சீதனம் எதற்கு?

0
998
9e7cd0ca629a4b76ab0556196d3f97ea-1ffd834c
காதலுக்கும் சீதனமா?

காதல் காதல் என்றபடி
காலம் முழுக்க சுற்றிக்கொண்டு
அவள் போகும் இடமெங்கும்
நாயைப்போல அலைவது

ராமன் சீதை காதல் போல
இருமனங்கள் இணைந்திடாமல்
தான் கொண்ட ஆசையினால்
அவள் பின்னால் அலைந்து விட்டு
ஒருதலைக்காதல் என்று
கொஞ்சக்காலம் சொல்லுவது
நாட்கள் கொஞ்சம் போன பின்னர்
அன்பே ஆருயிரே என்று
ஆசைக்கதை பேசுவது ….

அழகைப்பாத்து அலைவது -பின்பு
அன்பு என்று பிதற்றுவது
இதுவரை கதைக்காமல்
எப்படி புரிந்து கொண்டான்
அவள் அன்பு அருமையென்று

இப்படியே அலைகையிலே
இரும்பில் ஒட்டும் காந்தம் போல
தூண்டல்கள் துலங்கலாகி
அவளுக்கும் ஈர்ப்பு வரும்
ஒருதலைக்காதலும் மாறிவிடும்
இருதலைக்காதல் என

அவன் கொடுக்கும் பாசத்தை
பக்குவமாய் சேமித்து
பலமடங்காய் மாற்றிவிட்டு
பாசமழையாகப் பொழிந்திடுவாள்

காதல் சூடுபிடிக்கும் காலம் வர
வீட்டில் கொஞ்சம் தெரிந்துவிட்டால்
அன்பென்று வந்தவன்
அம்மா பக்கம் மாறிடுவான்

பாசம் என்று பொங்கிக்கொண்டு
பணியாரம் சுட்ட பயல்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
வாய்திறந்து கேட்டிடுவான்
சீதனம் யாதென்று………
parents கேக்கினமாம்
வீட்டில் கொஞ்சம் சிக்கலாம்

உறவுகளை மறந்து விட்டு
உண்மையான அன்பென்று
உணர்வோடு வந்தவள்
பாசத்தை கைவிடவழியின்றி
பரிதவித்து நிற்கின்றாள்

அன்று அழகில் வந்தவன் -பின்பு
அன்பென்றான் -இன்று
சாதியும் சீதனமும்
பார்த்துத்தான் மிச்சம் என்பான்

பாசமும் காசுக்கென்றால்
பிறகென்ன வாழ்க்கையடா
அன்பை நம்பி வந்த பெண்ணை
வாழவைக்க வழியின்றி
வேதனம் ஏதுமின்றி சீதனம் கேட்கிறியே

கேட்பது மாப்பிள்ளையா?
இல்லை மாமியார் குடும்பமா?
இங்கு தான் தொடங்கிடுமே
சீதனத்தின் சிக்கல் கதை
பெண்ணை வதைப்பது ஆண் அல்ல
அன்று வதைபட்ட பெண்தான்
தன் திருமணத்தில் மணமகள்
மகன் திருமணத்தில் மாமியார்

விலையான பொருள் எல்லாம்
தரமென்று நம்பும் கூட்டம்
மணமேடைப்பந்தலிலே
கூடி நின்று கதைத்திடுமாம்
சீதனம் இல்லை என்றால்
மாப்பிள்ளை மொக்கையாம்
மவுஸ் கொஞ்சம் குறைவென்று

ஒன்று கேட்கும் மொட்டையா?
இல்லை கட்டையா? கறுப்பா?
சப்பை மூக்கனா?? வாக்கனா??
தோட்டக்கார மாப்பிள்ளையா? ?
இப்படிக்கதைப்பினமாம்
சீதனம் இல்லையென்றால்
கௌரவக்குறைவாகிடுமாம்
மணமகன் தாயாரின் மனக்குமுறல் இது

இதை எழுதும் கவிஞனுக்கு
இன்றுவரை காதலில்லை
சாதியும் சீதனமும்
நம்வழக்கில் இருக்கும் வரை
எனக்கும் அது தேவையில்லை
நம்பி வந்த பெண்ணை
நடுத்தெருவில் கைவிட்டு
பொய்ப்பாசத்தில்
போலி வேசம் தேவையில்லை
தாய் பேச்சைக்கேட்பதா?
தாரத்தை தயவாக ஏற்பதா?
இந்த சிக்கல் இருக்கும் வரை
இனியும் அது தொடரத்தான் போகிறது
நட்புகளின் அனுபவத்தை
வலிகளாய் உணர்ந்து விட்டு
வரிகளால் செதுக்கிவிட்டேன்
இனியும் தொடரவில்லை
இத்தோடு நிறுத்துகிறேன்…….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க