தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்

4
1004
Selva drawing-d412aec4

தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான
சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்

என்.செல்வராஜா, நூலகவியலாளர் (லண்டன்)

இன்று நாம் வாழும் பதிப்புலகச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறமும் காணப்படும் பதின்மூன்று இலக்கத் தொடரையே சர்வதேச நியம நூல் இலக்கம் அல்லது International Standard Book Number (ISBN) என்று குறிப்பிடுகின்றோம். எழுபதுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, உலகெங்கும் அந்தந்த நாட்டுத் தேசிய நூலகங்களாலும் வெளியீட்டு முகவர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின்படி மொழிவழியாகவன்றி, குறியீட்டு இலக்கங்களின் மூலம்; ஒரு நூலின் முக்கியமான சில நூலியல் தகவல்களைப்; பரிமாறிக்கொள்ள முடிகின்றது.

சர்வதேச நியம நூல் இலக்கம் பற்றிய விபரங்களையும் பயன்பாட்டையும் தெளிவுபடுத்துவதும், தமிழ் வெளியீடுகளுக்கு இந்த ISBN இலக்கத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களை வழங்கி எழுத்தாளர்களையும் பதிப்பகங்களையும் ஊக்குவிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ISBN இலக்கம் வழங்கும் முறையானது ஜெனிவாவிலுள்ள சர்வதேச தராதர நிறுவனத்தினால் International Standard Organisation (ISO 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னர் நூல் வெளியீட்டகங்கள், தத்தமது வெளியீடுகளை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அடையாளக் குறியீடுகளை வழங்கி வந்துள்ளன. நிறுவனங்களுக்கிடையே இவ்வகையான தனிப்பட்ட இலக்கம் வழங்கும் முறையில் இருந்த வேறுபாடுகள், நூலீட்டல் கடமைகளில் ஈடுபடும் நூலகர்களுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும் பல நடைமுறைச் சிக்கல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளன.

1960களின் பிற்பகுதியில் கணனியின் பாவனை நூல் வர்த்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நூல் வெளியீட்டகங்கள் தமது நூலியல் தரவுகளைக் கணனிமயப்படுத்துவதில் அக்கறை கொண்டனர். அவ்வேளையில் குறியீட்டு எண் வழங்கலில் பொதுவானதொரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் கருதினர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்தாபனத்தின் மூலமே இத்தகைய குறியீட்டு இலக்கங்களை வழங்க அதிகாரமளிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதன் பயனாக ஜெனீவாவில் 1972ஆம் ஆண்டு சர்வதேச தராதர ஸ்தாபனம் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஐக்கிய இராச்சியத்தில் 1967 ஆம் ஆண்டில் ‘விட்டேக்கர் நிறுவனத்தால்’ மேற்கொள்ளப்பட்டு வந்த நூல்களுக்குக் குறியீட்டு எண் வழங்கும் முறையினை சில மாற்றங்களுடன் சர்வதேச நியம நூல் இலக்கம் வழங்குவதற்கும் ஏற்றுக்கொண்டனர்.

இன்று இலங்கையில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறத்திலும் காணப்படும் பத்து அல்லது பதின்மூன்று இலக்கத் தொடரையே சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) என்று குறிப்பிடுகின்றோம். எழுபதுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, உலகெங்கும் அந்தந்த நாட்டுத் தேசிய நூலகங்களாலும் வெளியீட்டு முகவர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் மொழிவழியாகவன்றி, இலக்கங்களால் ஒரு நூலின் குறிப்பிட்ட சில வர்த்தகத் தகவல்களைப் பதிவு செய்து வைப்பதன் மூலம் அனைத்துலகரீதியாக மொழித்தடையைத் தாண்டி குறித்தவொரு நூலுக்கான ஒரு நூலியல் அடையாளத்தை, அல்லது நூல் பற்றிய தகவலைப் பரிமாறிக்கொள்ள முடிகின்றது.

ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் 2006 வரை ISBN நியம எண் 10 இலக்கங்களையே கொண்டிருந்தது. தகவல் மூலங்களின் பௌதிக அமைப்பை வேறுபடுத்தும் வகையில் ஜனவரி 2007 முதல் மூன்று இலக்கங்கள் முன்னால் சேர்க்கப்பட்டு இப்போது 13 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றது.

சர்வதேச நியம நூல் இலக்கம் ஐந்து பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி பௌதிக அமைப்பையும், இரண்டாவது பகுதி நூல் வெளியிடப்பட்ட நாட்டையும் (பிராந்தியத்தையும்) குறிக்கும். மூன்றாவது பகுதி அந்த நூலின் வெளியீட்டு உரிமையுள்ள வெளியீட்டாளரைக் குறிக்கும். நான்காவது பகுதி நூலின் தலைப்பைக் குறிக்கும். இறுதிப் பகுதி பரிசோதனை இலக்கம் எனப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தொகுதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச நியம நூல் இலக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சர்வதேச தராதர நிறுவனத்தின் பிரதிநிதியாக விளங்கும் தேசிய நூலகத்தினால் மட்டுமே வழங்கப்படும்.

