கீரைகளின் அரசி : பரட்டைக்கீரை

0
2412

 

 

 

 

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்.

உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம் போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.  

  இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம்பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது.  இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டிலேயே  உலகெங்கும் உணவில் அறிமுகப்படுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன

இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்

  • Brassica oleracea ssp. acephala group
  • Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
  • Brassica oleracea var. palmifolia
  • Brassica oleracea var. ramosa
  • Brassica oleracea var. costata
  • B. napus ssp. napus var. pabularia

உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது.

அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்

  • சுருட்டையான இலைகளுள்ளவை
  • அடர்ந்த புதர் போல இலைகளுள்ளவை
  • அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
  • இறகுபோல அமைப்புள்ளவை

ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான  க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு,  வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது. சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.

இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான அளவில் வைட்டமின் C இருக்கிறது.  இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனப்படும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது

கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது.

விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.

 அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500 ஏக்கர்களிலான பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு  அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது. கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க