வானம் காணாத வெண்ணிலா

1
631
Screen-Shot-2019-05-27-at-18.02.37-f9c6625d

‘உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் உவள் ஒரு பெட்டய பெத்துபோட்டு.. உவளுக்கு சீதனம் குடுத்து கலியாணத்த கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..’ என்று பக்கத்து வீட்டு சௌந்தலா அடிக்கடி அலுத்துக்கொள்ளும் போதெல்லாம் ஏனோ சரோஜாவுக்கு கண்களை கரித்துக்கொண்டு கண்ணீர் தான் வரும்.

வயது ஐம்பதை தாண்டி விட்டது ஆனாலும் வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது. என்ன பெரிய ஆண்பிள்ளைகளை பெற்று பெருமை கண்டுவிட்டாள் அவள். கொஞ்சம் ஏலாது என்று சாய்ந்தாலும் ஒரு வாய் தண்ணி தரக்கூட ஒருவரும் இல்லை அப்படியான நேரங்களில் எல்லாம் ஒரு பெண் பிள்ளையை பெற்றிருக்கலாமே என்று கணவனிடம் புலம்புவாள்.

அவளின் கணவனோ ‘விசரே உமக்கு.. பழைய கதையெல்லாம் கதைச்சுக்கொண்டு.. பேசாம இரும்.. படுக்க போக முதல் தண்ணிய எடுத்தந்து வச்சிட்டு படும் எண்டு சொல்லி அலுத்து போய்ட்டு.. இதுக்கு பொம்பிள பிள்ள வேணும் என்டு விசர் கத கதயாதேயும்..’ என்பான்.

சரோஜாவும் சிவனேசனும் காதலித்து திருமணம் முடித்துக்கொண்ட போதும். அது பெற்றோரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்த திருமணம் என்பதால் வாழ்க்கை அவர்களுக்கு அவ்வளவு கஸ்டமாக இருக்கவில்லை. ‘நீ எப்பிடியோ செட்டில்
ஆகிட்ட.. உன்ர அவர் லோயர்.. நீ ரீச்சர்.. பேந்தென்னடி குறை உனக்கு..’ என்று அவளது தோழிகளும் கொஞ்சம் பொறாமைப்பட்டதுண்டு.

சரோஜாவுக்கு திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோவில் கடைத்தெரு என்று வெளியில் போகும் போதெல்லாம் குழந்தைகளை தூக்கி கொண்டு வரும் தம்பதியினரை பார்க்கையில் தானும் சீக்கிரமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்
என்று தோன்றும். அதிலும் கோவிலில் பட்டுப்பாவாடை போட்டுக்கொண்டு சின்ன கால்களில் கொலுசுச்சத்தம் சல்..சல்.. என்று கேட்க தாயின் கையை பிடித்துக் கொண்டு மற்ற கையால் பாவாடையை தூக்கி பிடித்துக் கொண்டு நடந்து வரும் பெண்
குழந்தைகளை பார்க்கும் போது சரோஜாவுக்கு ஆசை அணைமீறும். தான் பெண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று.

கோவிலுக்கு வந்தால் பெண்குழந்தை வேண்டும் என்று நேர்ந்துவிட்டு தான் போவாள். அவள் ஆசைப்படியே முதலில் கருவில் உருவானது பெண் குழந்தைதான். ஸ்கானிங் செய்து பார்த்த போது பெண்குழந்தை என்று வைத்தியர் சொன்னார். அவளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஆனால் வீட்டில் அவள் எதிர்பார்த்த அளவு மகிழ்ச்சி இருக்கவில்லை.

‘எடி பிள்ள.. எனக்கும் மூத்தவன் பெடியன்.. உனக்கும் மூத்தவன் பெடியன் தானே.. உவளுக்கு மட்டும் என்ன உப்பிடி.. புருசன்ட உழைப்பெல்லாம் சீதனத்துக்கு தான் சேத்து வக்கோனும்..’ என்று சரோஜாவின் அம்மம்மா தன் மகளிடம் புலம்பிக்கொண்டிருந்த போது அவளுக்கு அது பெரும் கவலையாக தான் இருந்தது.

 

 

 

 

 

‘சும்மா இரன அம்மா.. அவள் என்ன செய்வாள்.. கடவுள் குடுத்தது எல்லாம் பிள்ள தான்.. பின்னுக்கு அவளுக்கு வயசு போன காலத்தில ஆரும் வேண்டாமோ அவள பாக்க..’ என்று தன் தாயை சமாதானப்படுத்துவதே சரோஜாவின் தாயின் வேலையாக
இருந்தது.