பௌதிக அம்சத்தைக் குறிக்கும் முதலாவது பிரிவில் உள்ள மூன்று இலக்க எண் 977, 978 அல்லது 979 ஆக அமைகின்றன. இதில் 978- நூல் வடிவத்தையும், 977- சஞ்சிகை வடிவத்தையும், 979- ஒலி/இசை வடிவத்தையும் குறிக்கும்.

ஜெனீவாவில் இயங்கும் தலைமை நிலையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இலக்கம் வழங்கப்படுகின்றது. அதுவே அந்த நாட்டுக்குரிய தனித்துவ எண்ணாகக் கருதப்பட்டு சர்வதேச நியம நூல் இலக்கத்தின்; இரண்டாவது பகுதியில் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை 1986ம் ஆண்டு நடுப்பகுதியில் சர்வதேச தராதர நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவ எண் 955 என்பதாகும். இலங்கையில் வெளியாகும் நூல்கள் அனைத்தினதும் நியம எண் 955 இல் ஆரம்பமாவதை அவதானிக்கலாம்.

மூன்றாவது பிரிவு இலக்கமான வெளியீட்டாளர் இலக்கம், அந்த நாட்டில் பதிவு பெற்ற வெளியீட்டாளருக்கு வழங்கப்படும் தொடர் இலக்கமாகும். இலங்கையில் பெரும்பாலானவர்கள் தமது நூலை தாமே அச்சிட்டு வெளியிட்டுக் கொள்கிறார்கள். இவர்களை ஆசிரிய/வெளியீட்டாளர்கள் அல்லது தனியார் வெளியீட்டாளர்கள் என்போம். ISBN இலக்கம் பெறுவதற்காக ஒருவர் தமது வெளியீட்டு நிறுவனத்தை அல்லது தம்மை ஒரு வெளியீட்டாளராகப் பதிவு செய்து கொள்வது சிரமமானதொரு காரியமில்லை. ISBN இலக்கத்தை பெற விண்ணப்பிக்கும்போதே அவர் தனக்குரிய பதிப்பாளர் இலக்கத்தை பெற்றுக்கொள்வார். அதன் பின்னர் ISBN இலக்கத்தில் காணப்படும் அந்த மூன்றாவது பிரிவில் உள்ள இலக்கமே அவருக்கேயுரிய தனித்துவமான வெளியீட்டாளர் இலக்கமாகும்.

ISBN இலக்கத்தை தனத நூலுக்காகப் பெற விரும்புவோர் முதலில் கொழும்பில் உள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையுடன் (The National Agency – ISBN, National Library and Documentation Services Board, No.14, Independence Avenue, Colombo 7) தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து நான்கு பக்க விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. அவ்விண்ணப்பப் படிவத்தில் ஆசிரிய/வெளியீட்டாளரின் (Author/Publisher) பெயர், முகவரி, கடந்த காலங்களில் வெளியிட்ட நூல்கள், திட்டமிடப்பட்டுள்ள நூல்கள் போன்றவை தொடர்பான எளிமையான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். தேசிய நூலகத்தின் இணையத் தளத்தில் (தொலைபேசி இலக்கம்: 0094- 113610773; மின்னஞ்சல்: [email protected]) விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ரூபா 100 சேவைக் கட்டணம் செலுத்தப்படவேண்டும். இக்கட்டணம் காலத்துக்குக் காலம் சிறிதளவு வேறுபடுவதால் சரியான தொகையை உறுதிசெய்த பின்னர் தேசிய நூலக நிதிப் பிரிவில் வைப்பிலிட்டு, பற்றுச்சீட்டை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து ஒப்படைக்கவேண்டும்.

ஒரு ஆசிரிய/வெளியீட்டாளர் தனது நூலை அச்சிடும் நாட்டிலேயே தம்மைப் பதிவுசெய்துகொள்வது நல்லது. இலங்கையில் உள்ளூர் ISBN இலக்கத்துக்கு கூடிய நூல்தேர்வுச் சலுகைகள் உள்ளன. இதனை புலம்பெயர் தமிழ் படைப்பாளிகள் கவனத்தில் கொள்வது நல்லது. சர்வதேச நியம நூல் இலக்கம், வெளியீட்டாளரையும் அவரது நூலின் எண்ணிக்கையையும் முதன்மைப்படுத்தியே வழங்கப்படுகிறது.

