சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14

0
1317
PicsArt_09-29-09.26.20

வல்லிபுரஆழ்வார்

வல்லிபுரத்து பெருவீதியினூடாக பௌத்த பிக்கு போல் வேடந்தரித்த ஆலிங்கனும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் சென்று கொண்டிருக்கையில் இடைவழியில் பல சோதனை சாவடிகளை தாண்ட வேண்டியே இருந்ததென்றாலும், காவி வஸ்த்திரம் தரித்த அந்த பிக்குவை பார்த்ததுமே, அங்கிருந்த காவலர்கள் மிகுந்த மரியாதையுடன் அவருக்கு வழிவிட்டார்களென்றாலும், பின்னால் சற்று இடைவெளிவிட்டே தொடர்ந்து கொண்டிருந்த பார்த்தீபனை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தவே முயற்சி செய்தார்களாகையால், அவ்வாறு தடுத்து நிறுத்திய போதெல்லாம் அந்த காவலர்களை நோக்கி மிகவும் சாந்தமான தெய்வீகக் குரலில் “அவன் என் சீடன் தான், அவனும் என்னுடன் தான் வருகின்றான்.” என்று மிகவும் மெல்லிய குரலிலேயே கூறிய ஆலிங்கனின் முகத்திலும் ஏதோ உண்மையிலேயே பெரும் ஞானம் பெற்றுவிட்ட துறவியின் பாவமே தோன்றியதாகையால், பார்த்தீபனும் அவனை மிகுந்த வியப்புடனே நோக்கியதல்லாமல், “ஆஹா! இவனிடம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது” என்று மனதினுள் எண்ணியும் கொண்டான். அவ்வாறு ஆலிங்கன் காவலர்களிடம் பார்த்தீபனை தன் சீடனென கூறிய போதெல்லாம், அந்த காவல்வீரர்கள் பார்த்தீபனுக்கும் மிகுந்த மரியாதையே அளித்தமையானது, பார்த்தீபனுக்கு இன்னமும் பிரமிப்பையே ஏற்படுத்தியதாகையால், “இந்த சிங்களவர்கள் தங்கள் மதத்தின் மீது தான் எத்தனை பற்றுடன் இருக்கிறார்கள்” என்று தனக்குள்ளாகவே கூறி வியந்தும் கொண்டான்.

நெடுநேரமாக எவ்வித சம்பாஷணைகளும் இன்றி தம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த இருவரும் இடையிடையே சில வார்த்தைகளை பேசிக்கொண்டாலும், பெரும்பாலான தருணங்களில் தமக்கிடையே பேசிக்கொள்ளாமலே நடந்து கொண்டிருந்தார்களாதலால், ஆலிங்கன் சற்று சத்தமாகவே “புத்தம் சரணம் கச்சாமி” என்று கோசம் எழுப்பிக்கொண்டும் இடையிடையே சில புனித போதனைகளை சத்தமாக கூறிக்கொண்டும் நடந்து கொண்டிருந்த அதே வேளை பார்த்தீபனோ தன் மனதினுள் ஆலிங்கனின் புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் எண்ணி வியந்து கொண்டே நடந்து கொண்டிருந்ததுடன் “ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே நாம் அவரின் சில செயற்பாடுகளை மையமாக கொண்டு அவர்களின் குண இயல்புகளை முழுமையாக கணித்துவிட விளைகிறோம். அவரிற்கு நாமாகவே ஒரு விம்பத்தை கொடுத்து இப்படித்தான் என்று முடிவும் கட்டிக்கொள்கிறோம், இது எத்தனை தவறான செயல், இந்த ஆலிங்கனை நான் ஆரம்பத்தில் என்னவெல்லாம் எண்ணினேன். ஆனால் அவை அனைத்திற்கும் நேர்மாறான குணப்பண்புகளையல்லவா இவன் கொண்டிருக்கிறான், எத்தனை தவறாக கணித்து விட்டேன் இந்த மனிதரை பற்றி!” என்றும் மனதினுள் எண்ணி தன்னைத்தானே நொந்தும் கொண்டான்.

