மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – ஆடு

0
6727

ஆடு, மாடு, குதிரை முதலிய பிராணிகளை நமது சித்த மருத்துவ நூல்கள்‌ மனைப்‌பிராணிகள்‌ என்று குறிப்பிடுகின்றன.

இவற்றின்‌ மாமிசம்‌ சிறிது இனிப்புச்‌ சுவை பெற்றிருப்பதுடன்‌, இதனை உண்பதால்‌ வாய்வுத்‌ தொல்லை நீங்கும்‌ என்பதும்‌, கபம்‌, பித்தம்‌ ஆகியவை அதிகப்படும்‌ என்பதும்‌ அச்‌ சித்த மருத்துவ நூல்களில்‌ குறிப்பிடப்பட்டுள்‌ளன.

நமது நாட்டில்‌ வாழும்‌, அசைவ உணவு உண்போர்‌ அனைவரும்‌ விரும்பி உண்ணும்‌ உணவு ஆட்டிறைச்சியேயாகும்‌.

ஆட்டின் வேறு பெயர்கள்

உதள்‌, அருணம்‌, அசம்‌, உடு, ஏழகம்‌, மைகொறி, தகர்‌, கடா, கொச்சை, துள்ளல்‌, சாகம்‌, மறி, பிரமம்‌, வருடை, வற்காலி, வெறி முதலிய பல பெயர்களை ஆட்டின்‌ பெயர்களாக நமது நிகண்டு நூல்கள்‌ குறிப்பிடுகின்றன.

ஆட்டு மாமிசத்தில் உள்‌ள சத்துகளின்‌ அளவுகள்‌

100 கிராம்‌ ஆட்டிறைச்சியில்‌, 18.5 கிராம்‌ புரதச்‌ சத்தும்‌, 13.3 கிராம்‌ கொழுப்புச்‌ சத்தும்‌ உள்ளன. மாவுச்சத்து இவ்விறைச்சியில்‌ கொஞ்சம்கூட இல்லை.

மேலும்‌, 150 மி.கி. சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 150 மி.கி. பாஸ்பரச்‌ சத்தும்‌, 2.5 மி.கி. இரும்புச்‌ சத்தும்‌, மக்னீசியம்‌ 27.0 மி.கிராமும்‌ 0.16 மி.கி. தாமிரச்‌ சத்தும்‌, 33.0 மி.கி. சோடியமும்‌, 270 மி.கி. பொட்டாசியமும்‌ அடங்கியுள்ளன.

வைட்டமின்களில்‌, வைட்டமின்‌-ஏ 9 மைக்ரோ கிராமும்‌, 180 மைக்ரோ கிராம்‌ தயமினும்‌, 0.14 மி.கி. ரிப்போ பிளவினும்‌, 6.8 மி.கி. நியாசினும்‌, 5.8 மைக்ரோ கிராம்‌ போலிக்‌ அமிலமும்‌, 2.6 மைக்ரோ கிராம்‌ வைட்டமின்‌ பி-12ம்‌, 2.8 மைக்ரோ கிராம்‌ வைட்டமின்‌ பி.6ம்‌, 7 மிலி கிராம்‌ ஆக்ஸாயிக்‌ அமிலமும்‌ 100 கிராம்‌ ஆட்டிறைச்சியில்‌ உள்ளன என ஆய்வுகள்‌ கூறுகின்றன.

நமது உடலுக்குத்‌ தேவையான புரதமானது, அமினோ அமிலங்களின்‌ தொகுப்பேயாகும்‌. இவ்வமினோ அமிலங்களில்‌ 10 வகையினை மட்டும்‌ நமது உடலால்‌ தயாரித்துக்‌ கொள்ள இயலாது. அவை நாம்‌ உண்ணும்‌ உணவில்‌ கட்டாயம்‌ இருந்தாகவேண்டும்‌. பிற அமினோ அமிலங்கள்‌ உணவில்‌ இல்லாவிடிலும்‌ நமது உடல்‌ அவற்றைத்‌ தயாரித்துக்‌ கொள்ள முடியும்‌.

