நவ பெண் அடிமைத்தனம்

0
1042

இருள் மெல்ல மெல்லக் கவ்விக் கொள்ள வீடெங்கும் ஒரே இருள் மயம். ‘ஷர்மிலா நான் சொல்றது உனக்கு விளங்கலயா? ஏய்! போய் லைட்ட எல்லாம் போட்டுடு வா ‘ என அதட்டல் தொணியில் கூறிக்கொண்டிருந்தாள் ஷர்மிலாவின் தாயார். ஷர்மிலாவோ தன்னை மீறி வந்த அழுகையுடன் வீட்டின் ஓர் அறையின் மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். (பாவம், முடக்கியவர்கள் இவர்கள் தானே) ‘ ஹம்….. என்ன பிள்ளடி நீ நான் எவ்வளவு நேரமா சொல்றன், எதையுமே காதுல வாங்கிகாம செவிடி மாதிரி இருக்காய். அவன் சொன்னதும் சரி தான். இப்பவே உனக்கு இவ்வளவு பிடிவாதம் என்டா, நாளைக்கு நீ அங்க போய் எதயாச்சிம் பண்ணிடு வந்து புடிவாதம் புடிச்சியென்டா ஐயோ! ஏன்னால அத நெனச்சே பாக்க ஏழாம இருக்கு ‘ என்று கூறிக்கொண்டே ஷர்மிலாவின் தாய் வீட்டிலுள்ள லைட்டுக்களை போடச்சென்றாள்.

தான் கேட்டதையெல்லாம் உடனே வாங்கித்தந்து வீட்டின் இளவரசி போல் வளர்த்து வந்த தாய் கூட இப்படிப் பேசிவிட்டாளே என்று நினைக்கும் போது இன்னும் ஓ….. என்று அழுகை வர அதை மெல்ல அடக்கிக் கொள்கிறாள் ஷர்மிலா. தாய் லைட்டை ஓன் செய்த போது இருள் நிறைந்த அந்த அறையில் வெளிச்சம் பரவவே அவள் தனது கோலத்தினைப் பார்த்தாள். அழுது கண்கள் எல்லாம் சிவந்திருந்தன. முகம் வீங்கி இருக்க காலையில் சீவிய தலைமயிர்களில் சில காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. இளவரசி போல் இருக்கும் அவளிற்கு அந்த கோலம் பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருந்தது.

உடனே எமுந்து வொஷ; ரூம் சென்றவள் முகம் கழுவி காற்றிலே பறந்து கொண்டிருந்த முடிகளை தன்னிரண்டு கைகளாலும் கோரிவிட்டுக் கொண்டிருந்தாள் ஷர்மிலா. இந்த வேலையிலேயே வீட்டின் கேட் திறக்கும் சப்தம் கேட்டது. தன் தந்தை வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட அவள் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தன் தந்தை தனக்கு உதவக்கூடும் என்ற பேராசையுடன் வெளியே வந்தாள்.

அவள் அவரை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரியாமலேயே ‘ ஷர்மிலா எங்க? ‘ என்று இரகசியமாய் விசாரித்துக் கொண்டிருந்தார் தன் மனைவியிடம் அவளது தந்தை. ‘ ஹ்ம்…… மெடம் இந்தா வாராங்களே, இப்ப என்ன ஆர்ப்பாட்டம் செய்ய போறாங்களோ தெரியல ‘ என்று ஷர்மிலாவைக் காட்டிச் சொன்னாள் அவளது தாய். ஷர்மிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிகின்றது.

‘ நானும் யோசிச்சன் தான் ஷர்மிலா, வேண்டாம்மா வேண்டாம் அந்த யுனிவர்சிடி படிப்பு வேண்டாம். பொம்புளப் பிள்ளைங்க மரியாதையா உடுப்புடுத்து போய் மரியாதையோட படிச்சிட்டு மரியாதையா வெளியாகின காலம் எல்லாம் மலையேறிப் போய்ச்சி. இப்ப யுனிவர்சிடி படிக்கிற பிள்ளைங்க வேறமாதிரி அத என்ட வாயால சொல்ல விரும்பல .’ என்று கூறும் போதே ஷர்மிலா ‘ வாப்பா…….’ என்று அழுகையுடனும் ஏமாற்றத்துடனும் ஏதோ சொல்ல வர அவளை தொடர்ந்து பேச விடாது தடுத்த அவர்,

