பிரார்த்தனைகள் நிறைவேறுமா?

0
488
raining-pic

எனது பழைய பதிவுகளில் ஒன்று ….

 //அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். போன முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய சொல்லவும். நீரின்றி அமையாது உலகு.//

இன்று  வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.அப்போது என் நினைவிலிருந்து எழுந்த சிலவற்றை உடனே எழுத வேண்டுமென்று தோன்றியது .

  மழைத்தவம்,மழைவேண்டி பிரார்த்தனை,மழைவேண்டி சிறப்புத்தொழுகை இவற்றால் என்ன பயன் என.

  நான் ஒரு அத்வைதி அதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை .

வள்ளுவர் வாக்குப்படி வேண்டுதல் வேண்டாமை எனும் நிலையை எப்போதோ அடைந்துவிட்டேன் .

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரி எனும் நூலில் மழை வேண்டி ஒரு கிராமத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததையும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்தேன் .

 

 

 

 

 

 

கடந்த 2017  ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கடும் வறட்சி நிலவியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த ஆண்டு துவக்கத்தில் நான் மெக்காவில் இருந்தேன். அங்கே ஒருநாள்  மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது . மெக்கா கவர்னர் உட்பட பெரும்பாலானோர் கலந்துகொண்டு மழை வேண்டி இறைவனிடம் இறைஞ்சினோம் .

அதே ஆண்டு மார்ச் மாதம் நாகர்கோயில் கோட்டார் பள்ளிவாசலில் மழைவேண்டி சிறப்புத்தொழுகை நடந்த செய்தி புகைப்படத்துடன்  நாளிதழில் வந்தது . ஒருவாரத்திற்குப்பின்  நாகர்கோயில் கலாச்சார பள்ளியில் மழை வேண்டி சிறப்புதொழுகைக்கான அறிவிப்பை ஜும்மாவில் இமாம் வெளியிட்டார் .   கடும் வறட்சி நிலவுகிறது இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் மனிதன் மட்டுமல்ல,விலங்குகளும்,பிற உயிரினங்களும் பாதிக்கப்படும் எனவே அனைவரும் ஒருநாள் நோன்பு வைத்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த உள்ளோம் .உங்கள் வீட்டு பெண்களையும்,பிஞ்சு குழைந்தைகளையும் தவறாது அழைத்து வந்து மழைவேண்டி நடக்கும் சிறப்புதொழுகையில் கலந்து கொள்ளுங்கள் .உள்ளம் உருகி கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் .நபிகள் நாயகம் இவ்வாறு மழை வேண்டி சிறப்புத்தொழுகை நடத்தியிருக்கிறார் என இமாம் சொன்னார் .

  நாகர்கோயில் தண்ணீர் தொட்டி சாலையில் உள்ள ஒய் ஆர் மகாலில் அதற்கான ஏற்பாடு செய்யபட்டிருந்தது.நானும் நோன்பு வைத்திருந்தேன்.(சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் உண்ணலாம் பருகலாம் பின்னர் சூரியன் அஸ்தமதிற்கு பின் உண்ணவும் பருகவும் செய்யாலாம்.இடைப்பட்ட பதினான்கு மணிநேரத்தில் ஒரு சொட்டு நீர்கூட அருந்தக்கூடாது.முக்கியமாக பிறர் மனம் நோகும் படி நடக்கக்கூடாது . நாள் முழுவதும் இறை நினைவுடன், இறை வணக்கங்களில் ஈடு பட வேண்டும் என்பதே நோன்பு.)

  மறுநாள் மழை வேண்டி சிறப்புத்தொழுகை நான்  அதிகாலை தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசல் சென்றுவந்தபின்,காலை ஏழு மணிக்கு நடக்கும் மழை வேண்டி நடக்கும் சிறப்புதொழுகைக்கு ,எனது மூத்த மகன் ஷாலிமும்,நண்பர் இப்ராகிம் அவர்களும் சென்றோம். குறிப்பிட்ட நேரப்படி சரியாக காலை ஏழரைக்கு மழைவேண்டி சிறப்புத்தொழுகை தொடங்கியது. இமாமின் வேண்டுகோளை ஏற்று  பெரும்பாலான பெண்களும்,பிஞ்சு குழைந்தைகளும் திரளாக கலந்துகொண்டனர்.

  தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்தோம் என் மகன் ஷாலிம் என்னிடம் “வாப்பா மழ இன்னும் வரல்ல” என கேட்டான். என்னிடம் அதற்கு அப்போது பதில் இல்லை அன்று முழுநாளும் என்னால் அவனுக்கு பதில் சொல்ல இயலவில்லை .

   மறுநாள் காலை ஐந்து மணிக்கு அதிகாலை தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் செல்லும் பொருட்டு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்து கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது ஆம் மழை பெய்துகொண்டிருந்தது. வேகமாக அறையினுள் சென்று ஷாலிமை எழுப்பி வெளியே அழைத்து வந்து காண்பித்தேன். வாப்பா என என்னை கட்டியணைத்துகொண்டான்.

   தான் முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ததால் மழை வந்தது என அவன் உள்ளம் உறுதியடைந்த வேளை அது .

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைமௌனம்
அடுத்த கட்டுரைஜாதிகள் இல்லையடி பாப்பா
User Avatar
பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி ,பாபூஜி மேல்நிலைப்பள்ளி ,மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின் ,மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி,பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/ ஷாகுல் ஹமீது , 14 june 2020
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க