ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01

0
675

1 .முதல் பயணம் 

மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும் .கப்பல் பணிக்காக முகவர் ஒருவரிடம் பணம் கட்டி காத்திருந்த வேளையில் அது நீண்ட காத்திருப்பாக மாறியது. முகவர் பணத்துடன் காணாமல் போய்விட்டார். உளவியல் ரீதீயாக கொஞ்சம் சோர்வடைந்திருந்தேன்.

என் நண்பர்கள் பலரும் சமயற்கலை படித்தவர்கள் .நிறையபேர் உல்லாசக் கப்பல்களில் பணிக்குப் போய்விட்டனர். இன்னும் நிறையபேர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.   அவ்வப்போது கிடைக்கும் சிறு,சிறு வேலைகள் செய்து நாட்கள் ஓடிகொண்டிருந்தது . இரண்டாயிரத்தி இரண்டாம்  ஆண்டு ஈராக் ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது என  அமெரிக்கா,ஈராக் மீது போர் தொடுத்தது .ஒன்றரை மாதங்களுக்குள் ஈராக் முழுமையும் தன் பிடிக்குள் கொண்டுவந்திருந்தது அமெரிக்கா.

இரண்டாயிரத்தி மூன்றாம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுகிழமை  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு விளம்பரம் வந்திருந்தது, குவைத்துக்கு எழுபத்திஐந்து  நாட்களுக்கு ஆள் எடுக்கிறார்கள் என. அது ஒரு கேட்டரிங் நிறுவனம்.  என் அறையில் இருந்த சாலமோன் “லே மக்கா நீ இதுக்கு போய்பாரு,  வேலை கிடச்சா திரும்பி வந்து கப்பலுக்கு முயற்சி பண்ணலாம். கையில் ரூ ஐம்பதாயிரம் இருக்கும்” என்றான்.

எனது அறைஅருகிலிருந்து  பலர் போயிருந்தனர். எனக்கு அந்தத் துறை தெரியாது. நண்பர்கள் வலுக்கட்டாயமாக சில பாடங்களை சொல்லித்தந்து என்னை நேர்காணலுக்கு தயார் செய்தனர். “லேய் நீ இங்க பட்டினி கிடந்து சாவதுக்கு போயிட்டு வா’’ என்றனர்.நானும், நண்பர்கள் கார்த்திக்,செழியனுமாக சென்று விண்ணப்பித்தோம் நான் பஸ் பாய் எனும் வேலைக்குத் தயாராகிவிட்டேன்  (மெஸ் பாய்க்கு  அப்படி ஒரு பெயர் என பின்னர்தான் தெரிந்தது ). நான் அப்போது மாட்டுங்க லேபர் கேம்ப் எனும் பகுதியில் தங்கியிருந்தேன்  ,எங்கள் அறையின் பின் புறமுள்ள சோட்டா சைன் மருத்துவமனையின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 166-ஆம்  எண் பேருந்தில் ஏறினால் மும்பையின்  தாதரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் அருகில் இறங்கி நூறு மீட்டர்  தூரத்தில் உள்ள  ராயல் கன்சல்டன்சிக்குப் போனோம்.

எங்களது கடவு சீட்டுக்களையும், சுயவிவர அறிக்கைகளையும்   பார்த்துவிட்டு சில வினாக்களை கேட்டுவிட்டு “நீங்கள் செல்லவிருப்பது போர்க்களம் அங்கே குண்டுகள் வெடிக்கும்” என்றார் ராயல் கன்சல்டன்சியின் மேலாளர்.  என்னிடம் பேசிய ஒருவர் “நீ ஏன் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்ககூடாது?” எனக் கேட்டார். நான் “வேண்டாம்” என சொல்லி விட்டேன். அந்தத் துறை பற்றி அறியாத எனக்கு நண்பர்கள் தந்த பயிற்சி அப்படி என மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் .

ஒரு வாரத்திற்குப்பின் நேர்காணலுக்கு அழைத்தனர். காலை பத்து மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விட்டோம்.  பெரும் திரள் நின்றுகொண்டிருந்தது.  கைகளில் ஆவணங்கள் அடங்கிய பைகளுடன் அடுத்தடுத்த நாட்களில் சித்திவிநாயக் கோவில் வரை நேர்காணலுக்கு வந்தவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்ததாக  சொன்னார்கள்.  பெரும்பாலனவர்கள் கழுத்துப் பட்டை அணிந்து வந்திருந்தனர். நான் வெண்ணிற சட்டை அணிந்து சென்றிருந்தேன். அந்த பணிக்கு செல்பவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்றனர்.

