சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01

2
1945

தொண்டைமானாறு

“பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்” என பிற்கால கல்வெட்டுகளில் போற்றப்பெற்றதும், மணற்திட்டுகள் நிறைந்து முப்புறமும் சூழ்ந்த பெருங்கடலை தன் அரணாக கொண்டமைந்ததுமான சிங்கை நகரின் வடதிசை எல்லையில், ஆதியும் அந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தன் நீல வண்ண அலை பிரவாகத்தை படர விட்டு பரந்து விரிந்து நீண்டு நெடிந்து கிடந்த அந்த பெருங்கடலின் மேல் வானில் நன்றாய் பழுக்க காய்ச்சிய இரும்பு தகட்டை ஒத்த வண்ணத்தில் தகதகத்து சூரியனானவன் ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தாலும், இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் ஆதவனின் மேனியில் குடி கொண்டுள்ள அந்த தகதகப்பு மிக விரைவில் அடங்கி விடப்போவதை அறிவிக்கும் விதமாக மேல்வானம் தன் மேனி தனில் செந்நிறத்தை தடவி காத்திருந்தமையானது, அன்றைய நாளில் அங்கு நடக்கவிருக்கும் அந்த நிகழ்வின் விளைவாக இன்னமும் சில நாட்களிலேயே சிங்கைநகரில் குடிகொண்டிருக்கும் அதிகாரம் அஸ்தமித்து விடப்போகின்றது என்பதை கட்டியம் கூறி நிற்கின்றதோ என்றும் எண்ணவைத்துக்கொண்டிருந்தது.

வல்லியாறு என்று பெயர் பெற்றாலும் தொண்டைமானால் ஆழமாக வெட்டப்பெற்றதன் பயனாய் பிற்காலத்தில் தொண்டைமானாறு என்றே அழைக்கப்பெற்று வந்த அந்த ஆற்று பிரவாகமானது பெருங்கடலுடன் சங்கமிக்கும் அந்த முகத்துவாரத்தின் மீது சூரியனின் பொற்கிரணங்கள் காட்டிய ஜால வித்தையின் பயனாய் முகத்துவாரத்தின் நீர் பிரவாகம் உருக்கிய பொன்னென ஜொலித்துக்கொண்டிருந்தது.

அந்திசாயும் அந்த வேளையில் கதிரவன் உண்டாக்கிய அந்த மாயக்காட்சியினால் உண்டான பிரமையை மேல் வானில் நின்று கவனித்துக்கொண்டிருந்த ஓரிரு முகில் கூட்டங்களுக்கும் சூரியனானவன் செக்கர் பூச முயன்றதன் விளைவாய், அவை தீப்பற்றி எரியும் வெண்பஞ்சு கூட்டங்கள் போல் தோற்ற மாயையை உண்டாக்கிக்கொண்டிருந்தன.

ஒரு காலத்தில் பலநாட்டு வணிகர்களும் வந்திறங்கி உப்பும் ஆனைகளும் முத்துகளும் வலம்புரி சங்குகளும் பெற்றுக்கொண்டும் பட்டுக்களும் கம்பளிகளும் உயர் சாதி புரவிகளும் கொண்டுவந்திறக்கியும், பல வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெருமையுடையதுமான அந்த ஆற்றுமுகத்திடலானது கால ஓட்டத்தின் பயனாய் வாடிவதங்கி போயிருந்தாலும் இடிந்து போன சில சுங்க சாவடி கட்டடங்களின் ஓரிரு எச்சங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிமிர்ந்து நின்று அந்த முகத்துவாரத்தின் பழம் பெருமைகளை பறைசாற்றி எடுத்தியம்பிக்கொண்டிருந்தன.

சித்திரை மாதத்து பௌர்ணமி நாளான அன்று வழக்கத்துக்கு மாறாக கடலலைகள் மிக வேமாகவும் உயரமாகவும் எழுந்தும் வீழ்ந்தும் மலையையும் மடுவையும் உண்டாக்கி வாழ்க்கையின் உயர்வு தாழ்வு பற்றிய பெரும் சித்தாந்தத்தை வெளிப்படுத்தினாலும், மேலே மலையென உயர்ந்த வேகத்தில் மடுவினுள் சரிந்து விழுந்த பெரும் அலைகள் சிங்கை நகரத்து கோட்டையில் பறந்து கொண்டிருக்கும் சிங்க கொடி சரிந்து அதல பாதாளத்தில் விழப்போவதை முன்கூட்டியே அறிவிக்கின்றதோ என்றும் எண்ண வைத்துக்கொண்டிருந்தது.

