எப்படி எழுதக்கூடாது – சுஜாதா

0
3455
நான் எழுத ஆரம்பித்தபோது கூட, எப்படி எழுதுவது என்பது புரியவே இல்லை. எப்படி எழுதக்கூடாது என்றுதான் புரிந்தது. அதனால்தான் நான் ஒரு எழுத்தாளர் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.
 
நான் எழுத ஆரம்பித்தது நாலு வயதில் என்று சொல்லிக் கொள்வேன். ஆனால், அணில், ஆடு என்று எழுதுவதெல்லாம் எழுத்தோடு சேர்த்தியில்லை என்று நீங்கள் நினைத்தால், 1962- ல் தான் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். அதற்குமுன் “சிவாஜி” என்று ஒரு சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தது. பிரபலமான பத்திரிக்கை என்றால் 1962- ல் குமுதத்தில் தான் முதல் கதை வந்தது.
 
நான் எழுத ஆரம்பித்தபோது என் நண்பன் ஒருவன் தான் எழுதிய ஒரு கதையை என்னிடம் கொடுத்தான். ஸ்ரீனிவாசன் என்பது அவன் பெயர். அந்தக் கதையை அவன் என்னிடம் கொடுத்த போதே, “ எப்படி எழுதக்கூடாது?” ஆரம்பமாகி விட்டது.
 
அந்தக் கதை மிகவும் மோசமாக இருந்தது. அதனால் “ இந்த மாதிரி எழுதக்கூடாதுப்பா…. வேற மாதிரி எழுதணும்” என்று அதை நான் திருத்தி எழுதினேன். அந்தக் கதை அவன் பெயரில் ஒரு பாடாவதி பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி அந்த 1962- லேயே அவனுக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு செக் வந்தது. அப்போது அது நல்ல தொகை.
அவன் என்னிடம் மறுபடி வந்தான். அந்த செக்கை அழகாக பிடித்துக்கொண்டு, “ பார்த்தாயா, நான் எழுதிய (??) கதைக்கு வந்த செக்” என்று காண்பித்தான். அவனுடைய கதை பிரசுரமானதால் நான் எழுதுவது ஏறக்குறைய கட்டாயமாகிவிட்டது.
ஆனால், அப்போது விதி கொஞ்சம் ‘ பாலே’ நடனம் ஆடியது. ஆம், யாருக்கும் நான் எழுதிக் கொடுத்தது பிரசுரமாயிற்று. ஆனால் நான் எழுதிய மூன்று கதைகள் சு. அ. ப போல உடனே திரும்பி வந்து விட்டன.
 
அப்போதுதான் யோசித்தேன். ஏன் இதை திருப்பி அனுப்பினார்கள்? ஒரு இன்ஜினியர் அளவுக்கு, ஒரு விஞ்ஞானி அளவுக்கு அதை அனலைஸ் பண்ணி பார்த்தேன். ஒரு தப்பான கதையை, ஒரு தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டது தெரியவந்தது.
குமுதம் போன்ற பத்திரிக்கைக்கு பக்தி கதை எழுதக்கூடாது.
 
நான் அனுப்பிய கதைகள் அப்படித்தான். பொருத்தமில்லாத கதைகள், பொருத்தமில்லாத பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருந்தேன். ஆக, எப்படி எழுதக்கூடாது என்று முதலில் எழுத ஆரம்பித்தேன்.
 
நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம் – திறமை என்று ஏதாவது இருந்ததென்றால் – அது அவாய்ட் பேட் ரைட்டிங் ( தண்டமாக எழுதுவதைத் தவிர்த்தல்) என்னுடையது நல்ல எழுத்து ( குட் ரைட்டிங்) என்று சொல்ல மாட்டேன். நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான். ஆனால் மோசமான எழுத்தை தவிர்க்கிறேன்.
அதனால்தான் ஏறக்குறைய இப்போது வருடங்கள் கழித்து எங்கெங்கோ சுற்றிவிட்டு மறுபடியும் குமுதத்தில் வந்து சேர முடிந்தது!
 
என்னுடைய 30 வருடப் பாடத்தை குமுதம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஒரு சாரமாக கொடுக்கலாம் என்று பார்க்கிறேன். சில பேர் ‘ எழுத்திலேயே பிறந்து வளர வேண்டும். எழுத்திலேயே கையலம்ப வேண்டும்’ என்றெல்லாம் சொல்வார்கள். எழுத்தைப் பற்றிய யோசனை எப்போதும் வேண்டும் என்பார்கள். அதெல்லாம் தேவையில்லை. நல்ல எழுத்து எங்கே இருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும். நல்ல எழுத்து என்னவென்று அடையாளம் காட்டுவதற்கு விரும்புகிறேன்.
 
என்னைப் பொறுத்த வரையிலும் திறமை எல்லோரிடமும் இருக்கிறது. அதைப்பற்றி சந்தேகமே இல்லை. அதை வழிப்படுத்த தான் பலருக்குத் தெரிவதில்லை. என்னிடமே பார்த்தீர்களென்றால் விருத்தமெல்லாம் எழுதுவேன். கவிதை எழுதுவேன். எல்லாம் எழுதுவேன். இப்படி ஒரு திறமையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஆரம்பத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். தவித்துக்கொண்டிருந்தேன்.
எழுதுவது இரண்டே வகை. கற்பனையில் எழுதுவது, நிஜத்தை எழுதுவது. அதில் நீங்கள் எதை எழுதப் போகிறீர்கள்?
 
