கரையொன்று கட்டுங்கள்!!

0
1279

கால் நூற்றாண்டு காலம்
கல்விக்காகவே கழிந்து விட்டது!
கால் கட்டு போடும் வயதுகளும்
காற்றொடு கரைந்து விட்டன!!

படித்தோம் படித்தோம்
முடிவில்லாத இலக்கிற்காக
விடிய விடிய படித்தோம்!

புலமைப் பரிசில் என்றார்கள்
தலையில் தூக்கி வைத்துப் படித்தோம்!
கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் ஆடும் வயதில்
தட்டி தட்டிப் புத்தகங்களில் புகுந்து தேடினோம்!!

சாதாரண தரம் என்றார்கள்
காதோரம் புகை வரப் படித்தோம்!
பதினாறு வயதுப் பருவமது
செமினாரு களிலேயே போய் விட்டது!!

உயர்தரம் என்றார்கள்
அயர்வின்றிப் படித்தோம்!!
மீசையும் ஆசையும் அரும்பும் பருவம்
ஓசையின்றி ஓடியே போய்விட்டது!!

பட்டப்படிப்பு என்றார்கள்
பல்கலைக்கழகம் என்றார்கள்
ஆவென்று ஆசையுடன் உள்ளே சென்றால்
ஆப்புகள் வாவென்று வாய் பிளந்து வரவேற்றன!!

முட்டி மோதி கட்டிப் பிரண்டு
தட்டுத்தடுமாறி
அஞ்சரை வருசத்தயும் அரியர் இல்லாமல் முடித்து
பஞ்சடைத்த கண்ணுடன் வெளியே வந்தால்….

போஸ்ட்கிரஜுவேட் செய்து
மாஸ்டர் ஆகாட்டி படிச்சதெல்லாம்
வேஸ்ட் என்றார்கள்!!

தெய்வமே!

“கல்வி கரையில்
கற்பவர் நாள் சில”
கல்விக்கு யாராவது கரையைக் கட்டுங்கள்
காலம் முழுக்க நன்றியுள்ளவர்களாய் இருப்போம்!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments