அன்பு என்றுமே அனாதையில்லை!

0
1045

அடைத்த அறையில் அடங்கி கிடந்து
இலக்க உலகில்
“அன்பொன்று தான் அனாதை” என உளறும்
என் இனிய தோழமையே..

உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து
பரந்த இப்பாரை பார்..
வானளவில் உயர்ந்த மலைகளை
தன் குழந்தைகளாய் சுமக்கும்
பூமித்தாயவளின் அன்பை பார்…

அழிந்து விடுவோம் என்றறிந்தும்
கரையோரப் பாறையை
முத்தமிட வரும் திரைதனில் தோன்றிய
அலையின் அன்பை பார்..

எட்டிப்பிடிக்க முடியாதது
ஆகாயம் என்றறிந்தும்
உயரப்பறக்கும் கழுகின் அன்பை பார்..
உயிரினம் அனைத்தினதும் ஆதாரமாய்
தன்னை அளிக்கும்
காடுகளின் அன்பைப் பார்..

இரவு முழுவதையும்
சந்திரனுடன் கழிக்கும் பூமியை
நேரம் தவறாமல் சந்திக்க வரும்
ஆதவனின் அன்பை பார்..

மனிதன் எவ்வளவு தான்
அல்லல் படுத்தினாலும்
அன்பாக அரவனைக்கும்
இயற்கைத் தாயின் அன்பை பார்…

பிள்ளையின் ஏற்றத்திற்காய்
ஏணியாய் உழைக்கும்
தந்தையின் அன்பை பார்..

இவ்வுலகம் படைத்து
இவ் அகிலம் காத்திடும்
ஒப்பாறு இல்லா இறையின் அன்பை பார்..

அன்பு என்றுமே அனாதை இல்லை
எம் அறிவுக்கண் மறைத்து
எம் அறியாமையால் உணர்கிறோம்
அன்பு ஒன்று தான் அனாதை என்று…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க