சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 08

0
1385
PicsArt_09-07-12.29.33

குகைவழிப்பாதை

நெடிந்து உயர்ந்த சுண்ணாம்பு கற்பாறைகள் நாற்புறமும் குன்றுகளென சூழ்ந்து பெரும் அரண் அமைத்து விட்டிருந்த அந்த வெண்மணல் பெருவெளியின் தென் திசையில் அடர்ந்து வளர்ந்திருந்த பெரும் தாழைப்புதர்களின் பின்னால் காணப்பெற்ற அகன்ற சுண்ணாம்பு கற்பாறையொன்றிலிருந்த ஒடுங்கிய இடைவெளியின் வழியாக கையில் நீண்ட ஈட்டியை தாங்கியிருந்த வீரன் ஒருவன் அந்த புதர்களை மெல்ல விலக்கியபடி வெளியில் வரவும் அவனை தொடர்ந்து பார்த்தீபனும் அந்த இடைவெளியின் வழியாக கம்பீரமாகவே வெளியில் வந்தானானாலும் அவன் சோதனை சாவடியில் மாட்டியது முதல் சற்றுமுன் அந்த சுண்ணாம்புக்கல்லில் இருந்த இடைவெளியின் வழியாக வெளியே வந்தது வரை நடைபெற்ற அத்தனை சம்பவங்களுமே பார்த்தீபனுக்கு மிகுந்த பிரமிப்பையே ஏற்படுத்தியிருந்தன.

சோதனை சாவடியில் தன்னை இடைமறித்த அந்த வீரர்களுடன் பெரும் தகராறில் ஈடுபட்டு அதன் பொருட்டு ராஜசிங்கவின் உத்தரவின் பேரில் கைகால்கள் உடலுடன் சேர்த்து நன்கு பிணைக்கப்பட்டது மட்டுமல்லாமல் இருள் நிறைந்த அறை ஒன்றினுள் போடப்பட்டு அங்கிருந்த பலமான தூண் ஒன்றுடனும் இறுக்கமாக கட்டப்பட்ட அந்த வாலிபன் தன் உடலை திமிறி தன்னை சுற்றியுள்ள கட்டுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பெரும் பிரயத்தனங்களை செய்தானானாலும் மிகுந்த இறுக்கமாகவே கட்டப்பட்டிருந்த அந்த கயிறு அவனின் அந்த முயற்சிக்கு அணுவளவும் அசைந்து கொடுக்காமல் அப்படியே இருந்தது மட்டுமன்றி அவனுக்கு கடும் வலியையும் அளித்துக் கொண்டிருந்ததாகையால், தன் முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் பார்த்தீபன் தான் கட்டப்பட்டிருந்த அந்த தூணிலேயே சாய்ந்து மெல்ல கண்களை மூடவும் அங்கே அவன் சற்றும் எதிர் பாராத சில விநோத சம்பவங்கள் நடந்தேற ஆரம்பித்தன.

அதுவரை பேரமைதி குடிகொண்டிருந்த அந்த அறையினுள் திடீரென எழுந்த “கிரீச்” என்ற சப்தத்தினால் “படார்” என்று கண்களை திறந்த பார்த்தீபன் அங்கே ஒரு விசித்திரமான காட்சியையும் கண்டான். அத்தனை நேரமும் கதவின் திறவுகோலிடும் சிறு துளை வழியாக சிந்திய சிற்றொளியைத் தவிர வேறு எந்த ஒளியும் புகாத அந்த அறையின் தரையில் மெல்லிய கோடாய் உருவாகிய ஒளிக்கீற்றொன்று மெல்ல மெல்ல விரிந்து பெரியதாக மாறிக்கொண்டிருந்தது. அந்த ஒளி விழுந்த இடத்தில் இருந்து சற்று தலையை நிமிர்த்தி நோக்கிய பார்த்தீபன் அந்த அறைக்கதவானது மிக மெதுவாக திறக்கப்பட்டு கொண்டிருந்ததன் விளைவாகவே அந்த ஒளிக்கீற்றும் “கிரீச்” என்ற சப்தமும் உண்டாகியிருந்ததை உணர்ந்து கொண்டானானாலும் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை காண்பதற்கு பேராவலுடன் அந்த கதவையே நோக்கிக்கொண்டுமிருந்தான்.

