மாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்!!

0
5132

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சமயங்களும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கின்றது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித்தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயிதுள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

கல்வி என்;ற சொல்லுக்கு பலராலும் பல அர்த்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த அர்த்தங்களின் அடிப்படையில் நோக்கின்றபோது, ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றின் தொகுப்பே கல்வி எனச் சுருக்கமாக் கூற முடியும். ஒருவர் பெறுகின்ற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் திறனுக்கும் அடித்தளமாக இருந்து அவரது ஒவ்வொரு செயற்பாட்டையும் சிறப்புற மேற்கொள்ள வழி வகுக்கும். இவ்வாறான கல்வியை கல்வி கற்கும் வயதெல்லையைக் கொண்ட ஒவ்வொரு பிள்ளையும் கற்றுக்கொள்வதும் கற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும். இன்று எத்தனை மாணவர்கள் இலவச கல்வியின் தார்ப்பரியத்தை உணர்கின்றனர். அதேநேரம் அது தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் தெளிவுபடுத்துகின்றனர் என்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும்.

அந்த அவசியத்தை இலக்காகக் கொண்டே ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமை உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியமைப்பில்கூட கல்விக்கான உரிமை வழங்கப்பட்டிருகிறது. அந்த அடிப்படை உரிமையை உரிமையோடு பெற்றுக்கொள்ளும் உரிமை இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரித்தானது.

ஊலகளாவிய ரீதியில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் பல வடிவங்களில் முறைமைப்படுத்தப்பட்டிக்கிறது. உலகின் சில நாடுகளிலேதான் இலவசக் கல்வி முறைமை நடைமுறையில் காணப்படுகின்றது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக்கல்விப்ப் பாடசாலை மாணவர்களுக்கு இலவசக் கல்வி முறைமை உள்ளபோதிலும் இடைநிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கொடுப்பனவு செலுத்தியே கல்வி கற்கும் நிலை காணப்படுகிறது. இருந்தபோதிலும் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்விவரை இலவசமாக வழங்கும் பிரேசில், மொறிசியஸ், டென்மார்க், கிறீஸ், துருக்கி, கியுபா,ஆஜன்டினா, பிலிப்பைன்ஸ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் காணப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இலங்கையும் இலவசக் கல்வியும் ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முற்பட்ட கல்வி வரலாற்றைக் கொண்டதொரு நாடாக இலங்கை விளங்குகிறது. இலங்கையை ஆண்ட மேற்குலகினர். இருந்தபோதிலும் அவர்களின் கொள்கைகளுக்கு இணங்காத பலர் கல்வி வாய்ப்பை இழந்தமையை இலங்கையின் கல்வி வரலாற்றில் காணக் கூடியதாகவுள்ளது. இருப்பினும் 1836ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் ஆணைக்குழுவின் ஊடாக பாடசாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முதலாவது பாடசாலையாக கொழும்பு றோயல் கல்லூரி திகழ்கிறது. இதன் பின்னர் பல பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

1931ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கல்வி முறைமையானது இலவசக் கல்வி என்ற நிலைக்கு மாற்றப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முயற்சியின் பயனாக காலணித்துவ காலத்து இலங்கை நிர்வாகப் பேரவையின் முதல் கல்வி அமைச்சரான கிறிஸ்டோபர் வில்லியம் விஜயகோண் கன்னங்கராவினால் 1940ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறைமை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Dr. C.W.W_Kannangara

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இலவசக் கல்வி வாய்ப்பைப் பெறவேண்டும் என்ற இலக்குடன் அந்தப் பெருந்தகையால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இலவசக் கல்வியின் தந்தையென இதுவரை கன்னங்கரா அழைக்கப்படுகின்றார். மத்திய மகா வித்தியாலயங்கள் அவரினாலேயே உருவாக்கப்பட்டது. முதலாவது உருவாக்கப்பட்ட மத்திய மகா வித்தியாலயமாக விளங்குவது மத்துகம மத்திய மகா வித்தியாலயமாகும். நகர்ப்புறங்களில் வாழ்ந்த சமூகத்தின் உயர் வர்க்கத்தினர்கள் மாத்திரம் பெற்று வந்த கல்வி வாய்ப்பை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கச் செய்த பெருமை C.W.W. கன்னங்கராவையே சாரும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

அவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக உள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளின் சனத்தொகையில் 98.1 வீதம் எழுத்தறிவு கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் கடமையுணர்வும் கற்பித்தல் உணர்வும் இந்த நிலையை அடையச் செய்திருக்கிறது. பாடசாலைக் கல்வியின் தாக்கம் இலங்கையை ஆசியாவிலேயே எழுத்தறிவுடையோரை அதிகம் கொண்ட நாடு என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்றால் அதற்குக் காரணமாக அமைவது பாடசாலை முதல் பல்கலைக்கழகங்கள் வரை உள்ள இலவசக் கல்வி முறைமை எனக் குறிப்பிட முடியும்.

