ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

0
457

 

 

 

 

 

 

 

சாவின் விளிம்பில்

எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும் ராணுவத்தினர்உணவுக்கூடத்திற்கு வரும்போது மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்.

காலை உணவு நிறுத்தியபோது யாருக்கும் அதிக சிரமம் இல்லை. நிறைய பழங்களும்,பாக்கெட்டுகளில் அடைத்த பழரசமும், பால் வகைகளும் எங்களிடம் இருந்தது. விரைவில்நிலைமை சீரடைந்துவிடும் என்றே எதிர் பார்த்தோம். உணவுப் பொருட்கள் தொடர்பற்றாகுறையால் அடுத்த சில நாட்களில் நடுஇரவு உணவும், அதை தொடர்ந்து மதிய உணவும்ரத்தாகியது. அடுமனை பணியாளர்களாகிய எங்களுக்கும் மதிய உணவு இல்லாமலானது.அமெரிக்க அரசால் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் (MRE food packets – Meals ready to Eat)உணவுப் பொட்டலங்கள் எங்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒருவேளை இரவுணவு மட்டும் சமைப்பதால் அடுமனை பணியாளர்களுக்கும் பணிச்சுமைகுறைந்து விட்டது. முன்பு ரயில் பெட்டிகள் போல நீண்ட பட்டியலை கொண்டஉணவுவகைகளின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. ஆனால் இரவு உணவின்எண்ணிக்கை முன்பைவிட ஆயிரம் அதிகரித்து ஐந்தாயிரம் ஆனது. உணவுக்கூடம்திறப்பதற்கு முன்பே வீரர்கள் பசியுடன் நெடுவரிசையில் காத்துக்கிடந்தனர்.எங்களின் குடியிருப்புக்கு அருகில் வேறு நிறுவனத்தைச் சார்ந்த பிலிப்பினோபணியாளர்களின் குடியிருப்பு இருந்தது. இரு குடியிருப்புகளையும் பிரித்தது ஒரு முள்வேலிமட்டுமே. அவர்கள் ராணுவ வீரர்களின் தங்குமிடங்களிலுள்ள,அறைகள் மற்றும் நவீனகுளியலறை, கழிப்பறை போன்றவற்றை சுத்தப்படுத்தும் பணிக்காக வந்திருந்தார்கள்.

எங்கள் அடுமனை பணியாளர்களின் சாப்பாட்டுக்கான அரிசியும் தீர்ந்துபோனது. பலரும்ஒருவேளை கிடைக்கும் அமெரிக்க உணவுக்கு மாறிவிட்டனர். தென்னிந்தியர்கள் அரிசி சாதம்இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சிக்கன் பர்கரும், பீப் பாஸ்தாவும் ஒவ்வாத உணவுகளாகின சிலருக்கு. பிலிப்பைன்ஸ் பணியாளர்களிடம் அரிசி தாராளமாகஇருப்பதாகவும், அவர்களிடம் இறைச்சி வகைகள் தீர்ந்துவிட்டதாகவும் சொன்னார்கள்.

 

 

 

 

தெனிந்தியர்களைப் போலவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதிகம் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள். எங்களின் மேலாளர் இங்கிலாந்தின் ஆலன் குக், அவர்களிடம் பேசி பண்டமாற்று முறையில்எங்களிடமிருந்த மாட்டிறைச்சி, கோழிக்கறியை கொடுத்து அவர்களிடமிருந்து அரிசியைவாங்கி வந்தார். “சோறு தின்னாம காது அடைச்சி உறக்கம் வரல” என எனது தந்தை முன்பு சொல்லக்கேட்டிருக்கிறேன்.

மீண்டும் சாலை போக்குவரத்து கடும் பாதுகாப்புகளுடன் தொடங்கியது. வழியில் எங்கும்நிற்காத தொடர் வரிசையில் செல்லும் காண்வாய்கள் துவங்கப்பட்டன. அவ்வாறு வரும்காண்வாய்களில் எதாவது ஒரு வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த வண்டியை மட்டும்அப்படியே விட்டு விட்டு அதன் ஓட்டுனரை மட்டும் வேறு வண்டியில் ஏற்றிகொள்வார், காண்வாயை தலைமையேற்று நடத்தும் ராணுவதளபதி. அவ்வாறு பயணத்தில் கோளாறாகிஈராக் சாலைகளில் விடப்பட்ட சரக்கு பெட்டக வண்டிகளில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் இருந்தன.

எங்கள் முகாமுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றிய வண்டிகள் வரத்தொடங்கி,உணவுக்கூடத்திற்கான உணவுப் பொருட்கள் தடையின்றி வர ஆரம்பித்ததும் . மீண்டும்உணவுக்கூடம் வழக்கமான உற்சாகத்துடன் இயங்கியது. நான்கு வேளை உணவும்தடையின்றி வழங்க ஆரம்பித்தோம். ராணுவ வீரர்களும் மகிழ்ச்சியுடன் உணவுண்டுசென்றனர். “பாய் இவனுக்க மூஞ்சிய பாரு இப்பதான் சிரிக்கான் சாப்பாடு இல்லாம இவ்ளோநாளா செத்த வீட்டுக்கு போறவன் மாதிரி மூஞ்சி இருந்தது” என சில ராணுவ வீரர்களைபார்த்து சொல்லி சிரிப்பான் விஜயகுமார். எனினும் கடும் தாக்குதல் தொடர்ந்துகொண்டே தான்இருந்தது. நாங்களும் தொலைக்காட்சியில் தினமும் ஈராக்கில் நடந்த உயிரிழப்புகளையும்,படுகொலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம் .

