விரக்தியில் என் மனம்

0
581
human-abstract-painting-large-acrylic-on-canvas-figurative-modern-art-secrets-of-consciousness_767_620x

வயல்க் காணி வரப்பு ஒன்று
சொந்தமாய் இருந்திருந்தால்
இந்த பட்டம் ஒரு கேடு என்று
என்றோ தலைமுழுகியிருப்பேன்

அந்த வசதியொன்று கிட்டவில்லை
அதனால்தான்
சோர்ந்துபோன உள்ளத்தோடு
தோள் மீது சுமக்கிறேன்
பட்டதாரி என்ற கனவை…

ஆசைகாட்டி கற்பித்தார்கள் ஆசான்கள்
பல்கலைக்கழகமொன்று
என் ஆசையெல்லாம் அயல்வீட்டானுக்கு
கேலியாய் மாற்றிவிட்டதே!

நான்கு வருடம் கடந்த பின்னும்
நான்காம் வருடத்தை கடக்க
தடை போட்டிருக்கிறது
ஏட்டிக்கு போட்டியாய் செயற்படும்
இயலாமைக் குழுவொன்று

முகக்கவச நோய் மீது மட்டும்
பழிசுமத்தி தப்ப வேண்டாம்
எம் சுதந்திர வார்த்தைகளுக்கு
பெறுபேறு என்ற கவசமிட்டு
பல இழுத்தடிப்புக்களுக்கு
எங்களையும் உடந்தையாக்கிவிட்டது
பரீட்சை மையக் கல்விமுறை

இன்று அழைப்பார்கள்
நாளை அழைப்பார்கள்
என்றெண்ணி
மன அழுத்த நோய் ஒன்று
இந்த மனமெல்லாம்
குடி கொண்டிருக்கிறது.

புத்தக பூச்சிகளையும்
பூச்சிவரை கூட வளராத குடம்பிகளையும்
உருவாக்கும் செயற்திட்டதிற்கு
இத்தனை வருடங்கள் தேவைதானா?

ஏன் தான் உயர்தரம்
சித்தியடைந்தோம் என்று கூட
வெறுத்துப் போகிறது
சில நாட்களாய்
இழுத்தடிப்புக்கள் மட்டும்
பல நாட்களாய் தீர்ந்தபாடில்லை
இதற்கும் மாணவர்கள்தான் காரணம்
என்று சொல்லாமல்
சில அதிகாரிகளின் நாக்குகளுமில்லை

இன்னும் சில வாரங்கள்
இப்படியே தொடர்ந்தால்
பட்டதாரி மாணவ மூளைகள் பல
இறந்து போய்விடும்
மழுப்பல்களை சொல்லி தப்பும்
மதிநுட்பம் ஒன்றைத்தான்
செயல்முறையாய் பலருக்கு
கற்றுக் கொடுத்திருக்கிறது
இந்த கலைக்கழகம்

இதையெல்லாம் கண்ணுற்று
விரக்தியில் என் மனம்
வேண்டிக் கொண்டது
படித்ததெல்லாம் போதும்
பாஸ் அவுட் என்ற
வார்த்தை ஒன்றைத்தான்

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க