கோவில்பிள்ளை சண்முகவேள் என்று அவரே கூறிக் கேட்டிருக்கின்றேன். காலேஜில் கிறீஸ்தவராக ஞானஸ்நானத்துக்குப் பிறகு சண்முகவேள் சாமுவேல் என்று மறுரூபமடைந்து நிரந்தரமானார்.

ஆனாலும் வெறுமனே “ஸ்ட்ரோங்” கிறிஸ்தவனாக ‘தம்’ பிடித்து வாழ்ந்து ஆண்டவனையும் அடுத்தவனையும் வருத்தப்படவைக்கும் வேலையை செய்து கொண்டிருக்காமல் ஒரு ‘குட்’ கிறிஸ்தவனாக அயலானையும் நேசிக்கும் வெகு யதார்த்தமான இயேசு உபாசகர் அவர்.

ஞாயிறுகளில் தேவாலயத்துக்கு போகும் அவர் அன்று மாலையே அம்மன் கோயிpல் கும்பாபிஷேக கமிட்டியிலும் அட்வைசராக இருப்பார்.

இயேசுவின் போதனைப்படியே தேவனிடம் காட்டிய அதே அன்பை அயலாருடனும் பகிர்ந்து வந்தார்.

அப்பா கடைசிவரைக்கும் சந்தியாகு போதகரின் ‘தேவனே நான் உமதண்டையில் ‘ பாட்டை முணுமுணுப்பதை விட்டாரில்லை.

அப்பா ஒரு கர்மயோகியாக தனக்கென ஒரு ஆன்மீகத்தை வகுத்திருந்தார். வீட்டுக்கு அவரைத் தேடிவரும் வெள்ளைக்காரர்களுடன் பக்கா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே எங்கள் பட்டியில் சாணியையும் அள்ளிக் கொண்டிருப்பார்.

பால்பண்ணை நடத்துவது அவருடைய இரத்தத்தில் கலந்த ஒரு ஹொபி. மாடுகளுடன் அந்நியோனியமாக பேசிக்கொண்டே தீவனம் போட்டுக் கொண்டிருப்பார். அவைகளுக்கு செல்லப் பெயர்களும் வைத்திருப்பார்.;

அவர் பிரியமாக வளர்த்த எங்கள் சாம்பல்நிற கோயில்மாடு அப்பாவின் உயிர்ப்பிரிந்த அதேகணத்தில் கயிற்றை அறுத்துக்கொண்டு பயங்கரமாக கத்தியபடி பட்டியை சுற்றிசுற்றி ஓடியதை எங்கள் அயலார்கள் சொல்வார்கள்.

மிருகங்களுக்குள் நாம் இழந்துவிட்ட மனிதம் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கும்.

அவருடன் எந்த மதத்தவர்களும் தங்கள் பிலோசபியை பேசலாம். பல கற்றுக்குட்டி போதகர்கள் அப்பாவுக்கு பைபிள் ஸ்டடி எடுக்க முயற்சித்து அசடு வழிந்திருக்கிறார்கள்.

அதைப்போலவே சில இந்து சமயவாதிகளும் அப்பாவுக்கு அத்வைதம் கற்றுக் கொடுக்க வந்து சைவமாகி திரும்பியிருக்கிறார்கள்.

பலாங்கொடையில் எங்கள் ஊரில் இருந்த பௌத்த பிக்கு அப்பாவின் அபிமானிகளில் ஒருவர். எங்கள் ஊரின் இஸ்லாமிய பள்ளிவாசலின் இமாம் அப்பாவின் நெருங்கிய நண்பர்.

அப்பா இருபத்தொருவயதில் இலங்கைக்கு கரைசேர்ந்து ஆசிரியர் உத்தியோகம் தொடங்கியிருக்கிறார்.

அந்த பணியை அர்ப்பணிப்படுன் செய்தாலும் ‘வக்கத்தவனுக்குத்தான் வாத்தியார் வேலை- போக்கற்றவனுக்கு போலிஸ் வேலை என்று ஜோக் அடிப்பார்.

எனினும் இலங்iகயில் இங்கிருந்தபடியே இந்தியாவில் அங்கிருந்த நிலபுலன் வேலைகளையும் கவனித்து வந்தார். அந்தக்காலத்தில் பாஸ்போர்ட் விசா என்ற அவசியங்களில்லை.

ஒரு ரெயில் டிக்கட்டில் இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடலாம்.

அப்பா இருபத்துமூன்று வயதில் இந்தியா சென்று ஒரு படித்த ஆங்க்;லிகன் குடும்பத்தில் கல்யாணம் முடித்து எனது முதல் பெரியம்மாவுடன் திரும்பியிருக்கிறார். அந்தப் பெரியம்மாவும் டீச்சர்தான்.