இன்று இலவசக் கல்வியின் உன்னதத் தன்மையை எத்தனை மாணவர்கள் உணர்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகும். இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச உணவு, இலவச பண உதவி, குறைந்த தொகையிலான பயணச்சீட்டு என்ற பல்வேறு இலவச சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கின்ற போதிலும் இதில் முழுமையான பயனை அடையாத மாணவர்கள் கற்றலில் பின்னடைகின்றனர். அதேநேரம் அனைத்தும் இலவசமாக கிடைப்பதால் கல்வியின் தார்ப்பரியத்தை உணர மறுக்கின்றனர். இதுவே பணத்திற்கு அனைத்தையும் பெற்றுக்கொள்ள நேரிடுமானால் கல்வியின் அருமை புரியும் என்ற நிலைக்கு இன்று மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், சமகாலத்தில் பாடசாலை இலவசக் கல்வி முறைமையானது மேலதிக  வகுப்பு அல்லது டியூசன் வகுப்புக்கள் அல்லதுகல்வி முகாம்கள் என்ற பெயர்களில் பணம் தேடலுக்கான கல்வி வியாபார முறைமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் 13 வருட இலவச கல்வியை முழுமையாக அனுபவித்து கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடரும் மாணவர்கள் சிறந்த வெற்றியடைகின்ற அதேவேளை, பணத்தை இரைத்து கால, நேரத்தை வீணடிக்கும் செல்வந்த மாணவர்கள் கல்வியில் தோல்வியடையும் நிலை அதிகமாகவே காணப்படுகின்றன. ஆகவே இலவச கல்வி தொடர்பாக பாடசாலை தொடங்கி பல்கலைக்கழக மடங்கள் வரை முறையான தெளிவூட்டல் அளிப்பது அவசியமாகும். அரசாங்கத்தினால் பெருந்தொகை பணம் செலவிடப்படுகின்றமை பற்றி மாணவர்களுக்கு சரியான விதத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

1940ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறையினூடாக ஏழை மாணவர்களும் பாடசாலைகளில் அனுமதி பெற்று கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர். கன்னங்கரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விப் போதனை மாத்திரமன்றி இலவச பாடநூல்களும் வழங்கப்படுகின்றன. அத்தோடு நடைமுறையில் பண வவுச்சர் முறையிலான இலவச சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இலவச மதியவுணவு வழங்குவதிலும் ஆங்காங்கே ஒருசில முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெறுவதையும் அறியக்கூடியதாகவுள்ளது. இவற்றில் ஈடுபடுகின்றவர்களும் கல்வித்துறையில் அங்கம் வகிப்பவர்களேதான் இவர்களும் கல்வி வியாபாரத்தின் பங்குதாரார்களாககச் செயற்படுபவர்களாக உள்ளனர்.

இவை தவிர பாடசாலைகளில் மாணவர்களை தரம் ஒன்று முதல் 12 வரை சேர்த்துகொள்வதற்கு எவ்வித கட்டணங்களும் பெறக்கூடாது என்று கல்வி அமைச்சினால் சுற்றுநிருபத்தினூடாக அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் ஒரு சில தேசிய, மாகாணப் பாடசாலை அதிபர்கள் அவற்றைப் பொறுப்படுத்தாது நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் பெறும் கல்வி வியாபாரிகளாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. இந்நாட்டின் எதிர்கால சந்ததியினர் இலவசக் கல்வியின் முழுப்பயனையும் அடைந்துகொள்ள வேண்டுமென்பதற்காக வழங்கப்படுகின்னற அனுகூலங்களை முறையாக நிறைவேற்ற ஒரு சில ஆசிரியர்களும் அதிபர்களும் தயங்குவது அல்லது அவற்றைப் புறக்கணித்துச் செயற்படுவது அவற்றை வழங்க மறுப்பது அங்கீகரிக்கப்பட முடியாதவை.

பெற்றோர்களும் இலவசக் கல்வியின் பாதுகாப்பும் இலவசக் கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி கல்வி வியாபாரம் கலைகட்டுவதற்கு பெற்றோர்களும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டுக்காட்டுவது பொறுத்தமாகும். பெரும் போட்டித்தன்மை கொண்ட பரீட்சைகளாகவுள்ள ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றும் தமது பிள்ளைகள் நல்ல பெறுபேற்றைப் பெற வேண்டும் என்பதற்காகப் பெற்றோர்கள் படும்பாடே பெரும்பாடாகும்.

