சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16

0
1376
PicsArt_10-20-04.33.07

தன்னையே கொல்லும் சினம்

ஆலிங்கன் கூறிய அந்த விடயங்கள் பார்த்தீபன் மனதில் பெரும் இடியை பாய்ச்சியது போலவே தோன்றியதாகையால் கடும் சினத்தின் வயப்பட்ட அவன் “அவனை என்ன செய்கின்றேன் பார்!” என்று சற்று இரைந்தே முழங்கியபடி வாளை உருவியதன் விளைவாக ஆலிங்கன் மிகுந்த அச்சத்தையே அடைந்துவிட்டிருந்தானானாலும், மனதில் தைரியத்தை சற்றே வரவழைத்துக்கொண்டு மிகவும் உறுதியான குரலில் “பார்த்தீபா! நில்” என்று சற்று சப்தமாகவே கூவியதன் விளைவாக, அந்த பாழும் மண்டபத்தின் சுவர்களும் நாலா புறமும் மீண்டும் மீண்டும் “பார்த்தீபா நில்” என்றே எதிரொலித்ததாகையால், அவையும் தம்பங்குக்கு பார்த்தீபனை இடைமறித்து தடைசெய்வது போலவே பிரேமையை உண்டாக்கி நின்றன.

சினத்தின் மிகுதியால் செக்கரென சிவத்துவிட்ட அந்த விழிகளை கடும் சினத்துடனே ஆலிங்கனின் பேரில் நிலைநாட்டிய பார்த்தீபன், “என்ன” என்றான் கடுமையான குரலில், பார்த்தீபனின் கனல் கக்கும் விழிகள் மாத்திரமல்லாமல், அவனின் வாயிலிருந்து உதிர்ந்த “என்ன” என்கிற வார்த்தையும் கூட சுட்டு விடுவது போலவே தோன்றியது ஆலிங்கனுக்கு. இருந்தாலும் அது குறித்து எவ்வித மாற்றத்தையும் வெளிக்கு காட்டாத ஆலிங்கன் தொடர்ந்தும் பார்த்தீபனை நோக்கி “இப்பொழுது என்ன செய்வதாய் உத்தேசம்?” என்றான் பழைய உறுதியான குரலிலேயே.

“அந்த ராஜசிங்கவையும் அவனின் படைகளையும் அங்கேயே வெட்டி காளிதேவிக்கு பலியாக்கி, என் சினத்தை தீர்த்துக்கொள்வேன், வெள்ளையங்கிரி அவர்களையும் மீட்டுக்கொள்வேன்” என்று கூறிய பார்த்தீபனின் முகம் சினத்தின் விளைவாய் நடுங்கித்துடித்ததன்றி பெரும் விகாரத்துக்கும் உட்பட்டு மிகப்பயங்கரமாகவே ஆலிங்கனுக்கு தோன்றியது என்றாலும்,
“பார்த்தீபா சற்றுப்பொறுமையாக நான் சொல்வதை கேள்” என்றான் கடுமையான குரலில்.
“எதை?” என்று வினவிய பார்த்தீபனின் குரலில் சினமே மிதமிஞ்சிக்கிடந்தது.
“சற்று பொறுமையாக இரு”
“இந்த சூழ்நிலையில் என் மனம் பொறுமைக்கு இடம் தரவில்லை ஆலிங்கா!”
“நான் சொல்வதை சற்று அமைதியாக கேள்” என்றான் ஆலிங்கன் சற்றே கடுமையாக.
சரி என்பது போல் மெல்ல தலையை அசைத்த பார்த்தீபன், ஆலிங்கனில் இருந்து பார்வையை விலக்கி மறுபுறமாக திரும்பி நின்றும் கொண்டான்.

“பார்த்தீபா, உன் வீரம் எத்தகையது என்பதை நான் நன்கு அறிவேன், உன்னை அறிந்த அனைவரும் அறிவார்கள்” என்று ஆரம்பித்தான் ஆலிங்கன்.
“அதற்கு?”
“இவ்விடத்தில் உன் சினம் எவ்வித பயனும் அளிக்காதபோது, உன் சினத்தால் தான் என்ன பயன்”
“என்ன” என்றான் பார்த்தீபன் மிகுந்த சினத்துடன்.
“சினத்தினால் ஆவதென்றொன்றும் இல்லையப்பா, சினம் ஒரு மனிதனை படு பாதாளத்திற்குள் தள்ளுகிறது, அழிவை நோக்கியும் விரட்டுகிறது, எம் மனதிற்குள் எழும் கொடும் சினமானது எம்மை மட்டுமல்லாமல் எம்மை சார்ந்தவர்களையும் மிகுதியாகவே பாதிக்கிறது. கோபத்தில் எடுக்கும் முடிவுகள் என்றுமே வெற்றியை தருவதில்லை மாறாக எழ முடியாத பெரும் தோல்விகளையே தருகிறது, நிதானமான சிந்தனையே ஒருவனை வெற்றியின் உச்சத்தை தொடவைக்கின்றது. சினத்தின் வயப்பட்டவனை அழிக்க யாருமே தேவைப்படுவதில்லை, அவனின் செயல்களே அவனை அழிக்கின்றன. சினத்தினால் இத்தகைய அழிவுகள் விளையும் என்பதால் தான் என்றும் பொய்யாத வாக்குகளை அருளிவிட்ட பொய்யாமொழிபுலவர் என்கின்ற வள்ளுவப்பெருந்தகை கோபம் கொள்வதை தவிர்ப்பது பற்றி ஒரு அதிகாரமே எடுத்தியம்பி இருக்கிறார், அதில் ஒரு குறளை சொல்கிறேன் கேள்