அவ்வாறு பார்த்தீபனின் மனதில் ஓடிய எண்ண ஓட்டங்களை உணர்ந்து, ஏதோ அவனது சிந்தையை திசைமாற்ற விரும்புபவன் போலவே ஆலிங்கன் மெள்ள பார்த்தீபனிடம் பேசவும் ஆரம்பித்தான்.
“பார்த்தீபா ஒரு நாளில் இச்சிங்கைநகர ராஜ்ஜியத்தின் தலை நகராக சிறப்புப்பெற்ற நகரம் இந்த வல்லிபுரம் தான், அதனால் இந்நகரும் சிங்கைநகரென்ற பெயர்பெற்று விளங்கியது. செண்பகப்பெருமாளின் படையெடுப்பின் பின் சிதைந்து போன இந்நகரை விட்டு தலை நகரை அவன் கள்ளிக்காடருகிலுள்ள நல்லூருக்கு மாற்றியும் கொண்டதல்லாமல், அந்நகருக்கு சிங்கை நல்லூரென்றே பெயரும் இட்டுக்கொண்டான்” என்று கூறிய ஆலிங்கன் இவ்விடத்தில் சற்று நிறுத்தி பின் மேலும் தொடர்ந்து
“ஏனப்பா இவ்வல்லிபுரத்தின் மிகவும் சிறப்புப்பொருந்திய ஆழ்வார் ஆலய வரலாறு பற்றி கேள்வியுற்றிருக்கின்றாயா?” என்றான் மிக மெல்லிய குரலில்.
“இல்லையப்பா எனக்கு தெரியாது, உனக்கு தெரிந்தால் சொல் கேட்டுக்கொள்கிறேன்” என்றான் பார்த்தீபன் ஆர்வம் மிகுந்த குரலில்.
“அது தானே இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள உனக்கேது அவகாசம், நீ தான் சரியான முரட்டுப்பிள்ளை ஆயிற்றே” என்று கூறிய ஆலிங்கன் சற்று இரைந்தே நகைத்தானாதலால், கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்ட பார்த்தீபன் “இதோ பாரப்பா உனக்கு சொல்வதற்கு இஷ்டமிருந்தால் சொல், இல்லையென்றால் வேண்டாம்” என்று சினத்துடனே இரைந்தான்.
“அடேயப்பா சினம் கொள்ளாதே சொல்கிறேன்” என்று கூறி சிறிது தாமதித்த ஆலிங்கன் ஏதோ கனவுலகில் மிதப்பவன் போலவே பாவனை காட்டி, “முன்னொரு காலத்தில் வராத்துப்பழை என்கின்ற கிராமத்தில் இலவல்லி என்றொரு பெண் இருந்தாள், அவளுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. கண்ணபிரானையே மனதில் இருத்தி அனுதினமும் பூஜித்து வந்த அந்த பெண் ஒரு நாள் பகவானின் முன் மண்டியிட்டு தன் குறைகளை கூறி அழுததுடன் அவ்விடத்திலேயே மயக்கமுற்றும் சரிந்தாள். அச்சமயத்தில் அவளின் கனவில் தோன்றிய கண்ணபிரான் அவளை கற்கோவளம் கடற்கரைக்கு வா உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று பணித்தாராகையால் அவ்விடம் சென்ற இலவல்லி அம்மையார் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். என்னே ஆச்சரியம்! கடலின் அலை நடுவே மச்ச உருவில் தோன்றி துள்ளிவிளையாடிய கண்ணபிரான், பின்னர் ஒரு குழந்தையாக மாறி அம்மையாரின் மடியில் விழுந்து தவழ்ந்து நின்றார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த பரவச நிலையையே எய்திவிட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் ஒரு புதுமை நிகழ்ந்தது. மச்ச வடிவில் காட்சி தந்து பின் குழந்தையாய் மாறி விட்ட கண்ணபிரான் திடீரென ஸ்ரீ சக்கர வடிவம் கொண்டான். பின்னர் அங்கிருந்த மக்கள் இலவல்லிநாச்சியாரின் கருத்திற்கேற்ப ஸ்ரீ சக்கரத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊருக்குக் கொண்டு செல்லலாயினர். வழியில் தாகசாந்திக்கு என அவர்கள் பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு நீர் அருந்தி முடித்ததும், மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. ஸ்ரீ சக்கரம் அங்கேயே நிலைகொண்டும் விட்டது. அவ்விடத்திலேயே பகவானும் நிலைகொண்டு விட்டான்.” என்று உணர்ச்சிபொங்க கூறியும்முடித்தான். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அத்தனை புராணவரலாறுகளையும் முழுவதுமாக விழுங்குவது போலவே கேட்டுக்கொண்டிருந்த பார்த்தீபனும் சற்றே மெய்சிலிர்த்துத்தான் போயிருந்தானாகையால் “ஆஹா!, அற்புதமான வரலாறு!” என்று கூறியும் கொண்டான்.