உணவில்‌ அவசியம்‌ இருக்க வேண்டிய அமினோ அமிலங்களான, டிரிப்டோயேன்‌, திரியோனைன்‌, ஐசோவியசைன்‌, லியசைன்‌, லைசன்‌ மெத்தியோனைன்‌, பினைலாலைன்‌, வேலைன்‌, ஆர்ஜினன்‌, உறிஸ்டிடைன்‌ ஆகியவை ஆட்டிறைச்சியில்‌ இருக்கின்றன.

இறுதியில்‌ சொல்லப்பட்ட ஆர்ஜினன்‌, உறிஸ்டிடைன்‌ ஆகிய இரு அமினோ அமிலங்களும்‌ வளரும்‌ பருவத்தினருக்கு அவசியத்‌ தேவை என்பதை நாம்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

மேலும்‌ சிஸ்டைன்‌, டைரோசைன்‌ முதலிய அமிலோ அமிலங்களும்‌ ஆட்டிறைச்சியில்‌ உள்ளன.

100 கிராம்‌ ஆட்டு இறைச்சியானது நமது உடலுக்கு 194 கலோரிச்‌ சக்தியை அளிக்கிறது என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

17ஆம்‌ நூற்றாண்டில்‌ வடமொழியில்‌ எழுதப்பட்ட “போஜன குதூகலம்‌”: என்ற நூலில்‌

“ஆட்டு மாமிசம்‌ கனமானது; பசை மிகுந்தது; அதிகக்‌ குளிர்ச்சி இல்லாதது; வாதம்‌, பித்தம்‌ ஆகியவற்றைப்‌ போக்கவல்லது; இனிப்புச்‌ சுவையும்‌, வலிமையும்‌ புஷ்டியும்‌ தருவது; ஆட்டுக்‌ குட்டியின்‌ மாமிசம்‌, இலேசானது; குளிர்ச்சியுள்ளது; மது மேகம்‌ (நீரிழிவு) நோயைப்‌ போக்குவது” என்ற குறிப்புகள்‌ காணப்படுகின்றன.

ஆட்டின்‌‌ வகைகள்‌

ஆட்டின்‌ வகைகள்‌ பலவாறு பட்டியலிட்டுக்‌ கூறப்படுகின்றன. புதிய புதிய ஆட்டினங்கள்‌ இந்திய நாட்டிலும்‌ வெளிநாடுகளிலும்‌ உருவாக்கப்பட்டு, இன்று பண்ணைகளில்‌ கறிக்காக வளர்க்கப்பட்டுவருகின்றன.

ஜமுனா பாரி (உத்திரப்‌ பிரதேசம்‌), பார்பாரி (உத்திரப்பிரதேசம்‌), பீட்டல்‌ (பஞ்சாபு), மார்வாரி (ராஜஸ்தான்‌), கார்த்தி (குஜராத்து) ஓஸ்மானாபாடி (மகாராட்டிரம்‌), தலைச்சேரி (கேரளா), வங்காளக்‌ கறுப்பு எனப்படும்‌ பிளாக்‌ பெங்கால்‌ (வங்காளம்‌, மற்றும்‌ அஸ்ஸாம்‌), காஷ்மீரி (ஜம்மு காஷ்மீர்‌), பாஸ்மினா (இமாச்சலப்‌ பிரதேசம்‌, மற்றும்‌ இலடாக்‌ பகுதி) ஆகியன நமது நாட்டு இனங்களாகும்‌. இவற்றுள்‌ பார்பாரி இனமானது சோமாலியா நாட்டினின்று இந்திய நாட்டிற்குக்‌ கொண்டு வரப்பட்டு தன்மயமாக்கப்பட்டதுமாகும்‌.

இதைப்‌ போலவே வெளிநாட்டு ஆட்டு இனங்களும்‌ பல காணப்படுகின்றன. அவற்றுள்‌ சில வருமாறு: ஆல்பின்‌, ஆங்கிலோ நுபியல்‌, ஸானன்‌, டோகன்பர்க்‌, அங்கோரா. இவ்வாறு வெளி மாநில, மற்றும்‌ வெளிநாட்டு இனங்கள்‌ பல குறிப்பிடும்படியாக இருந்தாலும்‌, தமிழ்‌ நாட்டிற்கே உரித்தான ஆட்டு இனங்களும்‌ இல்லாமல்‌ இல்லை.

இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட இனங்கள்‌ இன்று காணக்‌ கிடைத்தாலும்‌ நமது சித்த மருத்துவ நூல்களில்‌ ஆறு வகை ஆடுகளைப்‌ பற்றி மட்டுமே குறிப்புக்கள்‌ காணப்படுகின்றன.

  1. காராடு, 2. செம்மறியாடு, 3. கம்பளியாடு, 4. மலையாடு, 5. துருவாடு, 6. பள்ளையாடு

என்ற ஆறு வகைகளைப்‌ பற்றிச்‌ சித்த மருத்துவத்‌ தொகையகராதி குறிப்பிடுகிறது.

       1. வெள்ளாடு, 2. வரையாடு, 3. கொடியாடு, 4. செம்மறியாடு, 5. பள்ளையாடு, 6. குறும்பாடு என்ற ஆறு வகை ஆடுகள்‌ பற்றிக்‌ குணபாட நூல்கள்‌ தொகுத்தளிக்கின்றன.

இனி, இந்த ஆறுவகை ஆடுகளின்‌ மாமிச மருத்துவப்‌ பண்புகளையும்‌, சித்த மருத்துவ நோக்கில்‌ நோய்‌ தீர்க்கும்‌ மருந்து செய்முறைகளையும்‌ காண்போம்‌.

வெள்ளாடு

ஆட்டிறைச்சி வகைகளிலேயே வெள்ளாட்டிறைச்சிக்குதான்‌ மிகுதியான மருத்துவக்‌ குணங்கள்‌ உண்டு என்பது நம்‌ முன்னோர்கள்‌ வாக்கு. உடல்‌ மெலிந்து காணப்படுபவர்களுக்கு வலிமையளிக்கும்‌ உணவாகவும்‌, உடலைப்‌ பெருக்கவைக்கும்‌ மருந்தாகவும்‌ செயல்படுகிறது.

உடல்‌ வலிவு பெற விரும்பும்‌ அனைவருக்கும்‌, குறிப்பாக உடலுழைப்பாளிகள்‌, விளையாட்டு வீரர்கள்‌ ஆகியோருக்குச்‌ சிறந்த உணவாகப்‌ பயன்படுகிறது. வாதத்தையும்‌ பித்தத்தையும்‌ கட்டுப்படுத்தும்‌ குணம்‌ இக்கறிக்கு உண்டு. என்புருக்கி நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகப்‌ பயன்பட்டு, நோய்‌ நீங்கப்‌ பெரிதும்‌ உதவுகிறது.

வெள்ளாட்டு ஈரல்‌

வெள்ளாட்டு இறைச்சியின்‌ மருத்துவப்‌ பண்புகளைக்‌ கண்டோம்‌. வெள்ளாட்டின்‌ ஈரலுக்கும்‌ சில சிறப்பான மருத்துவக்‌ குணங்கள்‌ உள்ளன. ஆட்டிறைச்சியில்‌ கல்லீரல்‌, மண்ணீரல்‌, நுரையீரல்‌ என்ற மூன்று ஈரல்களையும்‌ நாம்‌ உணவாகப்‌ பயன்படுத்துகிறோம்‌. எனினும்‌, இங்கு ஈரல்‌ எனக்‌ குறிப்பிடுவது கல்லீரலையேயாகும்‌.