இந்த கொடும் அலைகளை சற்றும் பொருட்படுத்தாமலும் இலாவகமாய் அலைகளில் சிக்குண்டு விடாமலும் ஒரு படகு கரையை நோக்கி அந்த அலைகளின் மீது ஏறியும் விழுந்தும் வளைந்தும் விரைந்து வந்து கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு இளம் வாலிப வீரன் அந்த அலைகளின் சீற்றத்திற்கும் படகின் ஆட்ட அசைவுக்கும் சற்றும் அசைந்து கொடுக்காமல் கம்பீரமாய் அங்கே பாய்ந்து உருண்டு எழுந்து விழுந்து கொண்டிருக்கும் அலைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான், அச்சமயத்தில் அவனின் மனதின் எண்ண ஓட்டம் அந்த கடலலையின் வேகத்திற்கும் பாய்ச்சலுக்கும் சற்றும் குறைவில்லாமலே இருந்து கொண்டிருந்தாலும், அவனது முகத்தில் எவ்வித சஞ்சலத்திற்கும் இடமில்லாமல் மிக தெளிவான பார்வையே மிளிர்ந்து கொண்டிருந்தது. அவன் இடையில் தொங்கிய நீண்டு நெடிந்த வளைந்த வாளின் முனை படகின் அடியை தொட்டு விடுவது போல் சுயாதீனமாக தொங்கிக்கொண்டிருந்தமையானது, அவனின் வீரத்தை பறைசாற்றி நின்றது மட்டுமல்லாமல், அவனின் புறங்கையில் இருந்த தழும்புகள், அவன் முறையாக வாள் வீச பயின்றவனாக தான் இருக்க முடியும் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டிருந்தாலும், அவனின் மேனியில் அவ்வளவாக தழும்புகள் இல்லாமல் இருந்தமையானது, அவன் அவ்வளவாக அதிக போர்க்களங்களை முன்னின்று சந்தித்தவன் அல்லன் என்பதை உணர்த்திக்கொண்டிருந்தது. அவனின் வலது தோளில் சற்று ஆழமாகவே பதிந்து விட்டிருந்த ஒரு தழும்பானது இன்னமும் முழுமையாக காய்ந்து போகாமல் இருந்ததை வைத்து சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த வெட்டுக்காயம் பட்டிருக்க வேண்டும் என்று எண்ண வைத்துக்கொண்டிருந்தது. அவனின் பார்வையில் பளிச்சிட்ட அந்த பேரொளி அவன் மிக பெரும் படையையும் துவம்சம் செய்து அரும் பெரும் சாதனைகளை ஆற்றக்கூடியவன் தான் என்பதை தெளிவுபடுத்தியது. அத்துடன் அவன் முகத்தில் இலேசாக அரும்பி விட்டிருந்த அந்த இளம் மீசையானது அவனின் வதனத்திற்கு மேலும் அதிக கம்பீரத்தை வழங்கியது என்றாலும் அந்த இளம் வாலிபனுக்கு வயது இருபதுக்கு மேலிருக்க எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என்பதையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டுமிருந்தது. இன்னும் சில நாட்களில் இந்த சிங்கை நகரின் தலைவிதியையே மாற்றி எழுத போகும் கை அந்த வாலிபனுடையது தான் என்பதை அந்நேரம் சிங்கை நகரோ அங்குள்ள மக்களோ உணர்ந்திருக்க வழிவகையேதும் இருந்திருக்கவில்லை.