‘ தெரியும்மா….. உன்னப்பத்தி எனக்கு நல்லா தெரியும்….. நீ எங்க ஊட்டுப்புள்ள. நீ அந்த மாதிரி நடக்கமாட்டாய் என்டு தெரியும். ஆனா….. காலமும் நேரமும் சூழலும் ஒருவர எப்படி வேனா மாத்திடும் மா……’ என்று கூறிக்கொண்டிருக்கும் போது ‘ என்னங்க நீங்க இவளுட போய் இப்படி எல்லாம் விளக்கம் கொடுத்துப் பேசிட்டு இருக்கிறீங்க. படிச்சது எல்லாம் போதும் ஒழுங்கு மரியாதையா வீட்ட அடக்கமா பொம்புள புள்ள மாதிரி இரி என்டா இவ இருக்கத்தானே வேணும். ஆக விட்டுடு இவ்வளவு இறங்கிப் போய் கதச்சிடு இருக்கிறீங்க. இந்தாங்க இத குடிங்க ‘ என்று தன் கையிலிருந்த தண்ணீரைக் கொடுத்த ஷர்மிலாவின் தாய் பின் ‘ எல்லாம் நீங்க குடுக்கிற செல்லம் தான். வரட்டும்…. அவன் வரட்டும் நாலு கேள்விய நல்லா கேட்க சொல்றன்’ என்று ஷர்மிலாவைப் பார்த்துக் கூறிக்கொண்டே சென்றாள் அவள் தாய்.

அப்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் அணையினை உடைத்தெறிந்த வெள்ளம் போல பீரிட்டு வடிந்து கொண்டிருந்தது. தடுக்க முடியாத அழுகை வரவே உள்ளே சென்று ஒரு மூலையில் இருந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவள் உள்ளமோ அவளிடம் ஏன் எல்லாரும் இப்படிச் சொல்றாங்க? ஊர்ல ஒருத்தி ரெண்டு பேரு செஞ்சா எல்லாரயும் அப்படித்ததான் நடந்துப்பாங்க என்டுசொல்றயா? சின்ன வயசுல ஆசய காட்டிப்போட்டு ஏன் இப்ப இப்படி பேசுறாங்க? என பல கேள்வியை அவளிடம் மாறி மாறிக் கேட்டுக்கொண்டே இருந்தது.

சற்று நேரத்தில் அவனது சோகத்திற்குக் காரணமாய் இருப்பவனும் அங்கு வந்தான். அவன் வரும் போதே ஷர்மிலாவின் தாயார் ‘ வாப்பா ரொம்ப களச்சிப்போய் வந்திருக்க. என்னப்பா ட்ரைனிங்ல கடுமையா வேல வாங்குறானுங்களோ! பாரு எப்படி சோந்து போய் இருக்காய். ஏதாவது சாப்பிடக் கொண்டு வரயா? மத்தியானம் ஏதாவது சாப்புட்டாயா? காலச்சாப்பாடு என்ன மாதிரி? ‘ என்று அன்பாக விசாரிக்க அவன் பேச ஆரம்பித்தான். ( என்னடா இப்படி வரவேற்பு என்று பார்க்குறீங்களா? அவன் தான் ஷர்மிலாவின் சகோதரன். வீட்டின் இரண்டு கண்களும் ஷர்மிலாவும் இவனுமே )

‘ ஹூம்….. எங்கமா சாபிட எல்லாம் டைம் கிடைக்குது. ட்ரைனர் என்ட பெயர் சொல்லிச் சொல்லியே உயிர எடுக்கானுங்க. எல்லா வேலயையும் எங்ககிட்ட தந்து போட்டு அவனுங்க ஏசிக்கயும் பேனுக்கயும் குழு குழு என்டு இருக்கானுங்க. காலைல நீங்க கட்டித் தந்த தோசைப் பார்சல திண்டது மட்டும் தான் அதுகு பிறகு ஒன்டுமே திண்ணல. ஹோட்டலுக்குப் போய் சாப்பாடு வாங்கி வந்து திண்ணுவம் என்டு பார்த்தா அதுகும் அங்க முடியாது. கெண்டீன் சாப்பாடு சுத்த வேர்ஸ்ட ‘; என்று கவலையாகச் சொல்ல அவன் தாய் ‘ ஏன் பா…. இதற்குத்தான் நான் சாப்பாட்டையும் கட்டித்தாரன் என்ட, நீ தான் வேணாம் எங்காய். இப்ப பாரு சாப்பிடாம வந்திருக்காய். இப்படி இருந்தா உடம்பு என்னதுக்கு ஆவுறது.’ என்று கூறுகையில்

