ஆகாயத்தாமரை

1
2427

 

 

 

 

 

ஆகாயத்தாமரை  (floating water hyacinth lilac devil) அல்லது வெங்காயத்தாமரை,  என்பது Eichhornia crassipes என்னும்  தாவரவியல்பெயர் கொண்ட பான்டிடெரியேசி  (Pontederiaceae) குடும்பத்தைச்சேர்ந்த  ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம்.    மூன்று அடி உயரம் வரை வளரும் இவற்றின்  கனமான அடர்பச்சை நிற, சதைப்பற்றுள்ள 10-20 செ மீ அளவுள்ள இலைகள் மென்மையான பலூன் பொன்ற இலைக்காம்பின் மீது அமைந்திருக்கும். நீரின் அடியில் அடர்ந்த மண் நிறத்தில் கொத்துக்கொத்தாக இறகுகள் போன்ற வேர்த்தொகுப்பு காணப்படும்.  மிக அழகிய இளம் ஊதாநிற மலர்கள்  தாவரத்தின் நடுவிலிருக்கும் நீண்ட காம்பில் கொத்தாகப் பூக்கின்றது. அடித்தண்டிலிருந்து  புறப்படும் கிளைகள் மூலமாக மீண்டும் முளைக்கும் திறன் கொண்ட இத்தாவரம் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.

 இத்தாவரம் தென் அமெரிக்காவிலுள்ள அமேசானைத் தாயகமாக கொண்டது. பிறகு அழகுக்காக வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, இந்தியா வந்திருந்த போது ஹூக்ளி  நதியானது இங்கிலாந்தின் உள்ள தேம்ஸ் நதியைப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து  ஹூக்ளியில் விட்டதாகக் கூறப்படுகிறது.

இது நீரில் மிதப்பதற்கு ஏதுவாக இதன் தண்டுகளில் காற்று நிரப்பட்டு வெங்காயம் போன்று இருப்பதால் வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகிறது.   

  ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும்.    

 ஆகாயத்தாமரை பொதுவாக நன்னீரில் வளரும் களைச்செடியாகவே கருதப்படுகின்றது. இவை வளரும் நீர்பரப்பில் கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும். அடர்ந்து பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்கள் மற்றும் சிறு உயிரனங்களின்வளர்ச்சியைத் தடுக்கிறது. இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்சிஜன் குறைந்து நீர் மாசடைகிறது. பெரும் பரப்பில் ஆக்ரமித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றையும் பெரிதும் பாதிக்கிறது.

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன.  இதன் வேர்த்தொகுப்பு நீரில் கரைந்துள்ள நச்சுப்பொருட்களை உறிஞ்சிக்கொள்வதால் இவற்றை கழிவுநீர்சுத்திகரிப்பிலும் பயன்படுத்தலாம்.

சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் ஆகாயத்தாமரை பயன்படுகிறது. ஆகாயத்தாமரையின் மட்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.

 

 

 

 

 

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

ஆம். இது எனது பிரதேசத்திலும் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரின் போது விமானங்களை ஏமாற்றி தவறாக தரையிறக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலே இருந்து பார்க்கும்போது புல்வெளி போல் காட்சி அளிப்பதால் அதில் விமானங்கள் தரையிறங்கி மூழ்கடிக்கப்பட்டது.

கடைசியாக திருத்தப்பட்டது 3 years ago வழங்கியவர் Gobikrishna D