நிறையப்பேர் நேர் காணலுக்கு வந்திருந்ததால், வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.  மாலையில் எங்கள் முறை வந்தபோது  ஐந்து, ஐந்து பேராக உள்ளே வரச்சொன்னார்கள். ஒரு கறுப்பர் ,தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்த ஒருவர் ,நைஜில் என்ற ஒரு நியுசிலாந்து நாட்டை சார்ந்தவரும் நேர்காணல் அறையில் இருந்தனர் . சிரித்து,  வணக்கம் கூறி சில வினாக்களை கேட்டனர். எனக்கு முன்னால் செழியன் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். என்னிடம் மூன்று  கேள்விகள் தான் .”எந்த ஊர் உனக்கு?  எங்கு வேலை செய்கிறாய்?  கிரிக்கெட் விளையாடத் தெரியுமா?”.  அருகில் இருந்தவனிடம் “பெயர் என்ன ?” எனக் கேட்டார்.  “முகமத்” என்றான் அவன். “இன்னும் சில முகமத் உள்ளனர்.  நான் முகமத் 1, முகமத்2 என அழைப்பேன்” என்றார் . அவர்களுக்கு அவசரம் இன்னும் நிறையபேர் வெளியே காத்திருப்பதால் .

நேர்காணல் முடிந்து மாலையில் அறைக்கு வந்தோம். கார்த்திக்கிடம் அந்த நைஜில் என்பவர் “நான் உனக்கு பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன்” என்று சொல்லி “சிரிக்கமாட்டாயா”? என்றிருக்கிறார்.  செழியன், “சாகுல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டான்”,  என்றான் நண்பர்களிடம். தேர்வு பெற்ற தகவல் இரவில் முடிவாகும். மறுநாள்,  தொலைபேசியில் சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.

மறுநாள் அழைப்புவந்தது.  தேர்வாகிவிட்டேன். என்னுடன் வந்த நண்பன் கார்த்திக்,  உதவி சமையல்காரன் பணிக்கு தேர்வாகியிருந்தான்.  மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் அலுவலகம் வாருங்கள் என  அழைத்தனர்.

எங்களைப் போல தேர்வாகிய பலரும்  மருத்துவப்பரிசோதனைக்கு சென்றோம். கடவுச்சீட்டை ராயல் கன்சல்டன்சியில் சமர்ப்பிதிருந்தோம். எங்கள் அறையை  சார்ந்த செழியனும் தேர்வாகியிருந்தான்.

மருத்துவப்பரிசோதனைக்கு பின்தான் தெரிந்தது நாங்கள் இருந்த பகுதியில் இருந்து எங்களுக்கு தெரிந்த ,லோகேஷ் ,செல்வேந்திரன் உட்பட இன்னும் பலரும் தேர்வாகியிருப்பது .ஒருவராத்திற்குப்பிறகு ராயல் கன்சல்டன்சியின்  அழைப்பு வந்தது.  நாளை மறுநாள் பயணம்.   எனவே மறுநாள், அலுவலகம் வந்து,  விமான சீட்டு, கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை பெற்று செல்லுமாறு சொல்லிவிட்டனர். நான்,  அன்று ஒரு வேலைக்கு போயிருந்தேன் .நள்ளிரவு  அறைக்கு வந்ததும் நண்பர்கள் இந்த விபரத்தைத் தெரிவித்தனர்.

