அவளுக்கு அதுதான் முதல்தரம்..

0
1570

ஒரு இருபது வயதிருக்கும் அவளுக்கு.. மிகவும் பயந்திருந்தாள்…
அன்றுதான் அவளை அந்த இடத்துக்கு வரச்சொல்லியிருந்தார்கள்…
என்ன நடக்குமோ என்ற பயத்தில் கடந்த ஒருவாரமாக சரியான தூக்கம் கூட இல்லை!

ஒரு வழியாக அந்த இடத்துக்கு வந்தாயிற்று! கூட யாருமே இல்லை.. வேலை முடிந்ததும் வந்து அழைத்துப்போவதாக அவளது மாமா சொல்லியிருந்தார்.. அம்மா வேலை நிமித்தமாக வெளிநாட்டிலிருப்பதால் அவள் மாமாவின் வீட்டில் தான் வசிக்கிறாள்! சில காலமாக மாமாவின் செயற்பாடுகள் அவளுக்கு பிடிப்பதில்லை.. அது எதுக்கு இப்போ…

அந்த இடத்தில் அவளது தனிமையே அவளை ஏதோ செய்தது! அம்மா கூட இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று யோசித்தாள்!.. என்ன செய்ய வந்தாயிற்று, நடப்பது நடக்கட்டும் என மனதை திடப்படுத்த முயன்றாலும், மனம் மூளைக்கு அடிபணிய மறுத்தது! வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஒரு உருண்டை ஓடித்திருந்தது… ( வைரமுத்து மன்னிப்பாராக)

ஆ.. அதோ அவளை அழைக்கிறார்கள்…
அவனிடம் அவளை அழைத்துப் போனார்கள்! அவனது அன்பான பேச்சு அவளுக்கு சிறிது ஆறுதலாயிருந்தது..
‘இன்னும் சிறிது நேரத்தில் அவளை அங்கு அழைத்து செல்வார்கள், அது வரை சிறிது நேரம் அமர்ந்திருக்குமாறு’ அவன் கூறினான்!
மீண்டும் அவளை பயம் பிடித்துக்கொண்டது.

அவள் சென்று அமர்ந்து கொண்டாள்! அந்த விடயத்தைப் பற்றி ஏற்கனவே அனுபவப்பட்டோரிடம் அவள் கேட்டிருந்தாள், எல்லாரும் ஆரம்பத்தில் வலிக்கும், பிறகு ஒன்றுமே தெரியாது என்றே சொல்லியிருந்தனர்..

சிறிது நேரத்தில், அவளிடம் நடக்கப்போகும் நிகழ்வுகள் விளக்கப்பட்டு, அவற்றிற்கு சம்மதம் என்று அவளது கையொப்பம் பெறப்பட்டது!

2 மணியானதும், அவளையும், இன்னும் சில பெண்களையும் அங்கு அனுப்பி வைத்தனர்!
அவளுக்கு அந்த தருணத்தில் அறுப்புக்கு அனுப்பப்படும் ஆடுகள் தான் ஞாபகம் வந்தது…

அந்த இடம் முற்றிலும் குளிரூட்டப்பட்டிருந்தது.. சிலர் முகமூடி அணிந்தபடி நட்மாடிக்கொண்டிருந்தனர்..
இவர்கள் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர்!

அவனை மறுபடியும் அவள் அங்கே பார்த்தாள்..
முதல் பார்த்த இடத்தில் டிப்டாப்பாக ஆடையணிந்திருந்தவன், இங்கு ஒருவித வினோதமான உடையணிந்திருந்தான்!

அவளின் அருகே அமர்ந்திருந்த பெண்ணை உள்ளே அழைத்துச் சென்றான்.. அரைமணி நேரத்தின் பின் திரும்பி வந்தான்.. அந்தப் பெண்ணை காணவில்லை..

அடுத்து அவளது முறை போலும், அவளை உள்ளே அழைத்தான்… அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு வியர்த்தது… போகும் வழியில் ஒரு அறையில் அவளுக்கு முதல் அழைத்துச் செல்லப்பட்ட பெண் உணர்வின்றி, உடலில் நிறைய வயர்கள் இணைக்கப்பட்ட நிலையில் படுத்திருப்பதைக் கண்டதும், அவளது இதயத்துடிப்பு எகிறியது!