மூன்றுவருடங்கள்தான் குடும்பவாழ்க்கை . பிள்ளைப்பேறு லீவில் இந்தியா போன அவர்கள் ஓரு மகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அந்தக் கரையின் மண்ணுக்குள் ஐக்கியமானார்கள்.

அடுத்த இரண்டுவருடங்கள் குழந்தையுடன் ;தவித்திருக்கிறார். பிறகு அடுத்த திருமணம். எனது இரண்டாவது பெரியம்மாவும் ஆசிரியைதான்.

அவர்கள் மூலம் எனக்கு இரண்டு அண்ணாமார்கள். அப்பாவின் ராசிப்படி அந்த இரண்டாவது அம்மாவும் போய்ச் சேர்ந்தபிறகு இந்தமுறை மூன்று வளர்ந்த பிள்ளைகளுடன் தடுமாறியிருக்கிறார்.

அவருடைய மாணவியான என் அம்மா மீனாவை அப்பா திருமணம் செய்தபொழுது அப்பாவுக்கு முப்பத்தேழு வயதும் மீனாவுக்கு பதினேழு வயதுந்தான்.


அப்பாவின் வாரிசுகளாக எனக்குத் தெரிந்து என்னுடன் வளர்ந்தவர்கள் லீலா அக்கா பால்ட்வின் எட்வின் அண்ணாமார். என் தாய் மீனா வயிற்றில் பிறந்தவர்களான அக்கா சத்யா தம்பி மோகன் தங்கச்சி தெபோராள்.

இது போதாதென்று இந்தியாவில் வளர்ப்புக் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான அம்புஜா அக்கா மட்டும் எங்களை பார்க்க இலங்கை வந்திருக்கிறார்கள்.

இன்னொருவர் மறைந்த புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர் அசோகன் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன்.

அந்தக்காலத்து இங்கிலிஷ் படித்த ஆங்லிகன் சமூகத்தினரின் பந்தாக்களின் தாக்கம் அப்பாவை அணுகவேயில்லை.

தான் அணியும் ஆடைகளையும் அரைப்-பாதியாகவே தெரிந்து உடுத்திய முறை அவர் ஆள்மட்டும் மாறவேயில்லை என்பதை காட்டியது.

இடுப்புக்குமேல் சுவிஸ்சிலிருந்து மெயில் ஓடரில் வரும் கருநீலநிற அல்பாக்கா கோட் வெள்ளை சர்ட் டை என்று தெரிவார்.

இடுப்புக்கு கீழ் மதுரை அரவிந்த்மில் கதர்வேஷ்டி மிக எடுப்பாக அமைந்திருக்கும். பாதங்கள் கொட்டன் சொக்ஸ் மற்றும் முகந்தெரிய பொளிஷ் செய்யப்பட்ட ஜோன்வைட் காலணிகளால் மறைந்திருக்கும்.

ஆனாலும் அவருடைய பேவரிட் உடை முரட்டு காரிக்கன் துணியில் வெள்ளை அரைக்கை ‘பாடியும் நாலுமுழ வேஷ்டியுந்தான்.

பின்னாளில் நான் பாரதிராஜாவின் வேதம்புதிது பாலுத்தேவரை சினிதிரையில் ரசித்தபொழுது அந்த வெள்ளைப் ‘பாடியும் நாலுமுழ வேஷ்டியும் ரிலாக்ஸாக வீட்டில் இருக்கும் ஆறடி உயரமான என் அப்பாவை நினைவூட்டியது.

இன்றுங்கூட கோவில்பிள்ளை சாமுவேல் என்ற வாத்தியாரையாவுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக எந்த மிகமுக்கிய வைபவங்களிலும் உள்நாட்டில் நடந்தாலும் வெளிநாடாகளாக இருந்தாலும் அவரைப் போலவே வேஷ்டி சட்டை உடுத்திக் கொள்வதுதான்.

ஆனாலும் என் அப்பாவின் அந்த ஆறடி மூன்றங்குல ஒன்றரை அந்தர் கம்பீரம் புறாக்குஞ்சு போன்ற எனது அம்மா மீனாவின் ஜீன்சான எனது ஐந்தடி உருவத்துக்கு எடுபடாது.

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் என்றாலும் இந்த அப்பாவையும் ஆத்தாளையும் மட்டும் ஜஸ்ட் லைக் தட் என்று கொள்வனவு செய்யவே முடியாது.