குறிப்பிட்டதொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்பட்ட இலக்கம் எக்காரணம் கொண்டும் அந்நாட்டில் மற்றொரு வெளியீட்டாளருக்கு வழங்கப்படமாட்டாது. ஆசிரிய வெளியீட்டாளரும் தனக்கெனப் பெற்றுக்கொண்ட இலக்கத்தை பிறருக்கு வழங்கக்கூடாது. வெளியீட்டாளர் தான் ஒரு நூலை வெளியிடத் தீர்மானித்ததும் அச்சகத்துக்குக் கையெழுத்துப் பிரதியை அனுப்பும் முன்னர் சர்வதேச நியம நூல் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும்.

சில நூல்கள் நூலகப் பதிப்பு, சாதாரண பதிப்பு என்று இரு வகையில் வெளியிடப்படுவதுண்டு. ஒரே நூலின் சாதாரண பதிப்புக்கும் நூலகப் பதிப்புக்கும் வேறு சர்வதேச நியம நூல் இலக்கம் வழங்கப்படும்.

ஒரு நூல் வெளியிடப்பட்டு சில காலங்களின் பின் அதன் இரண்டாவது பதிப்பு மாற்றமெதுவுமின்றி ‘மீள் பிரசுரமாக’ வெளியிடப்பட்டால் (Reprint) முதலாம் பதிப்புக்கு வழங்கப்பட்ட நூல் இலக்கத்தையே மறுபதிப்பு நூலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் மாற்றங்களுடன் திருத்திய பதிப்பாக (Revised Edition) வெளியிடப்படுமேயானால், அல்லது முன்னைய பதிப்பிலிருந்து வேறு பட்ட மட்டை கட்டும் முறை பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, வேறு எழுத்துருக்கள் மாற்றப்பட்டிருந்தாலோ, நூல் புதிய தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தாலோ அது திருத்திய பதிப்பாகக் கணக்கிடப்பட்டுப் புதிய சர்வதேச நியம நூல் இலக்கம் பெறப்படவேண்டும்.

குறித்த வெளியீட்டாளர் வெளியிட்ட முன்னைய ISBN பதிவுபெற்ற நூல்களின் தொடர் இலக்க ஒழுங்கில் நான்காவது பிரிவு இலக்கம் தரப்படுகின்றது. அந்த இலக்கப் பிரிவைப் பார்த்து வெளியீட்டகத்தின் அல்லது ஆசிரிய/ வெளியீட்டாளரின் எத்தனையாவது நூல் அது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச நியம நூல் இலக்கம், பின்வரும் உருவ அமைப்புள்ள வெளியீடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது. நாட்குறிப்புகள் (Diaries), கலண்டர்கள், விளம்பரப் பிரசுரங்கள், நாடக கலை நிகழ்ச்சி நிரல்கள், நிறுவன வழிகாட்டிகள் (Prospectus), தலைப்புப் பக்கம், விளக்கம் போன்றவற்றைக் கொண்டிராத படங்கள், ஒலி, ஒளிப்பதிவுகள், ஆண்டு மலர்கள், நினைவஞ்சலி மலர்கள் (கல்வெட்டுகள்) ஆகியன இதில் அடங்கும்.

சஞ்சிகைகள், பருவ வெளியீடுகள் (ஆண்டு மலர்கள்) என்பன ISBN இலக்கத்தைப் பெறத் தகுதியற்றவையாகும். சஞ்சிகைகளைப் பொறுத்த மட்டில் அதற்கென பிரத்தியேகமாக, சர்வதேச பருவ வெளியீட்டு நியம எண் (ISSN) வழங்கும் திட்டம் அமுலிலுள்ளது. இரு பிரிவுகளைக் கொண்ட எட்டு இலக்கங்களால் ஆன ISSN இலக்கம் பருவ வெளியீடுகளுக்கு வழங்கப்படுகின்றன. ISBN இலக்கம் போலல்லாது, ஒரு தடவை மாத்திரமே இவ்விலக்கம் குறித்த பருவ வெளியீட்டுக்கு வழங்கப்படும். நூலியல் மற்றும் வெளியீட்டுத் தகவல்கள் மாறாத வரையில் ஒரே இலக்கத்தை சஞ்சிகை இதழ்களுக்கு வழங்கிவரலாம்.

திரைப் படங்கள், ஒலி, ஒளிப்பதிவுகள் போன்றவற்றுக்குப் பிரதிதயோகமாக (ISMN) வழங்கும் திட்டமும் அமுலிலுள்ளது.

தராதர இலக்கத் தொகுதியின் இறுதிப் பிரிவு (நான்காவது பிரிவு) 10 இலக்கங்களுக்குள் அடங்கும் பரிசோதனை இலக்கமாகும். முன்னைய நான்கு பிரிவு இலக்கங்களும் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஒரு கட்டளை விதி (Formula) மூலம் அறிந்து கொள்வதற்காக இப்பிரிவு இலக்கம் தேசிய நூலகத்தினால் பயன்படுத்தப்படும். இவ்விலக்கம் எப்போதும் 0 முதல் 9 வரையிலாக ஒற்றை இலக்கமாகவே காணப்படும். 10ஆவது இலக்கத்தை ‘x’ என்ற ரோமன் இலக்கத்தால் குறிப்பிடுவர்.

