சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 23

0
933

காவல்வீரனும் கதையும்

காலைக்கதிரவன் கிழக்கு வானில் தன் கதிர்க்கரங்களை மெல்ல விரித்து, இருள் போக்கி வையமெங்கும் தன் வெம்மையான ஒளியை பாய்ச்ச ஆரம்பித்து சில நாழிகைகள் கடந்து விட்டிருந்தன. நெடிந்து உயர்ந்த மதில்களுடனும் பிரமாண்டமான வாயில் கதவுகளுடனும் பலமான கொத்தளங்களுடனும் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற அந்த கோட்டை வாயிலானது மூடப்பட்டிருந்ததுடன், மதிலைசுற்றி அமைக்கப்பட்டிருந்த பெரும் அகழியை தாண்டி வாயிலை அடைவதற்கு வேண்டி அமைக்கப்பட்டிருந்த பனைமரத்தால் செய்யப்பெற்ற பாலம் மேலே தூக்கப்பட்டும் இருந்தது. முற்காலங்களில் சிங்கைநகரின் உபகோட்டைகளில் ஒன்றாக இருந்த அந்த சிறு கோட்டையானது, சிங்கை நகர் சிங்கள அரசால் கைப்பற்றப்பட்ட பின்னர் கைதிகளை சிறைப்படுத்தி வைத்திருப்பதற்குரிய சிறையாகவே பயன்படுத்தப்பட்டதுடன் அது முற்றுமுழுதாக தளபதி ராஜசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தது.

குறித்த உபகோட்டையை அடைவதற்கு ஏதுவாய் அமைந்த சிங்கைநகரின் பிரதான ராஜவீதிகளில் ஒன்றில் இரண்டு புரவிகள் மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்தன. அந்த புரவிகளில் நீளமான முடிதரித்து நீண்ட தாடியும் உடைய ஒரு மனிதரும், தலை முழுவதுமாய் மழித்து நீளமான தாடியை உடைய ஒரு மனிதரும் மிக அலட்சியமாகவே அமர்ந்திருந்தனர். அந்த இரு புரவிகளும் வந்து கொண்டிருந்த அந்த ராஜவீதியானது முன்னே சென்று இடது புறமாக திரும்பும் வளைவில் ஈட்டி தாங்கிய காவல் வீரன் ஒருவன் நின்றதுடன், அவன் அவ்வீதியூடாக சென்ற அனைவரையும் புரவியில் இருந்தும் வண்டிகளில் இருந்தும் இறங்க செய்தது மட்டுமன்றி அவர்களை முழுவதுமாய் பரிசீலனை செய்தே அவ்வீதியில் பயணத்தை தொடர அனுமதித்துக்கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் நன்கு அவதானித்துக்கொண்டே புரவியில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அந்த இருவரும் அடுத்த சில கணங்களிலேயே அந்த வளைவை அடைந்தும் விட்டிருந்தனர். அவர்களின் முன்னால் ஈட்டியை நீட்டி தடை செய்த அந்த காவல்வீரன், அவர்கள் இருவரையும் புரவியில் இருந்து இறங்குமாறு கட்டளை இடவும் செய்தானாகையால், அந்த புரவியின் பேரில் அமர்ந்திருந்த இருவருள், நீண்ட முடி தரித்த அந்த மனிதன் தன் இடையில் இருந்த கச்சையில் கையை விட்டு துழாவி ஏதோ ஒரு பொருளை எடுத்து நீட்டவும் செய்தான். அந்த பொருளையும் அந்த மனிதனின் முகத்தையும் மாறி மாறி நோக்கிய அந்த காவல் வீரனின் முகத்தில் சிறிது குழப்பமும் சந்தேகமும் முளைவிட்டதை அவதானித்த தலை மழித்த மற்றைய மனிதன்