மெல்ல அந்த அறைக்கதவு பாதிவரை திறக்கப்பட்டதும் அறையின் வெளிப்புறமிருந்து ஒரு உருவம் சரேலென்று உள்ளே நுழைந்தது மட்டுமல்லாமல் மெல்ல அந்த கதவை மீண்டும் பழையபடியே சாத்திவிட்டு கையில் தீவர்த்தியுடன் பார்த்தீபனை நெருங்கியும் வந்தது. கதவின் வழியாக அந்த உருவம் உள்ளே நுழைந்த போதே அந்த உருவம் யாரோ ஒரு காவல் வீரனாக தான் இருக்க வேண்டும் என்று பார்த்தீபன் முடிவு கட்டியிருந்தானானாலும் அந்த காவல்வீரனின் செயல்பாடுகள்  மிகுந்த விசித்திரமாகவே தோன்றியது பார்த்தீபனுக்கு.

அவ்வாறு பார்த்தீபனை நெருங்கி வந்துவிட்ட அந்த காவல் வீரன் தன் கையிலிருந்த தீவர்த்தியை அருகிலிருந்த தூணில் தீவர்த்தி வைப்பதற்கு ஏதுவாக இருந்த அமைப்பில் வைத்து விட்டு எதுவுமே பேசாமல் பார்த்தீபனின் உடலில் சுற்றப்பட்டிருந்த அந்த கயிற்றை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்திருந்தானானாலும் அவன் பாதிக்கயிற்றை அவிழ்த்ததுமே தன் உடலை திமிறி முழுவதுமாய் அவிழ்த்து விட்ட பார்த்தீபன் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து எழுந்து அந்த காவல் வீரனை தரையிலே தள்ளி வீழ்த்தியது மட்டுமல்லாமல் அவன் பேரில் ஏறி அமர்ந்து அவனின் கழுத்தையும் தன் பலங்கொண்ட மட்டுக்கும் நன்கு இறுக்கமாக நெரிக்கவும் ஆரம்பித்தான்.

“வீரனே நான் சொல்வதை கேள், உன்னை காப்பாற்றத் தான் வந்திருக்கின்றேன் தயவுசெய்து என் கழுத்தை விடு” என்று சற்று திணறியபடியே கூறிமுடித்தான் அந்த காவல் வீரன்.

“உன்னை எப்படி நம்புவது?” என்று வினவிய பார்த்தீபன் கழுத்தை பிடித்திருந்த தன் கைகளையும் மெல்ல தளர்த்தினான்.

“நம்பித்தான் ஆக வேண்டும் உனக்கு வேறு வழிவகைகள் இல்லை, நான் சொல்வதை கவனமாக கேள், ஏதோ உன் நல்ல நேரம் இங்கிருந்து மூன்று காததூரம் தொலைவிலுள்ள தளபதியின் கோட்டையில் வீரர்கள் தமக்குள்ளாக சண்டையிட்டு பெரும் குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்த வீரர்களில் பாதிப்பேர் தளபதியுடன் அங்கே சென்று விட்டார்கள். மீதி வீரர்கள் தூங்குகிறார்கள். நமக்கு இன்னமும் அதிக நேர அவகாசமில்லை. புறப்படு. இன்னும் சொற்ப நேரத்தில் அவர்கள் விழித்து விடுவார்கள். தளபதியும் மற்ற வீரர்களும் கூட வந்து விட்டால் நீ தப்புவது குதிரை கொம்பு தான்!” என்றான் அந்த காவல் வீரன் மிக  உறுதியான குரலில்.

“என்ன தூங்குகிறார்களா?” என்றான் பார்த்தீபன் மிதமிஞ்சிய வியப்பு கண்களிலும் படர.

“அவர்களாக தூங்கவில்லை நான் போட்ட புகை அவர்களை தூங்கவைத்து விட்டது” என்று கூறிய அந்த காவல் வீரன், “இப்பொழுது நீ என்னை எழுவதற்கு அனுமதித்தால் நாமிருவரும் அவர்களின் தூக்கம் கலையும் முன்பாகவே இங்கிருந்து தப்பிவிடலாம்.” என்று கூறி சற்று பெரிதாகவே நகைத்தான்.

பார்த்தீபன் அவனை முழுமையாக நம்பாவிட்டாலும் தற்சமயம் வேறு வழி வகைகள் ஏதும் இல்லையாகையால் அவனை விட்டு எழுந்து சற்று விலகியும் நின்று கொண்டான். அவ்வாறு பார்த்தீபன் எழுந்ததும் தானும் எழுந்து கொண்ட அந்த காவல் வீரன் நன்கு மூச்சை ஒரு முறை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே “அடே சண்டாளப்பாவி, உன்னை காப்பாற்ற வந்த பாவத்திற்கு, இந்நேரம் என்னை எமலோகம் அனுப்பியிருப்பாய்” என்று கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு கிடுகிடுவென வெளியில் நடக்கவும் ஆரம்பித்தான். அவனை தொடர்ந்து வெளியில் வந்த பார்த்தீபன் கதவை பழைய நிலை போலவே சாற்றிவிட்டு தானும் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவனையே பின்பற்றி நடக்கவும் ஆரம்பித்தான்.