‘தன்னை தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்’

அதாவது ஒருவன் தன்னை காத்துக்கொள்ள விரும்பினால் தன்னை சினத்திடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் அப்படி காக்காத இடத்தில் அந்த சினம் அவனையே அழித்துவிடும் இயல்புடையது.” என்று கூறியும் முடித்தான் ஆலிங்கன். சடுதியாக திரும்பி ஆலிங்கனை நோக்கிய பார்த்தீபன்
“அப்படி என்றால் இதை இப்படியே விட்டுவிட சொல்கிறாயா?” என்றான் சினம் குரலிலும் தொனிக்க.
“நான் எப்பொழுதப்பா அப்படி சொன்னேன், தனி ஒருவனாக அத்தனை பேரை எதிர்த்து நிற்பேன் என்று நீ புறப்படுவது உன் வீர உணர்ச்சியையே காட்டுகிறது, ஆனால்” என்று சற்று நிறுத்தினான் ஆலிங்கன்.
“என்ன ஆனால்”
“ஆனால் வெற்றி கொள்வதற்கு வீரம் மட்டுமே போதுமானதல்ல”
“வேறு என்ன வேண்டுமாம்?”
“விவேகம்” என்றான் ஆலிங்கன் உறுதியான குரலில்.

ஆலிங்கன் கூறியதை கேட்டு சற்றே வியப்படைந்த பார்த்தீபன், ஆலிங்கனின் கண்களை உறுதியுடன் நோக்கினான், அந்த கண்களே பார்த்தீபனுக்கு ஆலிங்கனின் ஆழ்ந்த விசாலமான அறிவையும் பரந்த அனுபவத்தையும் குறித்துக்காட்டியது, இத்தனை அனுபவமிகு ஆழ்ந்த பேச்சிற்கும் அவன் வயதிற்கும் அறவே சம்பந்தமில்லை என்பதையும் பார்த்தீபன் நன்கு உணர்ந்திருந்தான். தொடர்ந்து தன் பேச்சை தொடர்ந்த ஆலிங்கன்
“பார்த்தீபா, நான் சொல்வதை சற்று சிந்தித்துப்பார், இங்கு நடக்க இருக்கும் இந்த யுத்தத்தையே எடுத்துக்கொள் இதற்கு ஏன் இத்தனை திட்டமிடல்? எடுத்தவுடனேயே தங்கள் ராஜ்ஜியம் எதிரிகள் கையில் கிடப்பதை கண்டு சினமுற்று இளவரசர் எவ்வித திட்டமிடலோ வியூகமோ இன்றி படைகளுடன் புகுந்தால் என்ன நிகழும்?, பார்த்தீபா நீ மிகவும் திறமையானவன், அன்று குடிலில் நீ கூறிய வியூகமே அதற்கு சாட்சி, ஆனால் கோபத்தில் உன் நிதானத்தை இழந்து விடுகிறாய், சினத்தின் மிகுதியில் எடுக்கும் முடிவுகள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிக்கும் என்றுமே வெற்றியை தருவதில்லை, மாறாக படுதோல்வியையே தருகிறது. நிதானத்துடன் எடுக்கும் முடிவுகளே எவருக்கும் வெற்றியை தருகிறது. ஆகையால் முடிந்தவரை நிதானத்தையே கைக்கொள்” என்றான் ஆலிங்கன் மிக உறுதியாக.
“அப்படியானால் என்ன செய்வது?” என்று சந்தேகக்குரலில் வினவிய பார்த்தீபனின் முகத்தில் அதுவரை நேரமும் குடிகொண்டிருந்த பெரும்பயங்கரம் முழுமையாக நீங்கியமையானது ஆலிங்கனுக்கு சற்றே ஆறுதலாக தோன்றியதாகையால், பார்த்தீபனின் காதருகில் சென்று தன் திட்டத்தை மெல்ல விபரிக்கவும் தொடங்கினான். ஆலிங்கன் கூறிய அந்த திட்டமானது பார்த்தீபனின் முகத்தில் “சாத்தியம் தான்” என்பது போன்ற தெளிவான உணர்வையே பிரதிபலிக்கவும் செய்திருந்தது மட்டுமல்லாமல், பார்த்தீபனும் தன் தலையை மேலும் கீழும் அசைத்து அதை மேலும் உறுதி செய்யவே செய்தான்.

சில சந்தர்ப்பங்களில் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும் சில சம்பவங்களும் இணைந்து நம் குணாதிசயங்களை முழுமையாக மாற்றி நம்மை மிக சரியான வழியில் பண்படுத்திவிடுகின்றன. அத்தகையதொரு சம்பவமே அதற்கேற்ற மனிதனான ஆலிங்கனால் தற்சமயம் பார்த்தீபனின் வாழ்விலும் நடத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி மண்டபத்தில் நிகழ்ந்த அந்த பேச்சே இனி வரும் காலங்களில் பார்த்தீபனின் ஒவொரு செயலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போவதை அச்சமயத்தில் ஆலிங்கன் அறிந்திருக்கவில்லை.

பதினேழாவது அத்தியாயம் தொடரும்..

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க