 

 

 

 

 

அப்போது ஒருநாள் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் ஒன்று நடத்தினார்கள். பாதுகாப்புகுறித்த சில விசயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. எங்கள் திக்ரித் முகாம் மீது அடுத்த சிலநாட்களில் ஒரு கடும் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதைராணுவ மேலதிகாரிகள் எங்கள் அதிகாரிகளிடம் சொன்னதை எங்களுக்கு தெரியப்படுத்தினர். “கடும் தாக்குதல் நடந்தால் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு அனைவரும் மூன்றுநாட்களுக்கு முகாமிலிருந்து வேறு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும். உங்களதுபொருட்களை இங்கே வைத்து விடுங்கள். கடவுச்சீட்டு,பணம், மூன்று நாட்களுக்குதேவையான உடைகளை முடிந்தவரை ஒரு சிறிய பையில் எடுத்து கொள்ளுங்கள்”என்றனர்.

ஒவ்வொருவரும் உணவு , மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லவேண்டியிருப்பதால் , தேவையற்ற எந்த பொருட்களையும் எடுக்கவேண்டாம் எனஉறுதியாக கட்டளையிட்டிருந்தார்கள்.

வரைபடம் ஒன்றைத் தந்தார்கள். அதில் வாகனங்கள் எந்த வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும்என்ற விபரமும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வரிசை எண்ணும் இருந்தது. எங்களிடம்இருந்த இரண்டு சிற்றுந்துகளும்,நான்கு உயர்ரக மகிழுந்துகளும், ராணுவ வாகனங்களுடன்பயணிப்பது என முடிவாயிற்று.

ஒருநாள் ஒத்திகை பார்க்கும் பொருட்டு வரைபடத்திலிருந்தபடி இரு வரிசைகளாகவாகனங்கள் நிறுத்தப்பட்டு,கண்ணாடிகளில் வரிசை எண்கள் ஒட்டப்பட்டிருந்தது .ஒவ்வொருவரும் அமர வேண்டிய வாகனங்களை பார்த்துக்கொண்டோம்.எங்களில் சிலருக்குராணுவ வீர்களின் வாகனம் ஒதுக்கப்பட்டிருந்தது. நான் அமர வேண்டிய வண்டிமேற்கூரைஇல்லாத ராணுவ ஜீப். அது நிறுத்தப்படும் இடத்தையும் பார்த்துக்கொண்டேன்.தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளையும் ,உணவு பொட்டலங்களையும்தயார் நிலையில் வைத்திருந்தோம் .

“அவசர அழைப்பிற்கு பின் பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் இங்கிருந்து புறப்பட்டுஅனைவரும் முகாமை காலி செய்தாக வேண்டும். அதற்குள்ளாக அனைவரும் வாகனங்களில் , தங்களின் பைகளுடன் அமர்ந்திருக்க வேண்டியது கட்டாயம். அழைப்புமணி எப்போதுவேண்டுமென்றாலும் ஒலிக்கலாம். அனைவரும் எப்போதும் தயார்நிலையில் இருங்கள். யாருக்காவும் காத்திருக்க மாட்டோம்! மணியடித்த பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள்முகாமை விட்டு வெளியேறிவிடும்!” என அந்த பயணத்தை தலைமையேற்று நடத்தும் ராணுவஅதிகாரி உறுதியாக சொன்னார்.

அந்த நாட்களில் பெரும்பாலானோர் இரவில் தூக்கமின்றி, மரணபயத்தில் குண்டுதுளைக்காத கவச உடையும்,தொப்பியையும் அருகிலேயே வைத்துகொண்டிருந்தனர். (கக்கூசுக்கு போகும்பொழுதும் அந்த ஹெல்மட்டையும் , ஜாக்கெட்டையும் போட்டுட்டுபோனவன் எல்லாம் உண்டு) ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்ற பயம்அது. அனைவர் முகங்களிலும் ஒரு பதட்டம் தெரிந்தது. எப்போதும் எதுவும் நடந்துவிடலாம் எனும் உச்சகட்ட பயத்தில் நகர்ந்த நாட்கள் அவை. விழித்திருப்பவனுக்குஇரவு மிக நீண்டது. அதுபோல் மிக மெதுவாக அந்த நாட்கள் நகர்ந்தது.

சாவின் விளிம்பில் நின்றிருந்த அந்த சூழ்நிலையிலும் “மேலே வானம், கீழே பூமி”, “சோளிக்கே பீச்சே கியா ஹை” என பாட்டுக்கள் பாடி பயத்தை கடந்து செல்ல முயன்றசிலரும் இருந்தனர்.

ஆனால் எல்லோரும் பயந்ததுபோல் அப்படி ஏதும் நடக்கவில்லை. யாரும் முகாமைவிட்டுவெளியே செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படவில்லை.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க