நானும் இரண்டு புத்தகப்புழுக்களும்…

0
956

வாசிக்கும் பழக்கம் எனக்குள் எப்போது  ஏற்பட்டது என்று சரியாக தெரியவில்லை. சகோதரிகள் கொண்டு வரும் lady bird கதைகள்,விஜய்,அகரம் போன்ற சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்த நான் ஏதோ ஒரு உத்வேகத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடித்த கையோடு எனது ஊர் பொதுநூலகத்தில் போய்ச்சேர்ந்தேன்.

 

சேர்ந்த புதிதில் எனது மூத்த சகோதரியுடன் தான் நூலகத்திற்கு செல்வேன்.அவர் புத்தகங்களுக்கு சில தணிக்கைச் சான்றிதழ்களை எனக்களித்திரிந்தார்.

 

பாடப்புத்தகங்களுக்கு ‘முன்னுரிமை’

 

கதைகள்(அதாவது ஈசாப் நீதிக்கதைகள்)- ‘ஓரளவுக்கு அனுமதி’

 

பொதுவான இதர புத்தகங்கள்-“அத படிச்சி என்ன செய்யப்போற?…தேவல்ல…”

 

நாவல்கள் – “அந்த பக்கமே போகக்கூடாது”

 

இது போன்ற சில தணிக்கைகள்.காலப்போக்கில் இது எனது சுதந்திரத்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாக நான் கருதியதால் அவரோடு போவதைத் தவிர்த்துக்கொண்டேன்.ஆனாலும் அந்த நூலகத்தில் பாடப்புத்தகங்களும் கதைப்புத்தகங்களுமே வியாபித்திருந்ததால் பெரிதாக ஒரு ஈடுபாடு ஏற்படவில்லை.நாவல்களுக்கு மட்டுமே ஒரு பெரிய ‘ஏரியா’ ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே அந்த ‘சீரியல் டைப்’ நாவல்களில் ஏனோ நாட்டம் ஏற்படவில்லை.இந்த நூலகத்திற்கு வரும் புதுவரவுகள் முதலில் ‘பைண்ட்’ பண்ணப்படாமல் கொஞ்ச காலமும் ,பின் பைண்ட் பண்ணப்பட்டு கொஞ்ச காலமும்,பின் திகதி அடிக்கும் படிவம்,புத்தகத்திற்கு உரிய ‘கார்ட்’ போடுவது என்று பெட்டியில் கிடப்பில் போடப்பட்டு இரவல் பகுதிக்குள் வருவதற்கிடையில் வருடம் ஓடிவிடும். இப்போதும் இப்படித்தானா என்பது தெரியாது.   இந்நூலகத்தில் நான் உருப்படியாக கண்ட ஒரு விடயம் என்றால் தொண்ணூறுகளில் வெளிவந்த ’கலைக்கதிர்’ அறிவியல் மாத இதழைத் தொகுத்து வைத்திருந்ததுதான்.

இது போக ஊரில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு நூலகம் இருக்கிறது.அது ஒரு சமயம் சம்பந்தமான நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நூலகம் ஆயினும் எல்லா ‘கெடகரி’ புத்தகங்களும் கிடைக்கும்.சமயமும் ஒரு கெடகரி.அவ்வளவே.2008ம் வருடம் எனது சகோதரர் வெளிநாடு செல்லுமுன் இந்நூலகத்திற்கான தனது அங்கத்தவர் அட்டையை எனக்களித்தார்.இதுதான் என் வாசிப்பில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.புத்தகங்களைப் பற்றிய புரிதலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நூலக விதிப்படி ஒருவர் இரண்டு புத்தகங்களை எடுக்கலாம்.அதிலொன்று சமயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். மற்றையது நாம் ‘விரும்பியது’.நூலகரைப் பழக்கம் பிடித்தல் ,நல்லபிப்பிராயம் ஏற்படுத்தல் போன்ற காரணிகள் இரண்டு புத்தகங்களையுமே உங்களுக்கு ‘விரும்பிய’ புத்தகங்களாக மாற்றித்தரும் அதேவேளை இன்னும் இரவலுக்கு வைக்காத புதுவரவுகளையும் உங்களுக்கு அளிக்கக்கூடும்.