சரோஜா நாளுக்கு நாள் தன் வயிற்றில் வளரும் மகள் மீது அதிக ஆசையும் எதிர்பார்ப்பும் வைக்கத் தொடங்கினாள். நல்லூர் கோவில் திருவிழாவுக்கு போக வெளிக்கிட்ட போது ‘சரோ.. இண்டைக்கு திருவிழா கடசி நாளடி பிள்ள.. நல்ல நீத்துப்பெட்டி பின்னி வைச்சிருப்பாங்கள் கடையல்வழிய.. ரெண்டு நீத்துபெட்டி வாங்கிகொண்டு வா.. மலிவா வச்சிருப்பாங்கள்..’ என்று சிவநேசனின் தாய் சொல்லி அனுப்பிய போது சரி என்று தலையாட்டிவிட்டு போனவள்.

அங்கு போனதும் பிறக்க போகும் தன் மகளுக்கு கலர் கலரா கண்ணாடி வளையல்களும் பூ வைச்ச அலஸ்பாண்டும் இன்னும் பல அலங்கார பொருட்களையும் வாங்கிக் கொண்டு சனக்கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது தாய் நீத்துப்பெட்டி வாங்க சொன்னது. பையை திறந்து துளாவினாள் ஒரு சதமும் இல்லை. கணவனிடம் ‘இஞ்ச அப்பா ஒரு நூறுவா இருந்தா தாங்கோவன்.. நீத்துப்பெட்டி வாங்க மறந்திட்டன்..’ என்று கேட்க

‘மாத்தின காசு இல்ல சரோ.. நீத்துப்பெட்டி வாங்க திரும்பவும் உந்த சனத்துக்குள்ள போக போறியோ.. பிறகு கடைல வாங்கலாம்..’ என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் சிவநேசன். நீத்துப்பெட்டி இல்லாமல் வீட்டிற்கு வந்து மாமியாரிடம் அன்று இரவு முழுவதும் வாங்கிகட்டிக் கொண்டாள்.

இப்படியிருக்கையில் ஏழாவது மாதம் தொடங்கியிருந்தது சரோஜாவுக்கு. ஒரு நாள் கிணத்தடியில் உடுப்பு அலசிவிட்டு ஊற்றிய சவர்க்கார தண்ணியில் வழுக்கி விழுந்தவளுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய அடி. அதிக ரத்தப்போக்கு.
அவளுக்கு ஏதுவும் அடியில்லை ஆனால் அவள் கனவு ஆசை எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு வயிற்றில் இருந்த குழந்தை அழிந்து விட்டது. அவளால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரொம்பவும் மனமொடிந்து போனாள்.

வீட்டிலுள்ளவர்களின் அன்பும் மருந்தும் சேர்ந்து அவள் உடலும் மனமும் குணமடைந்தாள்.

அதன் பின் ஒரு வருடத்திலேயே மீண்டும் கருவுண்டாகி முதல் குழந்தை பிறந்து விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வருட இடைவெளியில் மூன்றும் ஆண் பிள்ளைகளை பெற்றாள். ஆனாலும் ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அது பெண் குழந்தையாக இருக்க கூடாதா என்ற ஏக்கம் அவளை வாட்டியது. ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அதற்கு பிறகு பிள்ளைகள் அவர்களின் படிப்பு அவர்களின் திருமணம் என்று வாழ்க்கையில் பொறுப்புகள் கூடி வாழ்க்கை ஒரு இயந்திரம் போல் இயங்க தொடங்கி விட்டது.

 

 

 

 

 

ஆனாலும் அக்கம் பக்கத்தில் சாமத்திய வீட்டுக்கு யாரும் அழைத்து அங்கு போனால் திரும்பி வரும் போது மனம் முழுவதும் ஒரு பாரத்தை சுமந்து கொண்டு தான் வருவாள். தன் வயதொத்த பெண்கள் தமது பெண் பிள்ளைக்கு சேலைகட்டி பூச்சூட்டி
அழகுபார்த்து சாமத்தியவீடு செய்வதை பார்க்கும் போது தன்னைமீறி பொங்கி வரும் அழுகையை சில நேரங்களில் அவளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