“தளபதியாரின் ஆணையை நிறைவேற்றவே வந்திருக்கின்றோம்!” என்று கூறி தன் இடையில் இருந்த துணிச்சுருளை எடுத்து நீட்டினான்.
அந்த துணிச்சுருளை நன்கு நோக்கிய அந்த காவல் வீரன் அதில் பொறிக்கப்பட்டிருந்த சின்னமும் கையெழுத்தும் தளபதியாருடையது தான் என்பதை இனங்கண்டானென்றாலும் சந்தேகம் கலந்த குரலிலேயே “ஆனால் தாங்கள்” என்று இழுக்கவும் செய்தான்.
“சற்று உன் காதை என் அருகில் கொண்டு வா” என்றான் அந்த தலைமழித்த மனிதன்.
“என்ன?” என்ற படியே தன் காதுகளை புரவிக்கு அருகில் கொண்டுவந்தான் அந்த வீரன்.
புரவியில் இருந்தவாறே அந்த காவல்வீரனின் காதருகில் குனிந்த அந்த மனிதன் “தளபதியாரின் அந்தரங்க ஒற்றன் நான்” என்றான்.
“எப்படி நம்புவது” என்றான் அந்த காவல் வீரன் சந்தேகக்குரலில், அதற்கு அந்த மனிதன்,
“நம்பித்தான் ஆகவேண்டும், நான் நினைத்தால் உன்னால் நம்ப முடியாத பல காரியங்களை நிகழ்த்த இயலும், நான் நினைத்தால் உனக்கு பதவிஉயர்வும் உண்டு, தளபதியார் தனக்கு பொறுப்புகள் அதிகம் இருப்பதால் இந்த கோட்டை பொறுப்புகளை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விட போவதாகவும் என்னிடம் கூறியிருந்தார், ஒருவேளை உன் அதிர்ஷ்டம் கைகூடி வந்தால், அது நீயாக கூட இருக்கலாம். என் பேச்சை தளபதியார் ஒருபோதும் தட்ட மாட்டார். என் மீது அவ்வளவு நம்பிக்கை, புரிகிறதா கோட்டை தலைவரே” என்று சிங்களமொழியிலேயே மெல்லிய குரலில் ஓதியதன்றி, மேற்குறித்த விடயத்தை கூறுகையில் அதில் கோட்டை தலைவரே என்பதை சற்று அழுத்தியும் கூறினான்.
அந்த மனிதன் கூறிய விடயங்களை கேட்டு தன்னை கோட்டைதலைவனாகவே மனதில் கற்பனை செய்து கொண்ட அந்த காவல்வீரன் மெல்லிய ராஜபுன்னகை ஒன்றையும் தன் உதடுகளில் படர விடவும் அதை அவதானித்த அந்த மனிதன், “என்ன சொல்கிறாய் உனக்கு சம்மதமா?” என்று காவல்வீரனின் கனவை கலைக்கும் விதமாய் சற்று அதட்டி கேட்கவும் செய்தானாகையால் சுயநினைவுக்கு வந்து விட்ட அந்த காவல் வீரன் “தாங்கள் சொல்வது” என்று சற்று சந்தேகத்துடன் இழுக்கவும்
“முன்னர் என் நண்பர் காட்டிய முத்திரைமோதிரத்தை பார்த்தாயா?” என்றான் அந்த மனிதன்.
“ஆம்” உறுதியாக வெளிவந்தது அந்த காவல் வீரனின் குரல் “அது யாருடையது?” என்று கேட்ட அந்த மனிதனின் முகத்தில் தெளிவு இருந்தது.
“தளபதியாருடையது” என்றான் அந்த வீரன் மிக மெல்லிய குரலில்.
“பின் நான் காட்டிய துணிச்சுருளில் இருந்த கையெழுத்து யாருடையது?”
“அதுவும் தளபதியாருடையது” “ஒரு சாமானியனிடம் தளபதியார் தன் முத்திரை மோதிரத்தை கொடுத்தனுப்புவாரா? தன் கையெழுத்து பொறித்த ஆணையையும் கூட கொடுத்தனுப்புவாரா?” என்று வினவினான் அந்த மனிதன் மிக உறுதியான குரலில்.
“அப்படியென்றால் தாங்கள்?” என்று சற்றே வியப்புடன் அந்த வீரன் வினவ ஆரம்பிக்கவும்,
வாயில் விரலை வைத்து “உஷ்” என்று சைகை செய்த அந்த மனிதன்,
“வேறு யார் காதிலாவது விழுந்து, அவர்கள் எனக்கு தக்க மரியாதையை அளித்தால், உன் பதவிஉயர்வு கனவாகவே போய்விடும். நீ என்னை அவமதித்தால் உன் பதவியே பறிபோய்விடும். பின் எதற்கும் நான் பொறுப்பாளி அல்ல, இந்த விடயத்தை இரகசியமாகவே செய்யுமாறு தளபதியாரின் உத்தரவு. இதற்கு உன் உதவி பயன்பட்டால் நீ கற்பனையில் கண்ட வாழ்வு நிஜத்தில் உண்டாகும்” என்றான் இயல்பான குரலில்.
