தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்

0
2292

காரிருள் மேகம் போல்
நீண்டு படர்ந்திருந்த
கூந்தலில் 

அழகாய் செருகி இருந்த
சிவந்த ரோஜாவின்
இதழ்களுக்குள் 

இன்னமும் எஞ்சியிருந்த
ஈரம் மின்னியது..
பகலவனும் தீண்ட அஞ்சும்
அவள் தேகம் போல்.. 

வேலை ஒன்றின்
அதீத ஆர்வத்தில்
இணைந்து விட
எண்ணிக் கொண்டு
வேட்கையுடன் ஏறி அமர்ந்தாள்..
வேறோர் உலகம் நோக்கி.. 

கூட்ட நெரிசலில்
சிக்கி திணறி
நுழைந்த நொடியே
உற்று நோக்கினாள்.. 

வெறுமனே நால்வர்
அமர்ந்திருந்த
பேருந்தின் நிலை
புகைப்படமாய்
அவள் கண் முன்.. 

இதற்கா இத்தனை
இடிகளும் பிடிகளும்..
மருகி நின்றாள்
மான் விழியாள்.. 

ஜன்னலோரம் இருக்கை
ஒன்றில் இயல்பாய்
சரிந்து கொண்டாள்.. 

வேலையில் லயித்து
அதற்கான யோசனை
கொண்டு….

இரவின் பிடியில்
சிக்கி திணறும்
கனவுகளோடு
உறக்கமும்.. 

உலகம் மறந்து
கண் அயர்ந்தாள்
நிலவொளியில்
நிலா மகளாய்… 

தூக்கத்தில்
கையருகே
சீண்டி பார்த்த
கரப்பான் பூச்சி.. 

தட்டி விட்டும்
தேடி வந்தது..
இம்முறை
கால்களுக்கு.. 

தூக்கியெறிய முயன்று
கண் திறந்து
தொட்டுணர்ந்து
திடுக்கிட்டாள்.. 

ஊர்ந்தது
கரப்பான்
அல்ல.. 

அதிலும் கேவலமாய்
ஆறறிவு கொண்ட
காமுகன் ஒருவனின்
விரல்கள்.. 

பொங்கி எழுந்தாள்
தென்றலாய் பொறுக்க
முடியவில்லை இப்போது
சூறாவளியாய்…..

பின் இருக்கையில்
பல்லிளித்து
கண் அடித்தான்..
அந்த அதே அரக்கன்.. 

பொளேரென
விழுந்தது..
பல் இரண்டு
தெறித்தது.. 

அறைந்தே விட்டாள்
அவசரமாக…
நீதி நிலை நாட்ட
கொஞ்சம்
பத்ர காளியாய்.. 

அஷ்ட கோணலில்
திரும்பியது..
அறை கொண்ட
அவன் முகம்.. 

நீல இரவு
பிரதிபலிக்கும்
தார் சாலையின் ஊடே 

அசுர வேகத்தில்
பயணித்து கொண்டிருக்கும்
சொகுசு பேருந்தின்
சில இருக்கைகளில் 

இன்றும் பயணிக்கிறாள்
இதே போல்
ஒரு மங்கை.. 

மானம் காத்து கொள்ள
வீரத்தை நெஞ்சில்
ஊற்றியபடி..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க