காயங்கள்

0
2565
காயங்கள் கண்டு
கணமான கீறல்களுடன்
மேலும் காயம் காண
இடமுண்டோ இதயத்திடம்….?
 
எட்டிப்பார்க்கும் கண்ணீரை
எவரும் பார்க்காமல்
எளிமைப் புன்னகையுடன்
வாழ்வதில் சுவையுண்டோ
வாழ்க்கையில்…..?
 
கடுகும் குறையா
கருணை கொண்டும்
கவலை மட்டும்
குறையாமல் குடியிருப்பது
காரிகை கொண்ட வரமோ…?
 
எதுவுமற்று
இயலாமல்- ஓர்
நேர்கோடாகிய வாழ்வில்
திசைகளாயிருப்பது
இரு அந்தமோ…?
 
கனவுக்கும் 
நடைமுறைக்கும்
மையமாய் இதயம்
கணப்பது
என்ன தர்மமோ…?
 
களைத்துப் போய்விட்டது 
கனவுகள் கரைசேர
காத்திருந்து….
 
தோற்றுப் போய்விட்டது 
நினைவுகளை
நிஜமாக்க
காத்திருந்து….
 
இத்தனைக்கும் மத்தியில்
கன்னங்களை
நனைக்கவும் முடியாமல்
நகைக்கவும் முடியாமல்
சிக்குண்டு
சின்னா பின்னமாய்
சிதறிய நிலையில்
செல்கிறது வாழ்க்கை….
 
இருளின் அமைதியில்
அழுகையும்,
பகலின் ஒளியில்
சிரிப்பும்
அன்றாட வேலையாய்
ஆயிற்று….
 
பொங்கும் முன் 
அமைதியாய் இருக்கும்
ஆழி போல
நிசப்தம் நிறம்பி
நேர்கொள்ள காத்திருக்கிறது
நெடிய நிகழ்வுக்காய்….
 
எட்டிய
உயர் அடைந்தாலும்
சறுகல்கள் மேலும்
சலிக்காமல் 
சறுக்கிறது….
 
விரக்தி முக்தியடைந்தும்
வீராப்பாய் இருக்கும்
நம்பிக்கையில் தான் 
ஓடுகிறது இவ் அற்ப வாழ்வு…..
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க