100 கிராம்‌ வெள்ளாட்டு ஈரலில்‌ 20 கிராம்‌ புரோட்டினும்‌, 3.0 கி. கொழுப்பும்‌ உள்ளன. 17 மி.கி. சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 279 மி.கி. பாஸ்பரமும்‌, 73 மி.கி. சோடியமும்‌, 160 மி.கி. பொட்டாசியமும்‌ – 100 கிராம்‌ வெள்ளாட்டு ஈரலில்‌ உள்ளன. வைட்டமின்‌ பி-12-ஆனது 90.4 மைக்ரோகிராமும்‌, வைட்டமின்‌ பி-6-ஆனது 0.64 மில்லிகிராமும்‌, போலிக்‌ அமிலம்‌ 176.2 மைக்ரோகிராமும்‌, 100 கிராம்‌ வெள்ளாட்டு ஈரலில்‌ உள்ளன என்றும்‌, இந்நூறு கிராம்‌ வெள்ளாட்டு ஈரலை உண்பதால்‌ நமது உடலுக்கு 107 கலோரி ஆற்றல்‌ கிடைக்கிறது என்றும்‌ ஆய்வு முடிவுகள்‌ தெரிவிக்கின்றன. 100 கிராம்‌ வெள்ளாட்டு இறைச்சியில்‌, உள்ள ஃபோலிக்‌ அமிலத்தின்‌ அளவும்‌ (4.5 மைக்ரோ கிராம்‌) வைட்டமின்‌ பி-12ன்‌ அளவும்‌ (2.8 மைக்ரோ கிராம்‌) பல மடங்கு அதிகமாக (176.2 மைக்ரோகிராம்‌ ஃபோலிக்‌ அமிலம்‌ கூடுதலுடன்‌ 90.4 மைக்ரோ கிராம்‌ – வைட்டமின்‌ பி-12-ம்‌) வெள்ளாட்டு ஈரலில்‌ உள்ளன என்பதை ஒப்பிட்டுப்‌ பார்த்து உணரலாம்‌.

போலிக்‌ அமிலமும்‌, வைட்டமின்‌ பி-12 என்ற சயனோ கோபாலமினும்‌, நியூகிளிக்‌ அமில உற்பத்தியில்‌ சிறப்பான பங்கு வகிக்கின்றன. இவற்றில்‌ பற்றாக்குறை ஏற்படும்போது, எலும்பு மஜ்ஜையில்‌ மாற்றம்‌ ஏற்பட்டு இரத்தச்‌ சிவப்பணுக்கள்‌ உற்பத்தி குறைகிறது. இஃது இரத்தச்‌சோகை நோயின்‌ மூல காரணங்களுள்‌ ஒன்றாகும்‌.

இரத்தம்‌ அதிகமாக உற்பத்தியாவதற்கும்‌ இரத்தத்தில்‌ சிவப்பணுக்கள்‌ அதிகம்‌ உண்டாகி இரத்தம்‌ செழுமை பெறுவதற்கும்‌, உணவுக்கு உணவாகவும்‌, மருந்துக்கு மருந்தாகவும்‌, ஈரல்‌ மிகச்‌ சிறந்த முறையில்‌ பயன்படுகிறது. இரத்த சோகை நோய்க்கு ஈரல்‌ ஒரு அருமருந்தாகும்‌.

வரையாடு

வரையாடு என்பது காடுகளிலும்‌ மலைகளிலும்‌ வாழும்‌ ஆடு ஆகும்‌. இவ்வாடுகள்‌ இயற்கையாகக்‌ கிடைக்கும்‌ பலவகைப்‌ புல்‌, பூண்டு, மூலிகைகளை உண்டு வளர்வதால்‌, இதன்‌ இறைச்சிக்குச்‌ சிறந்த மருத்துவக்‌ குணங்கள்‌ உண்டு என நம்‌ சித்த மருத்துவ நூல்கள்‌ செப்புகின்றன.

கனத்த நோய்களான இரத்தசோகை, என்புருக்கி போன்ற நோய்களைப்‌ போக்கும்‌ குணம்‌ இதன்‌ இறைச்சிக்கு உண்டு. உடல்‌ மெலிவைப்‌ போக்கி, உடலுக்கு வலிமையையும்‌ தரும்‌.

இது ஒரு சிறந்த பத்திய உணவு ஆகும்‌. பிற சித்த மருத்துகளை உண்டு வருபவர்களுக்கும்‌ பத்திய உணவிற்கும்‌ இக்கறி சிறந்தது என்பதைப்‌ பின்வரும்‌ பாடல்‌ உறுதிப்படுத்துகிறது.

