ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04

0
640

போர்முனையை நோக்கி

ஈராக் செல்வதற்கான நாள் நெருங்குகையில் மனம் சதாமின் அரண்மனையை கற்பனை செய்துகொண்டிருந்தது. அப்தலி முகாமில் இருந்தவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு செல்ல விரும்பவில்லை. அங்கு செல்ல இருந்தவர்களிடம் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தனர். போர்முனையில் உயிர் போகலாம், கை,கால் நிரந்தரமாக முடமாகி போகலாம் என பலவாறாக அடுக்கிக்கொண்டே சென்றனர். ஆனால் இவையாவும் என்னைப் போன்று ஈராக்கிற்கு செல்ல முடிவெடுத்தவர்களின் காதுகளை கடந்து மூளைக்கு செல்லவில்லை.

பாகிஸ்தானிய காரோட்டி இப்னு அப்பாஸிடம் கேட்டேன், “ஜனாப், நீங்கள் ஈராக் வரவில்லையா” என. “அங்கே அரசாங்கமே இல்லை இப்போது அங்கே சென்றால் எங்களது குவைத் நாட்டு நுழைவு அனுமதி ரத்தானால் எங்களால் திரும்பி குவைத்திற்கே வரமுடியாமல் போகலாம்”என்றார் .கடந்த பதினைந்து ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிபவர் அவர்.மும்பையின் சுனில் “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, நான் இன்னும் எதையும் பார்க்கவில்லை. அதனால் அங்கு வந்து சாகமாட்டேன், மே ஜாராஹும் கர்” என ஹிந்தியில் சொல்லிக்கொண்டிருந்தான்.

எங்களில் ஈராக் செல்லவிருந்தவர்களில், இருபது பேரை ஈராக்கின் பக்குபா என்னுமிடத்தில் உள்ள முகாமிற்கு முதலில் அனுப்புவதாக தகவல் தந்தார், இங்கிலாந்தின் உணவு தயாரிப்பு மேலாளர் ஆண்டி. “நாளை மறுநாள் பயணம், நாளை இரவு இங்கிருந்து நீங்கள் புறப்பட வேண்டும். உடமைகளுடன் தயாராக இருங்கள்” என்றார். அன்றிரவு நான் ,கார்த்திக்,தீபக் கூடாரத்தின் வெளியே நிலவுக்கு கீழே அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருதோம். நாங்கள் பிரிந்து செல்வது மிகுந்த வலியைத் தந்தது. இரண்டு மாதமே பழகியிருந்தாலும், குறுகிய காலத்தில் நல்ல நண்பர்களாகியிருந்தோம். தீபக் என்னிடம் “மச்சான் அங்க போய் கார்த்திக்கிட்ட கொஞ்சம் வேலை கத்துக்கடா. அப்புறம், அங்கேயே நீ சமையல்காரனா ஆகிடலாம். ஒன்னும் தெரியாத கூமுட்டை எல்லாம் இங்க சமைக்க வந்திருக்கானுக” என்றான். மீண்டும் “மச்சான் பயப்படாதடா, இன்னும் கல்யாணம் ஆகல. நம்மள நம்பி யாரும் இல்ல. பொறுப்புக்களும் கிடையாது. அம்மா,அப்பாக்கு வேற புள்ளைங்க இருக்காங்க ” என்றான் தீபக். அவனும் நாங்கள் சென்றபின் ஈராக் செல்வதற்காக காத்திருப்பவன்தான்.அன்று பின்னிரவில்தான் துயிலசென்றோம். ஈராக் பற்றி எனக்கு பயமோ ,கவலைகளோ இல்லாததால் கனவுகளின்றி விழித்தேன். மறுநாள் காலையில், இரவில் செல்ல வேண்டியிருந்ததால் எங்களது பயணப்பையை தயார் செய்தோம் . எனது சான்றிதழ்கள் அடங்கிய பையை எடுத்துச்செல்வதுதான் உறுத்தலாக இருந்தது. அதை இந்தியா செல்லும் எவரிடமாவது கொடுத்தனுப்ப நினைத்தும் இயலவில்லை.