அந்த காவல் வீரன் அங்கே மயங்கிக்கிடந்த வீரர்களில் ஒருவனின் ஈட்டியை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தன் இடையில் தொங்கிக்கொண்டிருந்த வாளை எடுத்து பார்த்தீபனிடம் கொடுத்து “இதோ உன்னுடைய வாள், இதற்கு தானே அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினாய்” என்று கூறி மீண்டும் இரைந்தே நகைத்தான். அவனது அந்த நகைப்பு பார்த்தீபனுக்கு மிகுந்த சினத்தையே உண்டாக்கியிருந்ததானாலும் அது குறித்து எவ்வித மாறுதலையும் காட்டாமல் அந்த வாளை வாங்கி தன் இடையில் சொருகி வைத்து விட்டு மீண்டும் அந்த காவல்வீரனை தொடர்ந்து மிக அமைதியாகவே நடந்து கொண்டிருந்தான் பார்த்தீபன்.

அந்த சோதனை சாவடியில் இருந்து வடமேற்கு திசையில் அமைந்திருந்த அடர்ந்த புதர்களினூடு கற்களையும் முட்களையும் குன்றுகளையும் குழிகளையும் தாண்டி வேகமாக நடந்த அந்த காவல்வீரனை அதுவரை எந்தவித கேள்வியுமே கேட்காமல் பின்தொடர்ந்து வந்த பார்த்தீபன் திடீரென அவனை நோக்கி. “நீ யார்? எதற்காக என்னை காப்பாற்ற வந்தாய்?” என்று வினவினான் மிக மெல்லிய குரலில்.

“என்னப்பா அவசரம், எல்லாவற்றையும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வாய் சற்றுப்பொறு.” என்று கூறிவிட்டு மீண்டும் மௌனமாகவே நடந்தான் அந்த காவல்வீரன்.

அவ்வாறு இருவரும் நடக்க ஆரம்பித்து ஒரு சில வினாடிகளிலேயே அந்த சோதனை சாவடியிலிருந்து வெகுதூரம் கடந்து பெரும் புதர்களும் பற்றைகளும் நிறைந்த பெருவெளி ஒன்றை அடைந்து விட்டிருந்தார்கள்.

பெரும்புதர்களும் பற்றைகளும் மண்டியிருந்த அந்த பெருவெளியில் சற்று தொலைவில் கிளைபரப்பி நின்று கொண்டிருந்த உயர்ந்த புளிய மரமொன்றை சுட்டிக்காட்டிய அந்த காவல் வீரன். “அதோ தெரிகிறதே அந்த மரத்தருகில் தான் செல்ல வேண்டும்” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு மீண்டும் விறுவிறுவென நடக்கவும் ஆரம்பித்தான். அவனைத்தொடர்ந்து புதர்களை தாண்டியும் கிளைகளில் குனிந்தும் மரங்களினிடைவெளிகளில் புகுந்தும் பார்த்தீபன் மிகுந்த உற்சாகத்துடனே நடந்து அந்த மரத்தினருகில் வந்திருந்தானானாலும் மரத்தின் அருகாமையில் வந்ததும் பிரமிப்பின் உச்சத்தையே அடைந்திருந்தான்.

அவர்கள் நின்று கொண்டிருந்த நிலமட்டத்திலிருந்து சுமார் ஆறரைஅடி ஆழம் கொண்ட பெரும் குழி போன்ற ஒரு அமைப்பின் மத்தியபகுதியில் தான் அந்த புளிய மரம் வளர்ந்திருந்தது. அந்தக்குழியானது முழுமையாக நாற்புறமும் சுண்ணாம்புகற் பாறைகளினாலேயே சூழப்பட்டிருந்த அதே வேளை அந்த சுண்ணாம்பு கற்பாறைகளில் குகைகள்போன்ற சிறு சிறு துளைகளும் ஆங்காங்கே உருவாகியிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்தீபன் பார்த்து பிரமித்துக்கொண்டிருக்கையில், “தம்பி இதனூடாக புகுந்து வா” என்கின்ற குரல் எதிரொலிப்பது போல சற்று பயங்கரமாகவே கேட்டதும் சுற்றும் முற்றும் பார்த்த பார்த்தீபன் யாரையும் காணாததால் தன்னுடன் வந்த காவல்வீரனையும் மறந்து “ஐயோ பூதம்! ஐயோ பூதம்!” என்று பயங்கரமாக அலறினான். அங்கிருந்த குகைகளில் ஒன்றினிலிருந்து தவழ்ந்து வெளியில் வந்த அந்த காவல் வீரன் “நான் தானப்பா, கீழே குதித்து இந்த சுரங்கத்தினூடாக புகுந்து வா” என்று கூறிவிட்டு மீண்டும் தன் தலையை உள்ளே நுழைத்து தவழ்ந்து உள்நோக்கி செல்லவும் தொடங்கினான். அந்த குகையின் வாயில் மிகக்குறுகியதாகவே இருந்ததன் காரணமாக அண்ணளவாக பத்து அடிகள் வரை தவழ்ந்து தான் செல்ல வேண்டியிருந்ததாகையால் பார்த்தீபனும் அந்த வீரனை தொடர்ந்து உள்ளே நுழைந்து தவழ்ந்தே சென்றான்.