இந்நூலத்திலேயே சொல்லிக்கொள்ளும்படி ஓரளவு நூல்களைப்படித்துள்ளேன். அரசியல்,வரலாறு, அறிவியல் என்று.புரிந்துகொள்ள கஷ்டமான, புரிந்தால் ஆச்சரியமளிக்கக்கூடிய புத்தகங்கள் இங்கே நிறைய உண்டு.கிழக்குப் பதிப்பகம்,பா.ராகவன் எல்லாம் அறிமுகமானது இந்நூலகத்தில்தான்.பொதுநூலக அளவுக்கு இல்லையென்றாலும் புதுவரவுகள் வருவதில் இங்கேயும் கொஞ்சம் தாமதம் இருக்கும்.பைண்ட் பண்ணப்பட்டு, போகும் வரும் போதெல்லாம் நம்மைப்பார்த்து சிரிக்கும். எனினும் அதில் ஒன்றை செலக்ட் செய்து நூலகரிடம் கொடுத்து,அடுத்த முறை வரும் போது குறிப்பிட்ட புத்தகத்தை மட்டுமாவது  இரவலுக்கு ட்ரான்ஸ்பர் செய்யவைக்கும் ஆப்ஷன் இங்கே இருந்தது.இந்நூலகத்திற்கும் பொதுநூலகத்திற்கும் இருந்த ஒரே ஒற்றுமை ,இரு நூலகரின் பெயர்களும் ஒன்று என்பதே.(தன் பல்கலைக்கழக நூலகரின் பெயரும் அதுதான் என்று அண்மையில்  சந்தித்த ஒரு நண்பர் கூறினார்.வாட் அ கோ இன்சிடெண்ட்?!!!)

இந்நூலகம் ஏற்படுத்திய தாக்கம் சகோதரியின் பல்கலைக்கழக நூலகம்(வந்தார்கள் வென்றார்கள்,கற்றதும் பெற்றதும் இப்படித்தான் கிடைத்தது) தாயாரின் பாடசாலை நூலகம் போன்றவற்றிலும் புத்தகங்களை எடுத்து வர வைக்கச்செய்தது.

புத்தகம் வாசித்தல் ஒரு வகையான போதை.எவ்வளவு வாசித்தும் தீராத தாகம்.இதெல்லாம் எங்கே உனக்கு உதவும் என்று நிறையப்பேர் கேட்டிருக்கிறார்கள். என்னிடம் பதிலில்லை.அது அப்படித்தான்.இந்தப்போதையைத் தூண்டக்கூடிய 2 நபர்கள் ஆரம்பத்திலேயே எனக்கு நண்பர்களாக வாய்த்தார்கள்.ஒருவன் ‘ஸகர்’.மற்றவன் ‘ஷஜா’.இருவரும் என் கண்கண்ட ‘bookworms’.நூலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரே புத்தகத்தை பாடசாலை வகுப்பறையில் வைத்து மூவரும் ஒன்றாகப்படிப்போம்.நடுவில் புத்தகத்தை எடுத்து வந்தவனிருக்க இருபுறமும் இருவர் என்று. வாசிப்பின் வேக அடிப்படையில் ஸகருக்கு முதலிடம்.ஷஜா இரண்டாவது. நான் கடைசி ஆகையால் ஒன்றாய் வாசிக்கும் போது “பிரட்டுடா,பிரட்டுடா” என்று இருவரும் நச்சரிப்பார்கள்.அதிலும் ஸகர் மின்னல் வேகத்தில் வாசிப்பான்.புத்தகத்தை எடுத்தால் சுற்றம் மறந்த முனிவராகிவிடுவான்.வகுப்பில் பாடம் நடந்தாலும்,இல்லையென்றாலும் அவனது வாசிப்பு வண்டி நிற்காது.இந்த வாசிப்புப்பழக்கம் வகுப்பு முழுக்கப் பரவி,ஒரு கட்டத்தில் எல்லோருமே ஏதோ ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். பாட நேரத்திலும் கதைப்புத்தக்கம் படிக்கிறார்கள் என்று ஆசிரியர்களால் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஊரிலுள்ள நூலகங்கள் போக,பாடசாலை நூலகத்திலும் நாங்கள் மெம்பேர்ஸ்.’பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்’ போன்றவை அங்கே எடுத்து படித்தவைத்தான்.இயல்பாகவே நாவல்களில் நாட்டம் இல்லாத நான் ‘பொன்னியின் செல்வன்’ காதல் காவியம் என்று நினைத்து தொடாமல் வைத்திருந்தேன்.பின் ஷஜா சொல்லி, வாசித்து முடித்தபோது கல்கியின் ஆற்றலைக்கண்டு  வியந்தேன்.வேர்கள்,மால்கம் x, அட்டையே இல்லாத பழைய புத்தகமாய் இருந்த சேரமான் பெருமாள்(இந்த புத்தக கடைசிப்பக்கத்தை கிழித்த நபரை நாங்கள் மனமாறத் திட்டியிருக்கிறோம்.இதன் புதுப்பதிப்பு இருந்தால் சொல்லுங்கள்.ஸகர் சந்தோசப்படுவான்) என்று இவர்களிருவரும் ரெக்கமெண்ட் பண்ணியவை ஏராளம்.இப்போதும்.