“பத்தியத்திற்கு ஒவ்வும்‌; வளர்பார நோயைத்துரத்தும்‌,

மெத்த மெலிந்தார்‌ மெலிவகற்றும்‌, – சுத்தமணம்‌

மூட்டுவரை யொத்தமுலை ஒண்டொடியே! பன்மூலிக்‌

காட்டுவரை யாட்டு இறைச்சி”

கொடியாடு

வெள்ளாடு, வரையாடு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக, கொடியாட்டின்‌ இறைச்சிக்கும்‌ சிறந்த மருத்துவக்‌ குணங்கள்‌ உள்ளன.

இதன்‌ இறைச்சி பிற ஆட்டிறைச்சிகளை விடச்‌ சிறிது கனமானதாக இருக்கும்‌. ஆகவே, இதனைப்‌ பூப்போல நன்கு வேகவைத்துச்‌ சமைக்க வேண்டும்‌.

நமது சித்த மருத்துவ நூல்கள்‌ “கொடியாட்டு இறைச்சியைக்‌ காலையில்‌ உட்கொண்டால்‌ பல நோய்கள்‌ நம்‌ உடலைவிட்டு ஓடி விடும்‌’ என்றும்‌ குறிப்பிடுகின்றன. இடுப்பு வலி உள்ளவர்கள்‌ இக்கறியைச்‌ சமைத்து உண்பதால்‌ நோயினைப்‌ போக்கலாம்‌. குத்திருமலைக் கட்டுப்படுத்தும்‌ சிறந்த மருந்தாகவும்‌ இக்கறி செயற்படுகிறது. வெட்டை நோயையும்‌, வாதத்தையும்‌, காச நோயையும்‌ கட்டுப்படுத்தும்‌ சக்தியும்‌ இக்கொடியாட்டு இறைச்சிக்கு உண்டு.

இவ்விறைச்சியின்‌ பலன்களைப்‌ பற்றி,

“கொடியாடு நற்கறியாங்‌ கொள்ளும்வகை கேளாய்‌

தடியாமல்‌ பூப்போல்‌ சமைத்து – விடிகாலே

கொண்டால்‌ இடுப்புவலி, குத்திருமல்‌, வெட்டையும்போம்‌

கண்டாலும்‌ வாதம்‌அறும்‌ காண்‌”

என்கிறது குணபாடம்‌ என்னும்‌ பொருட்பண்பு நூல்‌.

செம்மறியாடு

தமிழ்நாட்டில்‌ வெள்ளாட்டின் இறைச்சியைவிடச்‌ செம்மறியாட்டின் இறைச்சியே அதிக அளவில்‌ மக்களால்‌ உண்ணப்பட்டு வருகிறது. ஆனால்‌, நமது சித்த மருத்துவக்‌ குணபாட நூல்களே செம்மறியாட்டு இறைச்சியை உண்பதால்‌ நோயே மிகும்‌ என எச்சரிக்கை செய்கின்றன. சிறிது பார்ப்போம்‌.

செம்மறியாாட்டுக் கறியும்‌ ஈரலும்‌

செம்மறியாட்டு இறைச்சியில்‌ ஏறத்தாழ முன்‌ சொல்லிய அளவிலேயே சத்துகள்‌ அடங்கியுள்ளன. எனினும்‌, வெள்ளாட்டு ஈரலில்‌ உள்ள சத்துகளைவிடச்‌ செம்மறியாட்டு ஈரலில்‌ சத்துகள்‌ மிகுந்துள்ளன‌ என்பது ஆராய்ச்சியின்‌ முடிவு ஆகும்‌.

100 கிராம்‌ செம்மறியாட்டு இறைச்சியில்‌ வைட்டமின்களான கரோட்டின்‌ 9 மைக்ரோ கிராமும்‌, தயமின்‌ 0.18 மிகிராமும்‌, ரிப்போபிளேவின்‌ 0.14 மி. கிராமும்‌, நியாசின்‌ 6.8 மி.கிராமும்‌, போலிக்‌ அமிலம்‌ 5.8 மைக்ரோகிராமும்‌ அடங்கி உள்ளன. ஆனால்‌, வெள்ளாட்டு இறைச்சியிலோ ஃபோலிக்‌ அமிலம்‌ (4.5 மைக்ரோ கிராம்‌) தவிர வேறு வைட்டமின்கள்‌ எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்‌.

