முதிர் கன்னி

0
3130
என் விடியல்கள் 
வினாக் குறிக்குள் தான் 
விடியும்.
இராப் பொழுதுகள்
இரக்கமின்றி இம்சித்துச் செல்லும் 
நித்திரை 
வேலை நிறுத்தம் என்பதால் இரவுகள் 
மட்டும் நீண்டு செல்லும்
விடியல்கள் தொலைவாகிப் போகும்..!
 
ஏமாற்றங்கள் 
என்னையே விழுங்கி ஏப்பமிடும் 
எதிர்பார்ப்புக்கள் 
எதிர்மறை செய்கையை காட்டும்
வெற்றிகள் மட்டும்
முற்றுப் புள்ளிகளுக்குள் 
முழுதாய் புதைந்து கொள்ளும்
 
என் 
கனவுகளைக் 
கல்லறைக்குள் கட்டியவள் நான் 
உணர்வுகளை 
உறங்கச் செய்திருக்கிறேன்
 
வாழ்க்கை எனக்கு 
வசப்படாததொன்றோ..!
வசந்தம் எனக்கு 
வாய்க்காததொன்றோ..! 
வருத்தம் தான் 
கடைசியாய் வந்து சேர்ந்தது 
 
சம்பிரதாயங்கள் 
சண்டை பிடித்ததால் 
வசதியும் வாய்ப்பும் 
வாய்க்காத் தவறியதால் 
எழிலான உருவமும் 
எட்டாமல் போனதால் 
திருமணம் எனக்கு 
தீர்ப்பாகாமலே போனது..
 
காலத்தின் நகர்வுடன் 
நகராமல் 
உறைந்து போனது 
என் வாழ்க்கை 
கரைந்து போனது இளமை 
கனவுகள் மட்டும் 
கனியாமலே காத்திருக்கின்றன..!! 
 
வாலிபம் சில வேளை
வருத்தும்
இதயமும் இளைப்பாற 
இடம் கேட்கும் 
உணர்வுகள் உட்கார 
மடி கேட்கும் 
துயரங்கள் 
துணை கேட்டு அடம் பிடிக்கும் 
துணை வந்து சேராததால் 
அகம் கொதிக்கும் 
 
முதிர் கன்னியாய் முடியாமல் 
விலை மாதுவாய் தொடர்கிறது என் வாழ்க்கை..!
எனக்கு விலை கொடுப்பவர்கள் 
என் கேள்விகளுக்கு விடை கொடுத்திருந்தால் 
என்றோ விடிந்திருக்கும் என் விடியல்கள் ..!
 
எழுதியவர் 
-இன்ஷிராஹ் இக்பால்
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க