மூவரிடமும் இருந்த ஒரு கெட்ட பழக்கம் ‘ஓசியிலேயே படித்து பழகிவிட்டதென்பது’.நூலகத்திலேயே புத்தகங்கள் எடுக்க வேண்டியிருப்பதால் சில தந்திரோபாங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் கையில் மாட்டும்.எதை  இன்று இரவல் எடுப்பது என்று குழம்புவோம். அந்நேரம் நம் ‘திருட்டுப்புத்தி’ வேலை செய்யும். இரவல் எடுப்பது போக மற்றையது,யாரும் தொடாத பழைய புத்தக இடுக்குகளுக்குள்ளேயோ,அரபு அல்லது ஆங்கில புத்தக வரிசையிலோ ஒளித்து வைக்கப்படும்.அடுத்த முறை அதே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.அல்லது இந்த இரண்டு ஜீவன்களில் ஒன்றிடம் சரியான ‘லொகேஷனை’ சொன்னால் எடுத்து வந்துவிடும்.இதற்கு மேல் ஸகரிடம் இருந்த இன்னொரு பழக்கம்.புத்தகம் பிடித்திருந்தால் இரவல் எடுப்பது ,ஒளித்து வைப்பது தாண்டி தனதாக்கிக் கொள்வது.புரியும் படி சொன்னால் ‘சுட்டுவிடுவது’.

பாடசாலையிலிருந்து வெளியாகி ,வெளியூர்களுக்கு சென்ற பின் இந்த மாதிரியான வாசிப்புகள் குறைந்து விட்டது.இந்த இருவரின் உந்துதல் இல்லாததும் ,நேரம் கிடைக்காமையும் ஒரு காரணம்.ஆனாலும் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.மொபைலில் ebooks நிறைந்துள்ளன.kindle store இல் புத்தகங்களை பார்க்கும் போது வேட்கை உண்டாகிறது.ஆனாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள சுகமே தனி.

மூவரும் சந்தித்துக்கொள்ளும் போது சிலவேளை வாசித்த பழைய நினைவுகளை மீட்டுவோம்.நேரம் போவதே தெரியாது.அன்றும் இப்படித்தான் ஒரு புத்தகத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

“அந்த புத்தகத்திலதான் இந்த படத்த பத்தி எழுதிருந்தாரு. நல்ல புத்தகம்.ஆனா கடைசியில கொஞ்ச நாளா அந்த புத்தகத்த library ல நான் காணல”

“புத்தகத்துட பேரென்னடா” ஷஜா.

“மறந்துட்டுடா” நான்.

ஸகர் சிரித்துக்கொண்டே புத்தகத்தின் பெயரைச் சொன்னான்.

“எப்டிடா?” நங்களிருவரும்.

“அது எங்கட வீட்டதாண்டா இருக்கு” என்று சொல்லிசிரித்தான் அந்த வாசிப்பு ராட்சஸன்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க