நான் கோபமா இருக்கேன்

0
833

 

 

 

 

 

நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத போதும் நம் கருத்தினை மறுதலித்து வேறு கருத்து சரியாக (?) உரைக்கும்போதும் நம்மிடையே பொருந்தாத நேர் மறை எண்ணங்களை உறுதிப்படுத்த விளையும் போதும் நம்மில் பலருக்கு நம் தொனியை சற்று உயர்த்தி இன்னும் சிலர் அதற்கு மேலே கத்திப்பேசுவதையும் அவதானித்திருக்கிறோம். அது கோபத்தின் விளைவு என ஒவ்வொரு தரப்பும் பின்னொரு பொழுதில் சமாதானமும் செய்து கொள்கிறோம்.கோபம் ஒரு சாத்தானாக மாறி நம்மை அழிப்பதையும் நம் கண்ணெதிரிலே அதிகம் பார்த்த கதைகளும் உண்டு. அன்றுதொட்டு இன்று வரை மனதையும் கோபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அனைவரினதும் பெரும் சவாலாக இருக்கிறது. மேலும் இதை படிக்கும் உங்களுக்கும் மூக்கின் மேல் கோபம் வரக்கூடிய நபரென்றால் அனைவரும் சராசரிக்குள்தான் சேர்த்தி.

சரி இந்தப்பதிவில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இன்னும் பகிரவில்லை. இன்று எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் சில வரிகளை முகநூல் குழுமத்தில் ஒருவர் பதிவிட்டதை கடந்தபோதுதான் உண்மை எனத் தோன்றியது. அதனை படித்ததும் பகிராமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் என் கோபங்களிற்கான சாயல்கள் பெருமளவு பொதிந்திருக்கின்றன. நான் எந்த விடயத்தில் கோபப்படுகின்றேனோ அந்த விடயத்தை மீளவும் வலியுறுத்தமாட்டேன். கிஞ்சித்தும் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்கமாட்டேன். முற்றுமுழுதாக புறக்கணித்து விடுவேன். அந்த கோபம் வருத்தமாக உருவெடுத்து அவர்களின் மீதான மெல்லிய கோட்டிலேயே என்னை பயணப்பட வைத்திருக்கின்றது. இன்னும் பயணப்படவைத்துக் கொண்டுமிருக்கின்றது.ஆயிரம் நன்றிகள். அத்தகைய புத்தியும் புத்தியில் தெளிவும் தெளிவில் பணிவும் படைத்தவன் தரும்போது உள்வாங்கும் உள்ளமே உனக்கு ஆயிரம் நன்றிகள். சரி எழுத்தாளர் பாலகுமாரனின் பதிவை உங்களோடு பகிர்கிறேன். இது அவர் எழுதிய அகல்யா நாவலினுடையது.

புறக்கணிப்பதுதான் முழுமையான கோபம். உன்னோடு பேசி பிரயோஜனமில்லை என்று ஒதுங்குவதுதான் சரியான பனிஷ்மென்ட். நிறையப்பேர் உரக்கச் சண்டை போடுவாங்க. கேட்டா கோபன்னுவாங்க. உரக்க சண்டை போடக் காரணம் கோபமில்லை. வேற ‘அசூயை’. கோபம் வேற, கோபம்ங்கறது ரொம்ப உயர்ந்த விஷயம். மனிதர்கள் மேல் அன்பும், ‘உனக்குப் புரியவில்லையே’ என்கிற பரிதாபமும் ஒன்று சேர்ந்து கோபமா வரும். உடனே புறக்கணிக்கத்தான் தோணும். கோபம் ஹிம்சை செய்யாது புறக்கணிக்கும்.

நம்முடைய கோபத்தின் நடுநிலைத்தன்மைகளை நாமே எடை போட்டு பார்ப்போமே! நம்மை நாமே பரிசீலிப்பது தப்பு ஒண்ணும் இல்லையே…!!

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க