துளசி தளம்

0
1528

காஷ்மோரா! இந்தப் பெயரைக் கேட்டதுமே நெஞ்சுக் கூட்டில் ஒரு நடுக்கம் வருகிறதென்றால் அதற்குக் காரணம் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசி தளமும் மீண்டும் துளசியும். கண்கள் விரிய மூச்சு முட்ட பாதி புரிந்தும் பல புரியாத நிலையில் நான் தரம் எட்டில் வாசிக்க நேர்ந்த ஓர் அற்புதமான நாவல். அதன் பின் ஓர் ஐந்து தடவைகளாவது வாசித்திருப்பேன்.

காஷ்மோரோ எனும் பூத தேவதை பற்றியும் அது எத்தகைய நிலையில் ஏவப்படுகின்றது, கடவுளையே நம்பாத மனிதனொருவன் அந்த காஷ்மோராவை எப்படி வெற்றி கொள்கிறான் என்றும் அந்த எழுத்து மாயைக்குள்ளேயே தடம் புரட்டி விடுவார் நாவலாசிரியர். ஆனால் முதல் நாவல் முற்றுப் பெறும் போதுதான் நமக்குத் தெரிய வரும் அதிருப்தியடைந்து உயிரை கொல்லாமல் போன காஷ்மோரா அன்றிலிருந்து சரியாக பதினொரு வருடங்கள் துயில் களைந்த நிலையில் கடும் ஆக்ரோஷமாய் வெளி வருமென்றும் அப்போது காஷ்மோரோ ஏவப்பட்ட மனிதன் எவ்வாறெல்லாம் அவஸ்தைப்படுகிறான் அந்த நிலையோடு ஹிப்னாடிஸமும் சேர்ந்து கொண்டால்… அப்பப்பா!.. ஒரு நாவல் இப்படி மூச்சுத் திணற வைக்குமா என்ன! இப்போதும் காத்ரா, தார்க்கா, துளசி, சாரதா, சிறீதர், ஜெயதேவ், நம்பூதிரி, இஸ்மாயீல், பக்கீர் .. இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய சுவாரஷ்ய கதாபாத்திரங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

உண்மையை சொல்லப் போனால் அந்த நாவலின் சுவாரஷ்யத்தை இன்று வரை எந்த ஒரு திகில் திரைப்படங்களிலும் நான் காணவில்லை. சில எழுத்துக்கள் காரணமில்லாமல் கொண்டாடப்படலாம் சில அர்த்தமில்லா திரைக்கதைகளை போல. ஆனாலும் இந்த மொழி பெயர்ப்பு நாவல் மனிதனின் சின்னச் சின்ன விடயங்களில் விரவிக் கிடக்கும் மூட நம்பிக்கை தொட்டு மனித மனதின் அந்தரங்கத்தை இடித்துக் காட்டி சில விடயங்களை பழிக்கிறாற் போன்ற வித்தையையும் நாவலாசிரியர் செய்கிறார். 

துளசி தளம் ஒரு ரகம் என்றால் மீண்டும் துளசி இன்னுமொரு ரகம். பத்து வயதுக் குழந்தையாய் வலம் வரும் துளசி மீண்டும் 21 வயதுப் பெண்ணாய் நாவல் முழுக்க வளைய வருவாள். எதற்கு தண்டிக்கப்படுகிறோம் எனத் தெரியாமலே மீண்டும் காஷ்மோரோ துயில் களைந்த நிலையில் அவனை பிடித்துக் கொள்ளும்.

முதல் பாகத்தில் காத்ரா மந்திரவாதியின் கொலையோடு முற்றுப் பெறும் நாவல் இரண்டாம் பாகத்தில் அந்தக் கொலையின் பழிவாங்குதலுக்கான கதை என ஆரம்பித்துக் கொண்டு செல்லும். தார்க்கா எனும் புது மந்திரவாதி நமக்கு அறிமுகமாவான். எங்கோ ஓரிடத்தில் பிறந்து வளர்ந்த ஓர் இளம் மாந்திரீகனுக்கும் நகரத்துப் பெண்ணான துளசிக்கும் இடையில் வரும் உரையாடல்கள் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள். நாவல் முழுக்க நம்பிக்கையும் விஞ்ஞானமும் சரி விகிதத்தில் பயணப்படும். நாவலின் ஸ்திரத்தன்மையே முதல் பாக சுவாரஷ்யம் சிறிதும் கெடாத இரண்டாம் பாகமாய் அமைவதுதான்!

எத்தனையோ முடிச்சுக்களை அவிழ்க்காமல் இறுதி வரை நகர்ந்து கொண்டிருக்கும் திகில், மர்மம் இரண்டுமே நாவலின் பெரும் பலம்!‘மீண்டும் துளசி’ வாசகர்களுக்கு நல்லதொரு விருந்து!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க