அந்த பெருங்கடலில் அவ்வாறு வந்து கொண்டிருந்த அந்த படகில் அவனையும் அவனின் உயர்ஜாதி குதிரையையும் ஒரு படகோட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் மலைகளென தோன்றிய பெரும் அலைகளை ஊடுருவியும் தாவியும் வந்த அந்த படகு கரையை அடைந்திருந்தது. கரையை கண்டதும் பெரும் உற்சாகமுற்றவனாய் இலாவகமாய் பாய்ந்து படகில் இருந்து இறங்கிய அந்த வாலிபன் மெதுவாக தன் புரவியையும் படகில் இருந்து மெல்ல இறக்கினான். பின்னர் அதன் நீண்ட கழுத்து பகுதியை மிருதுவாய் தடவி கொடுத்ததும் எஜமானின் சைகை பாசைக்கு பதிலளிப்பது போல தலையை மேலே உயர்த்தி இரண்டு தடவை கம்பீரமாக கனைத்தது அந்த புரவி. புரவியின் கழுத்தில் இருந்த கயிற்றை பிடித்த வண்ணம் சில தூரம் மணற்றி எனும் தொண்டைமானாற்று பிரதேசத்தின் கடற்கரை வழியாக தென்கிழக்கு திசை நோக்கி மெதுநடை புரிந்து அந்த வாலிப வீரன் நகர்ந்து கொண்டிருந்தாலும், தன் கூரிய கண்பார்வையை இருபுறமும் சுழல விட்டு நோட்டம் விட்ட படியே சென்று கொண்டிருந்தான். அக்கரையில் மீன்பிடியில் ஈடுபடும் பரதவர்களின் சில குடிசைகளும் ஆங்காங்கே கிடந்ததையும், ஆங்காங்கே சில பெண்கள் கூடி நின்று பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த வண்ணம் நகர்ந்து கொண்டிருந்த அந்த வாலிபனின் வீர தோற்றத்தையும் ராஜகளை பொருந்திய வதனத்தையும் சற்றே விநோதமாக பார்த்து அது குறித்தும் அப்பெண்கள் பரிகசித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாலும், அதற்கு மேல் அங்கு தாமதம் செய்ய விரும்பாதவன் போல் அந்த வாலிபன் புரவியின் முதுகை மெல்ல தட்டி விட்டு லாவகமாய் பாய்ந்து ஏறி அமர்ந்து, புரவியை தென்கிழக்கு திசை நோக்கி சற்று விரைவாகவே செலுத்தினானாலும், இயலவே கடற்பிரயாணத்தில் களைத்துப்போய் விட்டிருந்த அந்த புரவி மிக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.

அவன் புரவியில் அலட்சியமாய் அமர்ந்திருந்த அந்த தோரணையானது அவன் அசுவசாஸ்திரம் எனும் சாஸ்திரத்தில் நன்கு தேறியவனாக தான் இருக்க வேண்டும் என எண்ண வைத்துகொண்டிருந்தது மட்டுமல்லாமல், அந்த வாலிபனின் கண்களில் பளிச்சிட்டுக்கொண்டிருந்த மிதமிஞ்சிய ஆர்வமும் வேகமும் அவனின் கம்பீரத்தை பலமடங்கு அதிகரித்தே காட்டிக்கொண்டிருந்தது. களைப்பு மிகுதியால் மிக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்த அந்த புரவியின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் போல அதற்கு மேல் அந்த புரவியை விரட்ட மனமில்லாமல் அதனது வேகத்திலேயே பயணித்துக்கொண்டிருந்த அந்த வாலிப வீரன், இன்னமும் ஒரு காத தூரத்தை கடப்பதற்குள்ளாகவே பெரும் ஆபத்து ஒன்று தன்னை நோக்கி வரப்போவதனை அறிந்திருக்க எவ்வித நியாயமும் இல்லை அல்லவா?

சுமார் அரைகாத தூரம் வரை இருபுறமும் பார்வையை சுழலவிட்ட வண்ணம் வந்து கொண்டிருந்த அந்த வாலிபனின் காதில், “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்கிற பெரும் அவலக்குரல் மிக பயங்கரமாக ஒலித்ததாகையால், அரவம் வந்த திசையை நோக்கி தன் கண்களை திருப்பிய அந்த வாலிப வீரனின் கூரிய விழிகள் பிரமிப்பின் உச்சத்தையே தொட்டிருந்தன.

சிங்கை நகரத்து சிம்மாசனம் இரண்டாம் அத்தியாயம் தொடரும்

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
2 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
ஶ்ரீகஜன்்
ஶ்ரீகஜன்்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான கதை சிறப்பு்

Senu
Senu
பதிலளிக்க  ஶ்ரீகஜன்்
4 years ago

Yes.