தோழி

0
775

பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்
மூலையில் மழைக்கு ஒதுங்கும்
நடைபயணியைப்போல
மனசுக்குள் எங்கோ ஓரிடத்தில்
உறங்கித்தான் கிடக்குது
அப்போதெல்லாம்
வாட்சப் இல்ல
பேஸ்புக் இல்ல
இலவசமாய் கொட்டிக்கிடக்கும்
குறுஞ்செய்தி வசதிகளும் இல்ல
மணித்தியாலங்களாய் கோல் செய்து
கதைப்பதற்கும்
அப்போது எந்த நெட்வேர்க்கும்
வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல


ஆனாலும் அப்போதெல்லாம் பேசுவதற்கு
நிறையவே என கதைகள் இருந்தன
குறைந்தபட்சமாய் நேரங்கள் இருந்தன
எப்போது பொழுது விடியும் என ஏக்கங்கள் இருந்தன
விடுமுறைகள் எங்களுக்கு வேண்டாமென இருந்தன
ஆனால்,
நினைத்தபோது க்ளாஸிற்கு
கட்டடித்து படம்பார்க்கவும்
பொழுதுகள் தேவைப்பட்டன

காரணமின்றி சிரித்தோம்
ரகசியப்பெயர்கள் சூட்டிக்கொண்டோம்
ஆசிரியர்கள் ஏச்சுக்கு
கண்ணீர் சிந்தினோம்
அடுத்த நொடியே மறந்தும் போனோம்
அப்போதெல்லாம் எங்கள் கைகளில்
கவலைகள் இல்லை
மனங்களில் பாரமில்லை
ஒரே வகுப்பில் அமர வேண்டி
உயர்தரத்தில் ஒரே க்ரூப் எடுத்தோம்
ஒன்றாய் வீடுகட்டி வாழ்வோம் என கனவு கண்டோம்

ரகசியங்கள் இல்லை நமக்குள்
காரணம் அழும்போதெல்லாம் துடைத்துவிட
நம் கைகள்தான் கைக்குட்டை நமக்கு
சீரியஸ் நமக்கு செட்டாகாதென
சிரித்தே மழுப்புவோம்
சந்தோஷமாய் இருக்கவே
எப்போதும் காரணம் தேடுவோம்
எல்லாமே பதினெட்டுக்கணக்குதான்
இப்போதென்னவோ ஆளுக்கு ரெண்டு பிள்ளைதான்

வயசும் கூட பொறுப்பும் கூடிடுச்சு
என் புருஷன் என் பிள்ளை என் குடும்பம்னு
என்னென்னமோ முந்திடுச்சு
வருஷத்துக்கு ஒருமுறையாச்சும் நேருல பார்க்கணும்
ஒண்ணா இலை போட்டு ஆள்மாறி நாம ஊட்டிக்கணும்
பேசின பேச்செல்லாம்
எங்கேயோ ஓடிடுச்சு
போன் இருக்கு
வாட்சப் இருக்கு
மணிக்கணக்கா பேச போனிலயும் ப்ரீ இருக்கு
ஆனாலும்
பொழுதொன்னும் கூடுதில்ல
பொறுப்பொண்ணும் குறையுதில்ல
நம்ம பிள்ளை வளர்ந்து
என் உயிர்த் தோழி இவதான் மம்மீனு சொல்லுறப்போ
ஏனோ மனசு மூலைல மெல்லத்தான் வலிக்குது
கண்ணுந்தான் கரிக்குது


0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க