சிறிது தூரம் தவழ்ந்து சென்று பின் எழுந்து நின்ற அந்த காவல் வீரன் அருகிலிருந்த தீவர்த்தியை எடுத்து ஒளியூட்டிக்கொண்டு முன்னே நடக்க பார்த்தீபனும் அவனையே பின்தொடர்ந்தானானாலும் இது வரை நடந்த சம்பவங்கள் எதையுமே பார்த்தீபனால் நம்ப இயலவில்லையாகையால், ஒரு வேளை கனவாக இருக்குமோ என்கிற ஐயத்தினால் குகைச்சுவரில் தனது கையால் ஓங்கி ஒரு குத்து குத்தினான். அவ்வாறு குத்தியதன் பயனாக அவனது கைகளில் பொறுக்கமுடியாத வலி ஏற்படவே இது கனவல்ல உண்மை தான் என்பதை உறுதி செய்தும் கொண்டானானாலும் அவ்வாறு பார்த்தீபன் சுவரிலே  குத்தியதை கண்ட அந்த காவல் வீரன்.
“அடேயப்பா! உன் வீரத்தையெல்லாம் இந்த சுவரிலே காட்டி, இந்த குகையை இடித்து தள்ளிவிடாதே, பின்னர் பிராண வாயுவின்றி இங்கேயே மண்ணுடன் மண்ணாக பிராணனை விட வேண்டியது தான்” என்று கூறி சற்று பலமாகவே நகைத்தான். அந்த நகைப்பை பார்த்தீபனால் சகித்துக்கொள்ள முடியவில்லையென்றாலும் வேறு வழிவகையேதுமின்மையால் அதையும் பொறுத்துக்கொண்டே அந்த காவல்வீரனை பின்தொடர்ந்தே நடந்தான். இவ்வாறு சுமார் ஒன்றரை காத தூரம் வரை அந்த குகைச்சுரங்கத்தின் வழியே பயணம் செய்தே பார்த்தீபனும் அந்த காவல் வீரனும் தற்சமயம் அந்த பெருமணல் வெளியை அடைந்திருந்தார்கள்.

அந்த காவல் வீரனை தொடர்ந்து தாழைப்புதர்களை விலக்கியபடியே அந்த சுண்ணாம்பு கற்குகையிலிருந்து வெளியில் வந்துவிட்டிருந்த பார்த்தீபன் அந்த இடத்தை சூழ தன் கண்களை ஒரு முறை சுழல விட்டான். அதே வேளை பார்த்தீபன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேர் எதிராகவே இருந்த சிறு கோவிலொன்றின் முன்றலில் நின்று கொண்டிருந்த ஒரு மனிதரை நோக்கி கைகளை நீட்டி சுட்டிக்காட்டிய அந்த காவல் வீரன் மெள்ள ஒரு பெயரை உச்சரிக்கவும், “அவரா..” என்று கேட்டு ஒரு கணம் வியந்து நின்றான் பார்த்தீபன்

சிங்கை நகரத்து சிம்மாசனம் ஒன்பதாவது அத்தியாயம் தொடரும்.

தொண்டைமானாற்றிலிருந்து சுமார் 1.8km களில் கெருடாவில் என்கிற இடத்தில் இந்த சுண்ணாம்புகற்குகை உள்ளது, மண்டபக்காடு என்று பெயர், இதனை அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தரசர்கள் சுரங்கமா நிலவறையாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனூடாக சென்றால் சுமார் ஒரு மைல் தூரம் வரை சென்று இன்னுமொரு இடத்தை அடையலாம் என்று கூறினாலும் சரியான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை. இன்றும் ஒரு புளிய மரமே அடையாளமாக இருந்தாலும் அது நூறு வருடமே பழமையானது, இருந்தாலும் இந்த கதை நடந்த போதும் புளிய மரம் இருந்ததாக கற்பனையில் எழுதப்பட்டுள்ளது.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க