சர்வதேச நியம நூல் இலக்கம் வழங்குவதால் ஒரு ஈழத்து ஆசிரிய, வெளியீட்டாளருக்குக் கிட்டும் நன்மைகள் என்ன? சர்வதேச நியம நூல் இலக்கம், நவீனமயப்படுத்தப்பட்டு வரும் தேசிய நூல்வெளியீட்டுத்துறையில் குறித்த ஆசிரிய வெளியீட்டாளரையும் இணைத்துக்கொள்கின்றது. இலங்கை நூலகங்களில் நூற் தேர்வு நடவடிக்கைகளின்போது உங்களுடைய நூலை அடையாளப்படுத்த ISBN இலக்கமே பயன்படுத்தப்படும் நிலை படிப்படியாக ஏற்படுகின்றது. எமது வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை சர்வதேச ரீதியில் மின் ஊடகங்களின் வாயிலாக சந்தைப்படுத்த மிக நல்ல வாய்ப்பும் கிட்டுகின்றது. இன்று இலங்கையின் சாகித்திய மண்டலப்பரிசு உள்ளிட்ட பல தேசிய மட்ட தேர்வுகளில் சர்வதேச நியம நூல் இலக்கம் இல்லாத நூல்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.

சர்வதேச நியம நூல் இலக்கம் பெற்றதும் அவ்விலக்கத்தை நூலின் பின்புற அட்டையில் வலது புற கீழ் மூலையில் தெளிவாக அச்சிடல் வேண்டும். இது 10 பொயின்ட் எழுத்திற்குக் குறையாமலும், 14 பொயின்ட் எழுத்துக்குக் கூடாமலும் அச்சிடப்பட வேண்டும் என்பதும் நூலியல் விதியாகும். மேற்குறிப்பிட்ட இடத்தில் அச்சிட முடியாமல் போகுமிடத்து தெளிவாகத் தெரியக் கூடியவாறு மட்டையின் வேறொரு பகுதியிலும் அச்சிடலாம். மேலும் இவ்விலக்கம் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்திலும் (Verso) அச்சிடல் அத்தியாவசியமானது. ISBN என்ற நான்கு ஆங்கில எழுத்துக்களுடன் நூலுக்கான எண்ணை அதன் ஐந்து பிரிவுகளையும் வேறுபடுத்தத் தக்கவாறு குறுக்குக்கோடிட்டு அச்சிட வேண்டும். நூலுக்கு மேலுறை (Jacket) இடப்பட்டு விற்பனை செய்யப்படுமிடத்து அந்த மேலுறையிலும் இவ்விலக்கம் தவறாது பொறிக்கப்படல் வேண்டும். இன்றைய கணனி யுகத்தில் ISBN இலக்கத்தை அதற்குரிய இலத்திரனியல் கோட்டுக்குறியுடன் (Barcode) அச்சகங்களால் அச்சிட்டுப் பெறமுடியும்.

ISBN இலக்கமிடப்படாத நூல்கள் தேசிய நூலகக் கொள்வனவுக்கும் பல்வேறு தேசியரீதியான பரிசுத் திட்டங்களுக்குள்ளும் உள்வாங்கப்படமாட்டாது என்பதன் காரணமாக, படிப்படியாக ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு வெளிவரும் நூல்கள் இலங்கையில் அதிகரித்தவண்ணம் உள்ளன. ஒரு நூலுக்குரிய ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அதிக நூலகங்களை அந்நூல் சென்றடைய வழிசெய்வதா இல்லையேல், அவ்விலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் தனது நுலை அச்சிட்டு வெளியிடுவதா என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமை நூலாசிரியருக்கே உரியது. ஒருவர் தனது நூலை வெளியீட்டாளர் ஒருவரின் வாயிலாக வெளியிடமுனையும்போது, அத்தீர்மானம் வெளியீட்டகத்தால் எடுக்கப்படுகின்றது.

(22.09.2020)

5 2 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
4 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Thanks for sharing very useful article.

Gobikrishna D
பதிலளிக்க  Nadarajah Selvarajah
3 years ago

Sure sir…

User Avatar
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மையாகவே தற்போது எழுதுகின்ற இளம் எழுத்தாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். மூத்தவர்கள் தமது துறையில் கால்பதிக்கும் இளையவர்களை பாராட்டி அவர்களுக்கு வழிகாட்டுவது என்பது மிக அரிது. தங்களுடைய இந்த வழிகாட்டுதல் மிகவும் பாராட்டுக்குரியது. எனது வாழ்த்துக்களும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும்.