இதைப்‌ போலவே, செம்மறியாட்டு ஈரலிலும்‌ (100 கி, ஈரலில்‌) 19.3 கிராம்‌ புரதச்‌ சத்தும்‌ 7.5 கிராம்‌ கொழுப்பும்‌, 1.3 கிராம்‌ மாவுச்சத்தும்‌ 10 மி.கி சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 380 மி.கி, பாஸ்பரச்‌ சத்தும்‌, 6.3 மி.கி. இரும்புச்‌ சத்தும்‌ அடங்கியுள்ளன.

வைட்டமின்களில்‌, ஏ. வைட்டமின்‌ 6690 மைக்ரோகிரமும்‌, தயமின்‌ 0.36 மி.கிராமும்‌, ரிப்போபிளேவின்‌ 1.70 மி.கிராமும நியாசின்‌ 17.6 மி.கிராமும்‌, ஃபோலிக்‌ அமிலம்‌ 188.0 மைக்ரோ கிராமும்‌ வைட்டமின்‌ சி-20 மி.கிராமும்‌, அடங்கியுள்ளன.

இவற்றில்‌ கொழுப்புச்‌ சத்து, பாஸ்பரச்‌ சத்து, ஃபோலிக்‌ அமிலம்‌ ஆகியவை வெள்ளாட்டு ஈரலில்‌ அடங்கியுள்ள அளவுகளைவிட அதிக அளவு செம்மறியாட்டு ஈரலில்‌ உள்ளன. மேலும்‌, மாவுச்‌ சத்து, வைட்டமின்‌-ஏ, தயமின்‌, ரிப்போஃபிளேவின்‌, நியாசின்‌, வைட்டமின்‌- சி ஆகியவை செம்மறியாட்டு ஈரலில்‌ மட்டுமே உண்டு ,என்பதையும்‌, வெள்ளாட்டு ஈரலில்‌ இவை அறவே இல்லை என்பதையும்‌ – ஒப்பிட்டுப்‌ பார்த்து அறியலாம்‌.

வைட்டமின்‌ – ஏயின்‌ அளவு செம்மறியாட்டு ஈரலில்‌ மிக அதிகமாக உள்ளது. மாமிச உணவுகளில்‌ இதற்கு நிகரான அளவு வைட்டமின்‌-ஏ கொண்ட உணவு ஏதுமில்லை என்பதையும்‌, சைவ உணவுகளில்‌ விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில உணவு வகைகளில்‌ மட்டுமே (சுமார்‌ 6. முதல்‌ 15 வகைகள்‌ வரை) வைட்டமின்‌ – ஏ அதிக அளவு உள்ளது என்பதையும்‌ மனத்திற்கொள்ளவேண்டும்‌.

இவ்வைட்டமின்‌ – ஏயானது இளம்‌ வயதில்‌ ஏற்படும்‌ பார்வைக்‌ குறைவு நோயைத்‌ தடுக்கும்‌ ஆற்றல்‌ உள்ளது என்பதால்‌ செம்மறியாட்டு ஈரலைக்‌ குழந்தைகளுக்கு உண்ணக்‌ கொடுத்து வந்தால்‌ இம்மாலைக்கண்‌ நோய்‌ ஏற்படாமல்‌ தடுக்க இயலும்‌. மேலும்‌, இரத்த சோகை நோய்க்கும்‌ இது ஓர்‌ அருமருந்தாகப்‌ பயன்படுகிறது என்பதும்‌ மறுக்கவியலா உண்மையாகும்‌.

செம்மறியாாட்டுக் கறியின்‌ சித்த மருத்துவக் குணங்கள்‌

செம்மறியாட்டு இறைச்சியில்‌ நோய்‌ தீர்க்கும்‌ குணங்கள்‌ எதுவுமே இல்லையென நமது சித்த மருத்துவ நூல்கள்‌ தெரிவிக்கின்றன. மேலும்‌, இக்கறியினை அடிக்கடி உண்டு வருவதால் நோய்கள்‌ உண்டாகும்‌ என்றும்‌ அவை எச்சரிக்கின்றன.