மகிழ்ச்சியுடன் மறுநாள் ராயல் கன்சல்டசியின் அலுவலகம் சென்றோம். கார்த்திக் ,செழியன் மற்றும் எனக்கு ஆவணங்களை தந்து விட்டு “வாழ்க, தமிழ் மக்கள்!” என்றார் ராயல் கன்சல்டன்சியின் உரிமையாளர். அவருக்குத் தமிழில் ஒரு சில வார்த்தைகளே தெரியும் என அப்போது தோன்றிற்று. பின்னர்தான் அறிந்துகொண்டேன் , பெரும்பான்மையான மங்களூர் வாசிகள் கன்னடம், துளு, கொங்கணி, மலையாளம் , ஹிந்தி, மராத்தி கொஞ்சம் தமிழ் என பலமொழிகள் பேசுபவர்கள் என.  இந்தச் சேவைக்காக அந்த அலுவலகம்  பணம் ஏதும் எங்களிடம் பெற்றுக்கொள்ளவில்லை.மூவாயிரத்தி ஐநூறு  ருபாய் மருத்துவப்பரிசோதனைக்கு மட்டும் கட்டினேன்.

இரவில் குவைத்திற்கு எனது முதல் விமானப் பயணம். பெரிதாக எந்த ஏற்பாடுகளும் இல்லை. என்னிடம் இருந்த துணிகளை துவைத்து அடுக்கி கொண்டேன் .புதிதாக ஏதும் வாங்கியதுபோல் நினைவில் இல்லை அல்லது வாங்குவதற்குப் பணமும் இல்லை கையில். மனம் உற்சாகமாக இருந்தது .  இரவில் மும்பையிலிருந்து பயணம் குவைத்திற்கு பஹ்ரைன் வழியாக . அறை நண்பர்களிடம் சொல்லிவிட்டு மகிழுந்தில் புறப்பட்டோம். நான் பலமுறை நண்பர்களை அனுப்பிவைக்கவும்,அழைத்து வரவும்  வந்த மும்பை சத்ரபதி சிவாஜி  வானூர்தி நிலையத்தில்,  முதல் முறையாக உள்ளே சென்றேன். 2003 ஆண்டு ஏப்ரல் இருபதாம் தேதியன்று .

அங்கிருந்த குடியுரிமை அதிகாரி ,ஹிந்தியில்  “ஏன் இப்போது குவைத்துக்கு செல்கிறாய், அதுவும் சுற்றுலா விசாவில்” எனக் கேட்டார் .  போர் நடப்பதால் பலரும் குவைத்திலிருந்து தாய்நாட்டை நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்த நேரம் அது . “குறுகியகால பணிக்கு செல்கிறேன்” என்றேன் .என் கடவுசீட்டை  பார்த்தவர் அடுத்த கேள்வியை தமிழில் கேட்டார் ,  “மணவாளக்குறிச்சி மார்த்தாண்டாத்திலிருந்து எவ்வளவு தூரம்?” என.  “முப்பது கிலோமீட்டர்”  என்றேன் .என் கடவுசீட்டில் முதல் முத்திரையைப் பதித்தார் , “புறப்பாடு” என.

அலுவலகத்தில் சந்தித்தப் பலரை விமானம் ஏறுவதற்கு முன்பே சந்தித்தோம். நண்பன் கார்த்திக்,  முன்பு ஒருமுறை சிங்கப்பூர் போய் வந்திருந்தான் . அதனால், அவனே எங்களுக்கு வழிகாட்டி. வானூர்தி நிலையத்திற்குள்  அனைத்தையும் மிக எளிதாக கடந்து சென்றோம். கார்த்திக்கிற்கு எதோ வயிற்று கோளாறு இரண்டு முறை கழிவறை போய்விட்டு வந்துதான் விமானம் ஏறினான்.நள்ளிரவில் கல்ப் ஏர் விமானம் அந்தேரி கடலுக்கு மேலே பறக்கத்  தொடங்கியது. உற்சாகமான முதல் விமானப் பயணம்.  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து,  கீழே பார்த்துக்கொண்டிருந்தேன். விளக்குகள் சிறிதாகிக்கொண்டு  வந்தது, பின்னர்,  முழுமையான இருளுக்குள் விமானம் பறந்துகொண்டிருந்தது .அந்த விமான இருக்கை அட்டையை என்னைப் போல் நிறையப்பேர் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்திருந்தனர் .

(தொடரும்)

முந்தைய கட்டுரைஎன்றும் நீ வேண்டும்
அடுத்த கட்டுரைஉன் பிரிவின் புலம்பல்….
User Avatar
பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி ,பாபூஜி மேல்நிலைப்பள்ளி ,மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின் ,மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி,பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/ ஷாகுல் ஹமீது , 14 june 2020
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க