வேலையில்லாக் காலைகள்

0
1083

கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்து
கை நிறையக் காசு பார்த்து
கட்டிலில் கவிழ்ந்து படுத்திருப்பவரே!
என் கவிதை உங்களுக்கானதல்ல..
பத்து மணிக்கு மேல் பால்தேநீருடன் விடியும் உங்களின்
வேலையில்லாக் காலைகள் ரம்மியமானவை!
நீங்கள் உங்கள் உறக்கத்தை தொடருங்கள்!!

ஓடி ஓடி உழைத்து
ஓய்வு (ஊதியம்) பெற்று
சாய்வு நாற்காலியில் சாவகாசமாக இருப்பவரே!
என் கவிதை உங்களுக்குமானதல்ல.
மலரும் நினைவுகளோடு புலரும் உங்களின்
வேலையில்லாக் காலைகள் அற்புதமானவை!!

பள்ளியோ,பல்கலைக்கழகமோ
படித்து முடித்து, பப்பரப்பா என்று
எதிர்காலமே புதிராக உட்கார்ந்திருப்பவனே!
நீயே என் கவிதாநாயகன்! காவியத் தலைவன்!!
உன் காலைகள் விடியாதவை!
அதன் கதைகள் முடியாதவை!!

பார்த்த படத்தை பதினாறு தரம் பார்த்திருப்பாய்!
வெட்டியாய் இருந்தே வேர்த்திருப்பாய்!
காலம் கனியும் என்று காத்திருப்பாய்!
பாவம், அதிலே நீ தோற்றிருப்பாய்!
– உன் காலைகள் களவாடப்படுபவை-

கூடப்படித்த நண்பன் கூப்பிடுவான்,
“கல்யாணம் மச்சான்,
கட்டாயம் வா” என்று!
கார்ட்டில் இருப்பது உன்
காதலியின் பெயராக கூட இருக்கலாம்!
-உன் காலைகள் கண்ணீர் சிந்துபவை-

நாளிதழ்களை திறந்தால்
நடுப்பக்கத்தை மட்டும் பிரட்டும் நீ , இன்று
வேலைவாய்ப்பு பகுதியை
வேதவாக்காக வாசிப்பாய்!
– உன் காலைகள் கடுப்பானவை-

உலகை வெல்லும் கனவுகள் உன்னுள் இருந்தாலும்
உருவம் இருக்காது!
கடலைக் கிழிக்கும் கற்பனைகள் இருந்தாலும்
காசு இருக்காது!!
வானைப் பிளக்கும் வலிமை இருந்தாலும்
வாய்ப்பு இருகாது!!!
-உன் காலைகள் கனவானவை-

இருபத்தாறு வயதில் தான் உனக்கு
இதுதான் உலகம் என்று தெரியும்!
பருவ வயதில் விட்ட பிழைகள்
பளிச்சென்று புரியும்!
கருத்து சொல்லி கழுத்தறுப்போரைக்
கண்டாலே பற்றி எரியும்!
மறுத்துப் பேச முடியாமல்
வார்த்தைகள் உடைந்து முறியும்!

ஊரோடு ஒன்றாய் வாழும் உன் கனவுகள்
சவூதியிலோ கட்டாரிலோ பொசுங்கி பொரியும்!!
– உன் காலைகள் பாவமானவை-

உன்னை நோக்கி நீட்டப்படும் விரல்கள்
உன் அடையாளத்தை கேள்வி கேட்கும்!
உன்னை நோக்கிப் பார்க்கப் படும் பார்வைகள்
உன் சுயத்தை சீண்டிப் பார்க்கும்!!
உன்னை நோக்கி வீசப்படும் வார்த்தைகள்
உன் இருப்பையே இல்லாமல் செய்யும்!!!
– உன் காலைகள் கறுப்பானவை-

இறுதியாக,
உன் காலைகளும் வேலையின்றி விடிந்தால்
நீயும் நானும் தோழர்களே!

இடியும் மழையும் வந்தாலும், இனி
மடியும் நிலையே என்றாலும்
முடியும் வரையில் போராடு!
விடியும் பொழுதுகள் உன்னோடு!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க