செங்கரப்பான்‌ என்னும்‌ தோல்‌ நோய்‌ இக்கறியினால்‌ உண்டாகிறது என்றும்‌, கொம்பிலிருந்து குதித்தது போல, முன்பு இல்லாத பலவித நோய்கள்‌ தோன்றி உடலுக்கு மிகுந்த துன்பத்தைக்‌ கொடுக்கும்‌, அந்நோய்கள்‌ அறவே நீங்காது என்றும்‌ கீழ்க்காணும்‌ பாடல்‌ கூறுகிறது.

“அம்புளியில்‌ செங்கரப்பான்‌ அண்டுவது மாத்திரமோ

செம்மறியாட்‌ டுக்கறியைத்‌ தின்றக்கால்‌ – கொம்பில்‌

இருந்து குதித்தாற்போல்‌ எப்பிணியும்‌ உண்டாம்‌

அருந்துயரம்‌ நீங்காது அறி!”

பள்ளையாடும்‌ குறும்பாடும்‌

நமது சித்த மருத்துவத்தில்‌ வெள்ளாடு, கொடியாடு, வரையாடு ஆகிய மூன்று ஆட்டு மாமிசங்கள்‌ மட்டுமே நோய்‌ நீக்கும்‌ மருத்துவக்‌ குணங்கள்‌ கொண்டவை என்றும்‌, செம்மறியாடு, பள்ளையாடு, குறும்பாடு ஆகியவற்றின்‌ மாமிசங்கள்‌ உண்ணும்‌ மனிதர்களுக்குப்‌ பல்வேறு நோய்களை உண்டாக்கும்‌ என்றும்‌ கூறப்பட்டுள்ளன. இங்குப்‌ பள்ளையாடு, குறும்பாடு பற்றிக்‌ காணலாம்‌.

பள்ளையாடு

பள்ளையாடு மாமிசத்தை உண்பதால்‌ மந்தம்‌ ஏற்பட்டுப்‌ பசி ஏற்படாது போய்விடும்‌. அரோசகம்‌ எனப்படும்‌ ஓக்காளம்‌, வயிற்றுப்‌ புரட்டல்‌ வாந்தி ஏற்படும்‌. கபம்‌, வாயுத்‌ தொல்லை ஆகியவற்றை இப்பள்ளையாட்டு இறைச்சி அதிகப்படுத்தும்‌ என்கிறது பின்வரும்‌ பாடல்‌

“மந்தமிகும்‌, தீபனம்போம்‌, மாறா அரோசகமாம்‌,

தொந்தநோ யெல்லாம்‌ தொடரும்காண்‌ – இந்துநுதல்‌

மானே! கபம்‌ உயரும்‌, வன்பள்ளை யாட்டுக்குத்‌

தானே மிகும்வாயு தான்‌.”

குறும்பாடு

குறும்பாட்டு இறைச்சியை உண்பதால்‌, எறும்பு ஊருவது போன்ற நமைக்‌ கிரந்தி என்ற தோல்‌ நோய்‌ உண்டாகும்‌. பீச வாயு எனப்படும்‌ குடல்வாத நோயும்‌, சூலைநோய்‌ என்னும்‌ வயிறு தொடர்பான நோயும்‌ தோன்றும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. இதுபற்றிய குணபாடப்‌ பாடல்‌ கீழ்வருமாறு:

“குறும்பாட்டு இறைச்சிதனைக்‌ கொண்டாராகட்கு எல்‌லாம்‌

எறும்பார்‌ சொறிசிரங்கும்‌ எய்தும்‌ – இறங்கும்‌

குடல்வாதம்‌, சூலைகொடு அனிலக்‌ கட்டம்‌

உடனே அடரும்‌என ஒது.”

ஆட்டிறைச்சியில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களையும் அதனை எவ்வாறு சமைத்து உட்கொள்வது என்பது பற்றியும் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Source : ‘மாமிச உணவின் மருத்துவப் பயன்கள்’ நூலிலிருந்து

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க