ஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை

0
135
1. முன்னுரை - கிமு கிபி

 

 

 

 

தமிழ்நாட்டில் கி.பி.யில், முக்கியமாக ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இறைவழிபாடு எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை வாயிலாக எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் இறை வழிபாடானது, தனித்துவமாக இருந்ததெனவும், அதே சமயம், பிற மக்களின் வருகையால் இறை வழிபாட்டினில் ஏற்பட்ட மாற்றத்தினையும் இக்கட்டுரையின் மூலம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்னுரையாக கி.மு.வை பற்றி சிலவற்றை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. கி.மு. என்பது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சங்ககாலத்தின் மிக முக்கிய மற்றும் பெரும் காலத்தினை உள்ளடக்கியது.

தமிழன் சங்க காலத்திலும், அதற்கு முன்னரும் சிவனை மட்டுமே ஒரே இறைவன் மற்றும் அவனே பிரதானமானவன் என்றும் வணங்கி வந்துள்ளான். சங்க காலத்தில் வாழ்ந்த சித்தர் திருமூலர். அவர் தன்னுடைய திருமந்திரத்தில் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறியுள்ளார். இவ்வாசகமானது, திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ள மந்திர வாசகமாகும்.

இறைவனே பெரியவன் என்பதால் அவனுக்கு ‘பெருமான்’ என்றும் பெயர் வந்தது. கி.மு.வில், சிவனுக்கு தமிழர்கள் எந்த ஒரு உருவத்தினையும் கொடுக்கவில்லை. உருவ வழிபாடும் செய்யவில்லை. ஏனெனில் சிவனை கண்டவர்கள் எவரும் இல்லை. ஆனால், இறைவனின் ஆற்றலை மட்டுமே உணர்ந்தவர்கள் உண்டு. தமிழகத்தில் முக்கியமாக கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை ஆராய்ச்சிகளும் இதையே கூறுகின்றன. இதுவரை கிடைத்த பொருட்களை வைத்து, அகழ்வாராய்ச்சியின் ஆதாரங்கள், தமிழர்கள் சங்க காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ சிலை வழிபாடு செய்ததில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வட இந்தியர்கள்தான் கி.பி.யில் தமிழகத்திற்குள் உருவ வழிபாட்டை கொண்டு வந்தனர். சிவன், ‘ஈசுவரன்’ எனவும் சங்க காலத்தின் கடைசியிலேயே அழைக்கப்பெற்றான். ஆதியில் இறைவனை தமிழர்கள் ‘ஆதிரையான்’ என்றும் அழைத்தனர். 

இறைவனை ஆதித்தமிழர்கள் வெவ்வேறு பெயரில் அழைத்தாலும், சங்ககால இலக்கியங்களில் ‘சிவன்’ என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால், மணிமேகலை உட்பட பல இலக்கியங்களில் ‘சைவம்’ என்ற சொல் காணப்படுகிறது. ‘சிவனே சைவம்’ என்பதே இதன் விளக்கம்.

சங்ககால இலக்கியத்தில், சித்தர்கள் இறை அவதாரத்தை குறிக்கும் பெயர்களான ‘ஈசன்’, ‘காலக்கடவுள்’, ‘பொலிந்த அருந்தவத்தோன்’ போன்றவற்றை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். ‘பொலிந்த அருந்தவத்தோன்’ என்ற சொல்லுக்கு சிறந்த மற்றும் அரிய தவம் செய்பவன் ஈசன் என்று பொருள்படும். ‘ஈசன்’ என்ற வார்த்தை இறைமகனை குறிப்பதற்காக மற்ற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஈசன் என்ற பெயர் வட இந்தியாவில் இசா (Isa) என்ற பெயரிலும், அரேபிய மொழியில் ஈசா (Issa) என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க