[ம.சு.கு]வின் : எங்கே ஓடுகிறோம் ?

0
439
-fea9b3c1
எங்கே ஓடுகிறோம் ?

எல்லாரும் ஓடுகிறோம்

நாம் எல்லோரும் எப்போதுமே ஒரு பரபரப்புடனேயே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலரை திடீரென்று நிறுத்தி எங்கு ஓடுகிறீர்கள் ? எதற்காக ஒடுகிறீர்கள் ? என்று கேட்டால், நம்மில் பலரால் பதில் கூற முடியாது. ஒரு சிலரோ, செல்வம் சேர்க்க ஓடுகிறோம் என்று கூறிவிட்டு, ஒரு நொடியும் தாமதிக்காமல் ஓட்டத்தை தொடர்கிறார்கள். அவர்களிடம் யாருக்காக இந்த செல்வத்தை சேர்க்கிறீர்கள் ? என்று கேட்டால், வசதியாக வாழ்வதற்காக, பிள்ளைகளுக்காக சேர்க்கிறோம் என்ற சில பொதுவான காரணத்தை சொல்லிவிட்டு தங்கள் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்கிறார்கள்.

தங்கள் நிகழ்காலத்தில் தங்களின் பொன்னான மணித்துளிகளை ஆக்கப்பூர்வமாக பிள்ளைகளுடனும் பெற்றோர்களுடனும் செலவிட வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் இருப்பதில்லை. தங்கள் பிள்ளைகளின் ஆசைகள் என்ன என்பதை கூட அறிந்து கொள்ளமுற்படுவதில்லை. பல பிள்ளைகள் தங்களின் பெற்றோர்கள் தங்களோடு சில மணித்துளிகளையேனும் தினமும் செலவிட வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்கி தவிக்கின்றனர்.

இந்த நிலையில்லா வாழ்க்கையில், இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாரும் முயற்சிப்பதில்லை. எல்லோரும் நாளை கிடைக்கப்போகும் செல்வத்தையும், அதன் மூலம் பெறப்போகும் மகிழ்ச்சியையும் நோக்கியே கற்பனையில் ஓடுகின்றனர். வாழ்க்கைக்கு செல்வம் மிகவும் அவசியமான ஒன்றுதான். அதை மறுப்பார் யாரும் இல்லை. ஆனால் சேர்க்கும் செல்வத்தை அனுபவிக்க நாம் இருப்போமா என்ற கேள்விக்கு நம்மிடம் விடையிருக்கிறதா?

குழந்தை பருவத்தில் நம்மிடம் நேரமும், ஆற்றலும் இருக்கிறது, ஆனால் போதிய பொருட்செல்வம் இருப்பதில்லை.

பருவம் வந்த பின்னர் நம்மிடம் ஆற்றலும் செல்வமும் இருக்கிறது, ஆனால் அதை அனுபவிக்க நேரமிருப்பதில்லை.

வயது முதிர்ந்த பின்னர் நம்மிடம் நேரமும், செல்வமும் இருக்கிறது, ஆனால் அதை அனுபவிக்க ஆற்றலும் உடல் வலிமையும் இருப்பதில்லை .

                            — யாரோ

  • குழந்தை பருவத்தில் செல்வத்திகாக ஏங்கினோம். ?

  • உழைக்கும் பருவத்தில் நேரத்திற்காக ஏங்கினோம் ?

  • முதுமையில் வலிமைக்காக ஏங்குகிறோம் ?

✓ இப்படி எப்போதும் எதற்கேனும் ஏங்கிக் கொண்டே இருப்பதுதான் மனித வாழ்க்கையின் கர்ம வினையா ?

✓எந்த பருவத்திலும் ஒரு நிறைவான வாழ்க்கையை நம்மால் வாழ முடியாதா?

✓ உடல் நலத்தை தியாகம் செய்து செல்வத்தை சேர்ப்பதால் நாம் அடையப் போகும் பயன்தான் என்ன ?

✓ இறக்கும்போது செல்வம் அதிகம் வைத்தவர்க்கு அந்த பரந்தாமன் என்ன சொர்க்கத்தையா வழங்கி விடுகிறார்?

கீதாசாரத்தை பல முறை படித்திருக்கிறோம். ஆனால் அதன் சாராம்சத்தை என்றைக்காவது உள்வாங்கியிருக்கிறோமா ? தமிழினம் சிறந்ததென்று மார்தட்டிக் கொள்ளும் நாம், என்றைக்கேனும் நம் சான்றோர் வகுத்த வாழ்க்கை நெறிகளை உணர்ந்து வாழ்க்கையை மேம்படுத்த முற்பட்டிருக்கின்றோமா ?

இத்தனை கேள்விகளுக்கும், நம்மில் 95 சதவிகிதத்திற்கு மேற்பட்டோறிடம் இருந்து வரும் பதில் “இல்லை“ என்பதே! அன்றாடம் வேலை வேலை, செல்லம் செல்வம் என்று ஓடி ஓடி நாம் இறுதியில் சேர்த்த பெருஞ்செல்வம் நீரிழிவு நோய், மனஉலைச்சல், புற்று நோய், உடற்பருமண், போன்ற வாழ்வியல் நோய்களையே. நீரிழிவு நோய் 100 ல் ஒருவருக்கு வந்த காலம்போய், அதற்கான மாத்திரை எடுப்பது ஏதோ ஒரு சமுதாய அந்தஸ்து போல ஆகிவிட்டது இன்றைக்கு. வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட என்னற்ற மாற்றத்தால் செல்வந்தர்கள் மட்டுமே சிக்கித்தவித்த உடல் பருமன் கோளாறு, ஒரு பெரும் நோயாக இன்று உருவெடுத்து சிறு குழந்தைகளையும் பெருமளலில் பாதித்திருக்கிறது.