தொடர்ந்தும் தன் தாயை சமாளிக்க முயற்ச்சியில் இறங்கிய அவன் இடையில் ஏதோ ஓர் நியாபகம் வர ‘ அவள் எங்க ‘ என்று தனது அதிகாரத் தொணியில் கேட்க ‘ அவளா? அவள்…..’ என்று ஒரு கணம் யோசிக்கத் தொடங்கிய அவன் அன்புத் தாய் ‘ அவள் அந்த ரூம்ல தான். இன்டைக்கு இவளோட படிச்சி யுனிவர்சிடி எடுபட்ட பிள்ளைகள் எல்லாம் யுனிவர்சிடி போகுதுகள் இல்ல. அதான் காலைல இருந்து ராணி பெரிய கூத்து காட்றாங்க. நீ வரட்டும் உங்கிட்ட சொல்லனும் என்டு தான் இருந்தன். இன்டக்கி ஊட்டுல எனக்கு ஒரு வேல கூட செஞ்சி தரல்ல. எல்லாம் நம்ம பாடுதான். போதாதத்துக்கு காலைல இருந்து ஒரே அழுகையும் ஆர்ப்பாட்டமுமாவே இருக்கு ‘ என்று கூறினாள் ஷர்மிலாவின் தாய்.

உடனே அவள் இருக்கும் அறையை நோக்கிச் சென்ற அவனோ! ‘ ஏய் ஷர்மிலா! உங்கிட்ட எத்தன தடவ சொல்ற. உனக்கு அது விளங்கவே இல்லையா? ஏன்ன திமிரு டீ உனக்கு. எவ்வளவு கூத்துக்காட்டி இருக்க. பாரு உன்ட மூஞ்சியப் பாரு எப்படி இருக்குதென்டு. உனக்கு எல்லாம் வாயால சொல்லிப் புரியாது. நானும் சொல்லிட்டே இருக்கன் உனக்கு இந்தப் படிப்பு போதும் என்டு, பொம்புளப் புள்ளங்க எல்லாம் படிக்க வேண்டிய அவசியம் இல்ல. ஊட்டுல எல்லார்ட மனசயும் மாத்திட்டு யுனிவர்சிடி போய் நல்லா கூத்தடிக்கலாம் என்டு நெனப்போ! நடக்காது இனி அது நடக்கவே நடக்காது நான் இருக்கிற வரைக்கும் நடக்கவே நடக்காது. வீணா சீன் போடாம பொம்புளப் புள்ள மாதிரி இரி ‘ என்று கூறியவன்

தொடர்ந்தும் ‘ அதென்னடி இன்டைக்கு நீ ஊட்டுல ஒரு வேல கூடப்பாக்கலயாமே! என்ன பெரிய இவ என்ட நெனப்போ! உம்மாக்கு உடம்புக்கு ஏலா என்டு தெரியும் தானே பின்ன ஏன்…. டீ நீ இப்படி நடக்குறாய். போ….. போய் சமயல் கட்டுல ஏதாவது வேல இருந்தா பாரு இனிமே அது தான் உனக்கு யுனிவர்சிடி.. யுனிவர்சிடி போன நானே நீ அங்க போகத் தேவல என்டு சொல்றன்……. சும்மா யுனிவர்சிடி, யுனிவர்சிடி என்டு புலம்பிட்டு இருக்காத சரியா ‘ என்று கண்டிப்பாகக் கூறினான் சென்ற வருடம் பீ. கொம் பட்டம் பெற்று வெளியாகிய அவளது அன்புக்குரிய சகோதரன்.

‘ நவ பெண் அடிமைத் தனத்திற்கு
நான் என்ன மருந்து செய்வேன்
புதுப் பாரதியவன் எம்
பூவுலகில் தோன்றாத வரை ‘


என்று நினைத்துக் கொண்டு தனது பல்கலைக்கழகக் கனவிற்கு முற்றுப் புள்ளி வைத்து சமையலறைப் பக்கம் வடிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்த படியே சென்றாள் ஷர்மிலா.

முந்தைய கட்டுரைநகர்வு திட்டமிடல் (Motion planning) – Robotics
அடுத்த கட்டுரைஎளிய தமிழில் HTML – 1
User Avatar
எனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க