இனி ஒன்றும் செய்வதற்கில்லை.. அங்கிருப்போரை தள்ளிவிட்டு விட்டு ஓடுவோமென்றால், அதற்கு தெம்பிருப்பதாக தெரியவில்லை..

நடப்பது நடக்கட்டும் என்று நடந்தவளை இன்னொரு அறைக்குள் அவன் அழைத்துச் சென்றான்..
பல திரைப்படங்களில் அவள் பார்த்து பயந்திருந்த இடமாக அது இருந்தது.. முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் அங்குமிங்கும் நடமாடித் திரிந்தனர்!
இவளை ஒரு கட்டிலில் படுக்கவைத்தனர்!

அங்கிருந்தவர்களில் பெரியவராக தெரிந்தவர் ஒருவர் அவளிடம் வந்து , பார்த்துவிட்டு, அவனிடம் ஏதோ பேசினார்.. அவர் அவனிடம் பேசியதில் ” இதை நீயே முடித்து விடு” என்று கூறியது மட்டுமே அவளுக்கு புரிந்தது! பயத்துடன் அவனைப் பார்த்தாள்! அதுவரைக்கும் ஆறுதல் அளிப்பவனாக அவளுக்கு தெரிந்த அவன், அப்போது பெரிய வில்லனாக தெரிந்தான்!

இதோ அவள் அருகே வந்துவிட்டான்.. ஆ.. என்ன இது..
கையில் அவள் எதை நினைத்துப் பயந்தாளோ அதை வைத்திருக்கிறானே..

அய்யோ ஓ ஓ ஓ அம்மா ஆ ஆ..

சக்தி முழுதையும் திரட்டி கத்தியே விட்டாள்…
உடனே அருகிலிருந்த முகமூடி அணிந்த பெண் ஓடிவந்து கத்தவேண்டாம், கொஞ்ச நேரம் தான் என்று எவ்வளவோ கூறியும், இவள் அழுது கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண, அங்கிருந்த மற்ற முகமூடி போட்டவர்களும் அவளருகே வந்து அவளைப் பிடித்துக் கொள்ள…

இதோ அவன் அருகில் வந்துவிட்டான்..
அவனது முகமூடியையும் அணிந்து விட்டான்..
அது நடக்கப் போகிறது என்று அவளுக்கு தெரிந்து விட்டது!
கண்ணை மூடிக்கொண்டாள்!!

அவள் கையைப்பிடித்து..
அவன் கையிலிருந்த அதை..
அந்த விறைப்பூசியை அவள் கையிலிருந்த கட்டியின் அருகே குத்தியே விட்டான்…
அவள் பயந்த அந்த சம்பவம் நடந்தே விட்டது… கத்தக்கூட அவகாசமில்லாமல் ஊசி இறங்கிவிட்டது…!!

அதன் பின் அவளின் கையில் பலகாலமாக சங்கடம் கொடுத்துக் கொண்டிருந்த அந்தக் கட்டி அவனால் வெட்டி அகற்றப்பட்டது.. அவளுக்கு வலியே தெரியவில்லை!

அதன் பின் அந்த ஒபரேஷன் தியேட்டரிலிருந்து முதலில் அவள் வந்த இடமான பெண்கள் சத்திரசிகிச்சை வாட்டுக்கு அவள் அனுப்பப்பட்டாள்..
சிறிது நேரத்தின் பின் அவளுக்கான discharge card எழுதப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்…

போகும் போது அவனை, அதாவது என்னை ( அட ஆமாங்கோ) அவள் சந்தித்து ” டொக்டர், தாங்ஸ்.. நான் ரொம்ப பயந்துட்டன்… அதான் அப்பிடி கத்திப்போட்டன், சொறி” என்று சொல்ல, நானும் சிரித்து விட்டு, “சரி சென்று வாருங்கள்” என்றேன். “இல்ல, டொக்டர், இதான் எனக்கு முதல் தரம்..” என்று தொடங்கி ஒரு பத்து நிமிஷத்துக்கு மொக்கை போட்டாள்.. வேறு வழியின்றி நான் கேட்டுக்கொண்டிருந்த அதைத்தான் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று வரிபிசகாமல் தந்திருக்கிறேன்!

…….

அவளுக்கு இதுதான் முதல்தரம்… ( முதலிலிருந்து வாசிக்க)

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க