 

 

 

 

 

இரவுணவுக்குப்பின் ஈராக் செல்பவர்களை ஏற்றிச்செல்லும் சிற்றுந்து வந்தது. பக்குபாவிற்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் பயணப்பைகளுடன் ஏறிக்கொண்டோம். நண்பர்கள் தீபக், செல்வேந்திரன், லோகேஷ், வெங்கட்ராமன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தீபக் செயற்கையாக சிரித்து கையசைத்தான். எனது விழிகளைப் பார்க்காமலே அவனது கண்கள் நிரம்பியிருந்தது. அங்கிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள ஐந்தாம் எண் முகாமில் எங்களை தங்க வைத்தனர். அதிகாலையில் இங்கிருந்து செல்வோம், நான்கு மணிக்குத் தயாராக இருக்கும்படி சொன்னார்கள்.ஐந்தாம் எண் முகாமிலிருந்து, அதிகாலை நான்கு மணிக்கு வண்டியில் அழைத்துச்சென்றனர் ஈராக் எல்லைக்கு. அங்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் தொடர்வண்டியைப் போல நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது. எல்லை கடந்து ஈராக்கிற்குள் செல்வதற்கு, ஏராளமான சரக்கு பெட்டககங்களை ஏற்றிய லாரிகள்,கார்கள்,ராணுவ வாகனங்கள் என நின்றுகொண்டிருந்தது.

எல்லையிலிருந்து தினமும் இதுபோல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஈராக்கிற்கு செல்கிறது என நினைத்துக்கொண்டேன்.எல்லைதாண்டி செல்லும் வாகனங்கள் வழியில் எங்கும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே பெரும்பாலான வாகனங்கள் ராணுவம் ஒருங்கிணைக்கும் பாதுகாப்பு வாகன தொடரணியில் தான் செல்கிறார்கள். ராணுவ பாதுகாப்பு வாகன தொடரணியில் இணையும் வாகனங்கள் அதிகாலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே வந்து பதிவு செய்தபின், பாதுகாப்பு வாகன தொடரணியை நடத்தும் குழு அனைத்து வாகானங்களையும் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய பின்னரே பாதுகாப்பு தொடரணியில் செல்ல முடியும். எங்களின் சிற்றுந்தும் எல்லை தாண்டுவதற்காக வரிசையில் நின்றோம்.எங்கள் வண்டிக்கு முன்னால் மூன்று பயணிகள் சிற்றுந்துகள் நின்றுகொண்டிருந்தது.

வெட்டவெளியில் அதிகாலை லேசான காற்று வீசிக்கொண்டிருந்தது. எல்லையைத் தாண்டும் திகிலுடன் மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. படுத்திருந்த ஒட்டகம் எழுந்து நடப்பதை போல், மிக மெதுவாக வாகனங்கள் எல்லையை நோக்கி நகர துவங்கியது. நீண்ட காத்திருப்புக்குபின். என்னருகிலிருந்த கார்த்திக் புறப்பட்டுவிட்டோம் என புன்னகையால் சொன்னான். எங்களுடன் வந்த நான்கு பயணிகள் சிற்றுந்துகள் மட்டும் குவைத்தின் எல்லைக் காவலர்களால் தடுக்கப்பட்டு ஈராக்கிற்குள் செல்ல அனுமதிமறுக்கப்பட்டது. நாங்கள் முகாமுக்கே திரும்பி வந்தோம் .

 

 

 

 

 

மறுநாளும் அதுபோல் அதிகாலையில் அழைத்து ச் சென்றனர். முந்தைய நாள் போலவே பாதுகாப்பு வாகன தொடரணியில் இணைவதற்காக காத்திருந்தோம். எல்லை தாண்டும்போது ராணுவ வாகனங்களுடன் சென்ற எங்கள் சிற்றுந்தை நிறுத்தினார் குவைத்தின் எல்லை காவலர். எங்கள் வாகனத்தொடரணியின் தலைவன் ஆண்டெர்சன் எனும் ராணுவ அதிகாரி தனது கைத்துப்பாக்கியை குவைத்திய எல்லைக் காவலதிகாரியின் மார்புக்கு நேராக காட்டி, கெட்ட வார்த்தையில் திட்டியதும் எங்களை அனுமதித்துவிட்டு தனது கைபேசியில் யாருடனோ பேசத் தொடங்கினான். 