ஒரு சிலருக்கோ உழைப்பது, உண்பது, உறங்குவது என்ற மூன்று செயல்கள் மட்டுமே வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது. இப்படி குறிக்கோளில்லாத வாழ்க்கையை வாழ்வதில் தான் என்ன பயன் ?

இந்த கட்டுரையை எழுதும் போது என்னுடைய வயது 36. கடந்த 35 ஆண்டுகளாய் நான் என்ன சாதித்திருக்கிறன் என்று சுய ஆராயச்சி செய்த போதுதான் என்னை நான் உணர முடிந்தது. கடந்து வந்த பாதையில் எத்தனை காலங்களை பயணற்றதாய் வீணடித்திருக்கிறேன் என்று எண்ணும்போது என்னில் எழும் ஆதங்கத்தை இங்கு கொட்டித்தீர்க்க விழைந்தேன்.

கற்ற வழி நிற்கத் தவறுகிறபோது, நூல்கள் பல கற்றதன் பயன் தான் என்ன? வாழ்க்கையில் கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டு நிகழ்காலத்தை வாழ தவறவிடுவது “கணியிருப்ப காய் கவர்ந்ததற்கு ஒப்பாகுமன்றோ“.

இப்படி ஆயிரமாயிரம் குற்றங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இவற்றிற்கு தீர்வு தான் என்ன ?

கடந்த ஒரு நூற்றாண்டாய் நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள தவறான மாற்றங்களும், அதனால் நிகழ்ந்துள்ள இழப்புக்களும், நம் அடுத்த தலைமுறையையும் சீர்குலைக்கின்ற வகையில் சமுதாயத்தில் வேறூன்றிவிட்டது. இதை எப்படி சீர்செய்து சமுதாயத்தை ஒழுங்குபடுத்துவதென்பது நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால் ?

வழக்கம் போல் தனிமனிதனாய் என்னால் ஒன்றும் செய்யவியலாது என்று கூறி எதையும் செய்யாமல் விடுவதை விடுத்து, நம் அன்றாட வாழ்வியல் முறைகளை செம்மைப்படுத்த நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக செயல்பட்டாலே போதும், மாற்றம் நம் இல்லங்களில் துவங்கி ஒரு பெரிய சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டுவிடும். ஏனெனில் சமுதாயமென்பதே நம் அனைத்து குடும்பங்களின் கூட்டுதானே !!

என்ன செய்யலாம்?

✓ செல்வம் சேர்க்க உழைக்கும் நாம், அன்றாடம் சில மணித்துளிகளை நம் குழந்தைகளுக்காக ஒதுக்கி அவர்களோடு உண்டு உறவாடினால், அடுத்த தலைமுறை அன்பும் பண்பும் நிறைந்ததாய் வளர்த்திடும்.

✓ வயது முதிர்ந்த பெற்றோருடன் சில நிமிடங்கள் செலவிட்டால், வாழ்வில் மன அமைதியையும் நிம்மதியையும் அவர்களுக்கு அளிப்பதோடல்லாமல், நாமும் மனநிறைவு அடையலாம்.

✓ அறிந்தவரோ, அறியாதவரோ, எப்போதும் புன்னகை ததும்பிய முகத்தோடு எவரையும் அனுகினால், வாழ்வில் பகைமையென்பதை அறவே அழிந்திடலாம்.

✓ கோபமெனும் விசமாயையில் சிக்காமல் எல்லோரையும் அவரவர் நிறை குறைகளுடனே ஏற்கப் பழகினால் மனித நேயம் தழைக்கும்.

✓ பரபரப்பை தவிரப்பதற்கு தினமும் சில நிமிடங்கள் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

✓ துரித உணவுகளை தவிர்த்து, நம் உழைப்பிற்கு தக்க உணவு முறைகளை கடைபிடித்தால், என்னற்ற வாழ்வியல் சார்ந்த நோய்களை அடியோடு தவிர்க்கலாம்.

✓அன்றாடம் நமக்காக சில நிமிடங்களை ஒதுக்கி, நம்மை நாமே சுயபரிசோதனை செய்தால், நம் வாழ்க்கைப் பாதையை பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைத்திடலாம்.

செல்வம் சேர்ப்பதும், புகழ் சேர்ப்பது மட்டுமே வாழ்க்கை என்ற குறுகிய நோக்கத்தை தவிர்த்து, அன்பும் பண்பும் நிறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்கி, மனிதநேயம் தலைத்தோங்க மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதையே முக்கிய குறிக்கோளாய் கொண்டு வாழ்த்திடுவோம்.

வாழ்க்கையில் ஓட்டம் அவசியம். அந்த ஓட்டம் அறம் சார்ந்த செல்வத்தையும், அன்பையும் தேடிய ஓட்டமாக இருந்தால், உலகம் உய்வதர்க்கு அது என்றென்றும் வழிவகுக்கும்.

    –  ம.சு.கு

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க