வீட்டுக்கு வந்ததும் தகரப்பெட்டிக்குள் பத்திரமாக பூட்டி வைத்திருக்கும் அழிந்து போன அவளின் கனவை எடுத்த ஏக்கமாக பார்ப்பாள். முதல் முதலில் உருவான கரு அதுவும் பெண் குழந்தை. வயிற்றில் உருவான கருவை ஸ்கான் போட்டோ எடுத்து கொடுத்த போது அதை அடிக்கடி எடுத்து பார்த்து சந்தோசப்படுவாள். அந்த பிள்ளை இல்லையென்று ஆனவுடன் தன் பிள்ளைக்கு வாங்கிய அலங்கார பொருட்களையும் அந்த படத்தையும் கவனமாக அந்த தகரப்பெட்டிக்குள் போட்டு பூட்டி வைத்திருந்தாள். சரோஜாவின் மகன்களும் சரி கணவனும் சரி அவளுக்கு வாழ்வில் எந்தவொரு குறையும் வைக்கவில்லை. மகன்களின் திருமணம் கூட சரோஜாவின் விருப்பப்படி தான் நடந்தது.

பல நேரங்களில் தாயின் முகத்தில் காணும் ஏக்கமும் சோகமும் ஏன் என்று அந்த பெடியளுக்கு புரிவது கடினமாக இருந்தது. ‘அம்மா ஏனம்மா.. ஒரு மாதிரி இருக்கிறியள்.. உடம்புக்கு ஏதும் செய்யிதே.. டொக்டரிட்ட போவமே..’ என்று பாசத்தோடும் கவலையோடும் கேட்கும் மகனிடம் என்ன சொல்வாள் அவள். நீங்கள் மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தும் எனக்கு ஒரு பெண் பிள்ளையின் பாசம் இல்லையென்ற கவலை இருக்கிறது என்று சொல்லி மகன்மாரின் மனதை உடைப்பதா? அப்படி சொன்னால் தன்னை கண்ணைபோல் காக்கும் தன் பிள்ளைகளின் பாசத்தை குறைவாக கூறுவது போல் ஆகி விடாதா?

‘ஒண்டும் இல்லையடா தம்பி… இந்த நாரிக்கொதி பெரிய கரச்சலாக்கிடக்கு.. ஒரு இடத்தில கொஞ்ச நேரம் இருக்க ஏலுதா…’ என்று எதையாவது சொல்லி சமாளித்து விடுவாள். மகளை போல் இருந்து கவனித்துக் கொள்ளும் மருமகள்கள் அமைந்த போதும்
மருமகள் மகளாக மாட்டாளே. மருமகள் தேனீர் தர ஒரு நிமிடம் பிந்தினாலும் கூட என்ர மகளென்டா இப்படி செய்வாளா.. என்ன இருந்தாலும் இவள் மருமகள் தானே என்று நினைப்பது மாமியார் போஸ்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்
இருக்கும் மன பிரம்மை.

சரோஜாவுக்கும் அப்படி தான். மகள் என்ற ஒரு விடயம் அவளுக்கு நோய் போல் அவள் மனதை பலவீனமாக்கி அவளை அழித்துக் கொண்டிருந்தது. அவளின் கவலையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவநேசன் கூட மனைவியின் மனதை அறியவில்லை.

அன்று வீட்டில் சரோஜா மட்டுமே இருந்தாள். சிவநேசனின் சினேகிதர் ஒருவனின் மகளின் திருமண வீட்டிற்கு அனைவரும் போயிருந்தனர். அங்கு போனாலும் சிவநேசனின் சினேகிதரின் மனைவி தன் மகளை பற்றி ஏதாவது பெருமை பேசக்கூடும் அதை தன்னால் தாங்க முடியாது என்ற எண்ணத்தில் ‘எனக்கு கால் ரெண்டும் ஒரே நோவாக்கிடக்குதப்பா.. நீங்கள் எல்லாரும் போட்டு வாங்கோவன்..’ என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.

எல்லோரும் போன பின் தகரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் விறாந்தையில் உட்கார்ந்தாள். அதை திறந்து பார்த்தாள். எத்தனையோ வருடங்களுக்கு முன் நல்லூர் கந்தன் ஆலய வளவில் இருந்த கடையில் வாங்கிய கலர் கலரான வளையல்கள்
கண்ணை கூசின. வளையல்களை எடுத்து கையில் வைத்து கிலுக்கி பார்த்தாள்.

