பேரன்பு

0
1054

நான் உனக்கு மிகப் பெரும்
அன்பின் சாயலை
பரிசளிக்க விரும்புகிறேன்
என் இதயத்திலிருந்து
பிரித்து வைத்திருக்கும்
தூய அன்பின் துகள்களை
உனக்குக்காட்ட விரும்புகிறேன்

பகல் நேர மின்மினிகள்
இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள்
கொடுக்கு இல்லா தேள்கள்
மகரந்தம் செய்யா வண்டுகள் என

உனக்கு

சரிபாதி அன்பையும்
வறுமைப்படும் துயரத்தையும்
காட்ட விரும்புகிறேன்

ஒரு பாரப்படுத்தல்
ஒப்புக்கொடுத்தலின்
உண்மைச்சுவடுகளை
உனக்குத்தர விரும்புகிறேன்

இருபக்கம் இழுக்கும் கயிற்றில்
எதிரெதிர் முனைகளை
நானே பிணைத்துவிடுகிறேன்

உலகம் ஓர் அன்பின் இயக்கப்பாடு என
உனக்கு நான் உணர்த்த வேண்டும்

ராத்திரி நேர ஒற்றையடிப்பாதையில்
லாம்பு வெளிச்சத்தில் பயணிக்கும்
பாதை தெரிந்த
பழுத்த கிழவனைப்போல
என் வாழ்க்கை முழுவதையும்
உனக்கு நான் காட்ட வேண்டும்

பயணங்கள் பிரிந்துவிட்டதால்
என் தலையை பிறிதொரு தோளில்
இளைப்பாற வைத்து விடாதே
அன்பு ஒரு முற்றுகையிடல்
அது எல்லோராலும் நிகழ்ந்து விடுவதில்லை

பதிந்துவிட்ட ரேகைகளைப் போல
ஒன்றிலிருந்து பிரிக்க முடியா
அன்பின் வாசஸ்தலங்களின் வாயிலை
அப்படியே அடைத்து விடாதே

எப்போதும் நான் உனக்கு
மிகப் பெரும் பேரன்பின் சாயலையே
பரிசளிக்க விரும்புகிறேன்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க