இரண்டாம் நாள், எல்லை தாண்டி ஈராக்கிற்குள் நுழைந்துவிட்டோம். கண்கள் விரிய ஈராக் மண்ணை பார்த்துக்கொண்டிருந்தோம். கற்பனையில் உருவாக்கி வைத்திருந்தது பொய்த்துப்போனது. கொஞ்சதூரம் சென்றதும் ஈராக்கின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தது. குவைத்தின் செழிப்பை மட்டுமே இரண்டரை மாதமாக பார்த்த எனக்கு ஈராக்கின் வறுமை அதிர்ச்சியூட்டியது. கந்தல் துணிகளை அணிந்த மக்கள், ஒட்டிய கன்னங்களுடன், கைகளில் வளைந்த கத்தி, கேன்களில் பெட்ரோல், ஈராக்கிய பணக்கட்டுகள், உணவுப்பொருட்களை வைத்து கொண்டு வாகனங்களை நோக்கி கூவி அழைத்தும்,கை அசைத்தும் விற்க முயற்சி செய்கின்றனர். என்னால், நம்பவே முடியவில்லை. எல்லைக்கு அந்தப் பக்கம் செழிப்பான குவைத்தும், சில கிலோமீட்டர் தாண்டினால் இங்கு வறுமையும்.

எங்கள் வாகனங்கள் எங்கும் நிற்கவில்லை. வாகனத் தொடரணியின் முன்பும்,பின்பும் ராணுவ வண்டிகள், அதிநவீன துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றது. ரோந்து வாகனங்கள் வாகனத்தொடரணிக்கு இணையாக முன்பும் பின்பும் கண்காணித்து கொண்டே வந்தன. வாகனத்தொடரணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டபின் தான் பலருக்கும் மனதில் பயம் கவ்விகொண்டது . இது, மிக ஆபத்தான பயணம் என உணரத்தொடங்கினர்.கொஞ்சம் மக்களையும், சிற்றூர்களையும், குவைத்தும் ஈராக்கும் சந்திக்கும் எல்லைப் பகுதியில் பார்த்துதான். அதற்கு அப்புறம், நீண்ட தூரத்திற்கு புழுதி படர்ந்த மணல் பரப்பும், வெட்டவெளியும்தான் காட்சியளித்தன. கார்த்திக் என்னிடம் “பிரதர் எவ்வளவு இடம் காலியா இருக்கு. நம்மூர்க்காரன் கண்ணுல இன்னும் படல, அவன் மட்டும் பாத்தான்னா வீட்டுமனை விற்பனைக்குனு, இந்நேரம் இங்க போர்டு வச்சிருப்பான்”என்றான். எங்கள் பேருந்தில் கொஞ்சம் ரொட்டி த் துண்டுகளும் ,தேவையான குடிநீர் புட்டிகளும் இருந்தது . சிறுநீர் கழிக்கவும் வாகனம் இடையில் நிறுத்த இயலாது. எனவே, அதிகம் தண்ணீர் குடிக்காதீர்கள் என அறிவுருத்தபட்டிருந்தோம் .சிலர் காலி குப்பிகளை அருகில் வைத்துக்கொண்டனர்.

 

 

 

 

 

வாகனத்தொடரணி புறப்பட்டபின் இரவுக்குமுன் பாதுகாப்பான முகாமுக்கு செல்லும் வகையில் பயணத்திட்டம் இருக்கும். அனைத்து வாகனங்களும் இணையான வேகத்தில் செல்லவேண்டும். வாகனங்கள் இடையில் பழுதானால் உடனடியாக ரோந்து வாகன வீரர்கள் விரைந்துவந்து அதன் ஓட்டுனரை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அந்த வண்டியை அங்கேயே விட்டுவிடுவர் .எங்களை அழைத்து ச் சென்ற சிற்றுந்தில் இருபத்திநான்கு பேர் மட்டுமே அமர முடியும். எங்கள் அனைவரது பயண பைகளும் வேறு ஒரு பொருட்கள் ஏற்றும் வண்டியில் அடைக்கபட்டிருந்தது. அப்போது தான் நினைத்தேன் சான்றிதழ் அடங்கிய பையை கையிலேயே வைத்திருக்கலாம் என. அது ஆபத்தான பயணம். வாகனங்கள் குண்டுவீச்சிற்கு இரையாகலாம், அல்லது தீ பற்றி கொள்ளலாம் என.

எங்களது பயண பைகளை ஏற்றி வந்த வண்டி ராணுவ வாகனங்களுக்கு இணையான வேகம் கொடுக்க இயலாதலால் ராணுவ வண்டியுடன் இணைத்துக் கட்டப்பட்டு அதன் ஓட்டுனர் அமர் எங்களுடைய சிற்றுந்தில் ஏறிக்கொண்டார். அமர், இலங்கையைச் சேர்ந்த சிங்களர். தமிழில், சில வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவரது கடவுச்சீட்டை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பாஸ்போர்ட்க்கான தமிழ்சொல் கடவுச்சீட்டு என. அதில் தமிழில் எழுதியிருந்தது .

அதிகாலை தொடங்கி, கதிரவன் உச்சிக்கு வருவதற்கு சற்று முன் வரை தொடர்ந்த, திகில் பயணம் சற்று தடைப்பட்டது. வாகன தொடரணியை நெடுநேரம் சாலையிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் . என்ன காரணம் எனத் தெரியவில்லை. ரோந்து வாகனங்கள் மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்தது. பயணத்தில் யாரும் அதிகம் உரையாடிக்கொள்ளவில்லை. போர்முனையின் நிலக்காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், எரிந்து எலும்புக்கூடாக நிற்கும் வண்டிகள் அனைவரையும் அமைதியாக்கிவிட்டிருந்தது.

பின் மதியவேளையில் புறப்பட்டு இருட்டுவதற்குள் வேறு ஒரு அமெரிக்க ராணுவ முகாமை அடைந்தோம். முகாமின் வாயிலில் இருந்த ராணுவ காவலர்கள் கடும் சோதனைக்குப்பின்னரே வண்டிகளை உள்ளே அனுமதித்தனர். நாங்கள் ராணுவ வாகனத்தைத் தொடர்ந்து சென்றதால், எளிய சோதனைக்குப்பிறகு நாங்கள் முகாமிற்குள் சென்றோம் . இரவில் பயணம் மிக ஆபத்தானது. எனவே இங்கு தங்கிவிட்டு காலையில் செல்வோம் என்றனர்.

அந்த முகாமில் அடுமனை இயங்கிக்கொண்டிருந்தது. “நீங்கள் உணவு கூடத்திற்கு சென்று உண்ணலாம்” என்றனர். மதிய வேளை சிற்றுந்தில் அமர்ந்தபடியே சில ரொட்டித்துண்டுகளும், நீரும் மட்டுமே அருந்தியிருந்ததானால் நல்ல பசி. அங்கே எப்படியும் சோறு கிடைக்கும். உப்பும்,மிளகுத்தூள் போட்டு ஆவியில் வேகவைத்த சிக்கன் விங்ஸ் எனும் கோழி இறக்கைகளை சிறு துண்டுகளாக ஆக்கி சோற்றுடன் பிசைந்து சாப்பிடும் காட்சி மனத்திரையில் வந்து மறைந்தது . இரவு உணவுக்கு, அங்கிருந்த உணவு கூடத்துக்கு சென்றோம். உணவுக்கூட வாயிலில் அமர்ந்திருத்த கறுத்த இளம் ராணுவ வீராங்கனை என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டாள் . “கால் பாதங்களை முழுவதும் மறைக்கும் காலனி அணிந்து வரும்படி” பணிவுடன் கேட்டுக்கொண்டாள். நீண்ட பயணத்தின் பொருட்டு , நான் செருப்புதான் அணிந்திருந்தேன். பாதங்களை மறைக்கும் எனது காலனி பயணபைகளை ஏற்றிவந்த வாகனத்தில் மாட்டிகொண்டது. வெளியே எடுக்க இயலவில்லை.

கார்த்திக் என்னிடம் இரண்டு பழச்சாறு பைகளை தந்துவிட்டு “பிரதர், நம்மூர்ல கைலிய மடிச்சிகட்டிக்கிட்டு சட்டை போடாமல் சாப்பிடுவோம். வெள்ளைக்காரன் சாப்பிடும்போதும் பேன்ட்,சட்டை போட்டு இன் பண்ணி கால்ல சூ போடணும்னு ஒரு பழக்கம் வச்சிருக்கான்”என்றான் .

பின்னர் எங்களது வண்டியின் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்க முயற்சித்தோம்.

தொடரும்….

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க