கற்பனையில் எழுதுவது – கதைகள், சிறுகதைகள், நாவல்கள். நிஜத்தை எழுதுவது – கட்டுரைகள். ஆனால் இரண்டிலும் கற்பனையும் நிஜமும் கலந்திருக்கும். இதை நாம் முதலில் உணர வேண்டும். இதைத் தவிர்க்கவே முடியாது. நேரடியாக பார்க்காமல் எழுத முடியாது. எழுதாதீர்கள்.
 
சுப்புடு ஒரு முறை செம்மங்குடி கச்சேரியைப் பற்றி பிரமாதமாக எழுதியிருந்தார். தோடி நன்றாகப் பாடினார் அது இது என்று எழுதியிருந்தார். ஆனால் அவர் அன்றைக்கு வரவே இல்லை. அதனால் பல பிரச்சனைகள் வந்தன. நேரடியாக பாராமல் எந்தக் கட்டுரையையும் எழுத முடியாது. அப்படி நேரடியாக பார்க்கும் போது தவறுகளும் கவனிக்காமல் விட்ட விஷயங்களும் வந்துவிடும். ‘ தெரியாமல் எழுதாதே’ என்று என் தமிழ் வாத்தியார் சொல்லியிருக்கிறார்.
 
எஸ் எஸ் எல் சி படிக்கும்போது கம்பனின் கவிதை திறமை பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருந்தார். நான் சும்மா ‘ கம்பன் நல்ல கற்பனை உள்ளவன்,’ கம்பன் நல்ல கவிஞன்’ என்று திரும்பத் திரும்ப அதையே எழுதிக்கொண்டிருந்தேன்.
தமிழ் வாத்தியார், “ நீ எப்போதாவது கம்பனை படித்திருக்கிறாயா?” என்று கேட்டார். “ படிக்காமல், தெரியாமல் எழுதாதே. பேசாமல் அப்படியே விட்டுவிடு” என்றார். அதுபோல, தெரியாமல் எழுதக்கூடாது.
 
அப்புறம், முழுவதும் கற்பனையாக யாராலும் எழுத முடியாது. எந்த ஒரு எழுத்தும் ஆதாரமாக ஒரு உண்மைச் சம்பவம் – எப்போதோ நடந்தது என்றாலும்- இருந்தே தீரும். எங்கேயாவது பார்த்தது, படித்தது அல்லது கேட்ட விஷயம் வந்தே தீரும். எப்படி வந்தது என்பதை அந்த எழுத்தாளனால்தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும். எப்போதோ கேட்ட வெவ்வேறு விஷயங்கள் – இரண்டு மூன்று கலந்து வரும். இதை மிக்ஸர் சிந்தசிஸ் – என்பார்கள்.
 
இது எல்லாக் கதைகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். விஞ்ஞானக் கதைகள் உட்பட – விஞ்ஞானக் கதைகள் ஒரு அதீதமான கற்பனை என்றாலும் கூட.
அதனால்தான் ‘பார்க்காமல் எழுதாதே; கேட்காமல் எழுதாதே; படிக்காமல் எழுதாதே’ என்பார்கள். பார்ப்பது எதற்கு என்றால் கதையின் கருவை அமைப்பதற்கு; கேட்பது எதற்காக என்றால், அதன் உரையாடலை அமைப்பதற்காக; படிப்பது? நடையை தீர்மானிப்பதற்கு.
 
இப்போது இளைஞர்கள் நிறைய பேர் எழுதுகிறார்கள். நல்ல எதிர்காலம் உள்ளது. அவர்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய திறமை உங்களுடைய ஆசை இரண்டும் கலந்தது உங்கள் எதிர்காலம். இதுபற்றி பின்னால் சொல்கிறேன்.
 
எழுத்தாளனாக பிறந்து வரவேண்டும் என்று சொல்வது தப்பு. அது தேவையே இல்லை. என்னையே எடுத்துக் கொண்டால், நான் எழுத்தாளனாக பிறந்ததாக நினைவில்லை. கையில் பல்பம், இங்க் பேனா, 96 பக்க நோட்டு இவற்றுடன் நான் அவதரிக்கவில்லை. அதனால்தான் எஸ். ரெங்கராஜனாகிய நான் தற்செயலாகத்தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.
 
ஆரம்பத்தில் பார்த்தீர்களானால், தற்செயலாக ஒரு நண்பன் வருகிறான்; ஒரு கதையை காட்டுகிறான்; திருத்தி தருகிறேன். அது பிரசுரமாகிறது. பின்னோக்கிப் பார்க்கும்போது சில அடையாளங்கள் தெரிகின்றன – எந்த என்னை என்னை எழுத்தாளனாக ஆக்கின என்பது பின்னால்தான் தெரிகிறது. அந்த சமயத்தில் தெரிவதில்லை.
அதன் பிறகு ‘ அதிர்ச்சி’ என்று ஒரு கதை எழுதினேன் (அகிலன் கண்ணன் என் ஆரம்பகால கதைகளை புத்தகமாக தொகுத்துக் கொடுத்துள்ளார். அதில் இதுவும் ஒன்று). அதுதான் குமுதத்தில் என் முதல் கதை! அதிர்ச்சி என்ற அந்தக் கதையை நீங்கள் அனேகமாக படித்திருக்க மாட்டீர்கள். (பிறகு இந்தச் சிறுகதையின் பெயர் ‘இடது ஓரத்தில்’ என்றும் வந்தது – நம்முடைய குழுவில் ஏற்கனவே இந்தக் கதை பதிவாகியுள்ளது). அதைப் பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. (குமுதம் ஆபீஸ் ஆர்கேவில் – archive) இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற என் முதல் கதை இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
சுஜாதா

Source : வலைப்பகிர்வு

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க