உயிர்த்தமிழே…

0
1284

தேன் தமிழை தாய்ப்பாலாய் பருகிய மறவனே

தெய்வத்தின் பக்திமொழி பாடிடும் பாவலனே – நீ

மூவுலகின் மூத்ததமிழ் முதல்மொழியாய் கொள்ளாயோ

மூவேந்தர் முறை வளர்த்த தமிழ் முச்சங்கம் அறிவாயே

எண்தொகை பதிற்றுப்பத்து பதிணெண் மேல்கீழ் கணக்குகளாய்

ஏட்டிலும் பாட்டிலும் எத்தனை பொருட்சுவை காண்பாயே

செந்தமிழின் செழுமையில்தான் செம்மொழியும் தகைமை பெறும்

சேய்மைக்கோள் செவ்வாயிலும் செங்கமல மலராக வீசும்

அன்னையின் கருதொட்டு அன்பினிலே விளைந்த மொழி

ஆரம்ப பள்ளியிலே அரிச்சுவடியின் அலங்கார முத்தாகும்

தந்தையின் சொல்லினிலே மந்திரமாக ஒலித்த தமிழ்

தரணியை ஆளவரும் வீரத்தமிழனுக்கே வழிகாட்டும்

அ முதல் அகிலம்வரை சான்றோர்கள் பயின்ற தமிழ்

அகத்திய மாமுனியின் அறிவினில் அரும்பியதே காண்

சீர்வரிசை சிறப்புற உமறுகவி பா சீறாப்புராணமதே

சிவபெருமை செல்வர் சேக்கிழார் புராணம்; பெரிதே

தெள்ளிய நயமுடனே வீரமுனி தேன் பாவின் வரிசை

தெவிட்டாச்சுவை கொண்டு தமிழன்னை அணிகலன்களாய்

கவிக்கொல்லர் உலையிலே கரும்பெனவே இனித்திடுமோ

கம்பன் கட்டுத் தறிபாட தமிழ்வெள்ளம் பெருகிடுதே

வடவேங்கட மலை முதலாய் தென்குமரி முனை முட்டிட

வாழ்ந்த தமிழ் நல்லுலகு புலம்பெயர் புதுப் பறவைகள்

கூட்டங்களாய் தாய்மொழியை குயிலெனவே கூவிடுமே

குவலயத்தின் முதுமொழியே எம் உயிருக்கு நேர் தமிழே….

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க