‘நல்லூர் கந்தா.. உனக்கு கூட என்ர பிள்ளய காப்பாத்த அண்டைக்கு மனமில்லாம போய்ட்டு.. என்ன..’ என்று நினைத்து விரக்தியோடு புன்னகைத்துவிட்டு. அந்த படத்தை எடுத்து பார்த்தாள். ஏதோ ஒரு வடிவத்தில் கருப்பும்வெள்ளையுமான நிறத்தில் இருந்தது. அவளது வயிற்றை ஸ்கான் பண்ணி எடுத்த படம். கண்கள் மங்கின சரோஜாவுக்கு. கீழே நிலத்தில் இருந்தவள் பக்கத்தில் இருந்து கதிரையின் கைபிடியில் ஊன்றி எழுந்திருக்க முயன்றால் முடியவில்லை. அப்படியே பொத்தென்று விழுந்து உட்கார்ந்து விட்டாள் முடியாமல்.

 

 

 

 

 

‘அம்மா எழும்புங்கோவன்..’ என்று சின்ன குரல் அவள் காதுகளின் தேனாய் பாய்ந்தது. அவளால் பேச முடியவில்லை பார்வை மங்கலாக இருந்தது. முன்னால் யாரோ நிற்பது போல் இருந்தது அவளுக்கு தன் சாயலில்.

‘அம்மா.. நிலத்தில இருக்காதேங்கோ.. வாங்க உள்ள கட்டில்ல வந்து படுங்கோவன்..’ என்று சொல்லி அவள் கையை யாரோ பற்றி தூக்கினார்கள். மென்மையான அந்த கைகளின் ஸ்பரிஸம் அவளை சிலிர்க்க வைத்தது. சரோஜா மெல்ல அந்த கைகளின்
உதவியுடன் மெல்ல எழுந்து உள்ளே அறைக்குள் போய் கட்டிலில் படுத்தாள்.

கண்கள் மேலும் மங்கிக் கொண்டு வந்தது. எதிரில் தெரிந்த அவள் சாயலிலான அந்த உருவம் மறைந்து கொண்டே போனது. அவளும் கண்களை மூடினாள். நண்பன் வீட்டு திருமண நிகழ்வு முடிந்து சிவநேசனும் பிள்ளைகளும் வீட்டுக்கு வந்த போது சரோஜா உறங்கிகொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் சரோஜா எழுந்திருக்கவில்லை.

மாமியாரை எழுப்பவென்று போன சரோஜாவின் மூத்த மருமகள் கூச்சலிட்டாள். எல்லோரும் ஓடி வந்து பார்க்க அப்போது தான் தெரிந்தது சரோஜா நிரந்தரமாக உறங்கி விட்டிருந்தாள். அவளின் கடைசி மகள் தாயின் கையில் எதையோ பற்றி பிடித்தபடி இருப்பதை கண்டு அதை கையிலிருந்து மெல்ல எடுத்து தகப்பனிடம் கொடுத்தான். ‘என்னப்பா இது.. அம்மா.. இத வச்சிக்கொண்டு படுத்திருக்கிறா… ஆர்டப்பா.. இது..? என்றான் அழுதபடி.

‘கடவுளே.. என்ர ராசாத்தி.. இவ்வளவு காலமா இத நினைச்சு ஏங்கிட்டு இருந்தியா நீ.. நானொரு விசரன்.. உன்ர மனசில இருக்கிறத என்னன்டு கூட கேக்காம இருந்திட்டனே..’ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் சிவநேசன்.

அந்த ஆடம்பரமான பெரிய வீடு முழுவதும் அழுகை சத்தம் எதிரொலித்தது. சரோஜாவின் கையிலிருந்த படத்தை தவிர அவள் மட்டுமே ஆசையாய் பார்த்து பாதுகாத்த அந்த தகரப்பெட்டியும் அதிலிருந்த அலங்காரப்பொருட்களும் அங்கு இருக்கவில்லை.

-சபீனா சோமசுந்தரம்-

 

 

 

 

 

4 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

பெண்குழந்தை அடைந்தால் உண்மையில் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள் பெற்றோர்கள். அழகான கதை. கடைசியில் அந்த அம்மா கையில் வளையல் மட்டுந்தானே? மீதப்பொருட்கள் மாயமானதை மர்மமாக்கியிருக்கின்றீர்கள்?