அப்பன் மாண்டால்தான் தெரியும் அப்பனின் அருமை என்று சொல்வார்கள். அந்த ரீதியில் அப்பன் அருமையை கடந்த அறுபது வருடங்களாக உணர்ந்து அனுபவித்து ஏங்கும் பிராப்தம் இன்று கொள்ளுத் தாத்தாவாகிப் போன எனக்கு.

 

கோவில்பிள்ளை சாமுவேல்
1905.03.05 – 1959.07.26
(இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்)

முந்தைய கட்டுரைஆன்ட்ரொய்ட்
அடுத்த கட்டுரைHeadway – இவ்வருடம் scholarship பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கான Spoken English classes
User Avatar
எனது பெயர் இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல். ஏழுகழுதை வயதையும் என்றோ தாண்டிய ஒரு கொள்ளுத்தாத்தா நான். என்னை. எழுத்தாளன் (Writer) என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் எனது எழுத்தாள நண்பர்கள் கொஞ்சம் நமுட்டாக சிரித்துக் கொள்வார்கள். அதனால் எனது பேத்தி பேரன்களின் திருப்திக்காக 'கதைசொல்பவன்' Story Teller என்று மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ( எனது வீட்டுக்காரம்மா என்னை 'கதை-விடுபவன்' என்பார்கள்! ) பதினைந்து வருடங்களுக்கு முன் உலகத்தின் முதல்; இயற்தேயிலை நிறுவனத்தில் சமூகஅபிவிருத்தி அதிகாரியாக சம்பளத்திற்கு வேலைப்பார்த்தவன் என்ற பெருமை எனக்குள் உண்டு சிலகாலம் இலங்கை மனநோயாளர்கள் அரச நிறுவகத்தில் பகுதிநேர ஆற்றுப்படுத்துனராக பணிபுரிந்தும் எனது கிறுக்குத்தனத்தை வீட்டுக்காரம்மாவுக்கு நிரூபித்துள்ளேன். வெள்ளைக்காரர்களுக்கு அடங்கி வேலைப் பார்த்த எங்களைப் போன்ற 'தோட்டக்காட்டான்களுக்கு' இருக்கும் ஒரு பலகீனம் எனக்கும் அதிகமாகவே உள்ளது அது மனவோட்டங்களை ஆங்கிலத்தில் நினைத்து அவற்றினை முக்கால்வாசி தமிழிலும் முடிந்தால் மிகுதியை சிங்களத்திலும் சொற்களாக வெளிக்கொணரும் தடுமாற்றம்-சாமர்த்தியம் எனக்கும் இருக்கின்றது. ( எனவே கிறுக்கல்களை சகித்துக்கொள்வது வாசகர்களின் விதி ) நான் ஒரு Typical ஊர்சுற்றி. இலங்கை முழுவதும் மட்டுமல்ல ஐரோப்பா, ஆபிரிக்கா என்றும் ஒரு 'கால்' பார்த்திருக்கின்றேன். சிறுவயது முதலே எனது இளம்வயது விதவைத் தாய்க்கு அடங்கிய அம்மாகோண்டு நான். எனது அம்மா மீனா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன். அந்த படிதாண்டா குணம் எனது துணைவியாக இருக்கும் வீட்டுக்கார அம்மா முதல் மகள்மார், மருமகள், பேத்திகள், அக்கா, தங்கை என்று அனைவருக்கும் இன்றுவரை வசதியாக இருக்கின்றது. ஆக ஒரு Model Henpecked சேவல் நான். நான் ஜென் பௌத்தத்தை கடைபிடிக்கும் ஒரு சைவக்கிறிஸ்தவன் சூபி இஸ்லாமிய கீர்த்தனைகள் மிகவும் பிடிக்கும். காயத்ரிசித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் வரலாற்றினை எனது குருவும் எசமானனுமாகிய லெப்டினன்ட் கர்னல் ஜெயக்குமார் அவர்களின் ஆணைப்படி எழுதி புத்தகமாக வெளியிடும் பிராப்தம் எனக்கு கிடைத்தது. காயத்ரி-சித்தம் என்ற ஆன்மீக இதழின் ஆசிரியனும் நான்தான் . அறிமுகத் தகவல்கள் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் யாராவது வாசகர், வாசகிகள் சிக்குவார்களா என்று நப்பாசைதான். (இந்த 'பெருசுகள்' ஒருபோதும் உருப்பாடாது என்று நீங்கள் சொல்வது எனது செவிட்டுக் காதில் விழுகிறது. ஏனென்றால் ஐம்பது வருடங்களுக்கு முன் இதே வார்த்தைகளை நாங்களும் சொன்னோம்.)
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க