இலங்கை நாட்டைப் பொருத்தவரையில் பல இனங்கள் வாழ்ந்தாலும் கல்வி என்பது பொதுவான ஒன்றாகும். அதனை இலவசமாக அனுபவிக்கும் மாணவர்கள் முழுமையான பயனை அடைகின்றார்கள் என்பதிலும் பார்க்க கிடைத்ததைக்கொண்டு திருப்தியடையாமல் தேவைக்கு அதிகமாக எதிர்ப்பார்ப்பதால் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். எந்த துறைசார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் முழுமையான கவனத்தை செலுத்தும் போது சரியான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழங்க வேண்டும். எல்லாம் இலவசம் என்ற சிந்தனையில் இன்று அநேகமான மாணவர்கள் பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை இடைவிலகல், முறையற்ற கல்வி வளர்ச்சியுடையவர்களாக காணப்படுகின்றனர். காரணம் இலவசக் கல்வியின் பெறுமதியை உணராமல் இருப்பதால் ஆகும்.

பெற்றோர்கள் மத்தியிலும் கௌரவப் பிரச்சினையை உருவாக்கி விடுகின்றது. இக்கௌரவப் பிரச்சினையானது சில பெற்றோர்களை பொருளாதார நெறுக்கடிக்குள்ளும் தள்ளிவிடுவதை சமூகத்தின் மத்தியில் சாதாரணமாக அவதானிக்க முடிகிறது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் பெற்றோர் பாடசாலை மட்டத்தில் பிள்ளைக்கான பாட அலகுகள் நிறைவு செய்யப்படுகின்றதா? பாடசாலையில் பிள்ளையின் கல்வி அடைவு எந்த நிலையில் உள்ளது. பிள்ளைக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது போன்ற விபரங்களை பாடசாலை மட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும்.

தொழிநுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள இக்காலக்கட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அது தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதோடு சிறந்த தேடுநர்களாக மாற வேண்டும். அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படுவதுடன் அவற்றில் பாதகங்களை உருவாக்கும் காரணிகளும் அடையாளம் காணப்பட வேண்டும். பாடசாலைச் சூழல், ஆரோக்கியமிக்க கல்வி நடவடிக்கைக்கான தளமாக மாற்றப்பட்டு மாணவர்களின் சிறப்பான அடைவுகளுக்கு பாடசாலைகளின் சிறப்பான அடைவுகளுக்கு பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளே முக்கிய காரணமென்ற மனப்பதிவுகள் ஏற்படுத்துப்படுகின்ற போது கலைக்கட்டிக்கொண்டிருக்கும் கல்வி வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டு இலவசக் கல்வி பாதுகாகப்பட வேண்டும் இல்லையேல் இலவசக் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

ஆகவே, இலவசக் கல்வியினை இலவசகமாக பெறுவதிலும் பார்க்க அதனை பெற்றுக்கொள்வதில் முயற்சி செய்து சிறந்த வெற்றியை அடைவதற்கு மாணவர்களுக்கு இலவசக் கல்வியின் உன்னத நிலைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டும். ஏனைய உலக நாடுகளில் காணப்படுகின்ற கல்வியின் இறுக்கமான தன்மை, கல்வியைப் பெற்றுக்கொள்வதன் கடின நிலையை உணர்த்தி இலங்கைக் கல்வியின் உயர்தரத்தை நன்றாக உணர்ந்து மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாவித சவால்களையும் கலைத்து முறையாக பயன்படுத்துவதற்கும் சிறந்த புத்திஜீவிகளாக மாறுவதற்கு முன்வர வேண்டும்.

முந்தைய கட்டுரைஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23
அடுத்த கட்டுரைபுழுங்கல் அரிசி (Parboiled Rice)
User Avatar
சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முதல் கட்டுரை மற்றும் ஊடகம், ஏனைய இதர செயற்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டதன் காரணமாகவும் எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்ற நிலையில் இதுவரையிலும் இலங்கையின் அனைத்து தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் பிராந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கட்டுரை ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மேற்பட்ட கட்டுரைகள் அரசியல், கல்வியியல், சமூகம், மலையகம், பொதுவான விடயங்கள் என்ற வகைகளுக்குள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்வியியல் கருத்துக்கோவை என்ற நூலை வெளியிட்டேன். மேலும் பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பல மாவட்டங்களில் பாலியல் கல்வி, சிறுவர் உரிமைகள், தொழில் விருத்தி வழிகாட்டல், பெற்றோர்கல்வி, மாணவர் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க