மேற்குறித்த வழிநடைப்பேச்சு நிறைவெய்தியதும், இருவரும் சிறிது நேரம் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார்களானாலும், திடீரென பார்த்தீபன் ஏதோ நினைவு வந்தவன் போலவே “ஏனப்பா ஆடு போல் வேடமிட்டு உறுமிய சிறுத்தை போலவே புத்தபிக்குவாய் வேடம்தரித்துவிட்டு வல்லிபுர ஆழ்வாரின் பெருமைகளை இயம்பியபடி வந்தாயே யார் காதிலாவது விழுந்திருந்தால் என்ன ஆவது?” என்றான் மிக மெல்லிய குரலில். அதற்கு பதிலளிப்பது போலவே ஆலிங்கன்
“ஶ்ரீ சக்கரத்துக்கும் தர்மசக்கரத்துக்கும் இந்த மகாபோதி ஆலிங்கதேரர் எவ்வித வேறுபாடும் பார்ப்பதில்லை.” என்று கூறிவிட்டு சற்று இரைந்தே நகைத்ததல்லாமல், தொடர்ந்து “பார்த்தீபா அந்த வீதியில் யாரும் இருக்கவில்லை, ஆகையால் நாம் பேசியது பாதகமில்லை, ஆனால் நீ சொல்வதும் சரி தான் இனி மேல் பேசும் போது சற்று அவதானமாகவே பேச வேண்டும், ஆனால் அவதானமாக பேசவேண்டியது நானல்ல நீ தான்” என்றான் மிக உறுதியான குரலில்.
“ஏன்” என்று வினவிய பார்த்தீபனின் விழிகளும் வினாக்களையே தொடுத்தன, அதற்கு ஆலிங்கன்,
“ஏனென்றால் என் வேடமறியாமல் என்னிடம் மரியாதைக்குறைவாக சினத்துடன் இரைந்து பேசினாயல்லவா அதற்குத்தான்” என்று விசமமாகவே பதிலளித்ததல்லாமல் இரைந்து நகைக்கவும் செய்தான். அந்த பதிலானது பார்த்தீபனுக்கு தன் அவசரபுத்தியை எண்ணி வெட்கத்தையே அளித்ததென்றாலும் அதை வெளிக்குக்காட்டாமல், அமைதியாகவே அவனை தொடர்ந்தும் நடந்தான்.

சிறிது தூரம் கடந்ததும் அடர்ந்த மாந்தோப்புகளின் இடைவெளிகளின் ஊடாக புகுந்து ஆலிங்கனும் பார்த்தீபனும், மறுபக்கத்திலுள்ள சிறுவீதி ஒன்றையும் அடைந்து விட்டதுடன், அவ்வீதியில் சற்றே வசதியாக கட்டப்பட்டிருந்த சுண்ணாம்புக்கல் வீடு ஒன்றை சுட்டிக்காட்டிய ஆலிங்கன் “பார்த்தீபா! அது தான் வெள்ளையங்கிரி அவர்களின் இல்லம்” என்று கூறிவிட்டு விரைவாக நடக்கவும் ஆரம்பித்திருந்தான். அவனையே தொடர்ந்து பார்த்தீபனும் நடந்து சென்றானானாலும் அந்த இல்லத்திற்கருகில் சென்றதும் எதையோ அவதானித்துவிட்ட ஆலிங்கன் தன் கையை நீட்டி பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பார்த்தீபனை மறித்ததல்லாமல் “மரத்தின் பின்னால் ஒழிந்துகொள்” என்பது போல் சைகை செய்து விட்டு ஒரு விசித்திரமான காரியத்திலும் இறங்கி, அருகிலிருந்த உயர்ந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக ஏறி, கூரையின் ஊடாக வீட்டினுள்ளே எட்டிப்பார்க்கவும் செய்தான். ஆலிங்கனின் இந்த செயற்பாடுகள் பார்த்தீபனுக்கு மிகுந்த விசித்திரமாகவே தோன்றியதாகையால் “ஏன் இப்படியான காரியங்களை செய்கிறான் இவன்?” என்று தனக்குள்ளாகவே வினவியும் கொண்டான்.

மரத்தில் இருந்து வேகமாக இறங்கி கீழே வந்த ஆலிங்கன், பார்த்தீபனையும் இழுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றதுடன் அருகிலிருந்த ஒரு பழைய மண்டபத்தினுள் சென்று மறைந்தும் கொண்டானாகையால், மிகுந்த வியப்பையே அடைந்துவிட்ட பார்த்தீபன் “அங்கே என்ன” என்று ஏதோ கேட்க ஆரம்பித்து பாதியிலேயே வினாவை நிறுத்திவிடவும், அவனின் மனதில் எழுந்த வினாவை உணர்ந்து கொண்டு ஆலிங்கனே மெள்ள பதிலளிக்கவும் ஆரம்பித்தான். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அந்த பதிலானது பார்த்தீபனுக்கு அமிதமான சினத்தையே அளித்திருந்ததல்லாமல், மனதினுள் இடியையே பாய்ச்சியது போன்ற பிரேமையையும் ஏற்படுத்தி நின்றது.

பதினைந்தாம் அத்தியாயம் தொடரும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க