மேற்கூறிய உரையாடலில் தனக்கு உயர்பதவி கிடைக்கப்போகின்றது என்கின்ற எண்ணத்தினால் உண்டான உள்ளக்கிளர்ச்சியின் பயனாக முழுவதுமாய் அந்த மனிதனை நம்பிவிட்ட அந்த காவல் வீரன் “நான் உங்களுக்கு எப்படி உதவ வேண்டும்?” என்றான் பணிவான குரலில்.
புரவியை விட்டு குதித்து இறங்கிய அந்த மனிதன் அந்த காவல் வீரனின் தோள்களை பற்றிப்பிடித்துக்கொண்டே,
“இங்கே பாரப்பா, இங்கே சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களில் ஏழுபேரை இங்கிருந்து அழைத்து வருமாறு தளபதியாரின் உத்தரவு, அதை நிறைவேற்றவே நீ எங்களுக்கு உதவ வேண்டும்.” என்றான் மிக மெல்லியகுரலில்.
“அது தான் தங்களிடம் தளபதியாரின் உத்தரவு இருக்கிறதே என் உதவி எதற்கு” என்றான் அந்த காவல்வீரன் சந்தேகக்குரலில்.
“இப்பணியை இரகசியமாகவே நிறைவேற்ற வேண்டும் என்பது தளபதியாரின் வேண்டுகோள்” என்றான் அந்த மனிதன் இயல்பான குரலில்.
“எதற்காக அவர்களை தளபதியார் அழைத்து வர சொல்கிறார்?.” என்றான் அந்த வீரன் சந்தேகக்குரலில்.
“அது ராஜாங்க விடயம் அதை தெரிந்து நீ என்ன செய்யப்போகிறாய்?” என்றான் அந்த மனிதன்.
“ஆனால்..” என்று இழுத்த அந்த வீரனின் முகத்தில் இலேசாக சந்தேக ரேகைகள் படர்வதை அவதானித்த அந்த மனிதன்
“அந்த துணிச்சுருளில் எழுதியிருக்கும் கட்டளையை படித்தாயல்லவா? அது தளபதியாரே தன் கைப்பட எழுதியது.” என்றான்.
“இதை எப்படி..” என்று அந்த காவல் வீரன் குழப்பத்தில் ஏதோ உளறவும்.
“உனக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன் வேறு யாரிடமும் சொல்லிவிடாதே” என்று ஆரம்பித்தான் அந்த மனிதன்.
“என்ன உண்மை?” என்று வினவிய அந்த வீரனின் முகத்திலும் வியப்பே மிதமிஞ்சி நின்றது.
“அந்த ஏழ்வரும் சாதாரண வீரர்கள் என்று எண்ணித்தானே இங்கு அடைத்து வைத்திருக்கிறீர்கள்.” என்றான் அந்த மனிதன் சந்தேகம்கேட்கும் தொனியில்.
“ஆம்” என்றான் அந்த வீரன் உறுதியாக.
“ஆனால் அவர்கள் சிங்கை மன்னர்களின் வேளகார படைவீரர்கள்” என்றான் அந்த மனிதன் பயங்கரம் கண்களிலும் தோன்ற.
“என்ன” என்று கேட்ட அந்த வீரனின் குரலில் மிதமிஞ்சிய பிரமிப்பே தோன்றியது.
“ஆம், வேளகாரப்படைவீரர்கள் தான். அவர்களை உயிருடன் விடுவது அடிபட்ட நாகத்தை தப்ப விடுவதற்கு சமம். அதுவும் சிங்கை மன்னரின் வாரிசுகள் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் படையெடுத்து வரப்போவதாகவும் ஒரு பேச்சு ஆங்காங்கே எழுகிறது.” என்றான் அந்த மனிதன் மிக அழுத்தமான குரலில்.
“ஆம் ஆம்” என்று ஆமோதித்தான் அந்த வீரன்.
“அவர்களை சிரச்சேதம் செய்யவே அழைத்து செல்கின்றோம்”
“அப்படியானால் இங்கேயே” என்று அந்த வீரன் ஆரம்பிக்கவும் அவனை பேச அனுமதியாத அந்த மனிதன்
“இல்லை தளபதியார் இவர்களிடம் ஏதோ கேட்க விரும்புகிறார், அது என்னவென்று மட்டும் கேட்காதே, அதை சொன்னால் என்னுயிர் பறிபோய்விடும். அது மிகவும் அந்தரங்கம்” என்றான் மிகவும் திடமான குரலில்.

இருபத்துநான்காம் அத்தியாயம் தொடரும்..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க